மிகவும் பழைமையான தமிழக அரசர்களாலும், குறுநில மன்னர்களாலும் போற்றி வளர்க்கப்பட்ட தெய்வீகக் கலைகளில் மனதை மயக்கும் வகையில் நிகழ்த்தப்படுவது பொம்மலாட்டம் என்றுஅழைக்கப்படும் மரப்பாவை கூத்து.
சினிமா உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் இல்லாத அக்காலத்தில் பல்வேறு கடவுள்களின் அருட்பெருமைகளை கூறவும், போரில் வெற்றி பெற்ற மன்னர்களின் புகழ் பாடவும், அரசனின் ஆணைகளை மக்களுக்குத் தெரிவிக்கவும், சிறந்த பொழுதுபோக்கு அம்சமாக பொம்மலாட்டக் கலை விளங்கியது. இந்திய சுதந்திரப் போராட்டத்தின்போது, விடுதலைப் போராட்டச் செய்திகளை பொதுமக்களுக்கு கொண்டு செல்லவும் கூட பொம்மலாட்டம் பயன்படுத்தப்பட்டது.
பொம்மைகளைக் கயிற்றால் ஆட்டுவித்து ஆடப்படும் ஆட்டம் பொம்மலாட்டம் என்றழைக்கப்படுகிறது. பொம்மலாட்டத்தின் பூர்வீகம் தமிழகம்தான் என்று கூறினால் அது மிகையாகாது.
இங்கிருந்துதான் பல்வேறு நாடுகளுக்கும் இக்கலை சென்றது. சீனா, தைவான், ஜப்பான், மலேசியா, தாய்லாந்து, இலங்கை, இந்தோனேஷியா ஆகிய வெளிநாடுகளில் இன்றைக்கும் பொம்மலாட்டக் கலைநிகழ்ச்சிகள் நிகழ்த்தப்படுகின்றன என்றால், அக்கலையின் அருமையை அந்நாட்டவர்கள் உணர்ந்துள்ளதை அறிய முடிகிறது.
ஆனால், தற்போதைய தமிழகத்தில் சினிமா, சமூக ஊடகங்கள் உள்ளிட்டவற்றின் வரவால் பொம்மலாட்டக் கலை மிகவும் நசிந்துவிட்டது. முன்பெல்லாம் ஊருக்கு ஊர் திருவிழாக்கள், பொது நிகழ்ச்சிகளில் நடத்தப்பட்டு வந்த பொம்மலாட்டம் நிறுத்தப்பட்டு, மேடை பாட்டுக் கச்சேரிகள், நடனங்களாக மாறிப் போனதன் விளைவால் பொம்மலாட்டக் கலைநிகழ்ச்சிகள் நடத்துவோர் வேறு வேலைகளைத் தேடிச் சென்றுவிட்டனர். தற்போது தமிழகத்தில் கும்பகோணம், சேலம் உள்ளிட்ட சில பகுதிகளிலேயே பொம்மலாட்ட கலைநிகழ்ச்சிகளை நடத்தும் ஒரு சிலரே உள்ளனர்.
அவர்களும் வறுமையில் வாழ்ந்து வருகின்றனர்.
இதில் கஷ்டத்தில் இருந்தாலும், பாரம்பரியமிக்க இக்கலையை அழியாமல் காக்க வேண்டும் என்கிறார் தள்ளாத வயதிலும் பொம்மலாட்டத்தை நடத்தி வருபவரும், 1992-ஆம் ஆண்டு தமிழக அரசின் கலைமாமணி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றவருமான கும்பகோணம் பழனியாண்டவர் சன்னதி தெருவைச் சேர்ந்த டி.என். சங்கரநாதன் (92).

