ஊற்று

ஊற்று

ரத்னாவின் கண்கள் இரண்டும் ரத்தமாய் வீங்கிச் சிவந்திருந்தன. விசும்பி விசும்பி சேலை முந்தியில் துடைத்துக் கொண்டே இருந்ததில் மூக்கின் மேல் தோல் உரிந்து காந்தியது.

ரத்னாவின் கண்கள் இரண்டும் ரத்தமாய் வீங்கிச் சிவந்திருந்தன. விசும்பி விசும்பி சேலை முந்தியில் துடைத்துக் கொண்டே இருந்ததில் மூக்கின் மேல் தோல் உரிந்து காந்தியது.

""இப்படிக் கூடவா ஒரு பைத்தியக்காரி இருப்ப... பட்டப் பகல்ல பத்து குடித்தனத்துக்கு நடுவுல''

அம்சா சொல்லியதும், ""நல்ல புள்ளை போ. நான் கூடக் கேட்குறேன் என்ன விஷேசமானுட்டு. பொதி மாடு கணக்கா தலையாட்டிட்டு வந்த. இப்ப உட்கார்ந்து அழுவுற'' பால் ஊற்றும் பரசு, கால் லோட்டா பாலை எதிர் வீட்டில் அளந்து கொட்டிய பின்பும் அங்கேயே நின்றிருந்தான்.

""கூறு கெட்டவ. என்ன போச்சுன்னு எண்ணிப் பார்த்தியா?''
பவானியின் மாமியார் கேட்டதும்,
""என்னனு பார்க்க சொல்ற?'' என்றாள் ரத்னா பொங்கி வந்த அழுகையை அடக்கியபடி.
""செத்த நேரம் சும்மாயிருங்க எல்லாரும். அவளே ஒன்னும் புரியாம மலைச்சுப் போய்க் கெடக்கா. இந்தா ரத்னா. இந்த வறக் காபியை குடிச்சுட்டு எந்திரி. உன் புருஷன் வர்ற நேரம். பொறுமையா விஷயத்தைச் சொல்லு''உள்ளே வந்த பவானி அவள் கையிலொரு தம்ளரைத் திணித்தாள்.
""இப்படிக் கூட்டம் கூடாதீங்க. பஞ்சாயத்து ஆளுங்க பார்த்தா சத்தம் போடுவாங்க'' பவானியின் கணவன் அதட்டவும், வாசலில் நின்ற கூட்டம் மனசேயில்லாமல் கலைந்து சென்றது.
""எந்திரி புள்ள. சொல்றேன்ல'' பவானியின் உசுப்பலில் எழுந்த ரத்னா கலைந்திருந்த தலைமுடியை கையால் அழுத்திவிட்டு, புடக்காலியில் இருந்த
தண்ணீரை அள்ளி முகத்தில் அடித்துக் கொண்டாள். முந்தாநாள் கொண்டு வந்து ஊற்றியது. ட்ரம்மின் அடியில் கிடந்தது நீர்.
""சின்னு எங்கக்கா?''
என்றபடியேஆறியிருந்த காபியை ஒரே முழுங்காக அண்ணாந்து ஊற்றிக் கொண்டாள்.
""பசில அழுதுச்சு, பாலை கலக்கிக் கொடுத்தேன், குடிச்சிட்டு எங்கூட்டுல விளையாடுது'' ரத்னா குடித்து விட்டுக் கொடுத்த தம்ளரை வாங்கி வாசலுக்குப்போன பவானி, ""என்னமோ நேரம்னு நினைச்சுக்கோ. காலைல நான் வந்து கூப்பிட்டப்ப எங்கூடவே வந்திருந்தீனா இந்த வினையே வந்திருக்காது'' என்றாள் மனசு கேட்காமல்.
""என் வினை என் முன்னாடி வந்து நிக்குதே, நான் என்ன செய்யட்டும் சொல்லு''முணுமுணுத்தவளின் மனது "பேசாம அந்நேரம் ஊத்துக்கே போயிருக்கலாம். கெரகம் யாரை விட்டுச்சு?' திரும்பத் திரும்ப நொந்தபடியேஇருந்தது.
""ரத்னா, தண்ணி எடுக்கப்போறோம், வர்றியா?'' பதினொருமணி போல பவானி குரல் கொடுத்தபோது ரத்னா சின்னுவுக்குப் பால் கொடுத்துக் கொண்டிருந்தாள்.
