ஆனந்தரங்கப் பிள்ளை நாட்குறிப்பு
(ஆனந்தரங்கப் பிள்ளை நாட்குறிப்பை எழுத ஆரம்பித்த நாள் செப்டம்பர், 6).


(ஆனந்தரங்கப் பிள்ளை நாட்குறிப்பை எழுத ஆரம்பித்த நாள் செப்டம்பர், 6).
ஆனந்தரங்கப் பிள்ளை. சென்னை பெரம்பூரில் 1709-ஆம் ஆண்டு பிறந்தார். தந்தையுடன் பத்து வயதில் புதுச்சேரி சென்று வாணிபம் செய்யக் கற்றார். பின் தனித்து நின்றார்.
பிரெஞ்சு கிழக்கிந்திய நிறுவனத்தோடு வாணிபம் செய்து வந்த அவர் இந்தியாவிலிருந்து பாக்கு, மிளகு, ஏலக்காய், கிராம்பு மற்றும் பல வாசனைத் திரவியங்களையும், துணிவகைகளையும், வைரம், மாணிக்கம் போன்ற நவரத்தினங்களையும் மலிவான விலைக்கு கொள்முதல் செய்து கொடுத்தார். அதோடு பிரெஞ்சு நாட்டிலிருந்து வந்திறங்கும் நவீன பொருள்களை நல்ல விலைக்கு விற்றுத் தந்தார். வாணிபம் செய்து வந்தவர் அரசின் துபாஷியானார்.
துபாஷியாக உள்ளவர்கள் பிரெஞ்சு அரசுக்கு வரும் தமிழ்க் கடிதங்களை பிரெஞ்சு மொழியிலும், பிரெஞ்சு கடிதங்களை தமிழ் மொழியிலும் மொழிபெயர்த்துத் தரவேண்டும். தோ + பாஷி என்கிற சம்ஸ்கிருத சொல்தான் துபாஷி என்றாகியது. துபாஷிகள் இரு மொழிகள் அறிந்தவர்.
ஆனந்தரங்கப் பிள்ளையைப் போலவே தம்புச்செட்டி, லிங்கிச் செட்டி, பெத்தண்ணச் செட்டி, பச்சையப்ப முதலியார், செங்கல்வராய நாயக்கர் ஆகியோர் முக்கியமான துபாஷிகள். ஆனந்தரங்கப் பிள்ளைக்கு தமிழ், தெலுங்கு, இந்துஸ்தானி, பிரெஞ்சு என்று பல மொழிகளில் ஆளுமையிருந்தது. அதனால் பிரெஞ்சு அரசில் அவரது கை ஓங்கியிருந்தது.
ஆனந்தரங்கப் பிள்ளைக்கு எழுதுவதில் மிகுந்த ஆர்வம் இருந்தது. தனது வாணிப வரவு - செலவு கணக்குகளை தினந்தோறும் எழுதும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்த அவர் 1736-ஆம் ஆண்டு செப்டம்பர் 6-ஆம் தேதி நாட்குறிப்பை அதாவது டைரி எழுத ஆரம்பித்தார். தினந்தோறும் தான் கேட்ட, அறிந்த, நடந்த, பார்த்த நிகழ்வுகளை அப்படியே பதிவு செய்தார். எந்தவொரு நிர்பந்தத்திற்கும் உட்படாது தனது சொந்த விருப்பத்தின்படி எழுதினார்.
நாட்குறிப்பை இருபத்தைந்து ஆண்டுகள் தொடர்ந்து எழுதினார். கடைசி நாள் நாட்குறிப்பு 1761-ஆம் ஆண்டு ஜனவரி 12-ஆம் தேதியோடு முடிவுறுகிறது.
அவருடைய நாட்குறிப்பின் மூலம் அவர் காலத்து தமிழ் நடை, பேச்சு ஆகியவற்றை அறிய முடிகிறது.
