கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!இங்கிலாந்துக்கு எதிராக ரன் குவிக்க நியூஸி. திணறல் - 160 ரன்கள் இலக்கு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

உலகின் கவனத்தை ஈர்த்த குழந்தைகள்!

குழந்தைகளின் படங்கள் அழகும், மகிழ்ச்சியும் மட்டுமே நிறைந்தவை அல்ல. துன்பங்களையும், துயரங்களையும் சுமந்த குழந்தைகளின் படங்களும் உள்ளன.

News image
Updated On :24 ஜனவரி 2024, 4:49 pm

தங்க. சங்கரபாண்டியன்

குழந்தைகளின் படங்கள் அழகும், மகிழ்ச்சியும் மட்டுமே நிறைந்தவை அல்ல. துன்பங்களையும், துயரங்களையும் சுமந்த குழந்தைகளின் படங்களும் உள்ளன. மனிதம் மறந்தவர்களின் மறுபக்கத்தைக் காட்சிப்படுத்தும் சமூக அவலத்தை அறிமுகப்படுத்தும் முகவரியாக குழந்தைகளின் படங்களே திகழ்கின்றன.

புகைப்படத் துறையின் முன்னோடி நைஸ் போர்.

உலகின் நிரந்தரமான முதல் புகைப்படம் என்பதும் அவர் எடுத்ததே. அந்தப் புகைப்படத்தில் ஒரு சிறுவன் இருப்பான். குதிரை இருக்கும். லகானைப் பிடித்துக் கொண்டு குதிரையின் முகத்தைப் பார்த்தபடி சிறுவன் குதிரையைக் கூட்டிச் செல்வான்.

1985 நவம்பர் 13 அன்று கொலம்பியாவில் நடந்தது அந்தத் துயரம். இப்படி ஓர் அழிவு நடக்கும் என்பதை செப்டம்பர் மாதமே அரசுக்குச் சொன்ன விஞ்ஞானிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைவுபடுத்தவும் அறிவுறுத்தினார்கள்.

குறிப்பிட்ட நாளில் வெடித்துச் சிதறியது எரிமலை. நிலச்சரிவு, மண்சரிவு, குப்பை என எல்லாவற்றையும் சேர்த்துக் கொண்ட நெருப்புக் குழம்பு அருவி போல் விழுந்து ஆறுபோல் ஓடியது. மணிக்கு 50.கி.மீ. வேகத்தில் ஓடிய நெருப்பாற்றுக்கு முன்னால் யார்தான் நிற்க முடியும்? 25,000 மக்கள் நெருப்பில் வெந்து சகதியில் புதைந்து மடிந்து போனார்கள்.

யாராவது சகதியில் இருந்து தூக்கிவிட மாட்டார்களா என அணுக முடியாத தூரத்திலும் இறங்க முடியா ஆழத்திலும் கை நீட்டியபடி பலர் செத்துக் கொண்டிருந்தார்கள்.

அவர்களுள் ஒருவர் "ஒமாய்ரா சான்செஸ்' என்னும் 13 வயது சிறுமி. கட்டட இடிபாடுகள் அழுத்த சகதியில் புதைந்து கிடந்தவரின் அருகில் யாராலும் செல்ல முடியவில்லை. அந்தப் பகுதியில் உள்ள நீரை வெளியேற்ற கருவி தருமாறு அரசாங்கத்தைக் கேட்டது செஞ்சிலுவைச் சங்கம். ஒன்றும் நடக்கவில்லை. அரசு சார்பில் மீட்புப் படையினரும் வரவில்லை. அவளைச் சுற்றி தூரத்தில் நின்றவர்கள் ஆறுதல் வார்த்தைகளைச் சொல்லியபடி இருந்தார்கள். 3 நாட்கள் போராடிய அவள் உயிர்விட்டாள்.

