ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: உப்பும் கைகால்களில் வீக்கமும்!

எனக்கு கை, கால்களில் வீக்கம் அடிக்கடி ஏற்படுகிறது. உப்பில்லாத உணவை டாக்டர் சாப்பிடச் சொல்கிறார். உப்பில்லாத
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: உப்பும் கைகால்களில் வீக்கமும்!
Updated on
2 min read

எனக்கு கை, கால்களில் வீக்கம் அடிக்கடி ஏற்படுகிறது. உப்பில்லாத உணவை டாக்டர் சாப்பிடச் சொல்கிறார். உப்பில்லாத உணவு இந்தப் பிரச்னையைக் குணமாக்க எப்படி உதவுகிறது? உப்பில்லாமல் சாப்பிட முடியாததால் நாட்டுமருத்துவர் இந்துப்பு சேர்த்துக் கொள்ளுங்கள் என்கிறார். இது சரியா? அதுவும் உப்புதானே? உப்பு எப்படி நோயை அதிகப்படுத்தும்?

-கே.அலமேலு, கோவில்பட்டி.

உப்பு உடலுக்குத் தேவையான உணவுப்பொருள். உணவு ஜீரணமாகி சத்தாக மாற உதவும் பொருள். தானே சத்தாகி நின்று உடலைத் தாங்கும் தாதுப்பொருள். காலரா முதலிய உடலிலுள்ள நீரின் அம்சம் பெருமளவில் வெளியேற்றப்பட்ட நிலையில் உப்புக் கரைசலே உட்செலுத்தப்பட்டு ஜீவனை நிலைக்க வைக்க உதவுகிறது. உணவின் மூலப்பொருளான சாதத்திற்கு ருசியும், மணமும் அளித்து விருப்புடன் ஏற்கச் செய்து ஜீரணிக்க உதவி களைப்பை நீக்குவதும் உப்பே தான். மற்ற கடுகு, வெந்தயம் போன்ற தனித்த உருவில் நிற்காமல் உப்பு  கரைந்து மறைந்து எங்கும் பரவி நிற்கிறது.  இப்படிப்பட்ட உப்பைத் தான் வைத்தியர்கள், அளவிற்கு மீறினால் அமிர்தமும் விஷமென்பார்கள்.

உப்பு உடலின் நீரின் அம்சத்தை தன்னுடன் சேர்த்துக் கொண்டு பணியாற்றுகிறது. காலரா முதலிய உடலின் நீர்ப்பகுதி அதிக அளவில் குடலில் சுரந்து வெளியேறுவதைத் தவிர்க்க இரத்தத்தில் உப்பு நீர் சேர்க்கப்பட்டவுடன், குடலில் நீரின் அம்சம் அதிக அளவில் சுரப்பது நின்று பேதியாவது நின்றுவிடுகிறது. அதனால் காலராவின்போது உப்புநீரை இரத்தத்தில் ஏற்றுவதையே முதலுதவியாக முக்கியமாகச் செய்கின்றனர். உப்பு கரிக்கும் அளவு தண்ணீரில் கரைத்து அதில் சீரகத்தைப் பொடித்துப் போட்டு 10 -15 நிமிடத்திற்கொரு தடவை ஒவ்வொரு அவுன்ஸாக (30 மில்லி) சாப்பிட்டு வர கடுமையான பேதியின்போது ஏற்படும் நாவறட்சியும், கால் குடைச்சலும், களைப்பும் நின்றுவிடும். இது கசிவும், கரைப்புமான உப்பின் இயற்கை குணங்கள் உடலுக்கு உதவும் வழி.

