கரப்பான் நோய்க்கு மருந்து!

உட்புறம் மற்றும் வெளிப்புறக் காரணங்களால் உடலில் புண் ஏற்படக் கூடும் என்பதால், உங்களுக்கு எந்த வகையினால் இந்தப் புண் ஏற்பட்டு உள்ளது என்பதை அறிந்து, சிகிச்சை செய்வதே நல்லது
கரப்பான் நோய்க்கு மருந்து!

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்
எனக்கு வயது 62. கடந்த மூன்று வாரங்களுக்கு முன் எனது கால் விரல்களில் அரிப்பெடுத்து, சொரிந்து கொண்டதில் மூன்று விரல்களில் புண் ஏற்பட்டு ரணமாகிவிட்டது. அதிலிருந்து நீர் வடிந்தது. டாக்டரிடம் காண்பித்ததில் ointment மற்றும் மாத்திரைகளைக் கொடுத்தார். பின்னர் 5 நாட்களில் சரியாகி இப்போது அந்த விரல்களின் மேற்பகுதி கறுப்பாகி உள்ளது. இது கரப்பான் நோய் என்று சொல்கிறார்கள். இந்த கரப்பான் நோய் ஏன் ஏற்படுகிறது? இது மீண்டும் வராமல் இருக்க என்னென்ன உணவுகளைத் தவிர்க்க வேண்டும்? என்னென்ன உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்? 
-பி.கே. ராஜேந்திரன், ,அரும்பாக்கம், சென்னை.
உட்புறம் மற்றும் வெளிப்புறக் காரணங்களால் உடலில் புண் ஏற்படக் கூடும் என்பதால், உங்களுக்கு எந்த வகையினால் இந்தப் புண் ஏற்பட்டு உள்ளது என்பதை அறிந்து, சிகிச்சை செய்வதே நல்லது. தங்களுக்கு நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்ற உபாதைகள் இல்லை என்று தெரிவித்துள்ளதால், அவற்றைத் தவிர்த்து வேறு காரணங்கள் உட்புற உடலில் உள்ளதா என்பதையும் அறிய வேண்டிய அவசியமிருக்கிறது. உட்புறத்தில் வாத - பித்த - கப தோஷங்களின் சேர்க்கை விசேஷத்தினாலும், ரத்தத்தில் ஏற்படும் கெடுதிகளினாலும் அரிப்பும், புண்ணும் ஏற்பட்டு, நீர்வடிதலும், அப்பகுதி கறுப்பாகி விடுவதும் சாத்யமே என்று ஸுஸ்ருதர் எனும் முனிவர், தான் இயற்றிய ஸுஸ்ருதசம்ஹிதை என்ற ஆயுர்வேத நூலில் குறிப்பிடுகிறார். பிற மனிதர்களால் ஏற்படுத்தப் படும் காயம், மிருகங்களினால் உண்டாகும் காயம், உயரத்திலிருந்து விழுதல், நெருப்பு, விஷம், கூரான கம்பி, குச்சிகள், ஆயுதங்கள் போன்ற வெளிப்புறக் காரணங்களாலும் காயம் ஏற்பட்டு மனிதர்களுக்கு அரிப்பும் புண்ணும் ஏற்படும் என்று அவர் மேலும் தெரிவிக்கிறார். 
