

தமிழகத்தில் தற்சமயம் மாமரங்களில் மாம்பூவும், மாவடுவும் வரத்துவங்கக் கூடிய இந்நாட்களில் அதன் பெருமைகளை ஆயுர்வேதம் குறிப்பிட்டுள்ளதா? மாம்பழம் பற்றியும், அதனுடைய மருத்துவகுணங்களும் ஆயுர்வேதத்தில் விளக்கப்பட்டுள்ளனவா?
-கோபாலஸ்வாமி, திருவெறும்பூர்.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையிலும், அறிந்து அனுபவித்து உபயோகிப்பது மாம்பழம். காடுகளில் இயற்கையாக வளர்வது தோட்டங்களிலும், மற்ற இடங்களிலும் நாமே விதை நட்டு வளர்த்தது என இருவிதமாக மாமரங்களைப் பிரிக்கலாம். இரண்டாவது பிரிவான நாட்டு ஜாதி மரங்களில் உண்டான கனிகள், பூக்கள் மேன்மையாகக் கருதப்படுகின்றன. அதிலும் பாதிரி, நீலம், கிரேப், ருமானி, ஒட்டுமா, மல்கோவா என்று பல பிரிவுகளும் இருக்கின்றன. உயர்ந்த ஜாதி மாஞ்செடியின் கிளையை வெட்டி மற்றொரு மாஞ்செடியின் கிளையை அதனுடன் சேர்த்து கட்டிவைத்தால் சிறிது நாட்களில் அந்த இரண்டும் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து வளர ஆரம்பிக்கும். இதனைத்தான் ஒட்டுமா என்றும், சேலம் நடுச்சாலை என்றும் கூறுகிறார்கள். இதனுடைய மணமும், சுவையும் மிகவும் இனிமையாக இருக்கும்.
சுவையில் இனிப்பு, விந்துவை அதிகரிப்பது, சுகத்தைக் கொடுப்பது, கப ரத்த நோய்களைக் கண்டிப்பது, உடலுக்கு புஷ்டியும், நல்ல நிறத்தையும் கொடுப்பது, வாயுவைக் கண்டிப்பது, குளிர்ச்சி ஆகியவை பொதுவான குணங்கள். மரத்திலேயே பழுத்து இனிப்பும், சிறிது புளிப்பும் கலந்த சுவையுள்ள மாம்பழத்தை உட்கொண்டால் சீக்கிரம் ஜீரணமாகாது. சிறிது பித்தத்தைக் கிளறிவிடும். மாம்பழ ஜூஸ் நல்ல பலம் கொடுக்கும். வாயுவை கண்டிக்கும். கபத்தை உண்டு பண்ணும். மலத்தை இறுகச் செய்யும். காய்ச்சிய பசும்பாலுடன் சேர்த்து மாம்பழத்தைச் சாப்பிட்டால் வாத பித்தத்தை கண்டிப்பதுடன் நல்ல சுவையாகவும், விந்து விருத்தி, பலம், புஷ்டி, உடல் வனப்பு கொடுக்கும். குடலுக்கு மென்மையும், சக்தியும் தரும். சிறுநீர் நன்றாகப் பிரியும்.
மாம்பழத்தின் உபயோகத்தால் வெளியிலிருந்து விஷப்பூச்சி அணுக்கள் நம் இரத்தத்தில் கலந்து கெடுதல் செய்யாமலும், தோல் சம்பந்தப்பட்ட சில நோய்கள் வராமலும் தடுக்கப்படுகின்றன. மாம்பழத்தைச் சாப்பிடும் சமயம் மாம்பழம், காய்ச்சிய பசுவின் பால் இரண்டைத் தவிர மற்ற எந்த உணவையும் உட்கொள்ளக்கூடாது. காசநோய் உள்ளவர் வெள்ளாட்டுப் பாலுடன் சேர்த்து மாம்பழத்தைச் சாப்பிட
வேண்டும். காய்ச்சிய பசும்பாலை அருந்திவிட்டு மாம்பழத்தை நன்கு கழுவி காம்பை நறுக்கி எடுத்து அவ்விடத்தில் வெளிக்கிளம்பும் பாலுடன் கூடிய பழரசத்தை வெளித் தள்ளி பிறகு வரும் பழரசத்தை உறிஞ்சி உட்கொள்ள வேண்டும். எக்காரணத்தை முன்னிட்டும் மாம்பழம் சாப்பிட்டுவிட்டு பால் அருந்தக் கூடாது. இவ்விதம் ஒரு மாதமோ, இரண்டு மாதமோ தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் ஜீரணசக்தி அதிகமாவதுடன் மலச்சிக்கல், இருமல், இளைப்பு, இதயநோய்கள் யாவும் மறைந்து இரத்தவிருத்தி, விந்து விருத்தி, உற்சாகம், புதுத்தெம்பு உண்டாகும்.
மாவடு புளிப்பும், துவர்ப்பும் உள்ளதனால் ருசியைக் கொடுக்கும். ஆனால் வாயுவையும், பித்தத்தையும் உண்டுபண்ணும். மாங்காய் சுவையில் புளிப்பு, வறட்சி, வாயு - பித்தம் - கபம் இரத்த தோஷங்களை உண்டுபண்ணும். மாங்காயையே துண்டங்களாக நறுக்கி வெயிலில் காயவைத்து உட்கொண்டால் மலத்தை இளக்கச் செய்வதுடன் கபம் வாயுவைக் கண்டிக்கும். மாங்கொட்டைப் பருப்பு சுவையில் துவர்ப்பு. வாந்தி, பேதி, நெஞ்செரிச்சல் இவற்றைக் கண்டிக்கும். பேதி ஏற்பட்டால் மாம்பருப்பு, கருவேப்பிலை, சிறிது மிளகு இவற்றை அரைத்து மோரில் கலக்கித் தாளித்து சிறிது உப்பு சேர்த்து சாப்பாட்டுடன் சாப்பிடுவது மிகவும் சிறந்தது. மாந்துளிர் ருசியின்மை, கபம், பித்தம் ஆகியவற்றைப் போக்கும். மாம்பூ குளிர்ச்சி, வாயுவை உண்டு பண்ணும். பேதி, ருசியின்மை, இரத்தக்கேடு, கபம், பித்தம், சர்க்கரை வியாதி ஆகியவற்றைக் கண்டிக்கும். மலத்தைக் கட்டும் குணம் இதற்கு அதிகம் உண்டு.
(தொடரும்)
எஸ். சுவாமிநாதன், டீன்
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,
நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)
செல் : 94444 41771
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.