வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

மறைந்து வருகிற கோயில் காடுகள்!

தமிழகத்தில், உயிர்பன்மைக்கு பெரு ஆதாரமாக விளங்கும் கோயில் காடுகள் பெருமளவில் அழிந்து வருகின்றன. ""2006-ஆம் ஆண்டளவில் கொல்லிமலையில் சுமார் 265 கோயில் காடுகள் இருந்தன.

Updated On :13 ஜூன் 2015, 2:24 pm

தமிழகத்தில், உயிர்பன்மைக்கு பெரு ஆதாரமாக விளங்கும் கோயில் காடுகள் பெருமளவில் அழிந்து வருகின்றன. ""2006-ஆம் ஆண்டளவில் கொல்லிமலையில் சுமார் 265 கோயில் காடுகள் இருந்தன. கடந்த பத்து ஆண்டுகளுக்குள் இவற்றின் எண்ணிக்கை 30 ஆகக் குறைந்துவிட்டது. கொல்லிமலை மட்டுமல்ல; ஒட்டுமொத்தத் தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில் காடுகளின் நிலை இதுதான்'' என்ற அதிர்ச்சிகரமான தகவலைச் சொல்கிறார் "எம்.எஸ்.சுவாமிநாதன் அறக்கட்டளை'யின் முதன்மை அறிவியலாளரான ஆலிவர்கிங்.

கோயில் காடுகள் என்றால் என்ன?

காரைக்குடியை அடுத்துள்ள கண்டனூரில் வைகைக் கருப்பர் கோயில் உள்ளது. வெட்ட வெளியாக உள்ள நிலப்பரப்புகளுக்கு மத்தியில் இந்தக் கோயிலை சுற்றி உள்ள சுமார் 80 ஏக்கர் நிலப்பரப்பு மட்டும் அடர்ந்த வனமாக உள்ளது. வெட்ட வெளியிற்கிடையில், அடர்ந்த காடு எப்படிச் சாத்தியமானது என்ற கேள்வியின் மூலமாக, "கோயில்காடு' என்ற பதத்தை இலகுவாக வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தலாம்.

கோயில் காடு, சோலைக் காடு, சாமி சோலை, சாமித் தோப்பு, சாமித் தோட்டம் எனப் பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகின்ற கோயில் காடுகளை தமிழ் நாட்டில் பரவலாகக் காணலாம். ஒவ்வொரு கோவிலும் ஒவ்வொரு கிராமத் தெய்வத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டிருக்கும். அய்யனார், கருப்பசாமி, வீரன், ஆண்டவன், முனீஸ்வரன், வேடியப்பன், செம்மம்பிடாரி, ஆண்டியப்பன், சேலைக்கட்டியான், சடையப்பன், கன்னியம்மன், பகவதி அம்மன், சப்த கன்னிகள், செல்லியம்மன், எல்லையம்மன், பேச்சியம்மன் பொங்கல் அம்மன், நாச்சி அம்மன், சின்னம்மாள், காளியாயி என பல கிராம தெய்வங்கள், கிராம தேவதைகளின் பெயர்களில் இந்தக் காடுகள் இருக்கும்.

அந்தப் பகுதியில் உள்ள இயற்கை வளங்கள் அழியாமல் இருப்பதற்காக மூதாதையர்களால் இந்தக் கோயில் காடுகள் உருவாக்கப்பட்டன. இந்தக் காடுகள் மக்களின் நம்பிக்கையையும், பயத்தையும், பக்தியையும் ஒரு சேரப்பெற்றன. இந்தக் காடுகளை ஆளும் தெய்வங்களின் மேல் உள்ள பயத்தினாலும், அந்தக் காடுகள் சம்பந்தமாக மரபு வழியாக சொல்லப்பட்டு வருகின்ற பக்திக் கதைகளாலும், நம்பிக்கைகளாலும் காடழிப்பு தீவிரமாக நடைபெறும் இந்த நூற்றாண்டிலும் கோயில் காடுகள் பாதுகாக்கப்பட்டு வந்தன.

