

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே குக்கிராமத்தில் பிறந்த பொறியியல் பட்டதாரி ஒருவர், தனது முயற்சியால் ஐக்கிய நாடுகள் சபையால் உருவாக்கப்பட்ட "குளோபல் ஈ - ஸ்கூல்ஸ் அண்ட் கம்யூனிட்டி இனிஷியேட்டிவ்' நிறுவனத்தின் திட்ட மேலாளர்களில் ஒருவராக உயர்ந்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக, 16 ஆப்பிரிக்க நாடுகளின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் நோக்கில், நவீன தொழில்நுட்ப கல்வி, அறிவுசார் சமுதாயத்தை உருவாக்கும் திட்ட ஆலோசகராகப் பணிபுரிந்து வருகிறார்.
வாழப்பாடியை அடுத்த பழனியாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஓய்வுபெற்ற அரசு போக்குவரத்துக்கழக ஆய்வாளர் கூத்தன் - சரோஜா தம்பதியரின் மகன் செந்தில்குமார் . வாழப்பாடி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 வரை படித்த அவர், கடந்த 1991}இல் ஈரோடு அரசு சாலை போக்குவரத்துக்கழக பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டம் பெற்றார்.
அதனைத் தொடர்ந்து, இந்திராகாந்தி பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டம் பெற்றார். 1991-இல் இருந்து 1994 வரை கோவையிலும், 1996 வரை ஹைதராபாதிலும், 2000 ஆண்டு வரை "கிர்லோஸ்கர்' இயந்திர நிறுவனத்திலும் பணிபுரிந்த அவருக்கு, கிராமப்புற மாணவர்கள், இளைஞர்களுக்கு, நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் இணைய வழிக் கல்வியை எளிய முறையில் கற்பித்து, சமுதாய மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.
அவரது எண்ணத்துக்கு ஏற்றாற் போல, கம்ப்யூட்டர் மற்றும் இணைய வழிக் கல்வி கற்பிக்கும் "ஸ்கூல் நெட் இண்டியா' நிறுவனத்தில் 2000 முதல் 2002 வரை தென்னிந்திய அதிகாரியாகப் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது. அச் சமயத்தில், இந்தியாவில் கம்ப்யூட்டர் புரட்சியை உருவாக்கிய "விப்ரோ' நிறுவனத்தின் தலைவர் "ஆசீம் பிரேம்ஜி' துவக்கிய அறக்கட்டளையின் தொழில்நுட்பக் கல்வி பிரிவில் 2003}இல் தன்னை இணைத்து கொண்டார்.
தொடர்ந்து 6 ஆண்டுகள் அந்நிறுவனத்தில் பணிபுரிந்த அவர், நாடு முழுவதும் 14 மொழிகளில், 21 ஆயிரம் பள்ளிகளுக்கு, மாணவர்கள் இளைஞர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான, கம்ப்யூட்டர் இணைய வழிக்கல்வி, திறன் மேம்பாட்டிற்கான பயிற்சித் திட்டங்களை உருவாக்கிக் கொடுத்து, அந் நிறுவனத்தின் தலைவர் பிரேம்ஜி மற்றும் மத்திய, மாநில அரசுகளின் பாராட்டுகளைப் பெற்றார். மறைந்த ஜெயலலிதா தமிழக முதல்வராக இருந்தபோது , 387 ஒன்றியங்களில் கணினி வழிக் கற்றல் பயிற்சிக்கு வழிவகுத்து, அவரது பாராட்டுதலையும் பெற்றார்.
அவரது திறமையைக் கண்ட மத்திய அரசு, அண்டை நாடுகளான வங்க தேசம், இலங்கை மற்றும் அல்ஜீரியா நாடுகளின் இணைய வழிக் கல்வி மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டுக்கான திட்டங்களை வகுத்துக் கொடுக்கும் ஆலோசனைக் குழுவில் ஒருவராக நியமித்தது.
அந்தந்த நாடுகளுக்கேற்ப பல நவீன மேம்பாட்டுத் திட்டங்களைத் தந்த செந்தில்குமாரின் திறமை வெளி உலகுக்கு தெரிய வந்தது. ஐக்கிய நாடுகள் சபையால் உருவாக்கப்பட்ட கென்யா நாட்டின் நைரோபியில் இயங்கும், வளரும் மற்றும் பின்தங்கிய நாடுகளுக்கு உதவிடும் "குளோபல் ஈ - ஸ்கூல்ஸ் அண்ட் கம்யூனிட்டி இனிஷியேட்டிவ்' நிறுவனத்தில் பணிபுரியும் வாய்ப்பை 2008 }இல் அந் நிறுவனம் அவருக்கு வழங்கியது.