தொலைதூரத்திலிருந்து வந்து காலனி அமைத்து ஆட்சி புரிந்த, பிரெஞ்சுக்காரர்கள் பணம் சம்பாதிப்பதிலும், மதத்தைப் பரப்புவதிலும் குறியாக இருந்தார்கள். மக்கள் அவதிக்கு ஆளானது பற்றியும், அவர்களின் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டது பற்றியும், இருக்க இடமின்றி புலம் பெயர்ந்து சென்றது பற்றியெல்லாம் எழுதியுள்ளார்.
ஆப்பிரிக்காவிலும், மொரீசியஸிலும் பிரெஞ்சுக்காரர்கள் ஏற்படுத்திய காலனிகளுக்கு புதுச்சேரி அப்பாவி ஏழை மக்களைப் பிடித்துப் போய் அடிமைகளாக்கியது பற்றி எழுதியுள்ளார்.
அவருடைய நாட்குறிப்பு அவர் வாழ்ந்த காலகட்டத்தில் நிலவிய உள்நாட்டு நிலவரம், குடும்பம், மொழி, எழுத்து போன்ற பல விஷயங்களை அறிந்துகொள்ளும் அரிய சரித்திர, சமூக ஆவணமாக இருக்கிறது.
சுமார் 5000 பக்கங்களுக்கு நாட்குறிப்பு எழுதியுள்ளார். இந்தியாவில் இந்தியர் ஒருவரால் எழுதப்பட்ட முதல் சுயசரித்திரம் இதுதான். அவருடைய காலத்திற்குப் பிறகு நாட்குறிப்பு பிரெஞ்சு மொழியிலும், ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டது.
சுமார் 270 ஆண்டுகளுக்கு முன்பு ஆனந்தரங்கப் பிள்ளையின் நாட்குறிப்பு அவர் காலத்தில் வழக்குமுறையிலிருந்த முறையில் எழுதப்பட்டுள்ளது. இன்று அதைப் படிப்பது ஒரு புதிய, இனிய அனுபவம் என்றே சொல்லலாம். எடுத்துக்காட்டாக இரு நாட்குறிப்புகளைப் பார்ப்போம்:
06.09.1736 அன்று ஆனந்தரங்கப் பிள்ளை எழுதிய முதல் நாள் நாட்குறிப்பு இதோ இப்படித்தான் எழுதப்பட்டுள்ளது.
தமிழ் நள வருசம் ஆவணி மாதம் 25க்கு கிறிஸ்து 1736 ஆண்டு செப்தெம்பர் மாசம் 6 தேதி வியாழக்கிழமை:
காலமே எட்டு மணிக்கு கோன்சேல் பண்ணி முசே துலார்முக்கு கோன்சேல் உத்தியோகம் கொடுத்தார்கள். நாளது மத்தியானதுக்குமேல் நாலரை மணிக்கு முசோ துமெலியோ - முசே துமாஸ் குவர்னர் துரை யண்டைக்குப் போய் முசோ துளோராம் எனக்குப் பிறகு கையெழுத்துப் போடுகிறதானால் நானிந்த உத்தியோகத்திலே யிருப்பேன்; இல்லாவிட்டால் எனக்கு முன்னே அவன் கையெழுத்துப் போடுகிறதானால் எனக்கு கும்பனியார் உத்தியோகம் சுவையில்லையென்று சொன்னான். அதுக்கு துரையிருந்து சொன்ன உத்திரம்: கும்பனியார் எழுதியனுப்பினபடிக்கு நான் கொண்டு நடப்பிக்க வேணுமேயல்லாமல் அதைத் தள்ளி நடத்துகிறது எனக்கு ஞாயமில்லையென்று சொன்னார். அதுக்கு முசே திமிலியேர் சொன்னது: ஆனால் நீர் வந்த கப்பலிலே என்னை முசே துலேர்ம், முசே சிவாருக்குப் பிறகு கையெழுத்துப் போடச் சொல்லி எழுதிவர யில்லையா? அதுக்கு