'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 66
முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு, ஹர்ஷத் மேத்தா பங்குச் சந்தை ஊழலை, இந்திய வங்கித்துறையில் காணப்பட்ட பலவீனங்களின் வெளிப்பாடு என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.


முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு, ஹர்ஷத் மேத்தா பங்குச் சந்தை ஊழலை, இந்திய வங்கித்துறையில் காணப்பட்ட பலவீனங்களின் வெளிப்பாடு என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. அந்த ஊழலில் ஹர்ஷத் மேத்தா பலிகடாவாகி சிறைத்தண்டனை பெற்றார் என்றால், அவருக்கு உடந்தையாக இருந்த பல வங்கி அதிகாரிகள் கோடீஸ்வரர்களாகப் பணி ஓய்வு பெற்றனர்.
பொருளாதார தாராளமயமாக்கலைத் தொடர்ந்து, ஒருபுறம் அரசுத் துறை வங்கிகளும், இன்னொருபுறம் கிரின்ட்லேஸ் பேங்க், சிட்டி பேங்க், அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் பேங்க், பேங்க் ஆஃப் அமெரிக்கா, ஸ்டாண்டர்ட் சார்டர்ட் பேங்க் உள்ளிட்ட பன்னாட்டு வங்கிகளும் இந்தியாவில் செயல்படத் தொடங்கின. இந்தச் சூழலை முழுமையாக பயன்படுத்திக் கொண்டனர் பங்குச் சந்தைத் தரகர்கள். அவர்களில் முக்கியமானவர் ஹர்ஷத் மேத்தா.
பங்குச் சந்தைத் தரகர்களுக்குப் பங்குகளை வாங்கவும், விற்கவும் நிறையப் பணம் தேவைப்பட்டது. வங்கிகளிலிருந்து கிடைக்கும் குறைந்த வட்டியுடனான முதலீட்டைப் பங்குச் சந்தைத் தரகர்கள் பெறுவதற்கு இந்திய ரிசர்வ் வங்கி தடைவிதித்திருந்தது. ரிசர்வ் வங்கி விதிகளைத் தவிர்த்து, வங்கிகளிலிருந்து பணத்தை மடைமாற்றிப் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய ஹர்ஷத் மேத்தா வழிமுறைகளை ஆராய்ந்தார். வங்கிகளுடன் கூட்டுச் சேர்ந்து அரசுப் பத்திரங்களின் பரிமாற்றத்தின் மூலம், பணத்தை மடைமாற்றம் செய்யும் உத்தியை கண்டுபிடித்தார்.
ஒருபுறம், தங்களது இடைக்கால அதிகக் கையிருப்பை முதலீடு செய்ய விழைந்த அரசுத்துறை நிறுவனங்கள். இன்னொருபுறம், ரிசர்வ் வங்கி விதிமுறைப்படி தங்களது வைப்பு நிதியில் ஒருபகுதியை அரசுப் பத்திரங்களிலும், பாதுகாப்பான நிதிப் பத்திரங்களிலும் வைத்திருக்க வேண்டிய கட்டாயத்தில் அரசுத்துறை வங்கிகள்.
அந்தச் சூழல் பங்குச் சந்தைத் தரகர்களுக்கு, குறிப்பாக புத்திசாலித்தனமான ஹர்ஷத் மேத்தாவுக்கு, மிகவும் சாதகமாகி விட்டது. அரசுத்துறை நிறுவனப் பத்திரங்களில் வங்கிகள் முதலீடு செய்தன. அந்தப் பத்திரங்களை உடனடியாக வழங்காமல் அதற்கான ஒப்புதல் கடிதங்கள்தான் வழங்கப்பட்டன. அந்த இடைப்பட்ட காலத்தில் அந்தப் பத்திரங்களின் மூலம் கடன் பெற்று, பங்குச் சந்தையில் முதலீடு செய்து லாபமீட்டி, மீண்டும் அடைத்துவிடும் வழிமுறை கையாளப்பட்டது.
இப்படியெல்லாம் நடப்பது இந்திய ரிசர்வ் வங்கிக்குத் தெரியாமல் நடந்ததா என்றால் இல்லை. வங்கி ரசீதுகளை ஆந்திரா வங்கியும், சிண்டிகேட் வங்கியும் தவறாக பயன்படுத்தியதை, ரிசர்வ் வங்கியின் 1986 சோதனையின்போதே கண்டுபிடிக்கப்பட்டது.
