திரைக்கதிர் 

தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் நடித்து வரும் சஞ்சனா கல்ராணி சமீபத்தில் அஜீஸ் பாஷா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இதுவொரு காதல் திருமணம்.
திரைக்கதிர் 
Published on
Updated on
2 min read

தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் நடித்து வரும் சஞ்சனா கல்ராணி சமீபத்தில் அஜீஸ் பாஷா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இதுவொரு காதல் திருமணம்.

அஜீஸ் பாஷாவின் பெயரை முதுகில் பச்சைக் குத்திக் கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் சஞ்சனா கல்ராணி பகிர்ந்துள்ளார். "என் இதயத்துக்கு நெருக்கமான டாட்டூவை வெளியிடுகிறேன். கிசுகிசுக்கள், கேரக்டரை அசிங்கப்படுத்தும் பேச்சுகளைத் தவிர்க்கவே இத்தனை ஆண்டுகளாக இதை மறைத்து வைத்திருந்தேன். தற்போது நாங்கள் திருமணம் செய்து கொண்டதால் இதனை வெளியிடுகிறேன்' என்று அதில் சஞ்சனா கல்ராணி குறிப்பிட்டுள்ளார்.

----------------------------------------------------

நடிகர் அஜித்தின் 60- ஆவது படம் "வலிமை'. எச்.வினோத் இயக்கி உள்ள இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். மேலும் யோகிபாபு நகைச்சுவை கதாபாத்திரத்திலும், தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாகவும் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். 

கடந்த வாரம் "வலிமை' படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. ஒரே நாளில் அடுத்தடுத்து வெளியான அப்டேட்டுகளால் அஜித் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

இந்நிலையில், "வலிமை' படத்தில் இயக்குநர் விக்னேஷ் சிவன் பணியாற்றி உள்ளது தெரிய வந்துள்ளது. அவர் இப்படத்தில் பாடலாசிரியராகப் பணியாற்றியுள்ளதாகக் கூறப்படுகிறது. 

ஏற்கெனவே "மாஸ்டர்' படத்தில் விஜய்க்கு பாடல் எழுதிய விக்னேஷ் சிவன், தற்போது "வலிமை' படத்தில் அஜித்துக்காக பாடல் எழுதி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  
  

----------------------------------------------------

கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் மிருதுளா விஜய். ராஜா தேசிங்கு இயக்கிய "நூறாம் நாள்' படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்தார். அதன் பிறகு ஜெனிபர் கருப்பையா படத்தில் ஹீரோயினாக நடித்தார். "கடன் அன்பை முறிக்கும்' படத்திலும் நடித்துள்ளார். அதன் பிறகு அவர் மலையாளப் படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

மிருதுளாவுக்கும், மலையாள தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் யுவ கிருஷ்ணாவுக்கும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23-ஆம் தேதி நிச்சயதார்த்தம் நடந்தது. இதையடுத்து  அவர்களின் திருமணம் நடைபெற்றது. கோயிலில் நடந்த திருமண நிகழ்ச்சியில் இருவீட்டாரும், நெருங்கிய நண்பர்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். திருமணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. அவற்றைப் பார்த்த ரசிகர்கள் மிருதுளா மற்றும் யுவ கிருஷ்ணாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
 

----------------------------------------------------

"பகல் நிலவு' என்ற சீரியல் மூலம் நடிகையானவர் ஷிவானி நாராயணன். அதன் பிறகு சீரியல்களிலும் ஹீரோயினாக நடித்தார். கடந்த ஆண்டு நடந்த பிக்பாஸ் 4-வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு மிகவும் பிரபலமானார்.

சமூக வலைதளங்களில்  ஷிவானிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தினமும் கவர்ச்சிகரமான,  வித்தியாசமான புகைப்படங்களைப் பகிர்வதை வாடிக்கையாக வைத்திருக்கும் ஷிவானி, தற்போது வித்தியாசமாக உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 

குறிப்பாக தலைகீழாய் தொங்கிக் கொண்டு ஷிவானி போஸ் கொடுத்திருக்கும் புகைப்படம் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது. மேலும் ரசிகர்கள் ஏராளமான லைக்குகளை குவித்து "சிங்கப்பெண்ணே' என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். 

இயக்குநர் கல்யாண கிருஷ்ணனின் அடுத்த படத்தில் ஜெயம் ரவி  நடிக்க உள்ளார். இவர்கள் கூட்டணியில் ஏற்கெனவே 2015-ஆம் ஆண்டு "பூலோகம்' திரைப்படம் வெளியாகியது. 

தற்போது இரண்டாவது முறையாக இருவரும் இணைய உள்ளனர். 

ஜெயம் ரவியின் 28-ஆவது படமாக உருவாகவிருக்கும் இப்படத்தில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. த்ரில்லர் படமாக உருவாகி வரும் இப்படத்தில் அதிக சண்டைக் காட்சிகள் இடம் பெற உள்ளதாம்.

ஆகஸ்ட் நடுப்பகுதியில் படத்தின் படப்பிடிப்பைத் தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனராம். இதற்கிடையில் ஜெயம் ரவி மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் "பொன்னியன் செல்வன்' படத்திலும் முக்கிய  கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com