""நீ போக்கா, நான்அப்புறமாபோய்க்கிறேன்'' உள்ளிருந்தபடியே பதில் சொன்னாள் ரத்னா. உண்மையில் மனதில் இருந்த களைப்பே அத்தனைதூரம் நடந்துசெல்வதற்கு அலுப்பைக் கொடுத்தது அவளுக்கு. எப்படியும் போய் வர ஒன்றரை மணி நேரமாகும். எதையாவது சமைத்து வயிற்றுக்குள் போட்டால்தான் எழுந்திருக்கவே முடியும்போல அவள் கைகள் நடுங்கின. வறண்ட உடம்பில் தனக்கான உணவு கிடைக்குமா என்று அவள் மார்பில் அலைபாய்ந்து கொண்டிருந்த சின்னு, இவள் விலக்கி எடுத்ததும் வீறிட்டு அழுதது.
""ஏ... நீ வேற. மனுசியோட சிரமம் புரியாம?'' எரிச்சல்பட்டாலும் ஒரு வயது பிள்ளைக்குப் பற்றும் பற்றாத இந்தப்பால் எந்த மூலைக்கு? பெற்ற வயிறு குமுறியது. கொஞ்சமாய்ச் சோறு சமைத்து ரசம் வைத்தால்கூடப் போதும், நொறுங்க பிசைந்து வயிறார ஊட்டி விடலாம் என்று நினைத்தவள், எழுந்து அரிசி பைக்குள் கைவிட்டாள். ரேசனில் இலவசமாகக் கொடுத்த அரிசி நேற்றோடு சரியாகியிருந்தது. ரவையோ, கால் விலையில் செல்லப்பன் கடையில் விற்கும் குருணையோ வாங்கக் கூடக் கையில் காசில்லை.
சரவணன் காலையிலேயே எங்கோ கிளம்பியிருந்தான். இரவு முழுக்கப் போட்ட சண்டையில் எங்கே போகிறான் என்று அவனும் சொல்லவில்லை. இவளும் கேட்கவில்லை. "வீட்டுல புள்ளையும், பொண்டாட்டியும் எக்கேடு கெட்டு போகட்டும்னு துரைகிளம்பியாச்சு.' சொம்பு நிறையத்தண்ணீர் மொண்டு குடித்தவளின் மனசு கசந்துகிடந்தது. "நிலைமை இப்படியா சீர்கெட்டுபோகணும், கஞ்சிக்கும் வழியில்லாம. இன்னிக்குபொழப்புக்கு என்ன பண்றது?' இதுவரைக்கும் கடன் வாங்கிப் பழக்கமில்லாத உடம்பு யாரிடமும் உதவி கேட்கத் தயங்கி கூசியது.
நான்கு மாதங்களுக்கு முன்பு வரை அரிசியும் பருப்பும் சிப்பம் சிப்பமாக வாங்கி நிறைவாய் வைத்திருந்த வீடு தான் அது. பாழாய்ப் போன இந்த வினோத காய்ச்சலால் சக்கரம் திருப்பிச் சுழற்றிப் போட்டது போல கைக்கும் வாய்க்குமான நிலை வரும் என யார் தான் கண்டார்கள்? ரத்னாவின் புருஷன் சரவணன் பெயிண்டர். சொன்ன நேரத்துக்குச் சொன்னபடி வேலையை முடித்துக் கொடுப்பான் என்பதால் வருடம் முழுவதும் அவனுடைய வேலைக்குக் குறைவென்று வந்ததில்லை. வாங்கும் சம்பளத்தில் பீடி, தண்ணி என்று செலவழித்தாலும், தன் கையில் கொடுக்கிற பணத்தைக் கட்டு செட்டாக நிர்வகித்துக் குடும்பம் பேணுவதில் ரத்னா கில்லாடி. இந்தக் கரோனா என்ற பூதம் வந்து உலகையே சுழற்றிப் போடும் வரை எல்லாம் நன்றாகத்தான் போனது. மார்ச் மாதம் உள்ளூர் வரைக்கும் ஊரடங்கு வந்ததில் சரவணன் மாதக்கணக்கில் வீட்டிலேயே இருக்க வேண்டிய நிலை. சம்பளமே இல்லாமல் எத்தனை மாதங்கள் தள்ளுவது? இருப்பதை வைத்து, விற்று என எப்படியெப்படியோ சமாளித்தாலும் வீட்டிலிருந்த செழிப்பமெல்லாம் கொஞ்ச கொஞ்சமாய் மங்கி...
