புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மணிரத்னம் படத்தில்  நடிக்க ஆசை: - தாப்ஸி

""சீக்கிய மதத்தில் பிறந்த நான், தில்லியில்தான் வளர்ந்தேன். "தபஸ்வினி' என்கிற சமஸ்கிருத வார்த்தையின் அடிப்படையில்

News image
Updated On :1 மார்ச் 2015, 4:51 am

பூா்ணிமா

""சீக்கிய மதத்தில் பிறந்த நான், தில்லியில்தான் வளர்ந்தேன். "தபஸ்வினி' என்கிற சமஸ்கிருத வார்த்தையின் அடிப்படையில் எனக்கு "தாப்ஸி' என்று பெயரிட்டதாக பெற்றோர்கள் கூறுவார்கள். என்னைப் பொருத்தவரை நான் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட குழந்தையாகவே கருதுகிறேன். என்னுடைய விதிரேகையைவிட அதிர்ஷ்ட ரேகை வலுவாக உள்ளது. நான் நடிகையாக வேண்டும் என்று திட்டமிடவில்லை. தென்னிந்தியாவில் மாடலிங் செய்யும்போதுதான் படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் வந்தன. என்னுடைய முதல் படமான "ஆடுகளம்' ஆறு தேசிய விருதுகளைப் பெற்றது. அதன் பிறகே தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்கும் அங்கீகாரம் எனக்குக் கிடைத்தது.

 சாப்ட்வேர் என்ஜினீயர் ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் தில்லி ஐபி யூனிவர்சிட்டியில் சேர்ந்தேன். இரண்டாம் ஆண்டு கம்ப்யூட்டர் முன்னே அமர்ந்து என்ன சாதிக்கப் போகிறோம் என்ற எண்ணம் தோன்றவே, எம்பிஏ படிக்க சிஏடி தேர்வு எழுதினேன். முதலாவது முயற்சியில் வெற்றி கிடைக்கவில்லை. இரண்டாவது முறை தேர்வு எழுதத் தேவையான முன்னேற்பாடுகளில் இறங்கினேன்.

 கல்லூரியில் படிக்கும்போதே பிர்ஜு மகராஜின் சீடர் ஒருவரிடம் "கதக்' நடனம் கற்றுக் கொண்டேன். அடுத்த தேர்வு எழுத ஓராண்டு இருப்பதால் என்ன செய்வதென்று யோசித்துக் கொண்டிருந்த நேரத்தில் திரைப்பட வாய்ப்புகள் வந்தன. திரைப்படத்தில் நடிப்பதை என்னுடைய தந்தை விரும்பவில்லை. ஒரு வருடம் திரைப்படங்களில் நடிக்க முயற்சிக்கிறேன். க்ளிக் ஆகவில்லை என்றால் மறுபடியும் திரும்பிவந்து எம்பிஏ படிக்கிறேன் என்று சொன்னேன். முதல் படமே தேசிய விருது பெற்று, அடுத்தடுத்து மூன்று படங்கள் ஒப்பந்தமாயின.

 தெலுங்கு திரையுலகைப் பொருத்தவரை புதுமையான அனுபவம் என்றே சொல்லலாம். காரைவிட்டு இறங்கி செட்டிற்குள் நுழையும்போது அனைவருமே எழுந்து நின்று வரவேற்பது. அவர்களைக் கடந்து செல்லும்வரை நிற்பது எனக்குப் பிடித்திருந்தது. அந்த வாய்ப்பை நான் இழந்ததில்லை.

 என்னுடைய தந்தை ரியல் எஸ்டேட் நிறுவனமொன்றை இன்னமும் நடத்தி வருகிறார். தில்லியில் இருந்தபோது அவர் என்னை தனியாக வெளியே அனுப்பியதே இல்லை. தென்னிந்தியாவில் வந்து தனியாகத் தங்குவதற்கு அனுமதியளித்தார். முதல் ஓராண்டு ஹைதராபாத்தில் தனியாகத்தான் இருந்தேன். அப்போது எனக்கு 22 வயது. பெற்றோர்களை விட்டுவிட்டு தனியாக வந்த இடத்தில் யாராவது அன்பு காட்டினால் சுலபமாக விழுந்து விடுவோமோ என்ற பயம் உள்ளுக்குள் இருந்தது. நகரமும், மொழியும் புதியது. ஆட்களைப் பார்த்தவுடனே புரிந்துகொள்ளும் சக்தி இருந்தது.

