உடல்... உணவு... நோய்!
ஒருவருக்குத் தொப்பை இருந்தால், அதைப் பார்த்துச் சிரிக்கிறோம். ஆனால் தொப்பை நல்லதல்ல. அதனால் இதய நோய்கள் ஏற்படுகின்றன'' என்கிறார் டாக்டர் பாசுமணி.


ஒருவருக்குத் தொப்பை இருந்தால், அதைப் பார்த்துச் சிரிக்கிறோம். ஆனால் தொப்பை நல்லதல்ல. அதனால் இதய நோய்கள் ஏற்படுகின்றன'' என்கிறார் டாக்டர் பாசுமணி.
சென்னை அடையாறிலுள்ள மலர் மருத்துவமனையில் இரைப்பை, குடல் நோய் சிகிச்சை நிபுணராக உள்ள அவரிடம் இன்றைய நமது உணவுப் பழக்க வழக்கங்களினால்
ஏற்படும் நோய்களைப் பற்றிப் பேசினோம். அதிலிருந்து...
""இன்று வேலை, படிப்புக்காக வீட்டைவிட்டு வெளியூர்களுக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. கிராமத்திலிருந்து நகரங்களுக்கு மக்கள் வேலைக்காகக் குடிபெயர்கிறார்கள். உணவகங்களில் சாப்பிடுவதும் அதிகரித்துவிட்டது.
வேலையின் காரணமாகப் பசிக்கும் நேரத்தில் பலரால் சாப்பிட முடிவதில்லை. நண்பர்களுக்குக் கம்பெனி கொடுக்க, பசியில்லாத போது கூட சாப்பிடுகிறார்கள். உடலுக்குத் தேவை இருக்கிறதோ இல்லையோ ருசிக்காகச் சாப்பிடுவதும் அதிகரித்துவிட்டது. இரவில் நீண்ட நேரம் கண்விழித்து இருப்பார்கள். தூக்கமில்லாமல் உடலின் சீரண உறுப்புகள் சரியாக வேலை செய்ய முடியாத சூழ்நிலை இருக்கும். ஆனாலும் அந்த நேரத்திலும் எதையாவது சாப்பிடுவார்கள். இப்படி நமது உண்ணும் முறை மாறிவிட்டது.
இதன் விளைவுதான் நம்மைத் தாக்கும் பல நோய்கள்.
நமது நாட்டில் ஐந்தில் ஒரு பங்கு குழந்தைகள் அதிக உடல் எடையால் அவதிப்படுகிறார்கள். அதேபோல ஐந்தில் ஒரு பங்கு குழந்தைகள் போதிய சத்துணவு கிடைக்காமல் மெலிந்து கிடக்கிறார்கள். குழந்தைகளுக்குச் சத்துணவு கிடைப்பதில் சமச்சீரின்மை உள்ளதையே இது காட்டுகிறது. இவை இரண்டுமே நோய்களுக்குக் காரணங்களாகிவிடுகின்றன.
வீட்டில் சாப்பிடாமல் வெளி உணவுகளைச் சாப்பிடும்போது பல நோய்கள் ஏற்படுகின்றன. குளிர்பானங்கள் குடிப்பது இன்று சர்வசாதாரணமாகிவிட்டது. அதுவும்
சாப்பிட்டவுடன் குளிர்பானங்களைக் குடிக்கிறார்கள். சாப்பிடும் உணவில் கிடைக்கும் கலோரியுடன் சேர்த்து அதிகமான கலோரிகளைக் குளிர்பானங்களின் மூலம் உடலுக்குள் அனுப்புகிறார்கள். 350 மி.லி. உள்ள ஒரு குளிர்பானத்தில் 7-8 ஸ்பூன் சர்க்கரை இருக்கிறது. இந்தச் சர்க்கரையால் உண்டாகும் அதிகப்படியான கலோரி நமது உடலில் கொழுப்புச் சத்தாக மாறிவிடுகிறது.
குளிர்பானங்களில் மட்டுமல்ல, தக்காளி சாஸ், கேக் எல்லாவற்றிலும் அதிக அளவு இனிப்பு இருக்கிறது.
உணவகங்களில் உப்பு, காரம் அதிகமுள்ள உணவுகள் விற்கப்படுகின்றன. அஜினமோட்டோ சேர்க்கப்படுகிறது. இந்தச் சுவைகளுக்கு நமது நாக்கு பழகிவிடுகிறது. உப்பு, சர்க்கரை அதிகமுள்ள உணவுகளை உட்கொள்வதில் நாம் கவனமாக இருக்க வேண்டும். அஜினமோட்டோ நமது ஜீரணமாகும் திறனைக் குறைத்துவிடுகிறது.
சர்க்கரை என்றதும் இனிப்பு மட்டும்தான் என்று நினைத்துவிடாதீர்கள். மாவுப் பொருட்களும் சர்க்கரையே. மாவுப் பொருளை நுண்ணியதாக்கினால் அது சர்க்கரை. சர்க்கரை எல்லாம் சேர்ந்தால் அது மாவுப் பொருள். எனவே மாவுப் பொருட்களினால் ஆன உணவைச் சாப்பிடும்போது அது கொழுப்பாகி உடலில் படிகிறது. மாமிசம், எண்ணெய் உணவுப் பொருட்களில் கொழுப்பு நேரடியாக உடலுக்குச் செல்கிறது. மாவுப் பொருட்கள், இனிப்புப் பொருட்களில் உள்ள சர்க்கரை, கொழுப்பாக மாறி உடலில் படிகிறது. அதுதான் இரண்டுக்கும் உள்ள வேறுபாடு.