இவளுடைய சங்கிலி, வளையல், கல்யாணப்புடவை என்று ஒவ்வொன்றாக வாங்கிச் சென்று அடமானம் வைத்தவன், சின்னுவின் காது தோட்டை கேட்டபோது தான் இருவருக்குமான சண்டை முற்றிப் போனது.
""தலையே போனாலும் தர மாட்டேன், புள்ளை உடம்புல கெடக்குற ஒட்டு தங்கத்தையும் கேட்குற'' என்று இவள் மல்லுக்கு நிற்க, ""முதல்ல வயத்துக்குச் சோறு வேணும்டி. நாளைக்கே வேலைக்குப் போனா வாங்கித் தரமாட்டேனா?'' என்று அவன் கத்த, ஒரு வாரமாக இதே சண்டை தான் இருவருக்கும்."என்னன்னாலும்சரி, இதை மட்டும் கழட்டி கொடுக்கக்கூடாது' சின்னுவை இடுப்பில் இடுக்கியபடி செல்லப்பன் கடைக்கு விரைந்தவள், ""ஒரு கிலோ அரிசியும், தேங்காய் பத்தையும் கொடுண்ணா. அரைகீரையாஇது, ஒரு கட்டு எடுத்துக்கிறேன். அப்புறம் கைல காசில்ல. இன்னும் இரண்டு நாள்ல தந்திடுறேன்'' தயங்கித் தயங்கி கேட்டுப்பொருள்களைவாங்கி வந்தாள். வயிற்றில் எரிந்த அக்னி கெளரவம், தன்மானம் என்கிற சங்கதிகளை எல்லாம் தூக்கி தூர வைத்திருந்தது.
உலையில் சோற்றை வைத்து கீரையை ஆய்ந்து கடைந்தவள், தேங்காயை பொட்டுக்கடலை சேர்த்து துவையல் அரைத்து எடுத்தாள். சோற்றை வடித்துப் பசியில் இருந்த சின்னுவுக்கு ஊட்டி விட்டவளுக்குத் தான் மட்டுமாக அமர்ந்து சாப்பிட மனம் வரவில்லை. "எங்க போச்சோ, காலைல இருந்து ஒன்னும் திங்காம. ஒரு எட்டு போய்க் கையோட கூட்டிட்டு வந்துடலாம்.' கெஞ்சிய வயிற்றுக்கு ஒரு டம்ளர் வடித்த கஞ்சியை ஊற்றிபசியாறிக் கொண்டவள், சேலையை ஒதுக்கி, வீட்டைப் பூட்டி பஸ் ஸ்டாண்ட்டுக்கு நடந்தாள். இந்த ஊரடங்கு ஆரம்பித்த நாளாய் நாலு ரோட்டு பாலத்தருகே சரவணன் தன் சேக்காளிகளுடன் பேசிக் கொண்டிருப்பது வழக்கம்.
ஆனால், அவள் எதிர்பார்த்தமாதிரி அவன் அங்கு இல்லை. அவனுடைய கூட்டாளிகள் எவரையும் காணவில்லை.
"கைல போனும் எடுத்துக்காம இது பண்ற வேலையிருக்கே.' திட்டிக்கொண்டே வீடு நோக்கி நடந்தவளை, ""இந்தா கண்ணு''ஒரு கரம் முன்னே வந்து அவளுடைய தோளைப் பற்றியது. ""என்ன கண்ணு, யாருன்னு தெரியலையா? சென்னிமலைஅக்காடா. பார்த்து நாளாகிடுச்சுன்னு மறந்துட்டியா'' எதிரே நின்றவள் சற்று பருமனான உடலுடன் இருந்தாள். நெளிநெளியானதலைமுடி, மஞ்சள் பூசிய முகத்தில் சின்னதாய் பொட்டு வைத்து சிரித்த முகமாய், வயது முப்பது, முப்பத்தைந்துக்குக் குறையாது. அவளுடைய முகம் ஒரே நேரத்தில் தெரிந்த ஜாடையாகவும், இதுவரை பார்த்தே இராத முகமாகவும் தோன்றியது. ஆறேழு மாத வயிறு மேடேறி நின்றதைக் கவனித்தவுடன் ரத்னாவின் மனதில் சட்டென்று ஒரு இளக்கம் தோன்றியது.
