மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

தேடல்

இரண்டு நாட்களாகத் தேடிக் கொண்டிருக்கிறேன் - அந்தப் புத்தகத்தைக் காணவில்லை.

News image
Updated On :6 மே 2016, 11:16 am

டாக்டர் ஜெ. பாஸ்கரன்

இரண்டு நாட்களாகத் தேடிக் கொண்டிருக்கிறேன் - அந்தப் புத்தகத்தைக் காணவில்லை.

அன்று பஸ்ஸிலிருந்து இறங்கி, பிளாட்பாரக் கடைகளுக்கு வழிவிட்டு, தள்ளாடி மேலே விழ வரும் குடிமகன்களை சாமர்த்தியமாகத் தவிர்த்து, உயிருக்கு உத்திரவாதமின்றி எதிரில் வரும் வாகனங்களை உரசியபடி வந்து, கறுப்பு மணலோடு வறுத்த கடலையை வாங்கிக் கொறித்தபோது, கடைசி சொத்தைக் கடலை வாயில் கசக்க, கையிலிருந்த துண்டு நியூஸ் பேப்பரில் இருந்த ஏதோ ஒருசெய்திதான், அந்தப் புத்தகத்தை எனக்கு நினைவூட்டியது.

எங்கே தொலைந்தது?

புத்தகத்தை அடுக்கி வைத்த அலமாரியிலிருந்து எடுத்துவிட்டு, அவசரத்தில் திருப்பி வைக்கும்போது, ஒன்று நிற்கும், ஒன்று கிடக்கும். ஆனால் அலமாரியின் உள்ளேதான் இருக்கும். கலைந்தவற்றைத் திரும்ப அடுக்குவது ஒரு சுகமான வேலை. கையில் கிடைத்த புத்தகத்தின் நடுவே ஏதாவது ஒரு பக்கத்தை, ஒற்றைக் காலில் நின்றவாறு சுவாரஸ்யமாக வாசிக்கலாம்.

சரி, இங்கே ஆங்கில நாவல்கள் வைத்திருந்த வரிசையில்தான் அந்தப் புத்தகத்தை வைத்திருந்த ஞாபகம். இப்போது அது அங்கு இல்லை.

என் ஞாபக சக்தியை நீங்கள்தான் மெச்சிக் கொள்ள வேண்டும். யாருக்காவது புத்தகத்தைக் கொடுத்தால், வாங்கிக் கொண்டவரும், புத்தகமும் எளிதில் என் நினைவிலிருந்து நழுவி விடும், வரம் வாங்கி வந்திருக்கிறேன். அவர்களே ஞாபகமாகத் திருப்பிக் கொடுத்தால்தான் உண்டு இல்லையேல் புத்தகமும் அந்தர் தியானமாகி விடும்.

அப்படி நானும் மறந்து போய் திருப்பிக் கொடுக்காமல் அடுக்கியவைதான் இன்று என் அலமாரியில் முக்கால்வாசிப் புத்தகங்கள், அது வேறு கதை.

என் சின்ன மூளைக்குள் தேடிய வரையில், யாருக்கும் அந்தப் புத்தகத்தை இரவல் கொடுத்ததாக நினைவில்லை. எங்கே போயிருக்கும்?

நன்றாகத் தேடுவோமே என்று, மாட்டுக்கார வேலன் எம்.ஜி.ஆர். மாதிரி முண்டாசு ஒன்றைக் கட்டிக்கொண்டு (சின்னவயசிலிருந்தே இந்தப் பழக்கம் உண்டு - எல்லோருக்கும் தெரிய வேண்டாமா, நான் வேலை செய்கிறேன் என்று) ஸ்டூல் மேல் வசதியாக ஏறி நின்றபடி தேடினேன். ஏதேதோ நாவல்கள், நீதி நூல்கள், வக்கீல்களும் வாய்தாக்களும், பிறரை வசியப்படுத்துவது எப்படி, பாட்டி வைத்தியம், பல்லி விழும் பலன் இப்படி. அந்தப் புத்தகத்தை மட்டும் காணோம்.

