12 வயதில் 9 நூல்கள்!

பத்து வயதிலேயே கவிதை எழுதுவதில் சாதனை படைத்து, மதிப்புறு முனைவர் பட்டமும் பெற்றுள்ளார், வாழப்பாடி அருகே அரசுப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வரும் மாணவர் மதுரம் ராஜ்குமார்.
12 வயதில் 9 நூல்கள்!
Updated on
2 min read


பத்து வயதிலேயே கவிதை எழுதுவதில் சாதனை படைத்து, மதிப்புறு முனைவர் பட்டமும் பெற்றுள்ளார், வாழப்பாடி அருகே அரசுப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வரும் மாணவர் மதுரம் ராஜ்குமார். இவர் தனது 12 வயதுக்குள் 9 புத்தகங்களை எழுதியுள்ளதன் மூலம் 36 விருதுகளைப் பெற்றுள்ளார்.

 சேலம் மாவட்டம், வாழப்பாடியை அடுத்த முத்தம்பட்டியைச் சேர்ந்த தனியார் பால்பண்ணை நிறுவன ஊழியர் செல்வகுமார் - விஜயலட்சுமி தம்பதியின் மகன் மதுரம் ராஜ்குமார் . இவர் வாழப்பாடியை அடுத்த மேட்டுப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். 

பொம்மைகளோடு விளையாடி பொழுது போக்கும் இந்த வயதிலேயே கவிதை எழுதும் தனித்திறன் ஏற்பட்டு விட்டது மதுரம் ராஜ்குமாருக்கு. இச்சிறுவனின் ஆற்றலைக் கண்டறிந்த பெற்றோரும், ஆசிரியர்களும் ஊக்கமளித்தனர். அதன் காரணமாக 4-ஆம் வகுப்பு படிக்கும்போதே பள்ளி, மகிழ்ச்சி, கோபம், பட்டம் உள்ளிட்ட 55 தலைப்புகளில் ரத்தினச் சுருக்கமாய் பல கவிதைகளைப் படைத்துள்ளார்.

இச்சிறுவனின் சிந்தையில்  உதித்த கவிதைகளை சேகரித்த இவரது பெற்றோர், "நல் விதையின் முதல் தளிர்' என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டனர். இந்நூலுக்கு  பலரது பாராட்டுகளும்,  விருதுகளும் குவிந்தன. 

இச்சிறுவனின் திறனறிந்த "யுனிவர்சல் அச்சீவர்ஸ் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்' என்ற நிறுவனம், கவிதை எழுதுவதில் இதுவரை எந்தச் சிறுவனும் நிகழ்த்தாத உலகச் சாதனையை நிகழ்த்திட, வாழப்பாடி அரசு தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பயின்றபோது மதுரம் ராஜ்குமாருக்கு அழைப்பு விடுத்தது. 

அதன்படி, 2018 டிச.11-ஆம் தேதி  காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாழப்பாடியில் தொடர்ந்து 10 மணி நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து, பிறர் கொடுத்த பல்வேறு தலைப்புகளில் 173  கவிதைகளை எழுதி சாதனை படைத்தார். அரசு அலுவலர்கள், கவிஞர்கள், இலக்கிய அமைப்பினர் பலரும் இச்சிறுவனைப் பாராட்டினர். 

இதையடுத்து, 2020- இல் மகாகவி பாரதியின் "புதிய ஆத்திசூடி' 110 வரிகளுக்கும் கவிதை எழுதி, "பாரதியார் ஆத்திச்சூடி- மதுரம் கவிதைகள்' என்ற நூலையும், திருக்குறளின் 133 அதிகாரத்துக்கும் ஒரு கவிதை எழுதி "திருக்குறள் - மதுரம் கவிதைகள்' என்ற நான்காவது நூலையும் மதுரம் ராஜ்குமார் வெளியிட்டார்.

அப்துல் கலாம் நினைவாக  "காலத்தை வென்ற கலாம்' என்ற தலைப்பில் இச்சிறுவன் எழுதிய கவிதை நூல், அண்மையில் "எழுதுக' அமைப்பின் வாயிலாக, தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற விழாவில், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியால் வெளியிடப்பட்டது.

விடுமுறை தினங்களில் இலக்கிய அமைப்புகள் நடத்தும் விழாக்களில் பங்கேற்று கவிதை பாடிவரும் இச்சிறுவனுக்கு வாழப்பாடி இலக்கியப் பேரவை இளம்கம்பன் விருது வழங்கியுள்ளது. 

இச்சிறுவனின் கவிப்புலமை கண்ட சர்வதேச தமிழ்ப் பல்கலைக்கழகம், 2019 ஏப். 14 -ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற விழாவில் மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கியது. 

தமிழ்த் தொலைக்காட்சிகள், பண்பலைகளில் மட்டுமின்றி, சமூக ஊடகங்களிலும் வெகு பிரபலமாகிவிட்ட இச்சிறுவனின் அபரிமித கவியாற்றலும், ஆர்வமும், மன உறுதியும், பன்னாட்டு அளவில் கவனத்தை ஈர்த்துள்ளன.  

மேலும், "ஒளவையார்- ஆத்திச்சூடி கவிதைகள்', "ஆகாய நெரிசலில் பட்டம்' (சிறார் பாடல்கள்), "இரவோடு நிற்காத வானம்' (கவிதைகள்), "குறைவென்பது குற்றமல்ல' (சிறுகதைகள்) உள்பட இதுவரை மொத்தம் 9 நுôல்களை மதுரம் ராஜ்குமார் எழுதியுள்ளார்.  

12 வயதுக்குள் பல்வேறு இலக்கிய அமைப்புகளின் வாயிலாக 36 விருதுகளை இவர் பெற்றுள்ளார். இச்சிறுவனைப் பற்றி அறிந்த சேலம் மண்டல தமிழ் வளர்ச்சித் துறை துணை இயக்குநர் பவானி, சேலம் மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம் ஆகியோர் நேரில் அழைத்துப் பாராட்டினர்.  

""எனது பெற்றோரும் ஆசிரியர்களும் கொடுத்த ஊக்கத்தால் எனது எண்ணத்தை கவிதையாக எழுதும் திறனைப் பெற்றேன்.  கவிதையில் மட்டுமின்றி கல்வியிலும் சாதிப்பதே என் எதிர்கால லட்சியம்'' என்கிறார் மதுரம் ராஜ்குமார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com