வெளிநாட்டு வங்கிகளின் செயல்பாடு கேள்விக் குறியாகவே இருந்து வந்திருக்கிறது. ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கைகளை சற்றும் சட்டைச் செய்யாமல் அவை இயங்கின. ஏப்ரல் 1991 முதல் மே 1992 வரையிலான ஓராண்டில் நடந்த பத்திரப் பரிமாற்றங்களில் 56% ஸ்டாண்டர்ட் சார்ட்டட், கிரின்ட்லேஸ் பேங்க், பேங்க் ஆஃப் அமெரிக்கா, சிட்டி பேங்க் ஆகிய நான்கு வங்கிகளுடையது. பங்குச் சந்தை ஊழலைத் தொடங்கி வைத்ததே அந்த நான்கு பன்னாட்டு வங்கிகளும்தான் என்பதை நாடாளுமன்றக் கூட்டுக் குழு அறிக்கை தெரிவிக்கிறது.
1990 ஏப்ரல் முதல் 1992 டிசம்பர் வரை, வெளிநாட்டு வங்கிகளிலும், அவர்கள் நடத்திய நிதி நிறுவனங்களிலும் அரசுத் துறை நிறுவனங்கள் சுமார் ரூ.36,000 கோடி அளவில் "போர்ட்ஃபோலியோ மேனேஜ்மெண்ட்' எனப்படும் முதலீட்டு நிர்வாகப் பிரிவில் முதலீடு செய்திருந்தன. அரசுத் துறை நிறுவனங்கள் அரசுப் பத்திரங்களிலும், கடன் பத்திரங்களிலும்தான் முதலீடு செய்ய வேண்டும் என்கிற கட்டுப்பாடு மீறப்பட்டது மட்டுமல்ல, அந்த வெளிநாட்டு வங்கிகள் தங்களது பணத்தை எப்படி முதலீடு செய்கின்றன என்பது குறித்து அரசுத் துறை நிறுவனங்கள் கவலைப்படவும் இல்லை.

அந்த ஓராண்டில் மட்டும் சுமார் ரூ.13 லட்சம் கோடி அளவிலான வங்கிகளின் பத்திரப் பரிமாற்றங்கள் நடைபெற்றிருக்கின்றன. அந்தச் சூழலைத்தான் தனக்கு சாதகமாக்கி விளையாடத் தொடங்கினார் புத்திசாலி பங்குச் சந்தைத் தரகரும், நிதித்துறை இடைத்தரகருமான ஹர்ஷத் மேத்தா. அவருக்கு இந்திய ஸ்டேட் வங்கி, தேசிய வீட்டுவசதி வங்கி, யூகோ வங்கி, கிரின்ட்லேஸ் வங்கி போன்றவற்றின் உயர் அதிகாரிகளின் நட்பும், ஆதரவும் இருந்ததால், நிஜமாகவே புகுந்து விளையாடத் தொடங்கினார்.
பல கோடிகள் கிடைத்தபோது, ஹர்ஷத் மேத்தா பல நிறுவனங்களின் பங்குகளை நினைத்துப் பார்க்காத மதிப்புக்கு உயர்த்திவிட்டார். பத்திரப் பரிமாற்றங்களில் மூன்றில் ஒரு பங்கு அவர் மூலம் நடைபெற்றது. ரூ.200-க்கு விற்பனையான ஏசிசி பங்கின் மதிப்பு ரூ.9,000-ஆக உயர்ந்தது. சில பங்குகள் 4,000% மதிப்பு உயர்ந்தது. அதிக மதிப்பு இருக்கும்போது அந்தப் பங்குகளை விற்றுப் பெரும் பணம் சம்பாதித்து விடுவார். அந்தப் பங்குகளின் விலை சரிந்து பலர் தெருவுக்கு வந்து விடுவார்கள்.
அவரது வளர்ச்சியைப் பார்த்து, ஏனைய பங்குத் துறைத் தரகர்கள் பயந்தனர். பொறாமைப்பட்டனர்.
பலர் தங்களது முதலை இழந்தனர். அவருக்கு எங்கிருந்து பணம் வருகிறது, அவர் எப்படி பங்குகளின் மதிப்பைக் கூட்டி திடீரென்று விற்று பங்குச் சந்தையில் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறார் என்பது புரியாமல் மிரண்டார்கள் பலர். அவரால் தொழிலிழந்த தரகர்கள் ஏராளம்.
பாரத ஸ்டேட் வங்கியில்தான் முதலில் ரூ.649 கோடி துண்டு விழுந்திருப்பது தெரிந்தது. ஹர்ஷத் மேத்தாவுக்கு வழங்கியிருந்த பணத்துக்கு ஈடான பத்திரங்கள் இருக்கவில்லை. அழுத்தம் தரப்பட்டதும், ஏப்ரல் மாதத்தில் ரூ.620 கோடியை அடைத்துவிட்டார் மேத்தா. அதிலும் குளறுபடியும் தில்லுமுல்லும் இருந்தன. தேசிய வீட்டுவசதி வங்கியின் காசோலையின் அடிப்படையில் கிரின்ட்லேஸ் வங்கி அவருக்கு ரூ.574 கோடி வழங்கி இருந்தது. தேசிய வீட்டுவசதி வங்கியில் அந்தக் காசோலைக்கு ஈடாக பத்திரம் எதுவும் இல்லையென்பது தெரிந்தது. பிரச்னை வெடித்தது.