""புள்ளஅப்படியே உன் ஜாடை''அருகே நெருங்கி சின்னுவை கொஞ்சியவள், ""என்னடி கண்ணு. அப்படியே மலைச்சு போய் நிக்குற. அடையாளம்
தெரியலையா'' அருகே வந்து இவளுடைய கன்னத்தை உருவி வழித்தாள்.
""இன்னுமா தெரியல... யாருன்னு?'' அவள் மீண்டும் கேட்டபோது அதுவரை புருவங்கள் முடிச்சிட்டு நின்ற ரத்னா, லேசாய் மலர்ந்து புரிந்த விதமாய்த் தலையாட்டினாள்.
""தெரியுது. தெரியுதுக்கா... எங்கஇங்க? எப்படி இருக்கீங்க?'' என்றாள்.
""நல்லாயிருக்கேன் கண்ணு.... வீடு எங்க? இங்க பக்கத்துல தான்னு சொன்னேன்ல்ல''
""ஆமாக்கா. அடுத்த சந்து தான். வாங்க... வீட்டுக்கு வந்துட்டு போங்க''
""இருக்கட்டும் கண்ணு. அதுதான் உன்னை இங்க பார்த்தாச்சே''அவள் மீண்டும் ரத்னாவின் முகவாயைத் தொட்டு ஆட்ட, கூச்சமாகச் சிரித்த ரத்னா ""ஐயோ, நல்ல கதையைக் கெடுத்தீங்க. இவ்வளவு தூரம் வந்துட்டு. வாங்க'' அவளை அழைத்துக் கொண்டு வீடு நோக்கி நடந்தாள். எதிரே சைக்கிளில் வந்த பரசு, ""யாரு ரத்னா, உறம்பரையா?''என்றான்.
""ஆமாண்ணா, எங்கக்கா''வீட்டைத் திறந்து, வந்தவளைஉள்ளே அழைத்துச் சென்றாள்.
""யாரு புள்ள அது?'' பவானியின் மாமியார் திண்ணையில் அமர்ந்தபடி கண்ணருகே கைகுவித்துப் பார்த்தது.
""எங்கக்கா பாட்டி, ஊருல இருந்து வந்திருக்கு.. மாசமா இருக்கு''
""கதவை சாத்திடுடா கண்ணு. வெக்கை அடிக்குது''
அந்தக்கா சொன்னதும்,
""எத்தனை மாசம்கா...?'' ரத்னா கதவை சார்த்தி அவளருகே வந்தமர்ந்தாள். இருவரும் சிரிக்கச் சிரிக்கப் பேசியதில் நேரம் சென்றதே தெரியவில்லை. நாலு மணி போல வந்தவள் விடைபெற்றுச் செல்ல, வாசல் வரை சென்று வழியனுப்பிவிட்டு வந்த ரத்னா, இருந்த களைப்பில் நன்றாக உறங்கிப் போனாள்.
""என்ன ரத்னா, உங்கக்கா வந்திருக்காமே. பஸ் ஓடாத ஊருல எப்படிடி வந்தாங்க?'' பவானி வந்து கதவை தட்டியபோதுதான் விழிப்பே வந்தது அவளுக்கு.
சின்னுவும் அவளருகே படுத்துதூங்கிக் கொண்டிருந்தது.
""என்ன புள்ள, எங்க உங்கக்கா?'' என்றாள் பவானி.
""அக்காவா, எந்த அக்கா?''
""எந்த அக்காவா? கிழவி சொன்னுச்சு. உன் வூட்டுக்கு உறம்பரை வந்திருக்குன்னு
உறம்பரையா. அதுயாரு?''தலையை இருகைகளாலும் பிடித்துக் கொண்ட ரத்னா, ""என்னமோ தெரியலக்கா. கண்ணு மயமயன்னு இருக்கு'' என்றாள்.
""ஏதாவது சாப்டியா இல்லையா?'' பவானி கேட்கும்போதே ரத்னாவின் முகம் வெளிறியது.