கோயில் காடுகளின் உள்ளே செருப்புப் போட்டு நடக்க முடியாது, அங்குள்ள மரங்களை வெட்ட முடியாது, கிளைகளை ஒடிக்கக் கூட முடியாது போன்ற பல நம்பிக்கைகள் கோயில் காடுகளை இன்னும் உயிர்ப்பாக வைத்திருக்க உதவி வருகின்றன.

இந்தியா முழுவதும் சுமார் 1 லட்சத்து ஐம்பதாயிரம் கோயில் காடுகள் உள்ளதாகச் சொல்கிறார்கள். இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் கோயில் காடுகள் உள்ளன. இந்தியா முழுவதிலும் இதுவரை 13,276 கோயில் காடுகள் முறைப்படி ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் 1670 கோயில் காடுகள் தமிழ் நாட்டில் அடையாளம் காணப்பட்டிருக்கின்றன.

கோயில் காடுகளின் தோற்றம்...

கோயில் காடுகள் எப்போது தோற்றம் பெற்றன...? காடுகள் தோற்றம் பெறத் தொடங்கிய காலத்தில் இருந்தே இவை இருந்து வருகின்றன என்கிறார்கள்.

"சம்பாதியிருந்த சம்பாதி வனமும்

தவாநீர்க் காவிரிப் பாவைதன் தாதை

கவேரனாங் கிருந்த கவேரவனமும்'

என்ற சிலப்பதிகார பாடல் வரிகள் மூலமாக சம்பாதி வனம், கவேரவனம் போன்ற கோயில் காடுகள் பூம்புகாரில் இருந்ததற்கான ஆதாரங்களைக் காணலாம். மாமன்னன் ராஜராஜ சோழன் பிடாரி கோயில்காடு, ஐயன் கோயில் காடு ஆகியவற்றைப் பாதுகாத்து வழிபட்டதற்கான வரலாற்றுச் சான்றுகளும் உள்ளன.

இந்தக் காடுகள் பாதுகாக்கப்பட பயமும், பய பக்தியும் வேண்டும் என்பதனால் ஒவ்வொரு சாமி சோலைக்கும் ஒவ்வொரு தனித்துவமான கதைகள் உண்டு.

கோயில் காடுகளின் சூழலியல் முக்கியத்துவம்.

"கோயில் காடுகளில் உயர்ந்த மரங்களும் செடி கொடிகளும் நெருக்கமாக அடர்ந்திருக்கும். கரியமில வாயுவைப் பிடித்து, ஆக்சிஜனை வெளியிடுபவையாகவும் இவை திகழ்கின்றன. இந்த இயற்கைக் காடுகளில் மூலிகைத் தாவரங்கள் உள்பட அழியக்கூடிய நிலையில் உள்ள அபூர்வமான பல தாவரங்களும் இன்றைக்கும் நிலைத்து நிற்கின்றன. மருத்துவ குணங்கள் நிறைந்த பல மூலிகைகள் கிராம மக்களின் நோய்ப்பிணியைப் போக்குகின்றன. அங்குள்ள பறவைகள், பூச்சிகள், உயிர்வாழ் விலங்குகளுக்கு வாழ்விடமாகத் திகழ்கின்றன. இங்கு உள்ள மரங்களிலிருந்து விழும் இலைகள் அகற்றப்படாமல், மண்ணோடு மண்ணாகக் கலந்துவிடுவதால், மண்ணானது கார்பன் மூலங்களைப் பெற்று சத்தானதாக மாறுகிறது. நிலப்பகுதிகள் பாலை வனமாவதையும்} நில அரிப்பைத் தடுக்கவும் உதவுகின்றன. மழை நீரை ஈர்த்து நிலத்தடி நீரை சேமித்து வைக்கவும் உதவுகின்றன. சுத்தமான காற்று கிடைக்கிறது. இந்தக் காடுகளால் வெப்பம் தணிக்கப்படுகிறது. காடுகளில் உள்ள மரங்களின் அடர்த்தி காரணமாக சூறாவளி, புயல் போன்றவற்றின் வேகம் தடுக்கப்படுகிறது. காட்டை ஒட்டியுள்ள பிரதேசங்களில் இருக்கும் குளங்கள்தான் கோடை காலங்களில் அந்தப் பகுதியில் உள்ளவர்களுக்கான நீர் ஆதாரமாகத் திகழ்கின்றன'' என்கிறார் தமிழ் நாட்டின் பருவநிலை மாற்றத்தை ஆராய்ந்து "நிகழ்காலம்' என்ற பெயரில் புத்தகமாக எழுதிய பத்திரிகையாளர் பொன். தனசேகரன்.

