துன்பங்களே அதிகம்!
"புதிய வார்ப்புகள்' திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ரதி அக்னிஹோத்ரி.


"புதிய வார்ப்புகள்' திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ரதி அக்னிஹோத்ரி. ரஜினியின் "முரட்டுக் காளை', "கழுகு', கமலுடன் "உல்லாசப் பறவைகள்' படத்தில் நடித்தவர். இந்தி "ஏக் துஜே கேலியே'வில் நடித்துப் புகழ் பெற்ற அவர், மும்பையைச் சேர்ந்த தொழில் அதிபர் அனில் விர்வானியை 30 ஆண்டுகளுக்கு முன்பு மணந்து கொண்டார். சமீபத்தில் கணவர் தன்னை அடித்துச் சித்ரவதை செய்வதாக மும்பை காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
""எனக்கு திருமணமாவதற்கு முன்பே என்னுடைய தந்தை இறந்துவிட்டார். 80 வயதான என்னுடைய தாய் புனேயில் வசிக்கிறார். அனில்விர்வானியை திருமணம் செய்து கொண்ட இந்த 30 ஆண்டுகால இல்லற வாழ்க்கையில் நான் அனுபவித்த மகிழ்ச்சியைவிட துன்பங்களே அதிகம். பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டல்லவா?
மேலும் தாமதப்படுத்தக் கூடாது என்ற எண்ணம் உள்ளுக்குள் இருந்தாலும் அதை எப்படி எதிர்கொள்வது என்ற தயக்கம் இருந்தது. கடைசியில் துணிந்து போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்று புகார் கொடுத்துவிட்டு வெளியில் வந்தபோது ஏராளமான பத்திரிகையாளர்கள் விஷயத்தைக் கேள்விப்பட்டு வாசலில் காத்திருந்தது ஆச்சரியமாக இருந்தது. எனக்கு அந்தரங்கச் செயலாளர்களோ பத்திரிகை தொடர்பாளர்களோ இல்லை. நான் தனிமையாகவே வந்து என்னுடைய பலத்தை நம்பி மீடியாக்களுக்குச் சொல்லாமல் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்க வந்தேன்.
புகார் கொடுத்த பின்னர் சில நாள்கள் லோனாவாலாவில் உள்ள என்னுடைய பண்ணை வீட்டிற்குச் சென்றுவிட்டேன். என்னுடைய தாயாருக்கு மூளையில் ஏற்பட்ட பக்கவாத தாக்குதலால் வாழ்க்கையின் கடைசி நாள்களை எண்ணிக் கொண்டிருக்கிறார். என்னுடைய மூத்த சகோதரியோ கடந்த 39 ஆண்டுகளாக போலந்து நாட்டில் வசித்து வருகிறார். இங்கு எனக்கு எந்தவிதமான ஆதரவும் இல்லை. என்னுடைய வீட்டை மட்டுமன்றி, என்னுடைய தாயாரையும் அவரது வீட்டையும் கவனித்துக் கொள்ள வேண்டும். போலீஸில் புகார் கொடுத்த பின்னர் மீண்டும் வீட்டிற்குச் செல்ல அச்சமாக இருந்தது. திருமணமாகிவிட்டால் என்னை அவரிடம் ஒப்படைத்துவிட்டதாக அர்த்தமா? திரும்பவும் என்னுடைய வாழ்க்கை எனக்குக் கிடைக்காதா? என்ற சிந்தனையுடன் துணிந்து வீட்டிற்குத் திரும்பினேன்.
திருமணத்திற்குப் பின்னர் நடந்த விஷயங்களை நினைத்துப் பார்த்தேன். எந்தெந்த வகையில் அனுசரித்துச் சென்றேன் என்பதை நினைத்தபோது எனக்கே வேதனையாக இருந்தது. மன ரீதியில், உடல் ரீதியில், பணத் தேவை காரணமாகவும் துன்புறுத்தப்பட்டேன். நான் வாழ வேண்டும். இப்போது என்னுடைய மகன் தனுஜ்தான் எனக்கு முக்கியம். அவன் எப்போதுமே எனக்கு நல்ல மகனாக இருக்கிறான்.

தற்போதைய சூழ்நிலையில் எந்தவித முடிவையும் எடுக்க அவனுக்கு உரிமை உள்ளது. ""அம்மா, நீ சந்தோஷமாக இருக்க எந்தவித முடிவை நீ எடுத்தாலும் எனக்குச் சம்மதமே. எனக்காக நீ வாழ வேண்டுமென்று அவசியமில்லை'' என்று அடிக்கடி அவன் சொல்வதுண்டு. இதுவே என்னைச் சுதந்திரமாகச் செயல்பட வைத்துள்ளது.
எனக்கும் 54 வயதாகிவிட்டது. முன்னைப்போல் என்னைத் தற்காத்துக் கொள்ளும் சக்தி இல்லை. அதனால்தான் போலீஸில் புகார் செய்யும் முடிவை எடுத்தேன். திருமணமான புதிதில் என்னுடைய கணவரை மிகவும் நேசித்தேன். கடந்த பல ஆண்டுகளாக ஒரே வீட்டில் வெவ்வேறு திசைகளில் வாழ்ந்து வருகிறோம்.
அவர் மீது புகார் கொடுத்துவிட்டு வந்தாலும் ஒரே வீட்டில்தான் தற்போது வாழ்ந்து வருகிறோம். எந்தவிதப் பேச்சுவார்த்தையும் இல்லை. அனைவரது நலன் கருதி என்னுடைய பாதையில் அவர் இப்போது குறுக்கிடுவதில்லை. பணத்தைப் பொருத்தவரை நான் சுதந்திரமானவள். பணவிஷயத்தைப் பொருத்தவரை யார் யாரைச் சார்ந்திருக்கிறார்கள் என்பதை நான் தெரிந்துகொள்ள வேண்டும்.
குடும்ப வன்கொடுமை என்று புகார் கொடுத்தால் அதற்கான ஆதாரங்களை நிச்சயம் கொடுத்தாக வேண்டும். எந்த காரணத்தைக் கொண்டும் அதை நான் தவறாகப் பயன்படுத்தவில்லை. பத்து வயதிலேயே சாதனை புரியத் தொடங்கிய நான் 23 வயதில் திருமணம் செய்து கொண்டேன். கடந்த 30 ஆண்டுகளில் எனக்குக் கிடைக்காத தைரியமும் தன்னம்பிக்கையும் இப்போதுதான் கிடைத்திருக்கிறது. இந்த உலகமே என்மீது அன்பு செலுத்தும்போது, என்மீது நானே ஏன் அன்பு காட்டக் கூடாது?
போலீஸில் புகார் செய்ய சென்றபோதுகூட என் மகன் தனுஜிடம் சொல்லிவிட்டுத்தான் சென்றேன். இதில் நான் எந்தவிதத் தவறையும் செய்யவில்லை. இப்போது நான் எடுத்த முடிவுக்காகப் பெருமைப்படுகிறேன். இதில் யாரையும் புண்படுத்த வேண்டும் என்ற எண்ணம் ஏதும் இல்லை. எதிர்காலத்தில் என்னைப் போன்று துன்பப்படும் பெண்களுக்கு முன்மாதிரியாக இருப்பதில் எனக்கு மகிழ்ச்சிதான். ஓர் இருண்ட குகைக்குள் இருந்தாலும் மற்றொரு முனையில் வெளிச்சம் கிடைக்குமென்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது'' என்கிறார் நடிகை ரதி அக்னி ஹோத்ரி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...