

""மணி என்ன?'' என்று அப்பா கேட்டார்.
""எட்டரை'' என்றேன் நான்.
""இன்னும் அரை மணி ஆகுமா?''
""ஆமா. ஒம்பது, ஒம்பதேகால் ஆயிடும்ப்பா'' என்றவாறு நான் என் வேலையைத் தொடர்ந்தேன்.
நானும் அப்பாவும் செவ்வக அட்டைப் பெட்டிகளில் சாக்பீஸ் அடுக்கிக் கொண்டிருந்தோம். ஒரு பெட்டியில் நூற்று நாற்பத்தி நான்கு குச்சிகளை அடுக்க வேண்டும். என் தங்கை பிரேமா மரத் தட்டுக்களில் அன்று முழுவதும் வெய்யிலில் காய்ந்திருந்த சாக்பீஸ்களை பத்துப் பத்தாகப் பிரித்து இரண்டு கைகளிலும் குவித்துத் தேய்த்துக் கொண்டு இருந்தாள். அச்சுகளில் இருந்து எடுக்கும் போது சாக்பீஸ்களுடன் ஒட்டிக் கொண்டு வரும். கரடு முரடுகள் அவ்வாறு தேய்க்கும் போது உதிர்ந்து விடும். அதற்குப் பின் சாக்பீஸ்கள் வழவழப்புடன் மின்னும். முத்தண்ணா நாங்கள் சாக்பீஸ் அடுக்கி முடித்த பெட்டிகளில் மரத் துகள்களைப் பரப்பிக் கொண்டிருந்தான். பெட்டிகள் வியாபாரத்துக்காக வெளியே போகும் போது உள்ளேயிருக்கும் சாக்பீஸ்கள் ஒன்றுடன் ஒன்று உராய்ந்து உடைந்து போகாமலிருக்க, இம்மாதிரி மரத் துகள்களைப் பரப்பிவிட வேண்டியிருந்தது. அண்ணா முடித்து அனுப்பிய பெட்டிகளை அம்மா வாங்கிக் கொண்டு, அவற்றின் பக்கங்களை அளவாகக் கத்தரித்து வைக்கப்பட்டிருந்த பேப்பர் கட்டிங்குகளினால் பசையைப் போட்டு மூடிக் கொண்டிருந்தாள். ஒவ்வொரு பெட்டியையும் இவ்வாறு மூடி, முடித்து அவற்றின் இரு பக்கங்களிலும், கம்பனி பெயர் தாங்கிய லேபில்களையும் ஓட்டுவது அம்மாவின் வேலைதான்.
அண்ணாவின் பிசினஸ் ஆரம்பித்து இரண்டு வருடம்தான் ஆகியிருந்தது. பாக்டரியில் ஓர் ஆளைக் கூலி வேலைக்கு அமர்த்தியிருந்தது தவிர, மற்ற எல்லா வேலைகளையும் அண்ணா ஒருவனே கவனித்துக் கொண்டான். அதே போல வீட்டில் இருந்து செய்ய வேண்டிய பேக்கிங் வேலைகளை எல்லாம் நாங்கள் ஏற்றுக் கொண்டோம். வெளி ஆட்களை வேலைக்கு வைத்து சம்பளம் எல்லாம் கொடுக்கும் அளவு, இன்னும் பிசினஸ் வளர்ந்து விடவில்லை.
அப்பா அவருக்கு அருகில் இருந்த கூஜாவிலிருந்து நீரை எடுத்துக் குடித்தார். ஒவ்வொரு பெட்டியை முடித்ததற்குப் பிறகு அவர் ஒரு ஐந்து நிமிஷம் ரெஸ்ட் எடுத்துக் கொள்வார். அவருக்கு டி.வி.எஸ். சில் வேலை. காலையில் ஒன்பது மணிக்கு ஆபிஸ் போனால் மாலை ஆறு மணிக்கு வீட்டுக்கு வருவார். நானும், பிரேமாவும் ஸ்கூலில் படித்துக் கொண்டிருந்தோம். நான் எஸ்.எஸ்.எல்.ஸி., பிரேமா எட்டாம் வகுப்பு. பள்ளிக்கூடத்திலிருந்து வந்து கொஞ்ச நேரம் விளையாடி விட்டு பின்பு வீட்டுப் பாட வேலைகளை முடித்து ஏழு மணிக்கு அப்பாவுடன் சேர்ந்து சாக்பீஸ் வேலைகளைக் கவனிப்போம். அண்ணாவின் பிசினஸ் இது. பாக்டரியை அவன்தான் ஒற்றை ஆளாய் நடத்திக் கொண்டிருந்தான். தினமும் மாலையில் முன்தினம் தயாரான சாக்பீஸ் பெட்டிகளை சைக்கிளில் ஏற்றிக் கொண்டு, ஊருக்குள் போய் அவனது வாடிக்கையாளர்களிடம் சப்ளை செய்து விட்டு வரும் போது ஏழரை மணி ஆகி விடும். வந்ததும் எங்களுடன் சேர்ந்து கொண்டு வேலை பார்ப்பான்.