""கோயில் காடுகளில் வழிபாட்டிற்கு களி மண்ணால் ஆன உருவங்களையே பயன்படுத்துகிறார்கள். மண்ணிலிருந்து தோன்றும் புதிய தாவரங்களையும், விலங்குகளையும் இவை உருவகப்படுத்துகின்றன. "புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகி' என மாணிக்கவாசகர் சொன்னதுபோல "பிறப்பு இறப்பு மீண்டும் பிறப்பு' என்ற இந்து தத்துவத்தை குறிக்கும்படியாக இவை காணப்படுகின்றன. அந்த சிற்பங்கள் அழிந்தவுடன் அந்த மண்ணைக் கொண்டு புதிய சிற்பங்கள் செய்து வழிபடுகிறார்கள். மக்கள் தமது வேண்டுதல் பொருட்டு அர்ப்பணிக்கும் உருவங்களும் மண்ணால் செய்யப்பட்டவையே. அவையும் திறந்த வெளியில் வைத்துக் காக்கப்படும் இவை களிமண்ணால் செய்யப்படும் சிற்பங்கள் என்பதனால் சுற்றுச் சூழலுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை'' என்கிறார் சி.பி.ஆர். சுற்றுச் சூழல் ஃபவுண்டேஷனின் ஆராய்ச்சியாளர் எம்.அமிர்தலிங்கம்.

கோயில் காடுகளின் அழிவு...

சென்னை, கிண்டி என்.ஜி.ஓ காலனி செல்லும் வழியில் உட்பக்கமாக ஓர் ஐயனார் கோயிலைச் சுற்றிய கோயில் காடு ஒன்று இருந்தது. சில வருடங்கள் முன்பு வரை, ஒரு ஏக்கர் நிலத்தில் அடர்த்தியாக இருந்த அந்தக் கோவில் காடு இன்று ஒரு சில மரத்துடன் பரிதாபமாகக் காட்சி தருகிறது. இங்கு மட்டுமல்ல பொதுவாக எல்லா இடங்களிலுமே கோயில் காடுகளின் அடர்த்தி வெகுவாகக் குறைந்து வருகின்றன. சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் தொடர்ச்சியாக இல்லாவிட்டாலும் திட்டுத் திட்டாக அடர்த்தியான நிறையக் கோயில் காடுகள் இருந்தன. அங்கே நிறைய மரங்கள் இருந்தன. அந்தக் காடுகளில் இருந்த மரங்கள் எல்லாமே கடற்கரைச் சூழலுக்கு ஏற்ற வறட்சியைத் தாங்கி வளரக் கூடியவை இன்று அவற்றில் பெரும்பாலானவை அழிக்கப்பட்டு விட்டன.

கோயில் காடுகள் அழிவடையக் காரணங்கள்...