உணவகங்களில் தரப்படும் உணவுகளில் உப்பு அதிகமாக இருக்கிறது. பாக்கெட்டில் விற்கப்படும் சிப்ஸ் போன்றவற்றிலும் உப்பு, காரம் அதிகமாக இருக்கிறது. உப்பு இன்னொரு சைலண்ட் கில்லர். ஊறுகாய், அப்பளம், சிப்ஸ், ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ் எல்லாவற்றிலும் உப்பு அதிகம். கருவாட்டைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். உணவில் உப்பு அதிகமானால் ரத்த அழுத்த நோய் ஏற்படும். அதுமட்டுமல்ல, அதிகமான உப்பைச் சாப்பிட்டுப் பழகிவிட்டால், நாக்குக்கு எது சரியான அளவு உப்பு என்பது கூடத் தெரியாமல் போய்விடுகிறது. எனவே திரும்பத் திரும்ப அதிக அளவு உப்பை நாம் சேர்த்துக் கொண்டே இருப்போம். ரத்த அழுத்த நோய் உப்பை அதிக அளவில் சேர்க்கும் ஐந்து பேரில் ஒருவருக்கு வந்துவிடுகிறது.
மேல்நாட்டு உணவுகளை நாம் விரும்பிச் சாப்பிடுகிறோம். இப்போது புராஸஸ்டு மீட் (processed meat) வந்துவிட்டது. எங்கே, எப்படித் தயாரித்து இங்கே எப்போது அது நம் கைகளில் கிடைக்கிறது என்று தெரியாது. ஆயிரம் டிகிரி சென்டிகிரேடுக்கு மேலான வெப்பத்தில் அது தயாரிக்கப்படுகிறது. நமது உணவகங்களில் தயாரிக்கப்படும் உணவுகளை திரும்பத் திரும்பச் சுட வைத்த எண்ணெய்யில் தயாரிக்கிறார்கள். இதனால் பல மடங்கு கொழுப்புச் சத்து உணவில் அதிகரித்துவிடுகிறது.
குளிர்ச்சியாக உள்ள சாலட் போன்றவற்றை வெளியில் சாப்பிடும்போது கவனமாக இருக்க வேண்டும். அவற்றைத் தயாரிப்பவர் கிளவ்ஸ் அணியாமல் வெறும் கைகளினால் தொட்டு அவற்றைத் தயாரித்தால் சாப்பிடக் கூடாது. அவர் டாய்லெட்டுக்குச் சென்று கையைச் சுத்தமாக சோப்புப் போட்டுக் கழுவாமல் கூட வந்திருக்கக் கூடும். கைகளில் உள்ள நோய்க் கிருமிகள் வெப்பம் குறைவான குளிர்ச்சியான உணவுப் பொருட்களில் அதி வேகமாகப் பரவுகின்றன. பழங்களை வெறும் கைகளினால் வெட்டிப் போட்டு பழச்சாறு செய்தால் அதையும் வாங்கி அருந்தக் கூடாது.
நாம் சாப்பிடும் அளவுக்கு உடல் உழைப்பு இருந்தால் எந்தப் பிரச்னையும் இல்லை. இப்போது உடல் உழைப்பு குறைந்துவிட்டது. பலர் நடைப்பயிற்சி செய்வதில்லை. பக்கத்துத் தெருவுக்குச் செல்வதற்குக் கூட இருசக்கர வாகனத்தில் செல்கிறார்கள்.
உடற்பயிற்சி அறவே இல்லை.
அதைவிட இன்று பலர் அலுவலகச் சூழல், வேலைமுறை ஆகியவற்றினால் அதிகப்படியான மன அழுத்தத்துக்கு உள்ளாகிறார்கள். மன அழுத்தம் ஏற்பட்டால் உடல் மெலியும் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் மன அழுத்தத்தின் காரணமாக உடல் எடை கூடும்; தொப்பை உண்டாகும். ஓர் ஆணுக்கு வயிற்றின் சுற்றளவு 90 செ.மீ. இருக்க வேண்டும். பெண்ணுக்கு 80 செ.மீ. இருக்க வேண்டும். அதிகரித்தால் தொப்பை இருக்கிறது என்று அர்த்தம். தொப்பை அதிகரித்தால் இதயநோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். இரத்த அழுத்த நோய் ஏற்பட வாய்ப்பு அதிகம். கல்லீரலில் கொழுப்பு சேர்ந்துவிடும்.
நமது பாரம்பரிய உணவுகளைச் சாப்பிட்டால் இந்தப் பிரச்னைகள் வர வாய்ப்பில்லை. ஆனால் நாம் அந்த உணவுகளுக்குப் பழக வேண்டிய நிலையில் இருக்கிறோம். கீரைகள், காய்கறிகள், பழங்களை அதிக அளவில் நாம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
சாப்பிடும் முறை கூட நோய்களுக்குக் காரணமாகிவிடுகிறது. டிவி பார்த்துக் கொண்டே சாப்பிடுவோம். புத்தகம் படித்துக் கொண்டே சாப்பிடுவோம். சாப்பிடும் உணவைச் சுவைத்துச் சாப்பிட வேண்டும். அப்போதுதான் ஜீரணம் நல்லமுறையில் நடைபெறும்.
உடற்பயிற்சி, பாரம்பரிய உணவு ஆகியவற்றால் நமது உடல் நலனை நாம் காத்துக் கொள்ள முடியும்'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...