அதிலிருந்தும்கூட ஹர்ஷத் மேத்தா தப்பித்திருக்கக்கூடும். அவரது கெட்ட நேரம், மும்பை பங்குச் சந்தை புரோக்கர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். பங்கு வர்த்தகம் ஸ்தம்பித்தபோது, ஹர்ஷத் மேத்தாவால் இயங்க முடியவில்லை. பணத்தைப் புரட்ட முடியவில்லை. அவரது நிலைமை தெரிந்ததும், ஏனைய பங்குச் சந்தைத் தரகர்கள் தங்களது வேலை நிறுத்தத்தை வேண்டுமென்றே நீட்டித்து, ஹர்ஷத் மேத்தாவின் மீதிருந்த வஞ்சத்தைத் தீர்த்துக் கொண்டனர்.
ஏப்ரல் 16-ஆம் தேதி தொடங்கிய வேலை நிறுத்தம் ஏப்ரல் 26-ஆம் தேதி முடிந்து 27-ஆம் தேதி மீண்டும் பங்குச் சந்தை வர்த்தகம் தொடங்குவதற்குள், ஹர்ஷத் மேத்தாவின் கோட்டை இடிந்து சரிந்திருந்தது. மே மாதம் அவரது வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டு, சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஜூன் மாதம் அவர் கைது செய்யப்பட்டார்.
ஹர்ஷத் மேத்தா மீது 72 கிரிமினல் குற்றச்சாட்டுகள், 600-க்கும் அதிகமான சிவில் குற்றச்சாட்டுகளுக்கு வழக்கு தொடரப்பட்டன. நான்கு வழக்குகளில்தான் அவரை தண்டிக்க முடிந்தது. அவருக்கு உடந்தையாக இருந்த, அவரால் பலனடைந்த எந்தவொரு வங்கி அதிகாரியும் தண்டிக்கப்படவில்லை.
இந்திய பங்குச் சந்தை வர்த்தகமும், வங்கிச் சேவையும், பத்திர வர்த்தகமும் முறைப்படுத்தப்பட்டதற்கு ஹர்ஷத் மேத்தா பங்குச் சந்தை ஊழல்தான் காரணம். இப்போதைய எண்மப் பரிவர்த்தனைகள் பல பாதுகாப்பு கவசங்களை வழங்கிவிட்டன. ஆனால், ஊழல் வேறுவிதமாக புதிய ஹர்ஷத் மேத்தாக்களை உருவாக்குகிறது.
நேரில் சென்று பிரதமர் நரசிம்ம ராவுக்கு ஒரு கோடி ரூபாய் பணம் தந்திருப்பதாக ஹர்ஷத் மேத்தா குற்றம் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து, எதிர்பார்த்ததுபோல நாடு தழுவிய அளவில் மிகப் பெரிய விமர்சனங்கள் எழுந்தன. இப்போதுபோல 24 மணிநேர செய்திச் சேனல்கள் இல்லாவிட்டாலும், ஓரிரு தனியார் தொலைக்காட்சிச் சேனல்கள் இயங்கத் தொடங்கிவிட்டன. பரபரப்பான அந்த சூழலில், சென்னையில் இருக்கவா முடியும்? தில்லிக்குக் கிளம்பிவிட்டேன்.
தில்லியில் கோடை வெயில் சுட்டெரித்துக் கொண்டிருந்தது. வியர்த்துக் கொட்டும் அந்தக் கோடை வெயிலில், அரசியல் வேறு அனல் கக்கிக் கொண்டிருந்தது. தில்லி விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த கொண்டிருந்தபோது எனக்கு முன்னால் மத்திய சட்டத்துறை இணையமைச்சர் ஹெச்.ஆர். பரத்வாஜ் சென்று கொண்டிருந்தார். பின்னாளில் அவர் சட்ட அமைச்சராக இருந்தது மட்டுமல்ல, கர்நாடக ஆளுநராகவும் இருந்தார்.

அவரைத் துரத்திக் கொண்டு ஓடிப்போய் "நமஸ்தே' சொன்னபோது, அவர் என்னை விநோகமாகப் பார்த்தார். ஏற்கெனவே நன்கு அறிமுகமானவர் என்பதால், சற்று உரிமையுடன், ""என்ன நடந்துவிட்டது என்று இப்படி நீங்கள் எல்லோரும் குதிக்கிறீர்கள்? அதைப்பற்றி தெரிந்து கொள்ள மதராஸிலிருந்து தில்லிக்கு வருகிறீர்களே, உங்களுக்கு பைத்தியம் பிடித்துவிட்டதா?''