இதே கசிவும், கரைப்பும் உடலைக் கெடுப்பதுமுண்டு. தசைகள், வியர்வைக் கோளங்கள் இவற்றில் அதிக அளவு நீர் தேங்கி நிற்கிறது. இந்த நீரம்சம் கட்டுப்பட்டு நிற்பதாலேயே உடல் கட்டுக்குலையாமல் நிற்கிறது. இந்த திரவாம்சம் அதிக அளவில் பிரிந்து தனித்து ஓரிடத்தில் சேர்வதோ அதிக அளவில் வெளியாவதோ நோய் நிலைக்கு அடையாளம். இரத்தம் முறிந்து நீராகிவிட்டதென்று சில நிலைகளைப் பொதுவாகக் குறிப்பிடுவார்கள். மஹோதரம், உடல்முழுவதும் வீக்கம் முதலியவை இத்தகையவை. மஹோதரத்தில் வயிற்றிலுள்ள வெளித்தசைகளுக்குள்ளும், குடலைப் போர்த்தி நிற்கும் ஜவ்விற்கும் நடுவே ஜலக்கசிவு மிகுந்து நிற்கிறது. சாதாரண நிலையில் குடலிலிருந்து நீர் உறிஞ்சப்பட்டு இரத்ததில் கலந்து சிறுநீரகங்கள் வழியே சிறுநீராகப் பிரிக்கப்பட்டு வெளியேறுகிறது. குடலிலிருந்து உள்ளே உறிஞ்சப்படாத நீர் மலத்துடன் வெளியாகிறது. மஹோதரத்தில் வயிற்றில் தேங்கிய நீர்ப்பகுதி இவ்விரு வகைகளிலும் வெளியேறுவதில்லை. குடலுக்கு அப்பாற்பட்ட இடத்திலுள்ள நீரைப் பேதியாக்கி வெளிக்கொணர்வதோ, இரத்தத்தில் சேரச் செய்து நீராக்கி வெளிக் கொணர்வதோ மிகப்பெரிய முயற்சியின் மூலமாக செய்ய வேண்டியிருக்கிறது. ஆகவே முதல் உதவியாக உடலில் நீரின் அம்சத்தை சேர வைக்கக் கூடியதும், கசிவை அதிமாக்கக் கூடியதுமான உப்பைத் தடைசெய்வது வீக்கத்தை அதிகமாக்காமல் இருக்க உதவுகிறது.

உடலில் சேர்ந்த உப்பு தன் பணி நிறைவேறியதும், உடலை விட்டு சிறுநீர் மற்றும் வியர்வை ஆகிய இருவழிகளில் வெளியேறுகிறது. வீக்கமுள்ள உங்களுடைய உடலில் சிறுநீரை வெளியேற்ற வேண்டிய நிலையிலுள்ள சிறுநீரகங்கள் அழற்சியுறுகின்றன. உப்பு அவ்வழற்சியை அதிகப்படுத்துகின்றது. அழற்சியுற்ற சிறுநீரகங்கள் வேலை செய்ய முடியாததால் சிறுநீர் வெளியேற்றம் தடைபட்டு வீக்கம் அதிகமாகிறது. இந்த விஷச்சக்கர சூழ்நிலையைத் தகர்க்க உப்பு அறவே நிறுத்தப் பெறுகிறது. உப்பு குறைந்ததும் உடலின் உட்பகுதியில் ஏற்பட்டுள்ள அழற்சி எப்பகுதியிலிருந்தாலும் குறைகிறது. அழற்சி குறைந்த சிறுநீரகங்கள் சிறுநீரை அதிக அளவில் வெளியேற்ற பலம் பெறுகின்றன. உப்பு குறைந்ததும் உடலில் நீர்க்கும் தன்மையும் அதனால் ஏற்படும் கசிவும் குறைந்துவிடுகின்றன. உப்பை நிறுத்துவதால் மாத்திரமே வீக்கநோய்களில் பெருமளவில் எதிர்பார்த்ததைவிட விரைவாகவே குணம் காண்கிறது.

இந்துப்பு கசியும் தன்மை இல்லாதது, கசியும் தன்மை  குறைந்தது என்பதற்காகவே பத்தியப் பொருளாக உள்ளது. இந்துப்பு ஒரு கனிப்பொருள். கடலுப்பைப்போல் உப்பளங்களில் காய்ச்சி எடுப்பதல்ல. உப்பில்லாமல் இருக்க முடியாத நிலையில் இந்துப்பை மாத்திரம் உபயோகிக்கலாம். வாரத்தில் ஓரிரு வேளைகள் மாதத்தில் ஒருநாள் என்ற முறையில் உப்பை அறவே நீக்கும் உணவைக் கொள்வது நல்லது. இப்பழக்கத்தில் உடலில் அதிகளவில் உப்பு சேரும் நிலை தவிர்க்கப் பெறும். இரத்தக்கொதிப்பு, மனக்குழப்பம், அகாலத்தில் மூப்பு, தோல்நோய்கள் இவற்றை இதனால் தவிர்க்கலாம்.

(தொடரும்)

எஸ். சுவாமிநாதன், டீன்
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,
நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)
செல் : 94444 41771

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com