""இப்பல்லாம் வேலை முடிய ரொம்ப நாழியாறது இல்லே?'' என்று அம்மா கேட்டாள்.
""ஆமாம். ரவிப் பயல் கொஞ்சம் சோம்பேறியா ஆயிட்டான்'' என்று அப்பா என்னைப் பார்த்துச் சிரித்தார்.
""அப்பா, நீங்க ஒரு பெட்டி போடறதுக்குள்ளே நான் ரெண்டரை பெட்டி போட்டுடறேன்'' என்றேன் பதிலுக்கு.
""அடேய், எனக்கு வயசு அம்பது. உனக்கு பதினஞ்சு. அப்படீன்னா, நான் ஒரு பெட்டி போடறதுக்குள்ளே நீ மூணரைப் பெட்டியாவது போட்ருக்கணும். தெரியுமா?'' என்று மறுபடியும் சிரித்தார்.
எனக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. நான் கணக்கில் கொஞ்சம் வீக். அதனால் பிரேமாவை வம்புக்கு இழுத்தேன்.
""நான் என்ன பண்ணறது? இந்த பிரேமாதான் ரொம்ப ஸ்லோவா க்ளீன் பண்ணித் தரா.''
""டேய், டேய் கொழந்தே எவ்வளவு அழகா வேலை பாக்கறா. சும்மா அவளை வம்புக்கு இழுக்காதே'' என்று முத்தண்ணா பிரேமாவுக்காக உருகிக் கொண்டு வந்தான்.
""டேய் ரவி அண்ணா, நீதான் ஸ்லோ. நான் உடைக்காம குடுக்கற சாக்பீஸ்ல பாதியை வேகமா போடறேன்னு உடைச்சு அப்புறம் அதை சரி பண்ணி பெட்டிக்குள்ளே போடறதுனாலே உனக்கு டைம் ஜாஸ்தியாறது. சும்மா என் மண்டையைப் போட்டு உருட்டாதே'' என்று எனக்கு வலிப்புக் காட்டினாள் பிரேமா.
""போறும். உங்க சண்டையும் கூச்சலும்'' என்றாள் அம்மா.
""ஜானா இருந்த வரையிலும் எல்லாம் கிடு கிடுன்னு நடந்திண்டிருந்தது. இப்ப ஒரு கை குறைஞ்சு போனதுதான் காரணம்''
""எப்படி லா பாயிண்ட் எடுத்து வீசறா பாரு'' என்றார் அப்பா.
ஆனால் அம்மா சொன்னது வாஸ்தவம்தான். மூன்று மாதத்துக்கு முன்பு ஜானா அக்காவுக்குக் கல்யாணமாகி அவள் கும்பகோணம் போய் விட்டாள். நான், அப்பா, ஜானா அக்கா மூவரும் பெட்டியில் சாக்பீஸ் அடுக்குவோம். அக்கா படு ஸ்பீடு. அம்மா அடிக்கடி சொல்வது போல அக்காவுக்கு கண் பார்க்கறதை கை செய்து விடும். அக்கா ஆபிஸ் வேலை, தையல் கிளாஸ், டைப்பிங் என்றெல்லாம் வெளியே எங்கும் போகவில்லை. பகல் பூராவும் ஏதாவது தலையணை புஸ்தகங்களை வைத்துக் கொண்டு அதிலேயே மூழ்கி விடுவாள். புஸ்தகப் பைத்தியம். அவள் மேலே படிக்காமல் போனதற்குக் காரணம் கூட, இந்த கதைப் புஸ்தகப் பித்துதான் என்று அம்மா சொல்லுவாள். அதனால், மாலையில் பெட்டி தயார் செய்யும் வேலை ஆரம்பிக்கும் போது, அவள் மிகவும் ஃ பிரெஷ் ஆக இருப்பாள். ஏழு மணிக்கு ஆரம்பிக்கும் வேலை எட்டு எட்டே காலுக்கு முடிந்து விடும். எட்டரைக்கு எல்லோரும் தட்டை வைத்துக் கொண்டு சாப்பிட உட்கார்ந்து விடுவோம். இப்போது ஒன்பதரை மணிக்கு முன்னால், கடையைக் கட்டி முடிக்க முடியவில்லை என்று நேற்றுக் கூட அப்பா சொல்லிக் கொண்டிருந்தார்.