அவர் பேசிக் கொண்டே போனார். நான் எதுவும் பேசவில்லை. அவருடன் நடந்து கொண்டிருந்தேன். காரில் ஏறினார். அமைச்சர் என்பதால் பாதுகாப்புக் காவலர் முன் சீட்டில் அமர்ந்தார். என்னைப் பின் சீட்டில் ஏறிக்கொள்ளச் சொன்னார். காரில் எங்கள் சம்பாஷணை தொடர்ந்தது.
""ஹர்ஷத் மேத்தாவின் குற்றச்சாட்டு இருக்கட்டும். எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர இருக்கிறார்களே, அது எப்படி இருக்கும்?''
""உங்கள் ஊர் ஜெயலலிதா எடுக்கும் முடிவின்படி இருக்கும். அதிமுக ஆதரித்தால் பயப்படத் தேவையில்லை.''
""எண்ணிக்கை பலம் அப்படித் தெரியவில்லையே. ஜெயலலிதா ஆதரித்தாலும் காங்கிரஸூக்குப் பெரும்பான்மை இருக்காது போலிருக்கிறதே...''
""பாபர் மசூதி இடிப்புப் பிரச்னையிலேயே தப்பித்து விட்டோம். இதில் பயப்பட என்ன இருக்கிறது?''
""அந்தப் பிரச்னையில் எதிர்க்கட்சிகள் பாஜக, இடதுசாரிகள், மாநிலக் கட்சிகள் என்று பிரிந்து நின்றன. இப்போது எல்லோரும் நரசிம்ம ராவ் அரசை வீழ்த்தக் கைகோர்த்து நிற்கப் போகிறார்கள்.''
""பார்ப்போம், பிரதமரை அவர்கள் குறைத்து மதிப்பிடுகிறார்கள்.''
துக்ளக் ரோட்டிலுள்ள அவரது வீடு வந்ததும், நானும் இறங்கிக் கொண்டேன். அவரிடம் விடை பெற்றுக் கொண்டு வெஸ்டர்ன் கோர்டிலுள்ள நண்பரின்
அறைக்குச் சென்று விட்டேன்.
அடுத்த நாள் முன்னாள் பிரதமர் சந்திரசேகர், அத்வானி, ஜஸ்வந்த் சிங் ஆகியோரை சந்தித்து, அடுத்த என்ன நடக்கப் போகிறது என்று தெரிந்து கொள்ள விழைந்தேன். "அரசு கவிழ்ந்துவிடும்' என்பதுதான் அவர்கள் அனைவரும் உறுதியாகச் சொன்ன தகவல்.
கோல்மார்க்கெட்டிலுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையகமான ஏ.கே.ஜி. பவனுக்குப் போனேன். அங்கே பிரகாஷ் காரத், காம்ரேட் சுர்ஜித் இருவருமே இருக்கவில்லை. சைஃபுதீன் செளத்ரி இருப்பதாகச் சொன்னார்கள். வரவேற்பறையில் இருந்தபடி தகவல் சொல்லி அனுப்பினேன். விவாதத்தில் இருப்பதால் அரை மணி நேரம் காத்திருக்கும்படி சொல்லி அனுப்பினார்.
சைஃபுதீன் செளத்ரிக்காக ஏ.கே.ஜி. பவனில் காத்திருந்த அந்த அரை மணி நேர இடைவெளியில் எனக்கு அறிமுகமானார், ஆலப்புழை எம்பியாக இருந்த டி.ஜே. அஞ்சலோஸ். அவருடன் பேசிக்கொண்டிருக்கும்போது, சைஃபுதீன் வந்து விட்டார். இருவருமாக கோல்மார்க்கெட்டில் உள்ள ஓர் உணவு விடுதியில் டீ குடிக்க உட்கார்ந்தோம்.
நான் நரசிம்ம ராவ் அரசு என்னவாகும் என்கிற ஆர்வத்தில் இருந்தேன். சைஃபுதீன் அதை விட்டுவிட்டு இன்னொரு குண்டைத் தூக்கிப் போட்டார்.
""பிரணாப்தாவை சந்தித்தீர்களா?''
""இல்லை...''
""அவர் தனது பதவியை ராஜிநாமா செய்யக்கூடும். அவர் பதவி விலகியாக வேண்டும்!''
எனக்கு ஒரே அதிர்ச்சி. ஏன்? என்ன பிரச்னை?
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...