முசே லெனுவார்பழய குவர்னர் துரை அதிகாரியத்துக்கு கோன்சேல் பற்றி உம்முடனே சொன்ன உத்திரம் கும்பனியாருக்கு இந்த சங்கதி தெரியாமல் எழுதினார்கள். நாம் போய் கும்பனியார்க்குடனே கண்டு பேசி உமக்கு கும்பனியாருடைய ஒடுதி அனுப்பி வைக்கிறோம். நீர் நடப்பிக்க இல்லையென்று கும்பனியார் பளுவு சுமத்தினால் அதுக்கு நாம் உத்திரவாதியாயிருக்கிறோம். நம்முடைய நாளிலே நடந்தபடிக்கு முலேகுவுக்குப் பிறகு முசே துமேலியா, நாலாவதுயிடத்து கையெழுத்துப் போடட்டுமென்று சொன்னதுக்கு உம்முட உத்திரம் அறியுறபரியந்திரம் முன் நடந்தபடிக்கு நடப்பிக்கிறோம் என்று வார்த்தைப் பாடு கொடுத்தீர். அதின் பிற்பாடு என்னை அழைப்பித்து உம்முடைய முன்பாக வைத்துக்கொண்டு இவர் எந்த மட்டுக்கும் இந்த மரியாதையுடனே நடப்பிக்கிறாரோ அந்தமட்டும் நீர் இந்த உத்தியோகத்திலேயே இரும் என சொல்லப்பட்ட பேருக்குப் பிறகு கையெழுத்துப் போடச் சொன்னால் நீர் அந்தமட்டிலே உத்தியோகம் விட்டுவிடும் என்று சொன்னாரே அதுக்கு நீர் நானந்தப்படிக்கு நடப்பிப்பேன் என்று வார்த்தைப் பாடு கொடுத்தீரே! அந்தப் படிக்கு ஒரு வருஷம் நடப்பித்தீரே! இன்னும் பனிரெண்டு மாதம் நடத்துகிறதானால் இந்த உத்தியோகத்தில் இருக்கிறோம். இல்லாவிட்டால் எனக்கு இந்த உத்தியோகம் கனவில்லை என்று சொன்னார். அதற்கு துரை சொன்னது: நீர் இப்போது இருக்கும் உத்தியோகத்திலேயே இரும். எப்போதும் சம்பளமே வாங்கிக் கொள்ளும். கையெழுத்து மட்டும் முன் சொல்லப்பட்டவர்களுக்குப் பிறகு போடும் என்று சொன்னார். எனக்குச் சாப்பாடு செலவுக்குக் குறைச்சலில்லை. மானமாங்காட்டும் பெரியது என்று சொல்லி தமக்கு உத்தியோகம் தேவையில்லை யென்று சொன்னார். அதற்குத்தான் துரை, உம்முடைய மனது என்று சொன்னார். முசே துமேலியோ அனுப்பி வைத்துக் கொண்டு போனார்.
முதல் நாள் நாட்குறிப்பு இதோடு முடிவடைகிறது. ஆனந்தரங்கப் பிள்ளைக்கு பலவற்றிலும் ஈடுபாடு இருந்தது. எனவே அவர் அனைத்தைப் பற்றியும் உற்சாகமாக எழுதினார். அவருடைய சொந்த அபிப்ராயம் எதையும் குறிக்கிட்டு எழுதாமல் நடந்ததை நடந்ததுபடியே எழுதினார். அதுதான் அவர் செய்த மகத்தான செயல். அதனால்தான் அவருடைய நாட்குறிப்பு காலம் கடந்து நிலைத்து நிற்கிறது.
புதுச்சேரியில் 1745-ஆம் ஆண்டு நவம்பர் 4-ஆம் தேதி வியாழக்கிழமை அன்று வீசிய புயல்காற்று, மழை, வெள்ளம் பற்றி அவர் எழுதிய நாட்குறிப்பு அற்புதமானது. கவிதையைப்போல் வார்த்தைகள் வந்து விழுந்துள்ளன. ஓர் அசல் படைப்பாளியின் வார்த்தைகளாக அவை நிற்கின்றன.
