முடிவுக்கு வந்த வாரிசு பிரச்னை!
2013-ஆம் ஆண்டு டிசம்பர் 10 ஆம் தேதி எதிர்பாராதவிதமாக மைசூர் மன்னர்களின் கடைசி வாரிசான ஸ்ரீகண்டதத்தா



2013-ஆம் ஆண்டு டிசம்பர் 10 ஆம் தேதி எதிர்பாராதவிதமாக மைசூர் மன்னர்களின் கடைசி வாரிசான ஸ்ரீகண்டதத்தா நரசிம்ம உடையார் மரணமடைந்ததைத் தொடர்ந்து, அவருக்கு வாரிசு யாரும் இல்லாததால் அடுத்த வாரிசாக யாரை நியமிப்பது என்பதில் பிரச்னை எழுந்தது.
கடந்த ஆண்டு ஸ்ரீகண்டதத்தா மறைந்து ஓராண்டு ஆகாத நிலையில், அடுத்த வாரிசும் நியமிக்கப் படாததால் தசராவிழாவைக் கோலாகலமாக கொண்டாட முடியவில்லை. அரண்மனைக்குள்ளேயே வழக்கமான பூஜைகள் செய்யப்பட்டு விழாவை சாதாரணமாக மகாராணி பிரமோதா தேவி முடித்துக் கொண்டார். ஸ்ரீகண்ட தத்தாவின் இறுதிச் சடங்கை அவரது மூத்த சகோதரி மகன் சதுரங்க ஸ்ரீகாந்த் அர்ஸ் முன்னின்று நடத்தியதால், மைசூர் மன்னராட்சியின் அடுத்த வாரிசாக அவரே நியமிக்கப்படலாமென அனைவரும் எதிர்பார்த்தனர்.
அவர் திருமணமானவர். 44 வயதான அவரை மன்னர் வாரிசாக அறிவிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. வாரிசு இல்லையெனில் முறைப்படி தத்தெடுக்கும் வழக்கம் இருந்தது. கடைசியாக 1865- ஆம் ஆண்டில் தத்தெடுப்பு நடந்தது.
இந்த மன்னர் குடும்பத்தில் வாரிசு இல்லாமல் போனதற்கும் ஒரு வரலாறு உண்டு. 1600களில் "யது வம்சத்தை' சேர்ந்த உடையார்கள், தங்கள் ராஜ்யத்தை இழந்து விஜயநகர பேரரசின் பிரதிநிதியான ஸ்ரீரங்கராயாவின் கட்டுப்பாட்டின் கீழ் வாழ்ந்து வந்தனர்.
காலப்போக்கில் விஜயநகர பேரரசு தன் அதிகாரங்களை இழந்தது. ஸ்ரீரங்கராயாவும் ஒரு விசித்திரமான நோயால் அவதிப்பட்டார். அந்த நோய் குணமடைய மைசூர் அருகில் உள்ள "தலைக்காட்'டில் குடி கொண்டுள்ள வேதேஸ்வராவை வணங்கினால் நோய் குணமாகுமென்று அவரது அரண்மனை ஜோதிடர்கள் கூறினார்கள்.
இரண்டாம் மனைவியான அலமேலு அம்மாவிடம் ஸ்ரீரங்கபட்டினத்தின் ஆட்சியை ஒப்படைத்த ஸ்ரீரங்கராயா, தலைக்காடு சென்ற பின்னர் உடல்நிலை மோசமாகி மரணப் படுக்கையில் இருந்தார். இதையறிந்த அலமேலு அம்மா, அவர் வழக்கமாக வழிபடும் ரங்கநாயகி அம்மனுக்கு அணிந்து அழகு பார்க்கும் விலைமதிப்பற்ற முத்துக்கள் பதித்த மூக்குத்தி, வைர, தங்க நகைகளுடன் கணவரைப் பார்க்க புறப்பட்டார். இவர் அங்கு செல்வதற்குள் ஸ்ரீரங்கராயா இறந்து போனார். இதற்கிடையில் ஸ்ரீரங்கபட்டினத்தை எதிர்ப்புகள் எதுமின்றி உடையார்கள் கைப்பற்றியதோடு தங்களை மன்னர்களாகவும் அறிவித்துக் கொண்டனர். அலமேலு அம்மாவால் மீண்டும் ஸ்ரீரங்கபட்டினத்திற்குள் நுழைய முடியாததால் மாலங்கி என்ற இடத்தில் தன் பாதுகாவலர்களுடன் தங்கினார்.