சிறுமியின் கடைசிநேர துயரத்தை ஃபிராங்க் ஃபூரியர் என்பவர் புகைப்படமெடுத்தார். அவரிடம் சிறுமி சொன்னாள். ""அங்கிள்... அங்கிள்... என்னைப் பள்ளிக் கூடத்திற்கு சீக்கிரமாக கூட்டிட்டுப் போக முடியுமா? ஏற்கெனவே ரொம்ப நேரமாயிருச்சு?''

இறப்பை சந்திக்கும் முன்பான குழந்தையின் முகம், சாதனைக் கனவு கலைந்து போனவளின் ஏமாற்றம், சிறுமியின் இந்தப்படம் உலகின் மனச் சாட்சியை உலுக்கிச் சொல்லிக் கொண்டே இருக்கிறது.

Story image

பிரிட்டிஷ் காலனியிலிருந்து 1960 -ஆம் ஆண்டு விடுதலை பெற்றநாடு நைஜீரியா. சுதந்திரக் காற்றின் சுவாசம் முழுதாய் அடிவயிறு தொட்டு வெளிவரும் முன், இனத்தின் பெயரால் மதத்தின் பெயரால் தங்களுக்கிடையே உடைவாள் உருவினார்கள் மக்கள். சுதந்திரத்திற்காக கேட்ட முழக்கங்கள் மறைந்து அழுகையும், ஓலமும் எப்போதும் ஏதாவது ஒரு திசையில் இருந்து வந்துகொண்டே இருந்தது. வலு இருந்தவரை மோதிப் பார்த்துவிட்டு 1967 மே 30 -இல் இக்போ இன மக்கள் வாழ்ந்த தென் பகுதியானது பியாஃப்ரா என்னும் பெயரில் தனி நாடானது. இவர்களுக்குப் பெரிய நாடு என்னும் அளவில் பிரான்ஸ் மட்டுமே ஆதரவு அளித்தது. பிரிட்டன், அமெரிக்கா மற்றும் சோவியத் யூனியன் போன்ற பெரிய நாடுகளின் ஆதரவு நைஜீரியாவுக்கு இருந்தது.

தென்னாடு எண்ணெய் வளம் மிகுந்த பகுதி எனவே இரு நாடுகளுக்கும் இடையே போர் தொடங்கியது. நைஜீரிய இராணுவம் தென்னாட்டைச் சுற்றி வளைத்தது. எண்ணெய் வளமிக்க பகுதி. துறைமுகம் என எல்லாவற்றையும் கைப்பற்றி நாட்டின் எல்லைகளை அடைந்தது. தென்பகுதிக்குள் உணவு கிடைக்கவில்லை. நாட்கள் ஆக ஆக உணவின்றி மக்கள் சாகத் தொடங்கினர். இரண்டரை ஆண்டுகளில் 20 இலட்சம் பேர் உணவின்றி உடல் மெலிந்து உயிர்விட்டனர்.

முதல் 6 மாதங்களுக்கு இப்படி ஓர் அழிவு நடக்கிறது என்றே பிற நாடுகளுக்குத் தெரியவில்லை. வெளி உலகத்திற்குத் தெரியாமலும், அவர்களின் உதவிகள் பியாஃப்ரா நாட்டிற்குள் வராமலும் இருக்க நைஜீரியா தந்திரமாக செயல்பட்டது. இந்தச் செய்தி சிறிது அறிந்தவராக சண்டே டைம்ஸ், நாளிதழின் டான் மெக்கலின் 1969 -ஆம் ஆண்டு பியாஃப்ரா சென்றார். உலகம் முழுதும் உள்ள சூழலியல் அழிவுகள் மற்றும் போர் அழிவுகளைப் பற்றிய புகைப்படங்கள் எடுக்கும் பணியில் அவர் அப்போது ஈடுபட்டிருந்தார்.

பஞ்சம் மற்றும் போரினால் அநாதையாக்கப்பட்ட குழந்தைகளுக்கான முகாமிற்குச் சென்றார் மெக்கலின்.

