

அரிசி, அவல், கோதுமை, கடலை, பாசிப்பருப்பு போன்ற எளிமையான உணவுப்பொருட்களைக் கொண்டே நம் முன்னோர்கள் பலவகையான உபாதைகளைக் குணப்படுத்திக் கொண்டதாக என் வீட்டிலுள்ள பெரியோர்கள் மூலம் அறிகிறேன். அவற்றைப் பற்றிய மருத்துவரீதியான நன்மைகளை ஆயுர்வேதம் குறிப்பிட்டுள்ளதா?
-என்.விஜயகுமார், பரமசிவமங்களம்.
பொதுவாக நீங்கள் கூறிய உடல் உஷ்ணம், பசியின்மை, சிறுநீர்க்கட்டு போன்ற உபாதைகள் உணவின் செரிமான சக்திக் குறைபாட்டினால் ஏற்படக்கூடும். இப்பிரச்சனைகள் தீர உண்ணும் உணவு சரியாக செரிக்கும்படிச் செய்தலே நலம். மேலும் தினந்தோறும் உண்ணும் அரிசி உணவே பல நோய்களைத் தீர்க்க வல்லது. ஆயுர்வேதம் குறிப்பிடும் சில எளிய உணவுவகைகள் மூலம் உங்களுடைய குறைபாடுகளனைத்தும் குணமாவதற்கு வழிகள் உள்ளன. அவைப் பற்றிய சில குறிப்புகள்:
கழுநீர்: அரிசியை முதலில் கழுவும்பொழுது வரக்கூடிய நீரை எடுத்துக் கொள்ளாமல் இரண்டாவது முறையாகக் களைந்த நீரை வடிகட்டி வெளி அழுக்கு நீக்கி சர்க்கரை சேர்த்துச் சாப்பிட உடற்காங்கை எனும் உடற்சூடு நீங்கும். பெண்களுக்கு உஷ்ண மிகுதியால் ஏற்படும் வெள்ளைப்படுதல், பெரும்பாடு முதலியவை தணியும்.
கொதிகஞ்சி: சாதம் வெந்து கொண்டிருக்கும்போது முக்கால் பங்கு வெந்ததும் கொதித்துக் கொண்டிருக்கும் கஞ்சியைக் கரண்டியால் எடுத்து இளஞ்சூடாக ஆறியதும் அதில் வெண்ணெய், நெய் சேர்த்து காலையில் சாப்பிட குடலில் வறட்சி நீங்கும். காங்கை, மலச்சிக்கல், குடல் வறட்சியால் வலி, நீர்ச்சுருக்கு, சிறுநீர் தாரையில் எரிவு, வயிற்றில் கொதிப்பு உள்ளவர்க்கு ஏற்ற பானம் இது. இதனையே பனங்கற்கண்டு, பனைவெல்லம் சேர்த்தும் சாப்பிடுவதுண்டு.
புன பாகம்: எளிதில் ஜீரணம் ஆகத்தக்க முறையில் வடித்த அன்னத்தையும், மறுபடி தண்ணீர் சேர்த்துக் காய்ச்சி அதன் வடிநீரை மாத்திரம் பருகுவதுமுண்டு. இதனை மறுஉலைப்பாகம் என்பர். நோய் வாய்ப்பட்ட நிலையிலும், கடுமையான பசி மந்தித்த நிலையிலும் ஏற்றது.
வடிகஞ்சி: சாதத்தை வடித்தெடுத்த கஞ்சி ஆறியதும் உறைந்துவிடும். நல்ல பசி உள்ளவர் இதை மோரும் உப்பும் சேர்த்து சாப்பிடுவதினால் அகோரபசியானது தணிந்துவிடும். உடலின்மேல் தேய்த்துக் குளிக்க தோல் மென்மையடையும். அரிப்பு, சொறி முதலியவற்றைப் போக்கும். வடித்த கஞ்சி எண்ணெய்ப் பிசுக்கை நீக்கும். எண்ணெய்க் குளியல் ஒத்துக் கொள்ளாதவர் தனித்த கஞ்சியையோ வெந்தயம், சீரகம், ஓமம், கடுக்காய் முதலியவற்றை அரைத்து கலக்கியோ தேய்த்துக் கொள்வதுண்டு. உடற்சூடு தணியும். தோலில் இரத்த ஓட்டம் அதிகமாகி அழகும், மென்மையும், நிறமும், பளபளப்பும் உண்டாகும்.
