பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

மக்கள் ஆதரவால் நடக்கும் பள்ளி!

இன்று யுகேஜி, எல்கேஜி மாணவர்களுக்கே லட்சக் கணக்கில் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் வந்துவிட்டன.

News image
Updated On :13 ஜூன் 2015, 3:33 pm

ந. ஜீவா

இன்று யுகேஜி, எல்கேஜி மாணவர்களுக்கே லட்சக் கணக்கில் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் வந்துவிட்டன. பள்ளியில் மாணவர்களைச் சேர்க்க நன்கொடை வேறு வசூலிக்கிறார்கள். அனைவருக்கும் இலவசக் கல்வி என்ற குரல் ஒருபுறம் ஒலித்துக் கொண்டிருக்கும்போதே கல்வி வியாபாரமும் தொடர்கிறது.

ஆனால், திண்டிவனம் ரோசனை பகுதியில் உள்ள தாய்த் தமிழ் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களிடம் கட்டணம் வசூலிப்பதில்லை. சீருடையும் இலவசமாக வழங்குகிறார்கள். காலணிகளும் இலவசமாக வழங்குகிறார்கள். இந்தப் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் 10 ஆம் வகுப்பிலும், +2 விலும் அதிக மதிப்பெண் பெறுகிறார்கள். இவையெல்லாம் எப்படி சாத்தியம்? என்று பள்ளியை நிறுவியவர்களில் ஒருவரான பேராசிரியர் பா.பிரபா கல்விமணியிடம் கேட்டோம்:

""திண்டிவனத்தில் அரசு பெண்கள் பள்ளி ஒன்று வேண்டும் என்று 1986 இல் "பள்ளி திறப்புக் குழு' என்ற பெயரில் போராட்டம் நடத்தினோம். அதற்கு மக்களின் பெரும் ஆதரவு எங்களுக்குக் கிடைத்தது. போராட்டத்தைத் தொடர்ந்து முருங்கப்பாக்கம் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளி தொடங்கப்பட்டது. இது மக்களின் போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றி.

அதன் பிறகு "திண்டிவனம் நகர கல்வி மேம்பாட்டுக் குழு' என்ற அமைப்பின் மூலம் கல்வித்துறையில் உள்ள பல சீர்கேடுகளை எதிர்த்துப் போராட்டங்களை நடத்தினோம். பள்ளிகள் நன்கொடை வசூலிக்கக் கூடாது. ஆசிரியர்கள் பணம் வாங்கிக் கொண்டு ட்யூஷன் நடத்தக் கூடாது, தமிழ் வழிக் கல்வி வேண்டும் என்று பல போராட்டங்களை நடத்தினோம்.

அதன் தொடர்ச்சியாக நாங்களே இலவசமாக மாணவர்களுக்கு ட்யூஷன் நடத்தலாம் என்று நினைத்தோம். எங்களுக்குத் தெரிந்த ஆசிரியர்கள் பலர் அதற்கு முன் வந்தார்கள். ஆனால் எங்களுக்கு ட்யூஷன் நடத்த பள்ளிகளில் இடம் தர மறுத்துவிட்டார்கள். இதைக் கேள்விப்பட்ட திண்டிவனம் ஆ.கோவிந்தசாமி அரசு கலைக்கல்லூரி பேராசிரியர் ஏ.ஹெச்.ரஹ்மான் ரூ.25 ஆயிரத்தைக் கொடுத்து ஏதாவது இடத்தை வாடகைக்கு எடுத்து ட்யூஷன் நடத்துங்கள் என்றார்.

அந்தப் பணத்தை நாங்கள் அதற்குப் பயன்படுத்தவில்லை. வேறொரு முயற்சியின் மூலம் இலவச ட்யூஷன் நடத்தினோம்.

அதற்குப் பிறகு "திண்டிவனம் நகர மற்றும் ஊரக மேம்பாட்டுக் கழகம்' என்ற பெயரில் ஓர் அறக்கட்டளையைத் தொடங்கினோம். 18 பேர் அந்த அறக்கட்டளையின் அறங்காவலர்கள். ஆளுக்கு ரூ.3 ஆயிரம் நன்கொடை தந்தார்கள். இந்தப் பணத்தை வைத்து திண்டிவனம் ரோசனை பகுதியில் 31 சென்ட் இடத்தை வாங்கினோம். அது தலித் மக்கள் அதிகம் வாழும் பகுதி.

2000 இல் தமிழ் வழிக் கல்வி மீது ஆர்வம் கொண்ட பலர் தாய்த்தமிழ் பள்ளிகளைப் பல இடங்களில் தொடங்கியிருந்தார்கள். திருப்பூரில் தொடங்கப்பட்ட ஒரு பள்ளியைப் பற்றிய செய்தி அப்போது தினமணி கதிரில் வெளிவந்திருந்தது. அதை நாங்கள் படித்தோம். நாமும் ஏன் ஒரு தாய்த்தமிழ் பள்ளியை ஆரம்பிக்கக் கூடாது என்று நினைத்தோம். அதே ஆண்டு ஆகஸ்ட் முதல் தேதியில் 21 குழந்தைகளை வைத்து தாய்த்தமிழ்ப் பள்ளியைத் தொடங்கினோம்.