மூன்றாம் தட்டில் சிறிது ஒளிந்தாற்போல் இருந்த முதல் புத்தகத்தை உருவி எடுத்தேன். "அட, என்ன ஒரு நல்ல புத்தகம்' என்று எண்ணிக் கொண்டே ஏதோ ஒரு பக்கத்தைப் புரட்டினேன். அது மேல்நாட்டு டாக்டர் ஒருவர் எழுதிய கட்டுரைகள். தானும் தன் அப்பாவும், நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு கடற்கரையில் சந்தித்துக் கொண்டபோது ஏற்பட்ட சந்தோஷம் பற்றி அதில் சுவாரஸ்யமாகக் கூறியிருந்தார். இரண்டு பக்கம் படித்த பிறகுதான் நான் தேடும் புத்தக நினைவு வந்தது. கூடவே "அரைக்கிற அரிசிய விட்டுட்டு' என்ற பழமொழியும் ஞாபகத்தில் வந்து தொலைத்தது. கையிலிருந்த புத்தகத்தை நான் மூடவும், அசரீரியாய் என்னை யாரோ கூப்பிடவும், அதிர்ந்து போய் புத்தகத்துடன் கீழே குதித்தேன்.

வேறு யார், மனைவிதான்.

""ஸ்டூல் மேல நின்னுக்கிட்டு ஏன் தவம் பண்றீங்க? அழகா உட்கார்ந்து படிக்கலாமில்லே?'' என்றாள். என் காதுகளையே என்னால் நம்ப முடியவில்லை.

""என்ன, எப்பெப் பார்த்தாலும் புத்தகமும் கையுமா?''

என்பது ஏன் இப்படித் தலைகீழாய் மாறியது.

ஒரு சின்ன அபாய மணி, மனதின் மூலையில் அமைதியாய் அடித்தது. என்ன? என்பதைப்போல அஜாக்கிரதையாகத் திரும்பினேன்.

""இன்னிக்கு வெள்ளிக்கிழமை. மேலே லாஃப்ட்டுல இருக்கிற காமாட்சி விளக்கைக் கொஞ்சம் எடுத்துக் கொடுங்களேன், ப்ளீஸ்'' என்றாள்.

"அதுதானே பார்த்தேன், கரிசனம் கொடிகட்டிப் பறக்கிறதே' என்று கைப் புத்தகத்தை, அலமாரியில் இருந்த இடத்தில் சொருகி விட்டு, அருகிலிருந்த அலுமினியம் ஏணியில், ஒரு ஃபயர்மேன் ஸ்டைலில் ஏறி, எதிர்த்த லாஃப்ட்டைத் திறந்தேன். திறந்த வேகத்தில், கதவிலிருந்து ஒரு பல்லி உள்ளே ஓட, வெளிச்சம் பார்த்து, உள்ளிருந்து ஒரு சுண்டெலி என் தலையில் பச்சைக் குதிரை தாண்டி வெளியே ஓடியது. அதிர்ச்சியில் ஒரு நிமிடம் ஏணியில் பாலே டான்ஸ் ஆடினேன். பாலே பிடிக்காதவர்கள், டைட்டானிக் படப் போஸை கற்பனை செய்துகொள்ளலாம். ஆடி நிலைக்கு வந்த போது, உள்ளுக்குள் இருந்த என் பாட்டி காலத்து கருப்பு ட்ரங்குப் பெட்டி கண்ணில் தெரிந்தது. காது கூசும் நாராசமான சத்தத்துடன் பெட்டியை இழுத்தேன். இன்னொரு சுண்டெலி, பெட்டிக்குப் பின்னால் தோன்றி சட்டென மறைந்தது.

கொஞ்சம் துரு ஏறிய பெட்டியின் தாழ்ப்பாளைத் திறக்க பிரம்ம பிரயத்தனம் செய்ய வேண்டியிருந்தது. என் கெஞ்சல்களுக்கு அது அசைந்து கொடுப்பதாய் இல்லை. பரணில் ஓரமாய்க் கிடந்த ஒரு கம்பியினால், கொக்கியை நெம்ப, கம்பி வளைந்து "ஙே' என்றது. பிறகு சுத்தியால், செல்லமாக இரண்டு தட்டு தட்டியவுடன் திறந்து கொண்டது. உள்ளே பிளாஸ்டிக் பையில் இருந்த விளக்கை எடுத்து மனைவி கையில் வெற்றிகரமாகக் கொடுத்துவிட்டு, மீண்டும் ஸ்டூலுக்குத் தாவினேன்.