அந்த அருமையான நாட்குறிப்பு இதோ:
1745 வருசம் நவம்பர் மாசம் 4 தேதி குரோதன வருசம் அற்பிசி மாசம் 21 தேதி வியாழக்கிழமை நாள்
அஸ்தமித்தவுடனே துவக்கி, பெருங்காற்றடித்தது. அந்தக் காற்று வியாழக்கிழமை நாள் ராத்திரி முப்பது நாழிகையும் அடித்தது. ஆனால், இந்தக் காற்றினுடைய பிரதாபம் இன்னமட்டென்று ஒருவிதமாய்ச் சொல்லக் கூடாது. அதெப்படியென்றால், இந்த முப்பது நாழிகைக்குள்ளே பட்டணத்திலே ஒரு மரமாகிலும் தப்பவிடாமல் ஊரிலே உண்டான மரங்களெல்லாம் படுகாடாய் விழுந்துபோனதும், சிறிது மரங்களை முறுக்கி முறித்துப்போட்டதும், அதுவுமல்லாமல் பட்டணங்களுக்குள்ளே தோட்டந் துரவுகள், தென்னை மரம், மாமரங்கள் எப்பேர்ப்பட்ட மரமும் ஒன்றாகிலும் தப்பாமல் படுகாடாய் விழுந்து போச்சுது. அதினாலே வெகுபேர் கெட்டுப் போனார்கள். இதல்லாமல் உப்பாற்றிலே
அவரவருக்கு மனை விட்டு, அவரவர்கள் கல்வீடும் கூரைவீடுமாய் அவரவர் சக்திக்கான சரமாய்க் கட்டிக்கொண்டு குடியிருந்தார்கள். அப்படி யிருக்கச்சே இந்தப் பெருங்காற்றிலே மேல்வெள்ளம் வந்து உப்பாற்றுத் தண்ணீர் வெளியே போகத்தக்கதாய்க் கட்டியிருந்த மதகு மூடியிருக்கச்சே அந்த மதகைப் பிடுங்கிக்கொண்டு அந்த வெள்ளம் ஓடிற்று. அந்த வெள்ளத்திலே உப்பாற்றிலே வந்து விழுந்து உப்பாற்றிலே கட்டியிருந்த வீடுகள் பேரிலே ஒரு முழ வெள்ளம் வந்து அங்கே கட்டியிருந்த மூன்று தெருவும் படுகாடாய் விழுந்துபோய், வீடுகள் வெள்ளத்தில் முழுகிப்போய், அந்த வெள்ளத்திலே வீடுகளை அடித்துக்கொண்டு போனதும், மாடுகள் கன்றுகள் செத்ததும், மனுஷர் செத்ததும் இப்படியாக வெகு சேதப்பட்டு அந்த வெள்ளம் இப்படி பட்டணத்து மேலே திரும்பினபடியினாலே பள்ளத்துத் தெருக்களிலேயெல்லாம் அரை மட்டும் தண்ணியும் பெருந்துடை மட்டும் தண்ணியும் நின்றபடியினாலே பள்ளத்தாக்கிலேயிருந்த வீடுகளெல்லாம் அநேகமாய் விழுந்து போச்சுது. இதல்லாமல் இந்தக் காற்றிலே காக்காய், குருவிகள், பின்னையுமிருக்கப்பட்ட பட்சிகள் அநேகமாய் தெருவுக்குத் தெரு செத்து மிதந்தது மட்டுமிதமில்லை. இதல்லாமல் பட்டணத்துக்கு வெளியே யிருக்கப்பட்ட தோட்டந் துரவுகள் சகலமும் அடியோடே விழுந்துபோய் விட்டது. வீடுவாசல்களும் அநேகஞ் சேதம். இதல்லாமல் அவரவரது வெளியிலே யிருக்கப்பட்ட ஆடுமாடுகள் ஒன்றாகிலும் தப்பிப் பிழைக்கிதற்கிடமில்லாமல் தரந்தரமாய் உளைந்துபோச்சுது. அந்த செத்த ஆடுகளைப் பட்டணத்துக்குள்ளே அவரவர் வாங்கிவந்து வீடுகளிலே காயப்போட்டபடியினாலே அதுகள் காய்கிறதற்கிடமில்லாமல் மழையிலே நனைந்து பட்டணமெல்லாம் தெருவுக்குத் தெரு பிணநாற்றமாய் இரண்டு மூன்று நாள் மட்டுக்கும் வீதியிலே புறப்படக்கூடாமல் இப்படி அவஸ்தைப்பட்டுப் போச்சுது. ஆனால், திருவுள எத்தனத்தினாலே பொழுதுவிடிந்தவுடனே காற்றும் மழையும் நின்று போனபடியினாலே ஒரு சாமத்துக்குள்ளே எல்லா தண்ணீரும் வாங்கிப்போய் அவரவர் வீடு வாசலும் தப்பித்ததல்லாமல் மறுநாளைக்கும் அப்படி காற்று அடித்ததால் பட்ணத்திலே ஒரு வீடாகிலும் தப்ப மாட்டாது **.... ..... சுவாமி காத்தார்.
