மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பழந்தமிழர் வாழ்க்கை... காட்சிக் கூடமாக!

பழந்தமிழர்களின் சிறப்புகளை மக்களுக்கு எடுத்துக் காட்டும் வகையில், சென்னை தரமணியில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக் கூடம் தொடங்கப்பட்டுள்ளது.

News image
Updated On :8 ஏப்ரல் 2016, 9:59 am

ஸ்ரீதேவி குமரேசன

பழந்தமிழர்களின் சிறப்புகளை மக்களுக்கு எடுத்துக் காட்டும் வகையில், சென்னை தரமணியில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக் கூடம் தொடங்கப்பட்டுள்ளது. அங்கே பழந்தமிழரின் வாழ்வியல் முறைகள் குறித்த குறும்படம், ஓவியங்கள், சிற்பங்கள், மரச் சிற்பங்கள், உலோக சிற்பங்கள், கற்சிற்பங்கள், சுதை வடிவம், புடைப்புச் சிற்பங்கள், அரிய புகைப்படங்கள் என அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தக் காட்சிக் கூடத்தைப் பார்வையிட வருவோருக்கு தற்காலிகமாக இலவச அனுமதி வழங்கப்படுகிறது. இவை குறித்து உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் கோ.விசயராகவன் மற்றும் காட்சிக் கூடத்தின் பொறுப்பாளர் ஆ.மணவழகன் கூறியதாவது:

""பொதுவாக அகம், புறம், காதல், வீரம் மட்டுமே பெரும்பாலும் நமது இலக்கியங்களில் பார்ப்போம். அதனைக் குறிப்பு எடுக்கிறோம், நூலாக்கம் செய்கிறோம், மேடைகளில் பேசுகிறோம். அதன் பிறகு அப்படியே விட்டுவிடுகிறோம். அப்படியில்லாமல் நம் முன்னோர்களின் சிறப்புகளை அறிந்து கொள்வதற்கும், பல ஆண்டுகளுக்கு முன்பு தமிழர்களின் மரபு சார்ந்த வாழ்க்கை எப்படி இருந்தது, மரபு சார்ந்த தொழில் நுட்பங்கள், மருத்துவமுறைகள் யாவை? என்பதை இன்றைய தலைமுறை தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தோம். அவற்றிற்கு வடிவம் அளித்தால் அது பார்வையாளரின் மனதில் எளிதில் சென்றடையும் என்பதால், இலக்கியச் சான்றுகளையும், கிடைத்த ஆதாரங்களையும் அடிப்படையாகக் கொண்டு தமிழகத்தின் முதல் நிரந்தரக் காட்சிக் கூடமாக இதை அமைத்திருக்கிறோம்.

இங்கே வரும் பார்வையாளர்களைப் பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக் கூடத்தைப் பார்வையிடுவதற்கு முன்பாக இங்குள்ள நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய திரையரங்குக்கு அழைத்துச் சென்று, சங்ககாலத் தமிழர்களின் மருத்துவ முறை, போரியல், நீர் மேலாண்மை, ஆட்சித்திறன், கல்வி தொடர்பான 5 குறும்படங்கள் திரையிட்டுக் காண்பிக்கிறோம்.

அதன்பின்னரே, காட்சி அரங்குகளுக்கு அழைத்துச் செல்கிறோம். தனித்தனி அரங்குகளாகப் பிரித்து மொத்தம் ஐந்து அரங்குகளில் பழங்காலத் தமிழர்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் ஓவியங்கள், மரச் சிற்பங்கள், உலோகச் சிற்பங்கள், புடைப்புச் சிற்பங்கள் போன்றவற்றை காட்சிப்படுத்தியிருக்கிறோம். ஒரே கல்லில் செதுக்கப்பட்ட தேர்வடச் சங்கிலி, அன்னப்பறவை, சேர, சோழ, பாண்டிய மன்னர்கள், ஒளவையார், தமிழ்த் தாய், தொல்காப்பியர், கபிலர் உருவங்கள், பாலை நிலத்தின் தெய்வம் கொற்றவையின் சிலை உருவங்கள் ஆகியவை மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப் பட்டிருக்கின்றன.

அதைப்போன்று பல நூற்றாண்டுகளுக்கு முன்பே கடைப்பிடிக்கப்பட்ட நீர் பாசன முறைகள், நெசவுத் தொழில் நுட்பங்கள், குருகுலக் கல்வி, புறநானூற்றுச் சம்பவங்கள், பாரம்பரிய விளையாட்டுகள் போன்றவற்றைச் சித்திரிக்கும் ஓவியங்கள் பார்வையாளர்களைக் கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், தமிழ் வேந்தர்கள் பயன்படுத்திய வாள், கேடயம், ஈட்டி உள்ளிட்ட பல்வேறு போர்க் கருவிகள், ஆயுதங்கள் தயாரிக்கும் உலைக்களம், மேற்கொண்ட தொழில்கள் ஆகியவை பழந்தமிழர்களின் வீரத்தையும், நிர்வாகத் திறமையையும் எடுத்துரைக்கின்றன.

இங்குள்ள காட்சி அரங்குகளில் அமைந்துள்ள மயிலுக்குப் போர்வை வழங்கிய பேகன், முல்லைக்குத் தேர் கொடுத்த வள்ளல் பாரி போன்ற தமிழ் மன்னர்களின் சிறப்புகளும், பழங்கால அரண்மனை, கோயில்கள், வீடுகளின் அமைப்பை சிற்பங்களாகவும், ஓவியங்களாகவும் காணும் பொழுது சங்க காலத்துக்குச் சென்று வந்த உணர்வு ஏற்படுவதாக பார்வையாளர்கள் கூறியுள்ளது, இந்த காட்சிக் கூடத்தின் சிறப்பாகும்.

இது வெறும் சுற்றுலாத் தலமாகவோ, பொழுதுபோக்கிற்கான இடமாகவோ இல்லாமல் இந்த மண்ணையும், மக்களையும் உலகத்திற்கு அடையாளப்படுத்தும் வகையில் மிகவும் பயனுள்ள காட்சிக் கூடமாக இது நிச்சயம் இருக்கும்'' என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.