எங்கே போய்விட்டது அந்தப் புத்தகம்? கை மறதியாக மேல் வரிசையில் வைத்திருப்பேனோ? அந்தத் தட்டில், இரண்டு மணிவிழா மலர்கள் (கொப்பணாம்பட்டி செட்டியார் வீட்டு திருமணம்), ஒரு கும்பாபிஷேக மலர், நித்திய பாராயணத்திரட்டு, ராஜாஜியின் வியாசர் விருந்து எல்லாம் கேட்பாரற்றுக் கிடந்தன.

கை பட்டு இரண்டு புத்தகம் விரைவாகத் தரையிறங்க, நானும் அதனுடன் கீழே இறங்கி, கையில் எடுத்துக் கொண்டு, மீண்டும் ஸ்டூலில் ஏறும்போது அலமாரியின் திறந்த கதவு தலையில் குட்டியது. சொச்சமிருந்த ஞாபகசக்தியும் குறைந்து, குழம்பினேன். கண்களுக்குள் நட்சத்திரங்கள்.

""என்னப்பா, தலைல இடுச்சிக்கிட்டியா?'' என்று வந்த மகளிடம், ""அந்தப் புத்தகத்தை நீ பார்த்தியா?'' என்று கேட்டேன்.

""அப்பா, ஒரு நோட்டுல, யாருக்கு, என்ன புத்தகம், எப்போது கொடுத்தோம்னு, விவரங்கள் எல்லாம் எழுதி வெச்சுக்கோ. எங்களைச் சும்மா தொந்தரவு பண்ணாதே. நீயும் உன் புத்தகமும்'' என்றபடி செல்போனில் மூழ்கிப் போனாள்.

ஹாலில் மேஜை மீது, டீப்பாய் மீது, சோஃபாவுக் கடியில், டிவிக்குப் பின்னால், பாத்ரூம் அலமாரியில் எங்கும் காணவில்லை.

காலிங் பெல் அடிக்கவே, வாசற் கதவைத் திறந்தேன். டிப்டாப்பாக, காலில் ஷூ, கழுத்தில் டை சகிதம் ஓர் ஆசாமி என்னைத் தாண்டி உள்ளே பார்த்து, ""சார் இல்லையா?'' என்றான்.

என் முண்டாசு கோலம் பார்த்து, என்னை வீட்டு வேலைக்காரனாக நினைத்திருக்க வேண்டும். முண்டாசை அவிழ்த்தவாறே, ""நான்தான் சார்'' என்றேன். கையில் அடக்கமாகப் பிளாஸ்டிக்கில் பேக் செய்யப்பட்ட டிக்ஷனரி மற்றும் இரண்டு புத்தகங்கள். ""சாரி... சார். நான் ஒரு செல்ஃப் எம்ப்ளாய்டு யூத். மூன்று புத்தகங்கள் விலை ஆயிரம் ரூபாய்க்கு மேல் ஆகும். என்கிட்ட நானூத்தம்பது ரூபா தான் சார், வாங்கிக்கிறீங்களா?'' என்றான் பவ்யமாக.

""அந்தப் புத்தகத்த நீ பார்த்தியா?'' நாக்கு நுனி வரை வந்த கேள்வியை சிரமப்பட்டு அடக்கிக் கொண்டு, புன்னகைத்தவாறே, ""இதெல்லாம் இருக்குதுங்க என் கைலே. போய்ட்டு வேற புத்தகங்களோட அப்புறமா வாங்க தம்பி'' என்றேன். புத்தகம் காணாமல் கலங்கிய என் மனதை அவன் அறிந்திருக்க நியாயமில்லைதானே?

யார்கிட்டே கொடுத்திருப்பேன்? ஸ்கூல் ஃப்ரண்டு, கோதண்டம். அவன் இந்த மாதிரி புத்தகங்கள் படிக்கமாட்டானே? அப்படியே எடுத்துக்கிட்டுப் போனாலும், இரண்டு நாளில் படிக்க நேரமில்லை என்று ஏதாவது ஒரு சாக்குடன் திருப்பிவிடுவானே. வேறே யாருக்கு?

