காலத்தின் சாட்சி: நூற்றாண்டு கண்ட "இந்தியா' வார இதழ்!

1906-ஆம் ஆண்டு, மே மாதம் 9-ஆம் தேதி சென்னை பிராட்வேயில் இருந்து "இந்தியா' - என்ற அரசியல் வார இதழ் வெளிவந்தது. அதனை மண்டயம் சீனிவாசாச்சாரி, எஸ்.என்.திருமலாச்சாரி என்னும் தேசபக்தர்கள் முன்னின்று நடத்தினார்கள்.
காலத்தின் சாட்சி: நூற்றாண்டு கண்ட "இந்தியா' வார இதழ்!
Updated on
3 min read

1906-ஆம் ஆண்டு, மே மாதம் 9-ஆம் தேதி சென்னை பிராட்வேயில் இருந்து "இந்தியா' - என்ற அரசியல் வார இதழ் வெளிவந்தது. அதனை மண்டயம் சீனிவாசாச்சாரி, எஸ்.என்.திருமலாச்சாரி என்னும் தேசபக்தர்கள் முன்னின்று நடத்தினார்கள்.

இந்தியா இதழின் உரிமையாளர், பதிப்பாளர், ஆசிரியர் எம்.சீனிவாசன் என்னும் சீனிவாசாச்சாரி. வயது இருபத்து மூன்று. மெட்ரிகுலேஷன் பாஸ் செய்துவிட்டு ரயில்வேயில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அவர், எஸ்.என்.திருமலாச்சாரியின் பள்ளித்தோழர். பத்திரிகை நடத்துவதற்கு அரசுக்கு ஒரு டெக்கலரேஷன் கொடுக்கப்பட வேண்டும். அதற்காக சீனிவாசாச்சாரியிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டு அவரை மாதம் பதினைந்து ரூபாய் சம்பளத்தில் சேர்த்துக் கொண்டார், திருமலாச்சாரியார்.

சீனிவாசாச்சாரி எழுதத் தெரிந்தவரோ, பத்திரிகை நடத்தி அனுபவம் பெற்றவரோ இல்லை. அவர் "இந்தியா' அலுவலகத்தில் புரூப் பார்ப்பது உள்பட சில அலுவலகப் பணிகள் செய்து வந்தார்.

சனிக்கிழமைதோறும் பதினாறு பக்கங்களோடு "இந்தியா' வெளிவந்தது. அதில் சர்வதேச அரசியல் நிகழ்வுகள், இந்திய நடப்புகள், தமிழ்நாட்டு அரசியல் நிலவரங்கள், அரசாங்கத்தின் மக்கள் விரோத நடவடிக்கைகள், சுதந்திரப் போராட்ட வீரர்களின் சாகசம் நிறைந்த பேச்சுகள், சுதந்திர உணர்வோடு எழுதிய பத்திரிகையாசிரியர்கள், ராஜதுரோக வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது - என்பதுபோல பலவற்றையும் வெளியிட்டு வந்தது.

"இந்தியா' வார இதழ் மற்ற பத்திரிகைகளில் இருந்து அது வெளியிடும் செய்திகளிலும், கருத்துகளிலும், விமர்சனத்திலும், மொழி நடையிலும் வித்தியாசப்பட்டிருந்தது. கட்டுரை எழுதியவர் பெயர் இல்லை. ஆனால், அதில் வெளிவந்த கவிதைகளில் மட்டும் சி.சுப்பிரமணிய பாரதி என்று பெயர் போடப்பட்டிருந்தது. ஆனால் "இந்தியா'வின் உண்மையான ஆசிரியராக பாரதியார்தான் இருந்தார். சுதேசமித்திரனில் பணியாற்றி அவர் தேசிய காங்கிரஸ் மாநாட்டிற்குச் சென்று வந்த அவர் பூரண சுதந்திரப் போராட்ட சிந்தனையாளராக உருவாகியிருந்தார். அவர் படித்த ராய்ட்டர் செய்திகள், பத்திரிகைகள், கவிதை, கட்டுரை புத்தகங்கள் அவரிடம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தன.

பாரதியார் இளம் பருவத்திலேயே தமிழோடு, சமஸ்கிருதம், இந்துஸ்தானி, ஆங்கிலம் படித்து இருந்தார். அவர் பத்திரிகை வேலை ஆங்கில மொழி நூற்களை அதிகமாகப் படிக்க வைத்தது. பலதரப்பட்ட ஐரோப்பிய நூற்களைப் படித்து சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற கோட்பாடுகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டார். அவரை ஐரோப்பிய சிந்தனை மரபில் உருவான தமிழ்க் கவிஞர், சிந்தனையாளர் என்றே குறிப்பிட வேண்டும்.

