இப்படியாக அதிகச் சிக்கலில்லாமல் வாழ்க்கைச் சக்கரம் சுழன்று கொண்டிருந்தபோதுதான் அது நடந்தது. ஒரு நாள் அதிகாலை வெள்ளை வேஷ்டி, வெள்ளை சட்டை அணிந்த லாலேட்டன் போலவும், மம்முட்டியைப் போலவும் உள்ள தடிமனாக நான்கு பேர் ரூமுக்குள் நுழைந்தனர். மிரட்சியுடனும், அதிர்ச்சியுடனும் அவர்களைப் பார்த்து கை கட்டி நின்றான் சஜி. ""நமக்கு பூவாம்'' என்று ஒற்றை வார்த்தை மாத்திரம் சொன்னார் நான்கு பேரில் ஒருவர். என்னமோ ஏதோ என்று அவன் அருகில் செல்ல நானும், கங்காதரும் முயன்ற போது, ""எண்ட செறியச்சனும், அம்மாவனும்..'' என்று அணை போட்டான் சஜி எங்களுக்கு. காய்ந்து கொண்டிருந்த ஷர்ட், பேண்ட் போன்றவற்றை எடுத்து அவன் கொண்டு வந்த பெட்டியில் அடுக்கிக் கொண்டான். தயங்கித் தயங்கி போகும்போது எங்கள் இருவரின் விழிகளையும் உற்று நோக்கினான். அவன் சொல்ல நினைத்த எத்தனையோ வார்த்தைகளை, அந்த நனைந்த விழிகள், மௌன மொழியில் பகர்ந்தன. நால்வருக்கும் இடையில் அவன் பலி ஆடு போல அழைத்துச் செல்லப்பட்டான். படகு போன்ற ஒரு பெரிய கார் வெளியே நின்று கொண்டிருந்தது. அவர்களையும், எங்கள் குட்டித்தம்பி சஜி ஜேக்கப்பையும் ஏற்றிக் கொண்டு சீறிப் பாய்ந்த அந்த வண்டியை அதிர்ச்சி கலையாமல் பார்த்துக் கொண்டிருந்தோம் நானும் கங்காதரும். அதுதான் நாங்கள் அவனைப் பார்ப்பது கடைசி முறை என்பதுகூடத் தெரியாமல். சுவாரஸ்யமில்லாமல் கழிந்து கொண்டிருந்தன நாட்கள். கங்காதரின் கொழுப்பெடுத்த கொளுந்தியாள் மாத்திரம், ""மலயாளி ஹோகிபிட்று, தமிழு யாவாக ஹோகுவது'' என்று வெறுப்பேற்றிக் கொண்டிருந்தாள்.