ராஜா உடையார் ஸ்ரீரங்கபட்டினம் மன்னரானவுடன் அரண்மனையில் அரசியின் நகைகளை தேடியபோது, அவற்றை அலமேலு அம்மா கொண்டு சென்றது தெரிய வந்தது. அந்த நகைகளை தன்னிடம் ஒப்படைக்கக் கோரி, தனது படைவீரர்களை அனுப்பிவைத்தார். அலமேலு அம்மா, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் அந்த நகைகளை ரங்கநாயகி அம்மனுக்கு அணிவித்து பூஜை செய்வது வழக்கம் என்பதால், அந்த நகைகளை கொடுக்க முடியாதென கூறி மறுத்தார்.
தலைக்காட்டை கைப்பற்றுவதோடு, ராணியிடமிருந்த நகைகளையும் கொண்டுவர ராஜா உடையார் தனது படைகளை அனுப்பினார். இதையறிந்த அலமேலு அம்மா, நகைப்பெட்டியுடன் குதிரை மீதேறி மலை முகட்டிற்கு சென்றபோது, இனி தப்பிக்க வழியில்லை என்பதை உணர்ந்தார். மலைக்குக் கீழே ஓடிக்கொண்டிருந்த காவிரியில் நகைப்பெட்டியைத் தூக்கியெறிந்தார். தானும் குதிப்பதற்கு முன்னர் மூன்று சாபங்களை கொடுத்தார். ""இந்தத் தலைக்காடு மண்ணுக்கு பலியாகட்டும். மாலங்கி மரணச் சுழல் ஆகட்டும். மைசூர் மன்னர் வம்சத்திற்கு வாரிசுகள் இல்லாமல் போகட்டும்'' என்று கூறி காவிரியில் குதித்து உயிர் விட்டார்.
கிராத்தா சகோதரர்களான "தலா' மற்றும் "காடு' என்பவர்களால் உருவாக்கப்பட்ட இந்த நகரம், பின்னர் கங்க வம்சத்தினரால் கைப்பற்றப்பட்டு ஹரிவர்மா ஆட்சியில் சோழ மன்னர்களால் இந்தத் தலைக்காடு தலைநகரமாக மாறியது. நூறு ஆண்டுகள் கழித்து சோழர்களிடம் இருந்து மைசூரை விடுவித்தவர் விஷ்ணு வர்த்தன். இவரது ஆட்சிக்காலத்தில் தலைக்காடு ஏழு நகரங்களையும் ஐந்து மாடங்களையும் கொண்ட பெருநகரமாக விளங்கியது. இவ்வாறாக 14-ஆம் நூற்றாண்டில் ஹொய்சாலா மன்னர்கள் ஆட்சியின் கீழ்வந்த தலைக்காடு, பின்னர் விஜயநகர பேரரசின் கீழ்வந்தது. 1634-ஆம் ஆண்டில் மைசூர் ராஜா உடையார் அதை கைப்பற்றினார்.
தலைக்காட்டில் 30க்கும் மேற்பட்ட கோயில்கள் இருந்தன. ஆனால் நாளடைவில் மணலால் மூடப்பட்டு தற்போது இரண்டு கோயில்கள் மட்டுமே வெளியே தெரிகின்றன. அந்த மணல் எங்கிருந்து வந்து பத்தடி உயரத்திற்கு மேலிருந்த கோயிலை மறைத்தது என்பது இதுவரை புரியாத புதிராக உள்ளது.
கீர்த்தி நாராயணா கோயிலை மட்டும் அவ்வப்போது ஆட்களை வைத்து மணலை எடுத்து வழிபாடு செய்கின்றனர்.