"" அடுத்த வாரம் இன்னும் கொஞ்சம் வேலை ஜாஸ்தியாகும்'' என்றான் முத்தண்ணா.
"" எதுக்கு?'' என்று அம்மா கேட்டாள்.
""திண்டுக்கல்லேர்ந்து ஒரு பெரிய பள்ளிக் கூட ஆர்டர் நேர நம்பளுக்கே வரப் போறதுன்னு இன்னிக்கு ஜெயலக்ஷ்மி ஸ்டோர்காரர் சொன்னார். அவருக்கு நாம கமிஷன் குடுத்துடணும்'' என்று அண்ணா அப்பாவிடம் சொன்னான். ஜெயலக்ஷ்மி ஸ்டோர்ஸ்தான் உள்ளூர் விற்பனையாளர். அவ்வப்போது உள்ளூரிலும் வெளியூரிலும் இருந்து கணிசமான ஆர்டர்கள் வாங்கித் தருவார்.
"" சரி, சாப்பிட்டுட்டு நீ என் கூட சித்தே நாழி உக்காரு. பார்ட்டிங்கள்டேர்ந்து வரவேண்டிய பணம் கொஞ்சம் ஜாஸ்தியாவே நிக்கறது. புது ஆர்டர் வேறே பெரிசா இருக்கும்னு சொல்றே. அதுக்கு கொஞ்சம் பணம் அரேஞ்ச் பண்ணணும். தூத்துக்குடிக்காரன் கிட்டேர்ந்து கல்லுக்கு புது ஆர்டர் குடுக்கணும்னா... அட்லீஸ்ட் ரெண்டு பழைய பில்லாவது நாம செட்டில் பண்ணணும். அவனுக்கும் அஞ்சு பில் பெண்டிங்கா இருக்கு'' என்றார் அப்பா. அவர்தான் அண்ணாவின் பிசினஸ் வரவு செலவு கணக்கு எல்லாம் பார்த்துக் கொள்கிறவர். அண்ணா அவர் பேச்சைத் தட்ட மாட்டான். அவர் பேச்சைக் கேட்காமல் ஒரு காரியம் செய்ய மாட்டான்.
மறுநாள் அதிகாலையில் யாரும் எதிர்பார்க்காத விதமாக அக்காவும் அத்திம்பேரும் ஊரிலிருந்து வந்தார்கள். எல்லாருக்கும் ஒரே உற்சாகம்.
""ஏண்டி நீ போன் பண்ணி சொல்லிருக்கக் கூடாதா? முத்து ஸ்டேஷனுக்கு வந்திருப்பானோல்லியோ?'' என்று அம்மா அவளை வரவேற்றாள்
"" எல்லாம் சர்ப்ரைஸ் சர்ப்ரைஸ்'' என்று அக்கா சிரித்தாள். ""நேத்தி சாயங்காலம்தான் இவருக்கு ஆபிசிலே கூப்பிட்டு சொன்னாளாம், அவாளோட மதுரை, திருநெல்வேலி ரெண்டு பிராஞ்சையும் போய் சர்ப்ரைஸ் இன்ஸ்பெக்ஷன் பண்ணிட்டு வான்னு. அதான் ராத்திரி ட்ரெய்னைப் பிடிச்சு வந்தோம்'' என்றாள் ஜானா அக்கா.
"" இங்க ஒரு வாரம் பத்து நாள் இருப்பியோன்னோ?'' என்று அம்மா சாப்பிடும் போது கேட்டாள்.
அக்கா அத்திம்பேரைப் பார்த்தாள்
அவர் சற்றுக் கூச்சத்துடன், ""நாலு நாள்ல திரும்பிப் போகணும்'' என்றார்.
""நீங்க வேணும்னா போய்க்கோங்கோ. நான் ஒரு வாரம் இருந்துட்டுதான் வரப் போறேன்'' என்றாள் அக்கா.
