சிறு பையனாய் இருந்தபோது எனக்கு நான் பிறந்த தேசமானது என்னுடைய சேவையில்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறது என்ற விஷயமே தெரியாது. அப்போதெல்லாம் என் மனதறிந்து தேசத்திற்கு ஒருவித சேவையும் செய்ததில்லை. ஒருநாள் தற்செயலாக ""தேசத்துக்கே உழைக்க ஜன்மம் எடுத்தோம்'' என்ற பாட்டைக் கேட்க நேர்ந்தது. உடனே தேசத்துக்கே உழைக்க வேண்டுமென்ற ஆசை என்னைத் தீவிரமாகப் பற்றிக் கொண்டது.
மேல் சட்டை, மேல் வேஷ்டி எல்லாவற்றையும் கழற்றித் தலையைச் சுற்றி எறிந்துவிட்டு காந்திஜிக்கு ஒரு கடிதம் எழுதினேன். ""மகாத்மாஜி! தேசத்துக்கு உழைக்கத் துணிந்துவிட்டேன். நான் அவ்விடம் வரட்டுமா? அல்லது தேசத்தை இங்கே அனுப்பி வைக்கிறீர்களா?'' என்று கேட்டேன்.
மகாத்மாஜி நான் கேட்டதற்குப் பதில் சொல்லாமல் ""கைராட்டையில் தினம் ரெண்டாயிரம் கெஜம் நூல் நூற்று வா! உன் மனது தெளிவடையும்'' என்று எழுதினார்.
ரொம்ப லக்ஷணம்! நான் தேசத்துக்கு உழைக்க வந்தேனா? நூல் நூற்க வந்தேனா?
உடனே உடையை மாற்றினேன். ஒரு கதர் ஜிப்பாவும் அதன் மேல் கம்பளி வெயிஸ்ட் கோட்டும் அணிந்து தலையில் ஒரு காந்தி குல்லா தரித்துக் கொண்டேன். அச்சமயம் காங்கிரஸ் தலைவராயிருந்த பண்டித ஜவஹர்லால் நேருவுக்குக் கடிதம் எழுதினேன்.
""தேச சேவைக்குத் தயார். காங்கிரஸ் தலைமைப் பதவியை வகிப்பது சிரமமாய் இருந்தால் தந்தியடிக்கவும். உடனே புறப்பட்டு வருகிறேன்!'' என்று குறிப்பிட்டிருந்தேன்.
ஜவஹர்லால்ஜியிடமிருந்து பதில் வந்தது. ""தற்சமயம் இந்தியாவுக்குத் தேவை சீனப் போர்க்களத்தில் போர் செய்ய வேண்டும். உடனே புறப்பட்டுப் போகவும்'' என்று எழுதியிருந்தார்.
எனக்குக் கோபமாய் வந்தது. உடனே வெயிஸ்ட் கோட்டையும் காந்தி குல்லாயையும் எடுத்தெறிந்துவிட்டு தலையில் உச்சிக் குடுமி வைத்துக் கொண்டேன். புகைக் கண்ணாடி வாங்கி மாட்டிக் கொண்டேன். நமது சொந்த மாகாணத் தலைவர் ராஜாஜிக்குக் கடிதம் எழுதினேன்.
""தேசத்துக்காக உயிரைவிடக் கங்கணம் கட்டிக் கொண்டேன். எவ்விடத்தில் ஆரம்பிக்கலாம்?'' என்று கேட்டிருந்தேன்.
""கள்ளுக் கடையில் ஆரம்பிக்கலாம். ஒரு குடிகாரனைக் குடியை விடும்படி செய்தால் ஒன்பது தடவை உயிரை விடுவதைவிட அதிக பலன் உண்டு!'' என்று ராஜாஜி பதில் எழுதினார்.
இவரும் சுகமில்லையென்று தீர்மானித்துக் கொண்டு கடைசியாக ஒரு முடிவுக்கு வந்தேன். கதரைக் கழற்றி எறிந்துவிட்டு பூரண சுதந்திர இங்கிலாந்தில் நெய்த பூரண சுதந்திரத் துணியை உடுத்திக் கொண்டேன். மாஜி காங்கிரஸ் தலைவர் ஸ்ரீசீனிவாச அய்யங்காருக்கு கடிதம் எழுதினேன். ""தேசத்துக்காக உடல் பொருள் ஆவியை அர்ப்பணம் செய்யத் தயார்! எவ்வளவு பணம் தருகிறார்கள்?'' என்று கேட்டிருந்தேன்.
அப்போது அய்யங்கார், ""கேஸ் கட்டு படித்துக் கொண்டு இருக்கிறேன். பணம் எண்ண சாவகாசம் இல்லை!'' என்று தமது குமாஸ்தாவைக் கொண்டு பதில் எழுதி விட்டார்!
எனக்கு மனம் வெறுத்துப் போயிற்று. இந்தத் தலைவர்களை நம்பிப் பிரயோசனமில்லை, நாமே நம் இஷ்டம்போல் தேச சேவை செய்ய வேண்டும் என்று முடிவு செய்து நேரே ""வீர சுதந்திரன்'' என்னும் தினசரிப் பத்திரிகை ஆசிரியரை நேரில் சந்தித்து ""தங்கள் பத்திரிகை மூலம் தேச சேவை செய்ய விரும்புகிறேன்'' என்றேன். அவர் அதற்கு ஒப்புக்கொண்டு ""மாதம் பதினைந்தரை ரூபாய் சம்பளம். ஆனால் அவ்வளவையும் ஒரே தவணையில் கேட்கக் கூடாது. பிரித்துப் பிரித்துத்தான் தர முடியும்'' என்றார்.
""சம்மதம். என்னைப் பணம் கேட்காமல் இருந்தால் சரி!'' என்றேன். அப்புறம் கேட்க வேண்டுமா என்னுடைய தேச சேவையை? சக்கை போடுதான்!
"போடு சக்கை' என்ற நூலில் கல்கி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் மீண்டும் போர் தொடங்கும்: டிரம்ப்

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் தொடர் அரிவாள் வெட்டு சம்பவம்: ஒருவர் சுட்டுப் பிடிப்பு!

வள்ளுவரைக் களங்கப்படுத்தாதீர்! - அமைச்சர் அருண்ராஜ்

சொல்லப் போனால்... திமுக – அதிமுக கூட்டணியும் அரைகுறை உண்மையும்!
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