"நிறமிக்கோடு' என்னும் நோயினால் பாதிக்கப்பட்டு தோல் நிறம் மாறிப்போன ஒரு சிறுவனைப் பார்த்தார். அடுத்தடுத்து எண்ணற்ற சிறுவர்கள் அதே நோயினால் மெலிந்து உருக்குலைந்து இருப்பதைக் கண்டார். அக்கொடூரக் காட்சியைப் படமெடுத்தார். அவர் சொன்னார்:

""முகாமிற்குள் சென்றவுடன் நிறமிக்கோடு நோயினால் அவதிப்பட்ட சிறுவனைப் பார்த்தேன். உண்ண உணவின்றி பாதிக்கப்பட்ட அச்சிறுவன் விவரிக்கவே இயலாத அளவிற்கு கொடுமையான நிலையில் இருந்தான். சிறிதளவு கூட சராசரி மனிதன் போல இல்லாமல் எப்படியோ உயிர் பிழைத்து இருக்கும் ஒரு சிறிய எலும்புக்கூடு போலவே காட்சியளித்தது என் மூளை மடிப்புகளில் ஆழமாய் பதிந்துவிட்டது''.

இந்தப்படம் வெளியான பிறகு "இக்போ' இனமக்களுக்கு உதவ வேண்டும் எனக் கூறி அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் மக்கள் திரண்டார்கள். தினமும் சராசரியாக 25,000 கடிதங்கள் அனுப்பினார்கள். ஐ.நா. சபையும் உணவுப் பொருள் வழங்க எல்லா முயற்சிகளையும் எடுத்தது.

Story image

ஆப்பிரிக்க நாடான வடக்கு சூடான் தெற்கு சூடான் என்று அடிக்கடி மோதிக் கொண்டன. தொடர்ந்த போராட்டங்களால் பஞ்சம் அங்கு ஆட்சி செய்யத் தொடங்கியது. வாரத்திற்கு ஒரு முறை சாப்பிடுவதே அதிசயமாக இருந்தது. பெரியவர்கள் உணவின்றியும் குழந்தைகள் பால் இன்றியும் செத்துக் கொண்டிருந்தனர். செத்து விழும் உடலைத் தின்ன பிணந்தின்னிக் கழுகுகளும் நிறைய வட்டமடித்தன.

இந்த மக்களுக்கு உணவளிக்க ஐக்கிய நாடுகள் சபையின் குழு, உணவுப் பொருட்களை எடுத்துக் கொண்டு 1993 - ஆம் ஆண்டு சென்றது. அவர்களுடன் போர் பாதிப்புகளைப் பதிவு செய்ய கெலின் கார்ட்டர் என்னும் புகைப்படக்காரரும் சென்றார். இவர் விளையாட்டுத்துறைப் புகைப்படக்காரராக தன் பணியைத் தொடங்கி போர் புகைப்படக்காரராக மாறினார்.

ஓரிடத்தில் உணவு கொடுக்கிறார்கள் என்று தகவல் தெரிந்ததும் மக்கள் அந்த இடம் தேடி வரத் தொடங்கினார்கள். தன் உடலைத் தூக்கி நடக்கவே தெம்பில்லாத அவர்களைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது. அப்போதுதான் அந்த நிகழ்வு நடந்தது.

எல்லோரையும் போல உணவுக்காக நடந்துவந்த சிறுமி மேற்கொண்டு நடக்க சக்தி இல்லாமல் தரையில் குப்புற விழுந்துவிடுகிறாள். இதைப் பார்த்த பிணந்தின்னிக் கழுகு அச்சிறுமியை உண்ண அருகில் வந்து அமர்ந்தது. இந்தக் காட்சியைக் கண்ட கெவின் கார்ட்டர் அதை தத்ரூபமாக படமெடுக்க தன் புகைப்படக் கருவியை தயார் செய்கிறார், காத்திருக்கிறார். இவர் போவாரென கழுகும், கழுகுதிண்ணும் என இவரும் காத்திருக்க நேரம் ஆகிறது. கழுகு இவருக்காக அதிக நேரம் காத்திருக்கிறது. இதற்கு மேல் தம்மால் முடியாது என்று நினைத்த கார்ட்டர் அந்தக் காட்சியை மட்டும் படமெடுத்துவிட்டு வந்துவிடுகிறார். படம் "தி நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகையில் வெளியானது. அந்தப் படத்திற்கு 1994 - ஆம் ஆண்டின் "புலிட்சர் விருது' கிடைத்தது.