தற்போது உடல்நலம் குன்றியுள்ள இவரது சார்பில் இவரது மகன்களான டி.எஸ். முருகன், எஸ். கோபி, எஸ். ரவி ஆகியோர் பொம்மலாட்ட நிகழ்ச்சிகளை புதிய கருத்துகளுடன்,
பல்வேறு புதுமைகளை புகுத்தி மக்களின் விருப்பத்திற்கேற்ப பழைமை மாறாமல், பாரம்பரிய முறைப்படி நடத்தி வருகின்றனர்.
40 ஆண்டுகளாக பொம்மலாட்ட நிகழ்ச்சிகளை நடத்தி வரும் டி.எஸ். முருகன் (48) கூறியதிலிருந்து...
ஆதி கலைகளான இயல், இசை, நாடகம் ஆகிய முக்கலைகளின் சங்கமமே பொம்மலாட்டக் கலை. இவை மூன்றும் தெரிந்திருந்தால் மட்டுமே பொம்மலாட்டத்தை நிகழ்த்த முடியும்.
பொம்மலாட்ட நிகழ்ச்சி நடத்துவது என்பது கத்திமேல் நடப்பது போன்றது. இதில் அனுபவமிக்கவரே ஈடுபட முடியும். பொம்மலாட்ட பொம்மைகளை ஆட்டுவிக்க தலையில் உரி போன்று கட்டி, கை, கால், உடல் அசைவுகளுக்காக தனித்தனியாக பிரிக்கப்பட்ட பொம்மைகளின் உடல் பாகங்களில் கட்டப்பட்ட கயிறுகளை நாங்கள் கை விரல்களில் கட்டிக் கொண்டு அசைவுகளைக் கொடுப்போம் அல்லது இரும்பு கம்பியில் கயிற்றால் கட்டப்பட்ட பொம்மைகளுக்கு எங்களது கை விரல்களால் அசைவுகளைக் கொடுப்போம். பாடல் மற்றும் வசனங்களின் அடிப்படையில் பொம்மைகளை இயக்க தனிப்பயிற்சி தேவை. குரலுக்கும், இசைக்கும் ஏற்ப விரல்களால் பொம்மைகளை இயக்குவதே இக்கலையின் தொழில்நுட்பம்.
வாய்ப்பாட்டு பாடுவோர், தபேலா, மிருதங்கம், மோர்சிங், தவில், ரிதம்பேடு வாசிப்பவர்கள், பொம்மைகளை ஆட்டுவிப்பவர்கள் என ஒரு நிகழ்ச்சிக்கு 10 முதல் 15 பேர் வரை தேவை. இதே போல, ஒரு நிகழ்ச்சிக்கு 10 முதல் 20 பொம்மைகள் வரை தேவைப்படும்.
பொம்மலாட்டத்திற்கு தேவையான பொம்மைகளை எடை குறைவாக இருக்கும் கல்யாணமுருங்கை, அத்தி மரங்களிலிருந்து 8, 10, 15 கிலோ எடைகளில் செய்து கொள்கிறோம். ஒரு பொம்மையை செய்ய குறைந்தபட்சம் 3 மாதங்கள் ஆகும். ஒரு பொம்மை செய்ய ரூ. 30 ஆயிரம் வரை செலவாகும். ஒரு நிகழ்ச்சிக்கு பொம்மைகளை ஆட்டுவோர், பாடுவோர், வாசிப்போர் என அனைவரின் ஒருங்கிணைப்பும், ஒத்துழைப்பும் தேவை. பலதடவை ஒத்திகை பார்த்த பிறகே இரண்டரை மணி நேரம் நடைபெறும் ஒரு நிகழ்ச்சியை அரங்கேற்றுவோம்.
எங்களது தாத்தா காலத்திலிருந்து மூன்று தலைமுறைகளாக நாங்கள் பாரம்பரிய பொம்மலாட்ட கலைநிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். எங்களது குழுவில் 20-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். தமிழகத்தின் பாரம்பரியமாக பொம்மலாட்டங்களை நடத்தி வரும் குறிப்பிட்ட குழுக்களில் எங்களது "ஸ்ரீ முருகன் சங்கீத பொம்மலாட்ட சபா'வும் ஒன்று.
தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள கோயில்கள்,
திருவிழாக்கள், மடங்கள், பொது
நிகழ்ச்சிகளிலும், நாட்டின் பல்வேறு
மாநிலங்களிலும், பிரான்ஸ் உள்ளிட்ட வெளிநாடுகளிலும்
நாங்கள் கலைநிகழ்ச்சிகளையும்
நடத்தியுள்ளோம். தற்போது நான்காம்
தலைமுறையாக எனது மகன்கள்
எம். கார்த்திகேயன், எஸ். சங்கீத்
ஸ்ரீராம் ஆகியோர் படித்துக் கொண்டே பொம்மலாட்ட நிகழ்ச்சி
களையும் நடத்தி வருகின்றனர்.
ராமாயண, மகாபாரத கதைகள், கிளைக் கதைகள், மன்னர்களின் சரித்திரம் உள்ளிட்ட பழைமையான கதைகளையும், தியாகராஜர் சரித்திரம்,
ராமாநுஜர் சரித்திரம், தாமிரவருணி வரலாறு, வள்ளலார் வரலாறு, ராகுவின் மகிமை, சமூக அக்கறை கொண்ட கதைகள், குடிநீர், காய்ச்சல், பெண் குழந்தைகள் மேம்பாடு உள்ளிட்ட விழிப்புணர்வு கதைகளையும் புதிதாக உருவாக்கி, திறம்பட நடத்தி வருகிறோம். வேண்டுவோருக்கு தேவைப்படும் கதைகளையும் ரசனையாக உருவாக்கி, நிகழ்ச்சி நடத்தி வருகிறோம்.
இன்றைய இளம்தலைமுறையினர் பொம்மலாட்டக் கலையைக் கற்று, இக்கலையை காக்க முன்வர வேண்டும். வேண்டுவோருக்கு நாங்களே இக்கலையை கற்றுத் தருகிறோம். மேலும், அழிவில் இருக்கும் பழைமை வாய்ந்த பொம்மலாட்டக் கலையை காக்க மத்திய, மாநில அரசுகள் பள்ளி, கல்லூரி பாடத் திட்டத்தில் செயல்முறைப்பயிற்சியாக பொம்மலாட்டத்தை வைத்து, இளைய தலைமுறையினரிடம் இக்கலையைக் கொண்டு செல்லும் சீரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், இந்தக் கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கி ஊக்குவிக்க வேண்டும்'' என்றார்.
- க. கோபாலகிருஷ்ணன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாதம் ரூ1,66,050 சம்பளத்தில் தில்லி ஐஐடி-ல் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!

ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் பங்குகள் 5 சதவீதம் சரிவு!
இன்றைய செய்திகள் ஜூன் 24 - நேரலை!

தவெகவில் இணையும் விஜயபாஸ்கர்? அமைச்சர் ஆனந்த் உடன் சந்திப்பு
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