மண்ணாலான இயற்கை உருவங்களை வைத்து வழிபாடு செய்த இடங்களில், மரங்களை வெட்டிக் கோயிலைக் கட்டுகிறார்கள். கோயிலை சுற்றிக் கல்யாண மண்டபங்கள் கட்டுகிறார்கள். ரோடு போடுகிறார்கள். கீழ்புத்துப்பட்டு என்ற ஊரில் சுமார் 80 ஏக்கரில் அடர்த்தியான கோவில் காட்டில் ஐயனார் இருந்தார். சில வருடங்களுக்கு முன்பு வரைக்கும் அந்தக் காட்டில் நுழைந்து வெளியேறுவதே கஷ்டமாக இருந்தது. இன்று அந்தக் காடுகளில் பெரும்பான்மை அழிக்கப்பட்டு அங்கே பெரியதொரு கோயிலும், கல்யாண மண்டபமும் கட்டி கூடவே பாதையும் போட்டுள்ளார்கள். கோயில் காடுகளை அழிக்கிறோம் என்ற பிரக்ஞை இல்லாமல் மக்கள் செயற்பட்டு வருகின்றனர்' எனக் கவலையுடன் சொல்கிறார் அமிர்தலிங்கம்.

கோயிலை ஒட்டியுள்ள நிலங்களில் இருப்பவர்கள் கோயில் காடுகளை கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமித்து வருகிறார்கள். குறிப்பாக பணப் பயிர்களான காபி, தேயிலை, மிளகு போன்றவற்றை பயிரிட்டவர்கள் கோயில் காடுகளை இலகுவாக ஆக்கிரமிப்புச் செய்கிறார்கள்.

அந்தந்தப் பகுதிகளுக்குரிய மரங்களே கோயில் காடுகளில் இருக்க வேண்டும். சிலர் மரம் நடுகிறேன் என அதிக நீர் வளத்தை உறிஞ்சும் யூகலிப்பிடஸ் போன்ற மரங்களை கோயில் காடுகளில் நடுவதால், சுற்றியுள்ள மரங்கள் பாதிக்கப்படுகின்றன. ஏலக்காய் போன்றவை நிழல் வேண்டும் தாவரங்கள் என்பதனால் அதிக அளவு நிழல் உள்ள கோயில் காடுகளில் இவற்றை நடுகிறார்கள். இப்படியான செயல்கள் கோயில் காடுகளின் சம நிலையைப் பாதிக்கின்றன. மூலிகைக்காக சிலர் முழு மரத்தையும் வேருடன் பறிப்பதாலும் கோயில் காடுகள் பாதிக்கப்படுகின்றன.

அழிவை எப்படித் தடுத்து நிறுத்தலாம்?

"கோயில் காடுகள் சம்பந்தமான பயங்கள், நம்பிக்கைகள் இன்னமும் அப்படியேதான் உள்ளன. ஆனால், அவை வெறும் பக்தியாக மட்டுமே உள்ளனவா... இல்லை, தெய்வ நம்பிக்கை சார்ந்து உள்ளனவா என்பது முக்கியமானது. தெய்வத்தின் மீது உள்ள அதே நம்பிக்கையை எமது முன்னோர்கள் அதைச் சுற்றியுள்ள காடுகள் மீதும் வைத்தார்கள். ஆனால், இன்று அந்த நம்பிக்கை தனியே தெய்வ நம்பிக்கையாக மட்டுமே சுருங்கி விட்டது. தனியே இறை பயத்தால் மட்டுமே கோயில் காடுகளைக் காப்பாற்றலாம் என்பதை விடுத்து, இந்தக் காடுகளால் மனித குலம் பெறும் நன்மைகளை மக்களுக்கு தெரியப்படுத்தி சூழலியல் சம்பந்தமான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அரசின் கடமை' என்கிறார் ஆலிவர் கிங்.

எமது முன்னோர்கள் காடுகளின் பலனை அறிந்து, காடுகள் பாதுகாக்கப்படவேண்டும் என்பதற்காக அவற்றிற்கு தெய்வ நம்பிக்கை ஊட்டிக் கோயில் காடுகளாகப் பாதுகாத்தனர். அவை அழிந்து போகாமல் பாதுகாப்பது இன்றைய தலைமுறையின் கடமையாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.