இப்போது மக்கள் கேட்டார்கள், "" சரி... அந்தச் சிறுமிக்கு என்ன ஆச்சு?''

கார்ட்டர் சொன்னார் "எனக்குத் தெரியாது' விமர்சனங்கள் எழுந்தன.

செயின்ட் "பீட்டர்ஸ்பர்க் டைம்ஸ்' பத்திரிகை துன்புறும் சிறுமியை சரியாகப்படம் எடுக்க வேண்டும் என்பதற்காக தன்னையே சரிசெய்து கொண்டிருந்த கார்ட்டர் இன்னொரு கொலையாளியாகத்தான் இருக்க முடியும்'' என்று எழுதியது. மனம் காயப்பட்ட கார்ட்டர் 27.7.1994 இல் தற்கொலை செய்து கொண்டார்.

வியட்நாமில் அமெரிக்கா போர் தொடுத்தபோது "நாபாம்' எனப்படும் எரியும் திரவக் குண்டு வீசப்பட்டது. பலர் எரிந்து செத்துப்போன அந்த நேரத்தில் தன் ஆடையில் தீ பற்றியவுடன் அதைக் கழற்றி எறிந்துவிட்டுக் கைகளை உயர்த்தியபடி 1972- ஆம் ஆண்டு ஜுன் 8 ஆம் தேதி "இம்புக்' என்னும் 9 வயது சிறுமி ஓடிவந்தது போரின் மறுமுகத்தைக் காட்டியதையும் நாம் அறிவோம்.

மத்தியப்பிரதேசம் தலைநகர் போபாலில் 1984 திசம்பர் 2 ஆம் தேதி அமெரிக்காவைச் சேர்ந்த யூனியன் கார்பைடு தொழிற்ûசாலையில் ஏற்பட்ட விஷக் கசிவில் ஆயிரக்கணக்கானோர் செத்து விழுந்தார்கள். பார்வை இழந்தார்கள்.

அப்படியான ஒரு குழந்தையைப் புதைக்கும் முன்பாக எடுக்கப்பட்ட சிறுவனின் ""போபால் கண்கள்' நீதியும் இழப்பீடும் கிடைக்காமல் இன்றுவரை போராடும் பாதிக்கப்பட்டவர்களின் சாட்சியாக விளங்குகின்றன.

ஈழப் போரில் தம் பெற்றோர், உறவினர், கல்வி, கலாச்சாரம் அனைத்தையும் பறித்தவர்கள் ஏற்படுத்தியுள்ள முள்வேலிக்குள் நின்றபடி நம்மை ஏக்கத்துடன் பார்க்கும் கண்கள் நம் மனசாட்சியை இழக்க வைக்கிறது.

சிரியாவில் நடக்கும் உள்நாட்டுப் போரில் இருந்து தற்காத்துக் கொள்ள துருக்கி வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக ஆயிரக்கணக்கான மக்கள் போகிறார்கள். அப்படி கடல்வழியே போகும்போது மூழ்கி இறந்து 4.9.2015 அன்று கடற்கரையில் ஒதுங்கியது ஆலன் குர்தியின் உடல். அவனின் வயது 3. சிரிய அகதிகள், சிரியக் குழந்தைகள் படும் துயரத்தை உலகுக்கு உணர்த்தியவன் ஆலன் குர்தி. அவனின் இறப்பு சிரியா பிரச்னையின் தீவிரத்தை உலகுக்கு ஆழமாக உணர்த்தியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.