நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மகேந்திரனும் தமிழ் சினிமாவும்

"நாம் மூவர்' என்ற திரைப்படத்தின் மூலம் கதை எழுத ஆரம்பித்த மகேந்திரன்,

News image
Updated On :8 ஏப்ரல் 2019, 10:17 am

ரா. சுந்தர்ராமன்


"நாம் மூவர்' என்ற திரைப்படத்தின் மூலம் கதை எழுத ஆரம்பித்த மகேந்திரன், "சபாஷ் தம்பி',  "பணக்கார பிள்ளை, "நிறைகுடம்', "திருடி' உள்ளிட்ட 36 திரைப்படங்களுக்கு கதை, வசனம் எழுதியுள்ளார். இதில் இரண்டு தெலுங்குப்  படங்கள். இதில் பி. மாதவன் இயக்கத்தில் சிவாஜி நடித்து வெளிவந்த "தங்கப்பதக்கம்' படத்திற்கு கதை-வசனத்தை மகேந்திரன்  எழுதியிருப்பார். சிவாஜிக்கு வசனத்தால் ஒரு திருப்புமுனையைத் தந்த படம். 

இப்படி தமிழ்த் திரைப்படங்களுக்கு கதை-வசனம் எழுதிக்கொண்டிருந்த மகேந்திரனுக்கு ஆனந்தி பிலிம்ஸ் வேணு செட்டியார் மூலம் "முள்ளும் மலரும்' திரைப்

படத்தை இயக்க வாய்ப்பு கிடைக்கிறது. இதற்கான கதையை எழுத்தாளர் உமா சந்திரன் எழுதிய "முள்ளும் மலரும்' கதையைத் தேர்ந்தெடுக்கிறார். இக்கதைக்கு திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார்.   

பல்வேறு தடைகளைத்தாண்டி படம் வெளிவருகிறது. முதல் இரண்டு வாரங்கள் தியேட்டரில் ரசிகர்கள் குறைவு மூன்றாவது வாரத்திலிருந்து 25 -வது வாரம் வரை படத்தைக் கொண்டாட ஆரம்பித்துவிட்டனர். "ஆடுபுலி ஆட்டம்" படத்திற்கு கதை-வசனம் எழுதிய மகேந்திரனுக்கு ரஜினியின் நட்பும் அந்தப் படத்திலிருந்து தான் மலர்ந்தது.  எனவே "முள்ளும் மலரும்' படத்தின் காளி கதாபாத்திரத்திற்கு ரஜினியை மனதில் வைத்துதான் எழுதினார். 

அதுவரை வில்லனாக கொடிகட்டி பறந்த ரஜினிக்கு "முள்ளும் மலரும்' படத்தில் கதாநாயகன் வேஷம் கொடுத்து தன் நண்பனை அடுத்த தளத்திற்கு எடுத்துச் சென்றார் மகேந்திரன். ஸ்டுடியோவில் இருந்த சினிமாவை பாரதிராஜா வெளிப்புறத்திற்கு கொண்டு வந்தார். அடுத்து வந்த மகேந்திரனோ  யதார்த்த சினிமாவை தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தினார். கதாநாயகியின் கனவில் மலரும் காதல் பாடல் காட்சி, சண்டைக்காட்சிகள் போன்றவற்றை தான் இயக்கிய படங்களில் தவிர்த்து வந்தார். 

"முள்ளும் மலரும்' படத்தில் ரஜினியை உடல் மொழியால் நடிக்க வைத்திருப்பார் இயக்குநர் மகேந்திரன். இப்படத்தில் ரஜினி கோபப்பட்டு பேசினாலும் எதிரில் இதையெல்லாம் கேட்டு சாந்தமாக நடித்திருப்பார் சரத்பாபு.  படத்தின் இறுதிக் காட்சியில் தங்கையான ஷோபா அண்ணனான ரஜினியிடம் வந்து பாசத்தை வெளிப்படுத்தும் வகையில் கொஞ்சலான அழுகையைக் கொடுத்திருப்பார். இன்றுவரை அந்த மாதிரியான அழுகையை யாரும் தமிழ்த் திரைப்படத்தில் ஷோபாவிற்கு பிறகு கொடுத்ததுமில்லை. எதிர்காலத்தில் அந்த மாதிரியான அழுகை நடிப்பை தருவார்களா என்பது சந்தேகமே. 

சிவாஜி - சாவித்திரி அண்ணன் தங்கையாக நடித்து பாசத்தை வசனத்தால் மெருகேற்றி பீம்சிங் இயக்கி வெற்றி பெற்ற படம் "பாசமலர்'. ஏறத்தாழ 17 ஆண்டுகள் கழித்து மகேந்திரன் இயக்கிய "முள்ளும் மலரும்' படத்தில் வசனத்தைக் குறைத்து ரஜினி -ஷோபா நடிப்பை உடல்மொழி மூலம் வெளிக்கொணர்ந்து மகேந்திரன் வெற்றி பெற்றிருப்பார். 

மகேந்திரன் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கவில்லையென்றாலும் "முள்ளும் மலரும்' படத்திற்கு பல்வேறு வகைகளில் உதவி புரிந்துள்ளார். 

தனது இரண்டாவது படமான "உதிரிப்பூக்கள்' படத்திற்கு எழுத்தாளர் புதுமைப்பித்தன் கதையை மையமாக வைத்து திரைக்கதை-வசனம் எழுதி இயக்கியிருப்பார். இப்படத்தில் தந்தையின் திருமணத்தை மகள் மற்றும் மகன் பார்க்குமாறு காட்சி அமைத்திருப்பார். அந்தக் காலகட்டத்தில் இது மிகவும் துணிச்சலான செயல். அதேபோல் தந்தை (மறைந்த நடிகர் விஜயன்) தன் மகன், மகளை அழைத்து முத்தங்களை பறிமாறிக்கொண்டு, "அப்பா குளிக்க போறேன்' என்று சொல்லிவிட்டு இறப்பதற்காக  ஆற்றுக்குள் செல்லும் காட்சியை இன்றைக்குப் பார்த்தாலும் அழுகை வரும். 

மென்மையான, மனதில் என்றும் நிலைத்து நிற்கும் கதைகளை இயக்கி தமிழ் சினிமாவை 70-களின் பிற்பகுதியிலும் 80-இன் முற்பகுதியிலும் வேறு தளத்திற்கு எடுத்துச் சென்ற இயக்குநர் மகேந்திரன் கடந்த 2- ஆம் தேதி காலமானாலும் "இறக்கும் மனிதர்கள் இறவாப் படங்கள்' என்ற வரிகளுக்குச் சொந்தக்காரராகி விட்டார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.