"இந்தியா' இதழில் அரசியல் விமர்சனங்களோடு கலைகள், இலக்கியங்கள், மொழிகள், சங்கீத சமாசாரங்கள், கல்வி, பெண்கள் முன்னேற்றம் பற்றியெல்லாம் காலத்தை மீறிய முறையில் தர்க்க நியாயத்தோடு வசீகரமான மொழி நடையில் எழுதி வந்தார். அவர் கவியானபடியால் கட்டுரைகளிலும் கவிமனம் பிரகாசித்தது. தன் "இந்தியா'வில் ஆங்கில ஆட்சியாளர்களைக் கடுமையாக விமர்சித்து கார்ட்டூன்கள் வெளியிட்டார்.

ஆங்கில அரசாங்கம் இந்திய மொழி பத்திரிகைகளில் அரசுக்கு எதிராக என்னவெல்லாம் எழுதப்படுகிறது என்பதைத் தெரிந்து கொள்ள முயற்சிகள் செய்து வந்தது. அதற்காக மொழிபெயர்ப்பாளர்களை நியமித்து பத்திரிகைக் கட்டுரைகள், கவிதைகள், கதைப் புத்தகங்களை மொழிபெயர்த்துப் படித்து வந்தது.

ஆங்கிலேய அரசாங்கம் அரசுக்கு எதிராகப் பேசுகின்றவர்கள், எழுதுகின்றவர்கள், சித்திரங்கள் வரைகின்றவர்களைத் தண்டிக்க ராஜதுரோகம் என்ற கடுமையான சட்டத்தை இயற்றி வைத்துக் கொண்டிருந்தது. ராஜதுரோக சட்டத்தின்படி தண்டிக்கப்பட்டவர்கள் ஆயுள் தண்டனை பெற்றார்கள்; நாடு கடத்தப்பட்டார்கள்.

"இந்தியா' இதழில் ராஜதுரோகமான அம்சங்கள் வெளிவருகின்றன என்று அரசு சந்தேகப்பட்டது. அதனை உறுதி செய்துகொள்ள "இந்தியா'வில் வெளிவந்த பல கட்டுரைகளையும் மொழிபெயர்த்து அலசி ஆராய ஆரம்பித்தார்கள். பல கட்டுரைகள் ராஜ துரோகமாக இருக்கின்றன என்று முடிவு செய்தார்கள்.

1908, மே 5-ஆம் தேதி "இந்தியா' இதழில் வெளிவந்த மகாபாரதக் கதைகள், மே 23-ஆம் தேதி இதழில் வெளிவந்த எத்தனையோ கொள்ளைகளில் இதுவுமொரு கொள்ளை, ஜூன் - 27 இதழில் வெளிவந்த, ஏன் காலத்தை வீணாக்க வேண்டும் என்ற கட்டுரையும், ராஜதுரோகமாக இருக்கின்றன என்று முடிவு செய்து வழக்குப் பதிவு செய்தார்கள்.

"இந்தியா' இதழ் அலுவலகத்திற்கு வந்து சோதனை போட்டார்கள். அதன் ஆசிரியர் எம்.சீனிவாசாச்சாரியைக் கைது செய்தார்கள். சிறையில் அடைத்து விசாரணை செய்தார்கள். வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

வழக்கு விசாரணையில் "இந்தியா'வில் வெளியான கட்டுரைகள் எழுதியது பாரதியார்தான் என்பது ருசுவாகிவிடும். எனவே அவர் சிறையில் அடைக்கப்படலாம் என்று அவருக்கு நெருக்கமான பலர் கருதினார்கள். சிறைக்குப் போவதைவிட புதுச்சேரிக்குத் தப்பிப் போகும்படி ஆலோசனை கூறினார்கள். பாரதியார் தன் மனைவி, மக்களை கடையத்திற்கு அனுப்பி வைத்துவிட்டு, தன்னந்தனியாகப் புதுச்சேரிக்குச் சென்றார்.