முதல் ஆண்டு மட்டும் கட்டணம் வசூலித்தோம். பின்தங்கிய, நிறைய ஏழைகள் வசிக்கும் இந்தப் பகுதியில் கட்டணம் வசூலிக்க வேண்டாம் என்று அடுத்த ஆண்டு முடிவெடுத்தோம்.

2007 ஆம் ஆண்டில் நிறைய ஏழைப் பிள்ளைகள் பள்ளியில் சேர்ந்தார்கள். அவர்களுக்கு இலவச மதிய உணவு தரலாம் என்று முடிவெடுத்தோம். எங்கள் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கையால், எதிர்பார்த்ததைவிட நிறைய நன்கொடைகள் எங்களுக்குக் கிடைத்தன. மாணவர்களின் உணவுக்காக என்பதால் பலர் தாராளமாக நன்கொடைகள் அளித்தனர்.

திண்டிவனம் பகுதியில் உள்ள பள்ளிகளில் பத்து, பன்னிரண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்று முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி கெüரவிக்கிறோம்.

எங்களுக்கு திண்டிவனம் பகுதியில் உள்ள மக்கள் மட்டுமல்ல, பலரும் நன்கொடை தருகிறார்கள். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமாரின் முன் முயற்சியினால் நிறைய நன்கொடைகள் கிடைத்தன. பத்திரிகையாளர் த.செ.ஞானவேல் என்னை ஒரு நேர்காணலுக்காகச் சந்தித்தார். அவர் மூலம் நடிகர் சூர்யாவின் அறிமுகம் கிடைத்தது. சூர்யா நடத்தும் "அகரம் கல்வி அறக்கட்டளை' ரூ.16 லட்சம் நன்கொடையாக அளித்தது. மதிய உணவுக்காக நடிகர் சூர்யா மாதம் ரூ.10 ஆயிரம் தருகிறார். ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தான் எழுதிய "அம்பேத்கர் ஒளியில் எனது தீர்ப்புகள்' என்ற புத்தகத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்தை எங்கள் பள்ளிக்கு நன்கொடையாகத் தருவதாகச் சொன்னார். அதன் மூலம் எங்களுக்கு ரூ.2 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் நன்கொடை கிடைத்தது.

இப்படி பலவிதங்களில் எங்களுக்கு நிறைய நன்கொடை கிடைப்பதற்கான காரணம், நாங்கள் எங்களுடைய வரவு - செலவுக் கணக்கை வெளிப்படையாக எல்லாருக்கும் தெரியப்படுத்திவிடுகிறோம். அதனால் மக்களுக்கு எங்கள் மேல் நம்பிக்கை வந்திருக்கிறது. அவர்களின் ஆதரவு எங்களுக்கு இருக்கிறது.

எங்கள் பள்ளியில் 8 ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில்தான் பாடங்களை நடத்துகிறோம். ஆங்கிலம் ஒரு பாடமாக மட்டுமே உள்ளது. மாணவர்களை ஆசிரியர்கள் அடிக்கமாட்டார்கள். மாணவர்களை அடிக்கும் ஆசிரியர்களை நாங்கள் பணி செய்ய அனுமதிப்பதில்லை.

எங்கள் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவி அகிலா, முருங்கப்பாக்கம் அரசு பெண்கள் பள்ளியில் 10 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் 489 மதிப்பெண்கள் பெற்றார். +2 பொதுத்தேர்வில் 1133 மதிப்பெண்கள் பெற்றார். இதுபோல மாணவி மோனிகாவும் 10 வது, +2 பொதுத்தேர்வுகளில் பள்ளியில் முதலிடம் பெற்றார். எங்களிடம் பயின்ற மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளில் பயின்று வருகின்றனர்.

இலவசக் கல்வி, இலவச மதிய உணவு, இலவச சீருடை, தமிழ் வழிக் கல்வியில் படித்த மாணவர்கள் நிறைய மதிப்பெண்கள் எடுப்பது என நிறையச் சாதனைகளை வெறும் நன்கொடைகளை மட்டுமே நம்பி நடத்தும் எங்கள் பள்ளியினாலேயே செய்ய முடிகிறது என்றால், அரசுப் பள்ளிகள் ஏன் சாதனை செய்ய முடியாது? அவ்வாறு அரசுப் பள்ளிகள் சாதனை செய்தால் கல்வி வியாபாரம் செய்யும் சில தனியார் பள்ளிகளுக்கு நிச்சயம் மதிப்பில்லாமல் போய்விடும் என்பதே உண்மை'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.