""அவருக்கு ஆபிஸ்ல எவ்வளவோ வேலை இருக்கும். அது தெரியாமா நீ பேசிண்டிருந்தா?'' என்று அப்பா அக்காவை லேசாகக் கடிந்தார்.
"" அதுதான் அவர் போகட்டும்னு சொன்னேனே'' என்று அக்கா தன் கணவரைப் பார்த்துக் கண் சிமிட்டினாள்.
""உனக்கு எப்பவும் விளையாட்டுதான்'' என்றார் அப்பா. ஆனால் அவருக்கு உள்ளூர சந்தோஷம்தான் என்று முகத்தில் தெரிந்தது.
ஆனால் அன்று ஸ்கூலில் எனக்கும் பிரேமாவுக்கும் கசப்பான செய்தி காத்திருந்தது. வழக்கமாக நடைபெறும் நாளிலிருந்து மாதாந்திர டெஸ்டுகளை பத்து நாள்கள் முன்னதாகவே வைத்து விட்டார்கள். அதனால் ஜானா அக்கா இங்கே வந்திருக்கும் சமயத்தில் அவளோடு ஜாலியாக இருக்க வேண்டியதற்குப் பதிலாக, பரீட்சைக்குப் படித்துத் தொலைக்க வேண்டும். நானும் பிரேமாவும் முனகிக் கொண்டே வீட்டுக்கு வந்தோம்.
அன்று இரவு வழக்கம் போல் நானும் பிரேமாவும் சாக்பீஸ் வேலைக்கு வந்த போது, ஜானா அக்கா, ""நீங்க ரெண்டு பேரும் பரீட்சைக்கு போய் படிங்கோ. நான் பாத்துக்கறேன்'' என்று எங்களை அனுப்பி விட்டாள். அவள் இருந்த அந்த வாரம் முழுவதும் அப்பாவும் அவளுமாக சாக்பீஸ் அடுக்கும் வேலைகளைச் செய்தனர். அம்மாவும் கூட மாட பெட்டிகளை மூடி பேக் பண்ணிக் கொடுத்தாள்
"" ஜானுக் குட்டி இல்லாம இருந்திருந்தா... திண்டுக்கல் ஆர்டர் அம்போன்னு போயிருக்கும்'' என்று அப்பா ஒருநாள் சாப்பிடும் போது சொன்னார்.
""பாவம் இங்க வந்து ரெஸ்ட் எடுக்க வேண்டியவளைப் போட்டு பாடாய்ப் படுத்தியாச்சு'' என்றார்.
அவருக்கு ஜானா அக்கா என்றால் எப்போதும் தனிப் பாசம். ""குட்டி... குட்டி'' என்று உயிரை விடுவார் என்று அம்மா சொல்லுவாள்.
எங்களுக்கு சனிக்கிழமையன்று பரீட்சைகள் முடிந்தன. ஜானா அக்காவும் அத்திம்பேரும் ""சினிமாவுக்குப் போகலாம்'' என்றார்கள். எல்லோரும் சேர்ந்து சினிமாவுக்குப் போய் விட்டு வரும் போது காலேஜ் ஹவுஸில் சாப்பிட்டோம். வீட்டுக்கு வந்ததும், அத்திம்பேர் களைப்பாக இருக்கிறது என்று படுக்கப் போய் விட்டார். பிரேமாவும் தூக்கம் வருகிறது என்று படுத்துக் கொண்டு விட்டாள்.
"" மாடில கொஞ்ச நேரம் காத்தாட உட்கார்ந்து பேசிண்டு இருக்கலாமா?'' என்று அக்கா கேட்டாள்.
நான், முத்தண்ணா, அம்மா, அப்பா, அக்கா எல்லோரும் மாடிக்குப் போய் சில் தரையில் உட்கார்ந்து கொண்டோம். முன்னிரவின் லேசான குளிர்ச்சி கலந்த காற்று உடலைத் தழுவிச் சென்றது. தூரத்தில் மீனாக்ஷி அம்மன் கோயில் கோபுரங்களில் சிமிட்டிக் கொண்டிருந்த நீல விளக்குகள் கவனத்தை ஈர்த்தன.
""ஆச்சு, நாளைக்கு கிளம்பிப் போயிடுவே. வீடே வெறிச்சுன்னு இருக்கும்'' என்று அம்மா ஆரம்பித்தாள்.