புழுங்கலரிசியுடன் கோதுமை, பாசிப்பயறு சேர்த்து சிறிது வறுத்து குருணையாக்கி 60 கிராம் எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு கால் லிட்டர் மீதமாகும்படி கஞ்சியாக்கியது புஷ்டி தரும். இதில் சுக்கை சீவல்போல் மெல்லியதாக போட்டு கஞ்சி வைத்து குடித்தால் வயிற்றில் கனமும் வாயுவும் நீங்கிவிடும். சளி இருப்பின் திப்பிலியும், வயிற்றுக்கொதிப்பு இருப்பின் சீரகமும், மல்லி விதையும் சேர்த்து கஞ்சி வைப்பதுண்டு. மலக்கட்டிற்கு திராட்சையும், ரோஜாமொட்டும் சேர்த்தும், மலமிளகிப்போனால் மாதுளம்விதை, மாதுளம்பழச்சாறு, வில்வபிஞ்சு சேர்த்தும் கஞ்சி வைப்பதுண்டு. வாய்க்கு சுவை அறிவு குறைந்தால் ஜாதி நார்த்தைச் சாறு சேர்த்து வைப்பர்.
சத்து மாவு: அரிசியுடன் கோதுமை, கடலை வறுத்து இடித்த மாவை சத்து மாவு என்பர். தண்ணீர் விட்டு பிசைந்து சர்க்கரை அல்லது உப்பிட்டுச் சாப்பிட களைப்பு நீங்கும். நெய்விட்டுப் பிசைந்து சாப்பிட பசி அடங்கும். மோர் விட்டுக் குழப்பி பருக வயிற்றுவாயு நீங்கும்.
நெல்பொரி: நெல்லைப் பொரித்து உமி நீக்கி உணவாக ஏற்றால் வாந்தி, நாவறட்சி, வயிற்றுப்புண், பசிமந்தம், ருசியின்மை, விக்கல், மயக்கம், பேதி போன்ற உபாதைகள் குணமாகும். இதனைப் பொரியாகவும், பொரி கஞ்சியாகவும் தயிர், காய்ச்சிய பால், பழச்சாறு இவற்றில் ஏதேனும் ஒன்றில் ஊற வைத்துச் சாப்பிட
முன் குறிப்பிட்ட உபாதைகளுக்கு ஏற்றது. இதனை
வெல்லப்பாகு சேர்த்து உருண்டையாக்கிச் சாப்பிட
ஓக்காலம், வாந்தி, வயிற்றெரிச்சல் நீங்கும்.
அரிசி மாவு கொண்டு தயாரிக்கப்படும் இட்லி, இடியாப்பம், தோசை முதலியவை வயிற்றில் புளிப்பும் வாயுவும் மிக்க நிலைகளிலும் ஊரல், சொறி சிரங்கு போன்ற கரப்பான் நீர் வெளியாகும் தோல்நோய்களிலும், இடுப்புப் பிடிப்பு போன்ற வாயுநோய்களுக்கும் ஏற்றவை அல்ல. அரிசியை வறுத்து பாசிப்பருப்பு சேர்த்து பொங்கிய பொங்கல், நெய், மிளகு, சீரகம், இஞ்சி முதலிய துணைப்பொருட்களுடன் கூடியது, நல்ல புஷ்டிகரமானது. ருசி, நெய்ப்பு தரும். அரிசி நொய்யில் தயாராகும் உப்புமாவும் புட்டும் ஜீரணமாகத் தாமதமாகும். அதைச் சாப்பிட்ட பின்னர் வெந்நீர் சாப்பிட இதமாக இருக்கும்.
அவலை தயிரில் ஊறவைத்து வெல்லத்துடன் சாப்பிடலாம். குழைய வேகவைத்த அவலை தயிருடன் சேர்த்து சீதபேதி, வயிற்றுக் கடுப்பு நோய்களின்போது கொடுக்கலாம். அவலை வேக வைத்து வடித்த நீரை சிறுகுழந்தைகளுக்கு கொடுக்க பேதி, குடல்வலி, கடுப்பு குறையும். களைப்பு நீங்கும். பாலும் நெய்யும் சேர்த்துச் சாப்பிட பலம் உண்டாகும். தயிரில் கலந்து உண்ண அகோரப்பசி தணியும். மோரில் கரைத்து உண்ண வீக்கமும் எரிவும் விலகும். புளிப்பு சாறு கலந்து உண்ண பித்தநோய் நீங்கும்.
இவ்வாறு நமக்கு எளிதில் கிடைக்கும் அரிசிவகை உணவினால் எண்ணற்ற நோய்கள் அண்டாதிருக்க வழிவகைகள் கூறப்பட்டுள்ளன. இவற்றை முறையாகக் கடைபிடித்து வந்தாலே இன்று தோன்றும் பலவிதமான நோய்களும், உபாதைகளும் வராமல் தடுக்கலாம்.
(தொடரும்)
எஸ். சுவாமிநாதன், டீன்
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,
நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)
செல் : 94444 41771
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.