பொதுவாகவே யாருக்கும் புத்தகம் இரவல் கொடுப்பது எனக்குப் பிடிக்காது. திரும்பி வராது. அப்படியே வந்தாலும் கிழிந்தோ, எண்ணெய், காபி கறை பட்டோ வரும். எனக்கு இதெல்லாம் துல்லியமாகத் தெரியும் - நானும் இரவல் வாங்கிய புத்தகங்களைத் திருப்பித் தந்ததாகச் சரித்திரமே கிடையாது. பாம்பின் கால் பாம்பறியும் தானே?

ஒருவழியாக எல்லா இடங்களையும் தேடி அலுத்து, சீலிங் ஃபேனைப் பார்த்தபடி தரையில் படுத்தேன். மனது புத்தகத்தையே சுற்றி அலைந்தது. தினசரிகளுடன் சேர்த்து எடைக்குப் போட்டிருப்பாளோ? கேட்டேன்.

""அவ்வளவு இன்னும் மூளை கெட்டுப் போயிடலை. பேப்பருக்கும், புத்தகத்துக்கும் வித்தியாசம் தெரியாமெ?'' சூடாய் வந்த பதிலில், புத்தகத்தை மறந்து, தூங்கியே போனேன். கனவெல்லாம் புத்தகங்கள் மேலும் கீழுமாய் ஏதோ பழைய புத்தகக்கடை, தராசு, வேர்க்கடலைப் பேப்பர் என ஒரே குழப்பமான

கனவு. அதிலும் கறுப்பு வண்ணப் பேப்பரில் சுற்றியவாறு நான் தேடும் அந்தப் புத்தகம்.

கண் விழித்தபோது, சிறிது புத்தகத்தை மறந்திருந்தேன். திரும்பவும் தேடுவதற்கு வீட்டில் வேறு இடம் இல்லை.

யாராவது திருப்பிக் கொடுத்தால்தான் உண்டு. இல்லையென்றால் யாரிடமாவது இரவல் வாங்க வேண்டியதுதான்.

வழக்கமாக நான் செல்லும் முனியன் பழைய புத்தகக்கடையில் அன்று கொஞ்சம் கூட்டம் குறைவு. எந்த நிலையிலும் தலையில் விழுந்து விடும் அபாயத்தோடு அடுக்கடுக்காகப் புத்தகங்கள். என் அலமாரியே பரவாயில்லை என்கிற மனத்திருப்தி. சுற்றி வரும்போது அந்தப் புத்தகம் - அதே புத்தகம் - தரையில் புத்தகக் குவியலில் மேலாகக் கிடந்தது. யாரோ தலைகீழாக வைத்திருந்தனர். தாவிச் சென்று கையில் எடுத்தேன்.

இங்கு எப்படி வந்திருக்கும்? குழப்பத்துடன் பக்கங்களைப் புரட்டினேன் இது என் புத்தகம் இல்லை. நான் வழக்கமாக இடும் என் கையெழுத்தும், தேதியும் முதல் மற்றும் நூறாவது பக்கங்களில் காணோம்.

அரை மனதோடு, வாங்கி விடுவோம் என நினைத்து, விலை கேட்கப் போனேன். பையில் கைபேசி சன்னமாய்ச் சிணுங்கியது. மறுபாதிதான்.

""என்ன?'' என்றேன்.

""நீங்க தேடிக்கிட்டிருக்குற புக் பேர் இதுவா?''

""ஆமாம், என்ன இப்பொ?'' - குரலில் கொஞ்சம் எரிச்சல்.

""பெட்ஷீட் மாத்தும் போது, உங்க தலையணைக்கும், கட்டிலுக்கும் நடுவிலெ, இடுக்குலே இந்தப் புத்தகம் கெடச்சுது''

""யுரேக்கா'' என நான் கத்தியதில், புத்தக அடுக்குகள் ஆட, ஓரடிக்கு தூசி கிளம்பியது. மகிழ்ச்சியில், எடுத்த புத்தகத்தை வேறு இடத்தில் எறிந்து விட்டு, வீடு நோக்கி நடையைக் கட்டினேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.