77 வயதிலும் நடனமாடும் "கதக்' கலைஞர்!
1945 - ஆம் ஆண்டு - உத்தரபிரதேசத்தில் உள்ள ராம்பூர் அரண்மனை. நள்ளிரவில் நன்கு உறங்கிக் கொண்டிருந்த ஏழரை வயதுச் சிறுவனை அவசரமாக எழுப்பி, நடன உடைகளை அணியும்படி அவனது பெற்றோர் வற்புறுத்தினர்.


1945 - ஆம் ஆண்டு - உத்தரபிரதேசத்தில் உள்ள ராம்பூர் அரண்மனை. நள்ளிரவில் நன்கு உறங்கிக் கொண்டிருந்த ஏழரை வயதுச் சிறுவனை அவசரமாக எழுப்பி, நடன உடைகளை அணியும்படி அவனது பெற்றோர் வற்புறுத்தினர். அவனது சகோதரி அவசர அவசரமாக அவனுக்கு உடை அணிவித்து
கண்களுக்கு மையிட்டு அவனைத் தயார் செய்ய,
அன்னையோ நிலை கொள்ளாமல் தவித்தாள். நவாப், அந்த நள்ளிரவில் நடன நிகழ்ச்சியைப் பார்க்க ஆசை பட்டதன் விளைவுதான், சிறுவனை அரக்கப் பரக்க தயார் செய்து கொண்டிருந்தார்கள். சிறுவனோ
மவுனமாக மனதிற்குள் சொல்லிக் கொண்டான்:
""இந்த நவாப் எப்போது இறந்து போவார்?''
இவனது தந்தை கதக் நடன கலைஞர் அச்சன் மகராஜ். அவர் முழுமையான நடன நிகழ்ச்சியைத் துவங்குவதற்கு முன், அதுவரை இந்தச் சிறுவன் நடனமாட வேண்டும். இதற்காக அவனுக்குத் தரப்பட்ட மாதச் சம்பளம் ரூ.12. சிறுவயதிலேயே கதக் நடனத்தில் ஆர்வம் கொண்டு, தன்னுடைய தந்தை மற்ற மாணவர்களுக்கு கற்றுத் தரும் நடன அசைவுகளைப் பார்த்து தானாகவே கற்றுக் கொண்டு பின்னர் கதக் நடனத்தில் இந்தியாவிலேயே மாபெரும் கலைஞராக உயர்ந்தார். அவர்தான் பிர்ஜு மகராஜ். இயற்பெயர் பிரிஜ் மோகன்நாத் மிஸ்ரா.

சிறுவயதில் தன்னுடைய தந்தை அச்சன் மகராஜ் மற்றும் மாமன்கள் சம்பு மகராஜ், லச்சு மகராஜ் ஆகியோர் ஆடும் நடனத்தை உன்னிப்பாக பார்த்துக் கொண்டிருக்கும்போது, இடையில் எழுந்து செல்வதற்குக் கூட அச்சப்படுவாராம் பிர்ஜு மகராஜ். எங்கே நடன அசைவுகளின் தொடர்ச்சியை இழந்து விடுவோமோ? என்ற அச்சம்தான் காரணம்.
இவரது தந்தை டெல்லியில் உள்ள இந்துஸ்தானி மியூசிக் மற்றும் நடன இன்ஸ்டிடியூட்டில் நடன ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். தனக்குப் பிறகு நல்ல நடன கலைஞனை உருவாக்க முடியவில்லையே என்ற வருத்தம் அவருக்கு இருந்தது. அப்போது பிர்ஜு
மகராஜ் அவருக்கு எதிரே சென்று, ""பாபு! உங்களுடைய மாணவர்களுக்கு நீங்கள் நடனம் கற்பிக்கும்போது நான் பார்த்து கற்றுக் கொண்டவற்றை உங்கள் முன்பு ஆடிக் காட்டட்டுமா?'' என்று கேட்டாராம்.
அச்சன் மகராஜ் அதை ஏற்கவில்லை. பிடிவாதமாக இவர் ஆடிக் காட்டியபோது, அதைக் கண்டு வியந்தவர், "" நீ என்னை விடப் பிரமாதமாக ஆடுகிறாய்'' என்று கூறி பாராட்டியதோடு முறையாக அவருக்குக் கற்றுத் தர முன் வந்தாராம்.
அதன் பின்னரே அவர் எங்கு சென்றாலும் பிர்ஜு மகராஜை உடன் அழைத்துச் செல்லத் தொடங்கினார். அப்போது பிர்ஜு மகராஜுக்கு பத்து வயது இருக்கும். எதிர்பாராதவிதமாக தந்தை இறந்தது, குடும்பத்திற்கு பெரிய இழப்பாக மாறியது. பணக் கஷ்டமே தெரியாமல் வாழ்ந்த குடும்பம் அடுத்த வேளை சாப்பாட்டுக்குத் திண்டாட வேண்டியதாயிற்று. இவரது தாய் மகாதேவி குழந்தைகளை அழைத்துக் கொண்டு ஒவ்வொரு நகரமாகச் செல்வாராம். அங்கு நடன நிகழ்ச்சிகளை நடத்தி கிடைக்கும் பணத்தில் குடும்பத்தைக் காப்பாற்றி வந்த பிர்ஜு மகராஜுக்கு, டெல்லியில் அவரது தந்தை பணியாற்றிய நடன இன்ஸ்ட்டிடியூட்டிலேயே நடன ஆசிரியர் வேலை கிடைத்தது. அப்போது அவரது வயது 14. அதன் பின்னரே இவரது வாழ்க்கை ஒருமுழுமையான வட்டத்திற்குள் வந்தது.