சுமார் 25 வருடங்கள் தொடர்ந்து எழுதப்பட்ட நாட்குறிப்பு 12.01.1761-ஆம் தேதியோடு முடிவடைகிறது.
""மூக்குக் கண்ணாடியைப் போட்டுக்கொண்டு "இதுவே கடைசி கடுதாசியாக பார்த்துக் கொள்ளவும்' என்று எழுதி கையெழுத்துப் போட்டார்'' என்ற வரிகளிலிருந்து அக் கடைசி நாள் நாட்குறிப்பு அவர் கைப்பட எழுதப்படவில்லை என்பதை யூகிக்க முடிகிறது.
ஆனந்தரங்கப் பிள்ளையின் கடைசி நாள் நாட்குறிப்பு இதோ:
1761 வருசம் செனவரி மாசம் தேதி 12; விக்கிறம வருசம் தை மாசம் தேதி 3; திங்கள் கிழமை
இத்தனாள் சூரிய உதயமானவுடனே மகாளி
பிள்ளையவர்களை இசுப்பித்தால் முத்தியப்பிள்ளையையும் சேஷாசல செட்டியையும் அழைத்துக்கொண்டு வரச்சொல்லி விப்போமாவென்று கேட்டோம். நல்லது அழைத்து வரச்சொல்லென்று சொன்னார். அந்தப்படிக்கி அழைத்து வரச்சொல்லி அவர்களண்டைக்கி அனுஷனை அனுப்பிவிச்சேன். ஆனால் யிப்போ ராத்திரிக்குயிருந்ததைப் பார்க்கிலும் யிப்போ ரொம்ப லகுவாயிருக்குது. தந்த சுத்திப் பண்ணிக்கொள்ளுவோமென்று சொன்னார். அப்போ பெலன் வந்து இசுப்பித்தால் முத்தபிள்ளையை வரச்சொன்னார். தந்த சுத்தி பண்ணிக்கொள்ள கூடத்துக்கு கனப்பையின் பேரிலே வந்திருந்து கொண்டு தந்த வனம் பண்ணிக் கொண்டார். அப்போ பிலன் வந்தது. இசுப்பித்தால் முத்தப்பிள்ளை வெளியே பிறப்பட்டுப் போயி அஞ்சாறு நாளாச்சுதே யென்று சொன்னான். யிப்படி யிருக்கச்சே சேஷாசல செட்டி வருகிறதைக் கண்டு அவருடனே பின்னை யொன்றுஞ் சொல்லுவிக்க வேணுமென்று யிவர் வீட்டுக்கு நாம் போறதுக்கு பல்லக்குக் காரரை அழைத்து வரப்போறானென்று சொல்லுங்கோ ளென்று சொன்னார். அப்படி யிருக்கச்சே சேஷாசல செட்டியும் வந்தார். வந்து நாற்காலியின் பேரிலே உளுக்கார்ந்தார். பிற்பாடு ராத்திரி சாப்பிடயில்லையா வென்று கேட்டார். சாப்பிட்டேனென்று சொன்னார். ஆனால் கையைப் பாருமென்றும் கையை நீட்டினார். எனக்கு தாது தெரியாதென்று சொன்னார். அப்படியா உம்முடைய வளவுக்கு வருகுறதுக்கு பல்லக்குக்காரர் வருகிறார்கள். பின்னே சீக்கிரத்துக்குப் போயி கட்டில் பூட்டினதெல்லாம் முஸ்தீதுப் பண்ணிவையுமென்று சலுதியாகப் போகச் சொன்னார். அவரும் அப்படியே முஸ்தீப்பு பண்ணுகிறேனென்று போயிவிட்டார். பிற்பாடு அவருக்கு தாது தெரியாதே அவருடனே சொல்ல வேண்டிய தென்ன