ராஜதுரோக வழக்கிற்குக் காரணமான "இந்தியா' இதழின் பிரதிகள் ஒன்றுகூட கிடைக்கவில்லை. அவை தீயிட்டுக் கொளுத்தப்பட்டிருக்கலாம் என்றே கருத முடிகிறது. அரசின் ஆவணத்தில் இருக்கும் ஆங்கில மொழிபெயர்ப்பு வழியாகவே ராஜதுரோக வழக்கிற்கு ஆதாரமான கட்டுரைகளின் சாரத்தை அறிந்து கொள்ள முடிகிறது.

1908-ஆம் ஆண்டில் பாரதியார் புதுச்சேரிக்குச் சென்றுவிட்டார். அது பிரெஞ்சு காலனி. பிரெஞ்சு அரசாங்கத்திற்கு எதிராகச் செயல்படாதவரையில் பிரச்னை ஏதுமில்லை. ஆங்கில அரசாங்கத்திற்கு எதிராகப் பத்திரிகைகள் கூட நடத்தலாம். "இந்தியா' இதழோடு சம்பந்தப்பட்டவர்கள் ரகசியமாக அச்சு இயந்திரங்களைப் புதுச்சேரிக்குக் கொண்டு வந்தார்கள்.

"இந்தியா' புதுச்சேரியில் தொடங்கப்பட்டது. பாரதியார் நிறைய எழுதினார். ஆனால், பெயர் போட்டுக் கொள்ளவில்லை. சென்னையில் "இந்தியா' மீது நடைபெற்ற ராஜதுரோக வழக்குப் பற்றியும் அதன் ஆசிரியர் என்ற பெயர் போட்டிருந்த எம்.சீனிவாசாச்சாரி ஐந்தாண்டு காலம் தண்டிக்கப்பட்டது பற்றியும் எழுதியுள்ளார்.

பிரெஞ்சு காலனியான புதுச்சேரியில் அச்சான "இந்தியா' இதழ் தீவிரமான ஆங்கிலேய ஆட்சி எதிர்ப்புக் கட்டுரைகள் கொண்டதாகவே இருந்தது. எனவே அது இந்திய நாட்டிற்குள் வரக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டுவிட்டது. அதற்கு வாசகர்கள் தமிழ்நாட்டில்தான் இருந்தார்கள். அவர்களை அடைய வழியில்லாத பத்திரிகை நிறுத்தப்பட்டது. பாரதியார் அரசியல் கட்டுரைகள் எழுத அவசியமில்லாமல் போய்விட்டது.

அரசியல் கட்டுரைகள் எழுதியதற்காகத் தன்னைத் தானே நாடு கடத்திக்கொண்டு பாரதியார் பத்தாண்டுகள் புதுச்சேரியில் வாழ்ந்தார். அது அவர் வாழ்க்கையில் துயர் மிகுந்த காலமாகும். ஆனால், புதுச்சேரியில் வாழ்ந்த எளிய மக்களின் பேரன்புக்கு ஆளாகியிருந்தார். அவர் தமது சொந்த கஷ்டங்களை, துன்பங்களை எந்தவொரு பாட்டிலும் பாடவில்லை. அதோடு வ.ரா, வ.வே.சு.ஐயர், பாரதிதாசன், அரவிந்தர் - நட்பும் தோழமையும் கிடைத்து இருந்தது. பாஞ்சாலி சபதம், குயில் பாட்டு, கண்ணன் பாட்டு உள்பட பல கவிதை நூல்கள் எழுதினார். சொந்த சோகத்தை அவர் படைப்பிற்குள் கொண்டு வரவில்லை. அதுவே பாரதியார் ஆளுமையாகும்.

நூற்றுப் பத்தாண்டுகளுக்கு முன்னால் வெளிவந்த "இந்தியா' இதழின் எல்லாப் பிரதிகளும் கிடைக்கவில்லை. ஆனால், கிடைத்தவற்றைப் படிக்கையில் தனித்தன்மையும், பொதுத்தன்மையும் கொண்டு அறிவுபூர்வமான கட்டுரைகள் கொண்ட இதழாகவே இருக்கிறது. ஒரு பத்திரிகை சட்டம் என்ன சொன்னாலும் அச்சமற்ற முறையில் விமர்சனத்தை வைக்கலாம் என்பதை விமர்சனக் கட்டுரைகள் வெளியிட்டே நிலைநாட்டியிருக்கிறது. கட்டுரைகளின் தர்க்க நியாயங்களும், அதனை எடுத்துக்கூறிய மொழிநடையும் காலத்தால் பழையதாகி விடவில்லை. அது ஒரு கவியின் எழுத்து என்பதற்குக் காலத்தின் சாட்சியாக இருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com