""க்கா... இங்க வா. புள்ளையோட காதை பாரு, தோட்டைக் காணோம்''
""கீழ விழுந்துடுச்சா என்ன, இருடி. தேடி பார்க்கலாம்'' பதறி அருகே வந்து சின்னுவை பிரட்டி பார்த்த பவானி, ""என்னடிஇது இரண்டு காதுலயும் தோட்டை காணல.கீழ விழுந்திருந்தா இரண்டு காதுல இருந்துமா விழும்?'' இடிந்து போய் இங்கும் அங்கும் தேடிய ரத்னா ஒருகட்டத்தில் நிலைகுலைந்து அமர்ந்தாள்.
வெள்ளி அரைஞாண் கயிறு, பிள்ளையின் கொலுசு, சின்னுவின் புதுச்சட்டைகள், இவளுடைய நான்கைந்து புடவைகள் எனப் பெட்டிக்குள் பூட்டிவைத்திருந்த அத்தனையும் ஒன்றாகவா காணாமல் போகும்?
""யாருடி அது? சொந்தக்காரின்னு சொன்னியாமே.?''
""தெரியலையே. என்னமோ கண்ணைக் கட்டி காட்டுல விட்ட மாதிரி இருக்கு. அந்தப் பொம்பளை என் பக்கத்துல வந்து கன்னத்தை உருவினது வரைக்கும் தான் ஞாபகம் இருக்கு. அதுக்கு மேல கனவு கண்டமாதிரி நிழலா தான் நினைப்பிருக்கு'' என்றவள், தலையில் அடித்துக் கொண்டு புலம்ப ஆரம்பித்தாள்.
""இப்படிக் கூடவா நானா வீட்டுக்கு கூட்டிட்டு வந்து நடுவீட்டுல உட்கார வச்சு எல்லாத்தையும் தூக்கி கொடுப்பேன்?'' என்றவள் "ஓ'வென அழ ஆரம்பிக்க, "மை வைச்சு ரத்னா வீட்டுல எவளோ களவாண்டு போய்ட்டாளாமே?'ஊரே வாசலுக்கு வந்து துக்கம் விசாரித்தது.
""மை போட்டு நம்ம கையாலயே பொருளை எடுத்து கொடுக்க வைக்கிறதுல கில்லாடிங்க இதுங்கல்லாம். ஒரு தரம் பழனி மலை அடிவாரத்துல பஸ்ல பக்கத்துல உட்கார்ந்திருந்தவன் கிட்ட தானே மோதிரம், செயின் எல்லாம் கழட்டி கொடுத்துட்டு வந்தாரு எங்க மாமா. மிலிட்டரிகாரரு அவருக்கே இந்த கதின்னா நீயெல்லாம் எந்த மூலைக்கு? விட்டுத் தள்ளு'' என்றுஆறுதலாகப் பேசி, ""நான் அப்பவே நினைச்சேன்கா.இந்தப் பொம்பளை வந்தப்ப வெறுங்கையோட
வந்துச்சு, போகும்போது பையோட போகுதேன்னு. சரி, ரத்னா தான் பணக்காரியாச்சே. ஏதாச்சும் பெருசா போட்டு கொடுத்துஅனுப்புறான்னு பேசாம இருந்துட்டேன்''
இப்படிவம்பாய்க்கேலி பேசி அக்கம்பக்கம் எல்லாம் விலகிய நேரத்தில், சரவணன் வீட்டுக்குள் நுழைந்தான்.
""இங்க பார்த்தீயா என்ன நடந்து போச்சுன்னு? அரிசி வாங்க கழட்டி கொடுக்க மாட்டேன்னேன், இப்ப எவளோ வந்து எல்லாத்தையும் கொண்டு போய்ட்டாளே'' தன்னைக் கண்டதும் பெரிதாக அழுதவளை, ""ஏ.. செத்த சும்மா இரு. வழியிலேயே பசங்க சொன்னாங்க. போனது போச்சு விடு'' என்றான் அவன் அமைதியாக. அவன் எதுவும் திட்டாமல் அவ்வளவு எளிதாக விட்டு விட்டதே இவளைத் துளைத்தெடுத்தது.
"ஏன்டி இவளே, அரிசி வாங்க கேட்டதுக்கு மாட்டேன்ன?' என்றபடி தன்னை இழுத்துப் போட்டு இரண்டு அடி அடித்தால் கூடத் தேவலாம் போலிருந்தது.