ஆப்பிரிக்க நாடுகளின் ஒன்றான ருவாண்டாவில் 2 ஆண்டுகள் பணிபுரிந்து, அந் நாட்டின் நவீன தொழில்நுட்பக் கல்வி வளர்ச்சிக்கான பல்வேறு திட்டங்களை தந்த செந்தில்குமாரை, 2010-இல் கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளான தான்சானியா, கென்யா, உகாண்டா, புரூண்டி உள்ளிட்ட 5 நாடுகளுக்கும் மேம்பாட்டு ஆலோசகராக அந் நிறுவனம் நியமித்தது.
இரண்டு ஆண்டுகளில் செந்தில்குமார் ருவாண்டா நாட்டில் உருவாக்கி கொடுத்த கணினி இணைய வழி அறிவுசார் கல்வித் திட்டங்கள், அந்த நாட்டை மேம்படுத்தியதோடு மற்ற நாடுகளுக்கும் முன்மாதிரி திட்டமாக விளங்கியதால், ஆப்பிரிக்கா கண்டத்திலுள்ள 16 நாடுகளின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும், நவீன தொழில்நுட்ப கல்வி, அறிவுசார் சமுதாயத்தை உருவாக்கும் திட்ட ஆலோசகராக, ஐக்கிய நாடுகள் சபையால் உருவாக்கப்பட்ட நிறுவனம் நியமித்தது. கடந்த 4 ஆண்டுகளாக அத் திட்டத்தின் தலைமைப் பொறுப்பில் பணிபுரிந்து வருகிறார்.
தற்போது, ஆப்பிரிக்க கண்டத்திலுள்ள 54 நாடுகளுக்கான கூட்டமைப்பின் கீழ் இயங்கும், 2016 முதல் 2025 வரையிலான இணையவழிக் கல்வி, தொழில்நுட்ப மேம்பாடு திறன் வளர்ப்பு மையத்தின் தொலைநோக்குத் திட்டத்திற்கான ஆலோசனைக் குழுவிலும் ஒருவராக அங்கம் வகித்து வருகிறார்.
அதுகுறித்து அவர் கூறியதாவது:
""தமிழகத்தில் வாழப்பாடி அருகிலுள்ள குக்கிராமத்தில் நடுத்தர குடும்பத்தில் பிறந்தேன். அரசுப்பள்ளி கல்லுôரிகளில் படித்த எனக்கு, அடித்தட்டு மக்களுக்களின் மேம்பாட்டுக்கு வழிவகுக்கும், கணினி இணைய வழிக் கல்வி, தொழில்நுட்ப அறிவை எளிமைப்படுத்தி கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அதற்கு விப்ரோ நிறுவனத்தின் தலைவர் பிரேம்ஜி வாய்ப்பு வழங்கினார்.
பெங்களூருவில் அவரது நிறுவனத்தில் பணிபுரியும் போது, தமிழகம் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பள்ளி மாணவர்களுக்கு கணினி வழிக்கல்வி வழங்கவும், பிரேம்ஜியுடன் நேரடியாக கலந்துரையாடும் வாய்ப்பும் கிடைத்தது மறக்க முடியாத நிகழ்வாகும். கட்டடக் கலை பொறியாளரான எனது மனைவி அமுதா, மகள் ஹர்சினி, மகன் ஸ்ரீஸ் ஆகியோர், தற்போது பெங்களூருவில் வசித்து வருகின்றனர்.
ஐ.நா. சபையால் உருவாக்கப்பட்ட "குளோபல் ஈ - ஸ்கூல்ஸ் அண்ட் கம்யூனிட்டி இனிஷியேட்டிவ்' நிறுவனத்தில் ஆப்பிரிக்க நாடுகளின் மேம்பாட்டுக்காக கல்வி வளர்ச்சித் திட்டங்களை பரிந்துரைக்கும் ஆலோசனைக் குழுவில், திட்ட மேலாளர்களில் ஒருவராகப் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்துள்ளது. கல்வி, தொழில்நுட்ப மேம்பாடு குறித்தத் திட்டங்களை நவீன முறையில் செயல்படுத்த, நிறையப் படிக்கவும், ஆய்வு மேற்கொள்ளவும், புள்ளி விவரங்களைத் திரட்டவும், நிதிஆதாரத்தைப் பெறுவதும் அவசியம் என்பதால், தினந்தோறும் 18 மணி நேரம் உழைக்க வேண்டியுள்ளது. இருப்பினும், பல்வேறு நாட்டு உயரதிகாரிகள், தலைவர்களைச் சந்திக்கும் வாய்ப்பும், எதிர்காலத்தில் அறிவு சார்ந்த சமுதாயத்தை ஏற்படுத்த முடியும் என்ற எண்ணமும், நம்பிக்கையும், எனக்கு ஊக்கம் கொடுத்து வருவதால், ஆப்பிரிக்க நாட்டு மக்களின் மேம்பாட்டுக்காகப் பணியாற்றி வருகிறேன்''என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.