அவாத் (லக்னநௌ பகுதி) நவாப் வாஜித் அலிஷா தர்பாரில் புகழ்பெற்ற கதக் கலைஞராக விளங்கிய பிந்தாதின் மகராஜ் மூலம் சாஸ்த்திரீய சங்கீதம் கற்று தானாகவே பல புதிய நடனங்களை உருவாக்கினார். கதக் நடனத்தில் புதிய முறைகளைப் புகுத்தினர். ரோமியோ - ஜூலியட் காதல் காவியத்தைக் கூட கதக் நடன நாடகமாகத் தயாரித்துப் பாராட்டினைப் பெற்றார். திரைப்படங்களில் முதன்முறையாக கதக் நடனத்தை வில்லன் நடிகர் அம்ஜத்கானை "சத்ரஞ்ஜ் கே கிலாரி' படத்தில் ஆட வைத்த பெருமை சத்யஜித்ரேவுக்குக் கிடைத்தது. அதை வடிவமைத்து கொடுத்த பிர்ஜு மகராஜ், "தேவதாஸ்', "தில் தோ பாகல்ஹை', சமீபத்திய "விஸ்வரூபம்' வரை பல படங்களில் கதக் நடனத்தை அமைத்துத் தந்தார். தொடர்ந்து பட வாய்ப்புகள் வாய்த்தாலும், இவரது தாயாரும், நண்பர்களும் கொடுத்த எச்சரிக்கை காரணமாக கதக் நடனத்தை வியாபாரமாக்க விரும்பாமல் வந்த வாய்ப்புகளை ஏற்க மறுத்தார். வற்புறுத்தி வரும் அழைப்புகளை மட்டுமே ஏற்று நடனங்களை அமைத்து தருவதுண்டு. "விஸ்வரூபம்' படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்தது அபூர்வமான அனுபவம் என்று கூறும் பிர்ஜு மகராஜ், கமலின் ஆர்வம் தன்னை வியக்க வைத்ததாகக் குறிப்பிட்டார்.
""கதக் நடனக் கலைஞராக வராமல் போயிருந்தால் எங்கேயாவது ஒட்டலில் வேலை செய்தோ அல்லது மெக்கானிக்காகவோ சென்றிருப்பேன். நல்ல நடனக்கலைஞர் என்ற பெயர் எனக்கு கிடைத்தாலும், என் குழந்தைகளைப் பொறுத்தவரை நான் ஒரு நல்ல தந்தையாகவோ, என் மனைவிக்கு நல்ல கணவனாகவோ இருந்ததில்லை. நடனத்தின் மீதுள்ள ஆர்வத்தால் வெளியூர் செல்லும் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பதில் நேரத்தைச் செலவழித்தேனே தவிர, அவர்களுடன் செலவழித்த நேரம் மிகவும் குறைவு'' என்று கூறும் பிர்ஜு மகராஜுக்கு 2 மகன்கள் 3 பெண்கள். அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. மகன்கள் இருவரும் இவரைப் போலவே கதக் நடனக் கலைஞர்களாக உருவாகியுள்ளனர்.
இளம் வயதிலேயே கதக் நடனத்தில் முதன்முதலாக "பத்ம விபூஷன்' விருது வாங்கியவரும் இவர்தான். ""இந்த கதக் நடனக் கலையை மேம்படுத்த அரசு முன் வர வேண்டும். இன்றையத் தலைமுறையினரும் இதைக் கற்பதில் ஆர்வம் காட்ட வேண்டும். இதற்காக அவர்கள் நேரத்தை ஒதுக்குவது நல்லது'' என்று கூறும் பிர்ஜு மகராஜ். இன்று தனது 77வயதிலும் கதக் நடனமாடுவதில் ஆர்வமாக இருக்கிறார். ""என்னால் நடனமாடாமல் இருக்க முடியாது. இதில் உள்ள மகிழ்ச்சியைப் போல் வேறு ஏதும் இல்லை. இதனால் நான் சோர்வடைவதும் இல்லை'' என்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...