""வேலை ஏதாச்சும் கிடைக்குமான்னு தேடிட்டு போனேன். ஒன்னும் கிடைக்குற பாடா இல்ல. அதுக்குள்ள இங்க இந்தக் கூத்து. சரி, பார்த்துக்கலாம் விடு, நமக்குன்னு ஒரு வழி பொறக்காமலா போகும். சாப்பாடு போடு, பசிக்குது'' குமுறும் நெஞ்சத்துடனும் அதே நேரம் அதை அடுத்தவரிடம் காட்டிக் கொள்ளாத மெளனத்துடனும் இருவரும் சாப்பிட்டு எழுந்தார்கள்.
""இன்னிக்கு தண்ணி பிடிக்கலையா?'' குடத்தைச் சாய்த்து அடியில் இருந்த நீரை மொண்டு குடித்த சரவணன் கேட்டான்.
""அதுக்குப் போகாததாலதான் இத்தனை பிரச்னையும்... இரு பவானிக்கா கிட்ட ஒரு குடம் தண்ணி கேட்டுட்டு வரேன்''
""வேணாம், தொந்தரவு பண்ணாதே... நானே போய் எடுத்துட்டு வந்துடுறேன்'' சரவணன் சைக்கிளை எடுக்க, ""இரு, நானும் வரேன்...'' குடங்களைத் தூக்கிக் கொண்டு இவளும் குழந்தையுடன் கிளம்பினாள். நல்ல தண்ணீருக்கு மஞ்சனத்தி அம்மன் கோயில் வரைக்கும் போக வேண்டும். ஊற்றுநீர் தான். முன்பெல்லாம்தண்ணீர் குளமாகத் தேங்கி இருக்கும். இவர்கள் போன சுருக்கில் மொண்டு கொண்டு வந்து விடுவார்கள். இப்போது வெக்கை கொளுத்துவதில் நீர்வரத்து வறண்டிருந்தது. துளி துளியாய்க் கசியும் நீரைத்தான் காத்திருந்து குடத்தில் நிரப்பிக் கொண்டு வர வேண்டும். என்னமோ, சிறுகச் சிறுக ஊறினாலும், குடிக்கத் தண்ணீர் தருகிறதே, சுற்றிலும் உள்ள போர்வெல்லும், கிணறுகளும் கூட வறண்டு கிடக்க, இந்த ஊற்று மட்டும் ஏதோ தெய்வ சத்தியத்திற்குக் கட்டுப்பட்டது போல ஊறிக் கொண்டிருந்தது. சரவணன் எட்டு அடி பள்ளத்துக்குள் இறங்கி நின்று சொருகி வைத்திருந்த ரப்பர் ட்யூபை குடத்துக்குள் விட்டு அது நிரம்புவதற்காகக் காத்திருக்க, ரத்னா மேட்டில் அமர்ந்து தூரத்து வானைப் பார்த்திருந்தாள். சின்னு சிறுகற்களைப் பொறுக்கி விளையாடிக் கொண்டிருந்தது.
""போனது போயிடுச்சு. அதையே நினைச்சுட்டு அழுவாதடி. சம்பாதிச்சுக்கலாம், விட்டுத்தள்ளு'' என்றான் சரவணன் சூம்பி சிறுத்திருந்தவளின் முகத்தைப் பார்த்து.
""ப்ச்... என்னவோ போ'' என்றவள், ""இல்ல.. நான் தெரியாமத் தான் கேட்குறேன், பச்சைபுள்ளை காதுல கிடந்த தோட்டை கூடக் கழட்டி எடுத்துட்டு போனவ, ஒரு வாய் சாப்பிட்டு போயிருந்தா நானென்ன வேணாம்னா சொல்லியிருக்கப் போறேன். வயித்துப் புள்ளக்காரி ஒரு வாய் கூடப் போட்டுக்காம மத்தியானம் கொளுத்துற வெயில்ல வேகுவேகுன்னு ஓடிட்டாளே, பாவி.. படுபாவி''தன்போக்கில் புலம்பியவளை ஒருகணம் கண்ணெடுக்காமல் பார்த்த சரவணன் லேசாய்ச் சிரித்துக் கொண்டே குனிந்து குடத்தைப் பார்த்தான்.
குடம் துளித்துளியாய் நிரம்பிக் கொண்டிருக்க, ஊற்று நீர் முன்பை விடச் சற்றுவேகமாய்ச் சுரந்து வழிவதைப் போலிருந்தது அவனுக்கு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com