 எனக்கு நண்பர்கள் அதிகம் கிடையாது. தில்லியில் எனக்கு மிகவும் நெருங்கிய சிநேகிதி என்னுடைய தங்கை "ஷாகன்'தான். என்னைவிட அவள் நான்கு வயது இளையவள் என்றாலும் எதுவானாலும் அவளிடம்தான் ஆலோசனை கேட்பேன். என்னைவிட புத்திசாலி. பொறுப்பானவள். ஹைதராபாத்தில் என்னுடன் வந்து தங்கியவள் தற்போது மும்பையிலும் என்னுடன்தான் இருக்கிறாள்.

 எனக்கு வலுவான "வில் பவர்' இருப்பதால் என்னுடைய பெற்றோர்களுக்கு என் மீது நம்பிக்கை அதிகமுண்டு. என்னுடைய ஆயுள்ரேகையைவிட அதிர்ஷ்ட ரேகை நீளமாக இருக்கும். என்ஜினீயரிங் படிப்பை விட்டுவிட்டு ஓராண்டு காலம் வீணடித்ததுதான் என்னுடைய வாழ்க்கையில் மோசமான நேரமாகக் கருதுகிறேன். அதற்காக நான் வருத்தப்படவில்லை. என்றாவது ஒருநாள் மீண்டும் எம்பிஏ படிப்பேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஒருவேளை திரைப்படங்கள் எனக்கு வெற்றியைத் தந்திராவிட்டால் உடனடியாக வேறு வேலைக்குத் தாவி இருப்பேன். காத்திருப்பதற்கு எனக்குப் பொறுமை கிடையாது. எப்போதும் சந்தோஷமாக இருக்கவே விரும்புவேன். ஒருநாளாவது வருத்தத்துடன் நான் வீட்டிற்குச் சென்றது கிடையாது. தூங்கச் செல்வதற்கு முன் நான் மகிழ்ச்சியாக இருப்பதற்கு என்ன காரணம் என்று நினைக்கத் தவறியதில்லை. சந்தோஷம் என்பது உங்கள் கைகளில்தான் இருக்கிறது. என்னை ஒரு பிரபல நட்சத்திரமாக நான் நினைப்பது இல்லை. பணம் கிடைக்கிறதே என்பதற்காக வந்த வாய்ப்புகளை எல்லாம் ஒப்புக் கொள்வதும் இல்லை. இரண்டாவது வாய்ப்பு கிடைக்காது என்பது எனக்குத் தெரியும். எதையுமே யோசித்துச் செயல்படுத்தவே விரும்புவேன்.

 திருமணத்தைப் பற்றிய எண்ணமும் உண்டு. எப்போது திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்று தோன்றுகிறதோ அப்போது நிச்சயம் திருமணம் செய்து கொள்வேன். நடிப்பது போதும் என்று தோன்றியவுடன் நடிப்பதை நிறுத்தி விடுவேன். நிச்சயம் நான் ஒரு சர்தார்ஜியை திருமணம் செய்து கொள்ள மாட்டேன். இதுவரை எந்த சர்தார்ஜியுடனும் நான் பழகியதும் இல்லை. எந்த நடிகருடனும் பழகியதில்லை. ஒரு நடிகருக்கும் நடிகைக்கும் தொடர்பு இருக்க வேண்டும் என்று நான் நினைத்ததும் இல்லை.

 இந்தியாவை விட்டு வெளியேறி வேறு நாட்டில் வேறு வேலை தேடிக்கொள்ள வேண்டுமென்ற ஆசை இருக்கிறது'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.