மாலங்கி அருகே காவிரியில் நிரந்தரமான மரணச்சுழல் இன்றும் உள்ளது.
இதன் பின்னர் ராஜா உடையாரின் நான்கு மகன்களும் எவ்வித காரணமும் இன்றி மரணமடைந்தனர். அவரும் வாரிசு இல்லாமலேயே மரணமடைந்தார். அவருக்குப் பின் மன்னராக வந்தவர் நேரடி வாரிசு அல்ல. ஒரு தலைமுறைவிட்டு மற்றொரு தலைமுறை என 400 ஆண்டுகளாக நேரடி வாரிசு பாக்கியம் அமையவில்லை. மன்னரின் கடைசி வாரிசான ஸ்ரீகண்டதத்தா நரசிம்ம உடையாருக்கும் வாரிசு இல்லாததால் தான் தற்போது அவரது சகோதரியின் மகள் காயத்ரி தேவி மகள் லீலாதேவி ஸ்வரூப் மகனான யதுவீர் கோயல் ராஜ் அர்ûஸ(23) பிரமோதா தேவி மகனாக தத்தெடுத்து 27-வது மன்னராக நியமித்துள்ளார்.

பிப்ரவரி 23 ஆம் தேதி மகாராணி பிரமோதா தேவி, இவரை முறைப்படி மைசூர் அரண்மனையில் உள்ள கல்யாண மண்டபத்தில் பூஜை, யாகங்கள் நடத்தி, "யதுவீர் கிருஷ்ண தத்தா சாம்ராஜ உடையார்' என்று பெயர் சூட்டி யதுவம்சத்தின் வாரிசாக அறிவித்துள்ளார்.
யதுவீர், அமெரிக்காவில் பொருளாதாரம் படித்தவர். ஸ்ரீகண்டதத்தாவுக்கு உறவுமுறையில் பேரனான இவருக்கு, அவரைப் போலவே அரசியலில் ஈடுபாடு இல்லை என்றும் கூறியுள்ளார். மைசூர்வாசிகள் புதிய வாரிசாக அறிவிக்கப்பட்டுள்ள யதுவீரை மனதார மன்னராக ஏற்றுக் கொண்டுள்ளனர். யதுவீருக்கு ராஜஸ்தான் மாநில துங்கார்புர் ஹர்ஷவர்தன் சிங் பகதூர் யுவராஜாவின் இளைய மகள் திரிஷிகா குமாரியை திருமணம் செய்ய நிச்சயம் செய்துள்ளனர். ஸ்ரீகண்டதத்தா உயிருடன் இருந்தபோதே இந்த நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. மணமகளின் தாய் மகேஸ்ரீ குமாரி, விஜயநகர அரச குடும்பத்தை சேர்ந்த மிருதுஞ்ய சிங்கின் மூத்த மகளாவார். மத்திய விமானத்துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜூவின் நெருங்கிய உறவினர் என்றும் கூறப்படுகிறது. மே மாதத்தில் முறைப்படி யதுவீர், தங்க சிம்மாசனத்தில் அமர வைக்கப்பட்டு மன்னராக மகுடம் சூட்டப்பட்டப் பின்னர் இத்திருமணம் நடக்குமென எதிர்பார்க்கிறார்கள்.
மைசூர் மன்னர் பரம்பரையில் வாரிசுகள் இல்லாமல் போனதற்கு அலமேலு அம்மாவின் சாபம்தான் காரணம் என்று கூறப்படுவது குறித்து யதுவீர் என்ன கூறுகிறார்? என்ற கேள்விக்கு "எனக்கும் அந்த வரலாறு தெரியும். அதற்கு பரிகாரமாக ஆண்டுதோறும் தசரா திருவிழாவின்போது ஒன்பதாவது நாளன்று அரண்மனைக்குள் 400 ஆண்டுகளாக ரகசிய வழிபாடு நடத்துவதுண்டு. அன்றைய தினம் அலமேலு அம்மாவை நினைத்து மவுனமாக வழிபாடு நடத்தி வருவதும் தெரியும். எங்கள் பிரார்த்தனைக்கு நிச்சயமாக பலன் கிடைக்குமென்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...