""இன்னும் நாலு நாள் கூட இருந்துட்டு போவேன். இவர் ஒண்ணும் சொல்ல மாட்டார். ஆனா என் சின்ன மாமியார் புதன்கிழமை அங்க வரா. அவ பொண்ணுக்கு ஒரு வரன் பாக்கணும்னு. அவா வரச்சே நான் அங்க இல்லாம இருந்தா நன்னா இருக்காது.... இல்லியா?'' என்றாள் அக்கா.
""ஜானுக் குட்டி அப்படியே நீ நம்பாத்துக்கும் ஒரு பொண்ணைப் பாரேன்'' என்றார் அப்பா.
நாங்கள் எல்லோரும் ஆச்சரியத்துடன் அப்பாவைப் பார்த்தோம்.
""யாருக்கப்பா? முத்துவுக்கா?'' என்று அக்கா ஆச்சரியத்துடன் கேட்டாள்.
""அவனுக்கென்ன அவசரம்? இப்பதானே இருபத்தியாறு வயசு ஆறது அவனுக்கு? நீங்களே சொல்லுவேளே அவன் இப்ப சம்பாதிக்கறது அவன் ஒருத்தனுக்குத்தான் காணுமா இருக்குன்னு'' என்று அம்மாவும் வியப்பு நிரம்பி வழியும் குரலில் கேட்டாள்
அப்பா ஒரு நிமிஷம் பேசாமல் இருந்தார். பிறகு தொண்டையைக் கனைத்துக் கொண்டே, ""ஆமா அப்படித்தான் நானும் நினைச்சிண்டு இருந்தேன். ஆனா இப்ப வர வர முத்துவோட பிசினஸ் பிக்கப் ஆயிண்டு வரது. அதுக்கு ஏத்த மாதிரி நாமளும் ஜாஸ்தி வேலையை இழுத்துப் போட்டுண்டு செஞ்சாக வேண்டியிருக்கு. ஒண்ணும் இல்லே. இந்த வாரம் நீ வராம இருந்து, இந்த ரெண்டு சின்னதுகளும் பரீட்சைன்னும், படிக்கணும்னும் வேலை பண்ண முடியாம இருந்தா நமக்கு கிடைச்ச பெரிய ஆர்டரும், பணமும், லாபமும் கையை விட்டுப் போயிருக்கும் இல்லியா? நீ கல்யாணமாகிப் போனதுக்கு அப்புறம் கொஞ்ச நாளா இந்த வேலை கூடிண்டே போறதைப் பார்த்துத்தான் இவனுக்கு ஒரு கல்யாணத்தைப் பண்ணிடலாம்னு தோணிண்டே இருக்கு'' என்றார்.
யாரும் பதில் பேசவில்லை.
"" நம்ப ஆத்துக்கு வர்ற பொண்ணு இந்த வேலைகளை எல்லாம் எடுத்து செஞ்சாதான் சரியா ஒர்க்கவுட் ஆகும் இல்லியா?'' என்றார்.
நான் முத்தண்ணாவைப் பார்த்தேன். அந்த அரை இருட்டிலும் அவன் அப்பாவையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் கண்கள் வழக்கத்துக்கு விரோதமாக ஜொலித்தன. அப்பா அவனைப் பார்த்த போது தலையைக் குனிந்து கொண்டான்.
அண்ணாவையும் வைத்துக் கொண்டு அப்பா தன்னுடைய அந்தக் கடைசி வார்த்தைகளைச் சொல்லி இருக்க வேண்டாம் என்று எனக்குத் தோன்றியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

அதிபர் டிரம்ப் மீது ஈரான் கொலை முயற்சி - அமெரிக்க அரசு அறிவிப்பு!

வருவாய்த்துறை கூட்டமைப்பினர் சாலை மறியல்! 500க்கும் மேற்பட்டோர் கைது!

மாநிலங்களவை அதிமுக வேட்பாளர் தம்பிதுரை! பாமகவுக்கு ஒரு இடம்!

முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு!
வீடியோக்கள்

BJP Annamalai interview | விஜய் 234 வேட்பாளர்களை நிறுத்த முடியுமா? | TVK Vijay | DMK | ADMK
தினமணி வீடியோ செய்தி...

Vijay full speech | "தமிழ்நாடே திவாலாகப் போகிறது!" - தஞ்சையில் விஜய் பேச்சு! | TVK
தினமணி வீடியோ செய்தி...

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

