தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: காலை எழுந்தவுடன்...!

பலவிதமான ஆயுர்வேத ஆரோக்கிய குறிப்புகளை  உங்களுடைய கேள்வி - பதில் பகுதி மூலம் நான் தெரிந்து கொண்டாலும், ஆரோக்கியத்திற்கான மிக சிறப்பான சில வழிகளைக் கூற முடியுமா?

News image
Updated On :1 டிசம்பர் 2018, 6:30 pm

பலவிதமான ஆயுர்வேத ஆரோக்கிய குறிப்புகளை  உங்களுடைய கேள்வி - பதில் பகுதி மூலம் நான் தெரிந்து கொண்டாலும், ஆரோக்கியத்திற்கான மிக சிறப்பான சில வழிகளைக் கூற முடியுமா?

 -சங்கர நாராயணன், காஞ்சிபுரம்.

வைகறைத் துயிலெழுதல் என்பது ஆரோக்கியத்திற்கான பரம ரகசியங்களில் ஒன்றாக நம் முன்னோர் குறிப்பிடுகின்றனர்.  சூரிய உதயத்திலிருந்து முன் ஒரு மணி நேரம் அருணோதய வேளை. அதற்கு முன்னுள்ள ஒரு மணி நேரம் "ப்ராம்ஹ முகூர்த்தம்' எனப்படும். ஸத்வகுணம் நிறைந்த இந்த நேரத்தில் மனம் தெளிந்து, விருப்பு வெறுப்புக்களால் கலக்கமுறாமல், இரவின் தன்மையாலும் அமைதியாலும் முந்நாளின் கொந்தளிப்பு அடங்கி களைப்பு அகன்று, புலன்களும் மனமும் சுறுசுறுப்புடன் விழித்தெழும் வேளை.  புத்தி தெளிந்து கூர்மையுடன் தெளிந்த சிந்தனா சக்தியுடன், எதையும் முழுக்கவனத்துடன் ஏற்கும் வேளை - புதிதாகப் புத்தகம் எழுதுபவர்கள், பாடங்களை மனத்தில் அர்த்தத்துடன் நிலைக்கும்படி, மனப்பாடம் செய்கின்ற மாணவர், இறைவனைத் தியானம் செய்பவர், அன்றாட வேலைகளையும், நீண்ட காலத்திய பணிகளையும் பற்றிச் சிந்தித்து திட்டம் வகுப்பவர் இவர்களுக்கு உற்ற நேரம். மற்ற நேரங்களில் நான்கு மணி நேரத்தில் கற்பதை இந்த வேளையில் ஒரு மணி நேரத்தில் கற்கலாம். ஆனால் பல நோய்கள் நள்ளிரவில் கடுமை அடையும், அவற்றின் வேதனையால் தூக்கமிழந்தவர் விடியற் காலையில் அயர்ந்து உறங்குவர், அவர்களை அவ்வேளையில் எழுப்புவது முறையல்ல. இரவு அதிகம் கண்விழித்து, விடியற்காலையில் உறங்கச் செல்பவர்களுக்கும்  இந்த விதி பொருந்தாது.

விழித்தெழுந்ததும் சோம்பலுடன் படுத்திராமல் உடனே வாய் கொப்பளிப்பது நல்லது. தூக்கத்தில் வாயில் சுரந்து, இரைப்பையின் அமிலக் கலப்புபெற்று உலர்ந்தும் இறுகியும் உள்ள உமிழ் நீர்க் கலவையை எவ்வளவு விரைவில் அகற்ற முடியுமோ அவ்வளவு விரைவில் அகற்றுவது நல்லது.

உடலின் அலுவல்களில் சேர்த்தலும் கழித்தலும் அதிகம் இடம் பெறுகின்றன. கழித்தல் சரியே நடைபெறாவிடில் சேர்த்தல் சரியே அமையாது. இயற்கையே சேர்த்தலுக்கும் கழித்தலுக்குமான உந்துதல்களை ஏற்படுத்துகிறது. மலவேகம், சிறுநீர் வேகம், வாயுவேகம் என மூன்று உந்துதல்களையும் முறைப்படி தடையின்றி வெளியேற்ற வேண்டும். இவை தானே தடைப்பட்டாலும் வேறுசெயலில் ஈடுபட நேர்ந்ததால் இயற்கை உந்துதலை   மதிக்காமல் தடைநேர்ந்தாலும் நோய்கள் விளையக் கூடும். மலத்துவாரத்தை நன்கு கழவ வேண்டும். பிறகு அவ்விடத்தைவிட்டகன்று 10 - 15 தடவை வாய் கொப்பளித்தல் நல்லது. அதன் பிறகு பற்களைப் பொடி, பற்பசை முதலியவற்றால் பல்துலக்க வேண்டும்.

விடியற்காலையில் மலம் முதலியவற்றை வெளியேற்றுவது நோயின்றி நீண்ட நாள் வாழ உதவும். குடலில் இரைச்சல், வயிற்றில் உப்புசம் கனம் முதலியவை ஏற்படாமல் இருக்கும். சிறுநீர், மலத்துவாரங்களைச் சுத்தமாக வைத்துக் கொள்வதால் நோய்கள் பல தோன்ற வாய்ப்பில்லாமையால் ஆயுள் நீள்கிறது. உடலின் அழகும் வலிவும் கூடுகிறது. தூய்மை உணர்ச்சி ஓங்குகிறது. மனத்தளர்ச்சி கெட்ட எண்ணங்கள் தோன்றுவதில்லை. அதனால் கெட்ட செயல்களில் ஈடுபாடு ஏற்படுவதில்லை என்கிறது ஆயுர்வேதம்.

வீட்டிற்கு வெளியில் சென்று திரும்பும் ஒவ்வொரு தடவையும் கை, கால்களை அலம்புவது நல்லது. புழுதியை நீக்குவது மட்டுமல்ல இதன் நோக்கம். உடல்களைப்பும் அயர்வும் நீங்கி சுறுசுறுப்பும் புத்துணர்ச்சியும் பெறுவதும், தொற்று நோய்கள் பரவுதலைத் தடுப்பதும் இதன் நோக்கங்களில் முக்கியமானவையாகும். சாக்ஸூம் பூட்ஸூம் அணிந்து வெளியே சென்று வருபவரும் கூட அவற்றை நீக்கிய பின் உடனே கை, கால்களைக் கழுவும் போது அவர்கள் பெறும் புத்துணர்ச்சியைக் கழுவுவதைப் பழக்கமாகக் கொள்பவரே அறிவர்.

சிற்றுண்டி, முழு உணவு, தாம்பூலம் தரித்தல், பழம், பட்சணம், காபி, டீ முதலியவற்றிற்குப் பின் வாய் குழப்பி அலம்புவதும், கொப்பளித்துத் துப்புவதும் உமிழ்நீர் ஆரோக்யத்திற்கு உகந்தது. உணவிற்கு முன்வாய் கொப்பளித்தால் ஜீரண திரவங்களுக்குச் சுறுசுறுப்பு ஏற்படும். குளிர்ந்த நீரால் வாய் கொப்பளித்தல் மூலம்   நாற்றம், தொண்டையின் கபப்பூச்சு அகலும். கண் முதலியவை தெளிவடையும். வெந்நீரால் வாய் கொப்பளித்தால் நாக்கில் ருசியின்மை, எகிறுகள் கொழுத்திருத்தல், பற்களில் வலி நீங்கும். வாய் மொட மொடவென உணவேற்கத் தயாராகும்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.