புண்ணிலிருந்து நீர்க்கசிவுள்ள நிலைகளில், அதன் மீது களிம்பு தடவுவதோ, எண்ணெய், நெய் போன்றவை வைப்பதோ செய்யக் கூடாது. அவற்றால் கசிவு நின்று போனால், உட்புற பகுதிகளில் தங்கி நின்று, உபாதையை மேலும் வலுப்பெறச் செய்யும் என்பதால், நீர்வற்றும் வரை, மூலிகை மரங்களிலிருந்து எடுக்கப்படும் வேர்ப்பட்டை, மரப்பட்டை, இலைகளைக் கொண்டு காய்ச்சப்படும் தண்ணீரை ஊற்றி கழுவி வந்தாலே, புண் ஆறிவிடும். சரக்கொன்றைப்பட்டை, கருங்காலிக்கட்டை, வேப்பம்பட்டை, ஏழிலைப்பாலைப்பட்டை, புங்கம்பட்டை, அரசம்பட்டை நன்னாரிவேர்ப்பட்டை ஆகியவற்றில் கிடைத்ததைக் கொண்டு 15 கிராம் எடுத்து, 1லிட்டர் தண்ணீரில் காய்ச்சி, 250 மி.லி. ஆக வற்றியதும் வடிகட்டி, இளஞ்சூடாகப் புண்ணைக் கழுவி வந்தால், அங்குள்ள அணுக் கிருமிகள் நசிந்து, நீர்வடிதலும் வற்றிவிடும்.
வறட்சியான நிலைக்கு புண் வந்ததும், அதன்மேல் ஜாத்யாதிகிருதம், சததௌத கிருதம், மஹாதிக்தக கிருதம் போன்ற நெய் மருந்துகளில் நோய் நிலைக்கு ஏற்ப தேர்ந்தெடுத்துப் பூசி வர, புண் ஆறிவிடும். கறுப்பான தோல் பகுதியை மறுபடியும் பழைய நிலைக்குக் கொண்டு வரவும் இவையே பயன்படும். அப்பகுதியில் தொடு உணர்ச்சி குறைந்து மரத்துப் போன நிலை இருந்தால், அட்டைப் பூச்சிகளை கடிக்க வைத்து, கெட்டுப்போன ரத்தத்தை வெளியேற்றி அதன் பிறகு, அதனால் ஏற்பட்டுள்ள புண்ணை அகற்ற, மேற்படி குறிப்பிட்டுள்ள நெய் மருந்துகளைப் பயன்படுத்தி குணப்படுத்துவது பண்டைய ஆயுர்வேத சிகிச்சை முறைகளில் கையாளப்பட்ட ஒரு யுக்தியாக இருந்தது.
உணவின் அளவு குறைவாகவும், எளிதில் செரிப்பவையும், நெய்ப்புடன் கூடியவையும், வெது வெதுப்பாகவும், பசியைத் தூண்டி விடுபவையுமான உணவு வகைகளை மட்டுமே நீங்கள் உண்டு வர வேண்டும். வெல்லம், தயிர், புலால் உணவு, பர்கர், பீட்ஸா, பேல்பூரி, பானிபூரி, சமோஸா, உட்புறக் கசிவை உண்டாக்கும் இனிப்பு பதார்த்தங்கள், புளிப்பு உப்பு தூக்கலான உணவுகள், பகல் தூக்கம் ஆகியவை தவிர்க்கப்பட வேண்டியவை.
உட்புற மருந்தாக மஹாதிக்தகம் எனும் நெய் மருந்தை நீராவியில் உருக்கி, காலை, மாலை சுமார் 10 - 15 மி.லி. சாப்பிட்டு, மேலே சிறிது கருங்காலிக்கட்டை சேர்த்து வேக வைத்த வெந்நீரை அருந்துவதும் , மதுஸ்னுஹீ எனும் பரங்கிச் சக்கை சூரணத்தை சுமார் 3 கிராம் எடுத்து, 6 மி.லி. தேன் குழைத்து இரவில் படுக்கும் முன் சாப்பிடுவதையும் வழக்கமாக்கிக் கொள்ளலாம். 15 நாட்களுக்கு ஒரு முறை மாணிபத்ரம் எனும் லேகிய மருந்தை, மதிய உணவிற்கு 2 மணி நேரம் முன் சாப்பிட்டு, குடலை சுத்தப்படுத்திக் கொள்வதும் நல்லதே. 
பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்,
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி, 
நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே) 
செல் : 94444 41771

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com