யிருக்குது. பின்னையாராகிலும் தாது தெரிந்தவர்களாயிருந்தால் அனுப்பியுங்கோ ளென்று சொன்னார் அப்போ விசாரிக்குமிடத்திலே சரவண முதலிக்கி கொஞ்சம் தெரியுமென்று சொன்னார்கள். பிற்பாடு அவனை அழைப்பித்து வரச்சொல்லி தன்னண்டை கூப்பிட்டு அவனிடம் தன்னுட நாவை நீங்கள் தொட்டுப் பாருங்கோளென்று சொன்னதாகவும் அப்போசத்து திரவம் குறைந்து வருகுறது. ஆனால் நேத்து ராத்திரி யிருநூத வரட்சையிப்போ யில்லை யென்றும் சொன்னாரென்று சொன்னேன். ஆகையினாலே நான் கொஞ்சம் மருந்து சாப்பிடலாமென்று கேட்டார். நல்லது ராத்திரி முஸ்தீப்பு பண்ண மருந்து சாப்பிட்டால் தேவலை யென்று சொன்னேன். அதிலே யென்னயிருக்குது. அவிழ்தத்தை சாப்பிட்டா மாத்திரம் செத்துப்போறவன் யிருப்பானா? அவிழ்தம் சாப்பிடாமலிருந்து செத்துப் போகாதவன் செத்துப் போவானா பிற்பாடு பார்த்துக் கொள்ளுவோமென்று சொல்லி படுத்துக் கொண்டார்.
பிற்பாடு பத்து மணிக்கி சின்னமுதலிய வந்து பெண்டுகளைக் கொண்டு போயி விட்டுப்போட்டு வருகிறேன். சிதம்பரனாத பிள்ளைக்கு காகிதம் குடுத்திருந்ததைக் கொண்டு போயி அவர் கையிலே குடுத்து அவர் மாரிபத்திலே யாகிலும் பின்னை யார் மாரிபத்தினாலேயும் வழிதிட்டப்படுத்திக் கொண்டு நாளைய தினம் வந்து சேருகுகிறேன்யென்று சொன்னான். அந்த சேதி பிள்ளையவர்களுடனே சொன்னேன். நல்லது சிதம்பரநாத பிள்ளைக்கி யெழுதுகிற காகிதத்திலே உமக்கு யெத்தனை மனுஷரை அனுப்பிவிச்சும் ஒன்றுக்கும் நீர் ஒன்றும் கவைப்படுத்தாமலிருக்கிறீர். இனிமேல் யென்னை நீர் யென்னைப் பார்க்கமாட்டீர் யென்று யிது கண்டிப்பான உத்திரவாக யெழுதி யனுப்பிவியுங்களென்று சொன்னார். அப்படியே யெழுதி ஒப்பம் போட வேண்டியதற்கு கொண்டு வந்து குடுத்தேன். படுத்திருந்தவர் யெழுந்திருந்து உளுக்கார்ந்து கொண்டு ரெண்டு கதவையும் திறந்து விடச்சொல்லி மூக்குக் கண்ணாடியைப் போட்டுக் கொண்டு அந்தக் கடுதாசியிலே யிதுவே கடைசி கடுதாசியாகப் பார்த்துக் கொள்ளவும் யென்று யெழுதியும் கையெழுத்தும் போட்டார். நான் கடுதாசியைப் பார்த்து என்ன யிப்படி யெழுதி யிருக்கிறார் யென்று யெண்ணிக் கொண்டு அந்தக் கடுதாசியை லக்கோடாப் பண்ணி சரவண முதலி கையிலே குடுத்து அனுப்பி வித்தோம். பிற்பாடு சரீரம் ரொம்ப ஆயாசம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...