அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 86

அன்று இரவு பெங்களூரிலிருந்து சென்னை செல்லும் சென்னை மெயிலில் திரும்பிக் கொண்டிருந்தபோது, எனது நினைவு ஆர்.கே. தவாண் சொன்ன  செய்தியைத்தான் அசைபோட்டுக் கொண்டிருந்தது.

News image
Updated On :30 ஏப்ரல் 2022, 3:05 pm

அன்று இரவு பெங்களூரிலிருந்து சென்னை செல்லும் சென்னை மெயிலில் திரும்பிக் கொண்டிருந்தபோது, எனது நினைவு ஆர்.கே. தவாண் சொன்ன செய்தியைத்தான் அசைபோட்டுக் கொண்டிருந்தது. சென்னா ரெட்டி குறித்து அவர் தெரிவித்த கருத்துகளை முற்றிலுமாகப் புறந்தள்ளிவிட முடியாது என்பதை நான் உணர்ந்தேன்.

முதல்வர் ஜெயலலிதாவின் ஆத்திரத்துக்கும், எதிர்வினைக்கும் இரண்டு காரணங்கள் இருப்பதாகத் தெரிவித்தார் ஆர்.கே. தவாண்.

ம.நடராஜனுடனான ஆளுநர் சென்னா ரெட்டியின் சந்திப்பு மட்டுமே அதற்குக் காரணமல்ல. அதற்கு முன்பு ஆளுநருக்கும் முதல்வர் ஜெயலலிதாவுக்கும் இடையேயான சந்திப்புகளும் காரணம் என்பதை ஆர்.கே. தவாண் சொன்னதிலிருந்து நான் புரிந்து கொண்டேன்.

ஜெயலலிதாவைக் கலந்தாலோசிக்காமல் பீஷ்ம நாராயணன் சிங்கை அகற்றிவிட்டு, சென்னா ரெட்டியை ஆளுநராக நியமித்தபோதே, பிரச்னை தொடங்கிவிட்டது. முதல்வர் ஜெயலலிதா - ஆளுநர் சென்னா ரெட்டியின் முதல் அதிகாரப்பூர்வச் சந்திப்பே, அவர்களுக்கிடையேயான மனக்கசப்பின் ஆரம்பம் என்று தெரிவித்தார் ஆர்.கே. தவாண். ஆளுநர் டாக்டர் மாரி சென்னா ரெட்டி தான் ஆந்திராவில் அமைச்சராகவும், முதல்வராகவும் இருந்தபோது அவருடனான சந்திப்புகள், நிகழ்ச்சிகள் குறித்துப் பேசத் தொடங்கியதை முதல்வர் ஜெயலலிதா ரசிக்கவில்லை.

அதன் பிறகு நடந்த முதல்வர் - ஆளுநர் சந்திப்புகளின் போதெல்லாம், ஏதாவது சந்தர்ப்பத்தில் ஜெயலலிதா நடிகையாக இருந்ததையும், அப்போது தான் முதல்வராக இருந்ததையும் ஆளுநர் சென்னா ரெட்டி நினைவுகூர்வதும், முதல்வர் ஜெயலலிதா எரிச்சல் அடைவதும் வழக்கமாக இருந்தது என்பதை, அன்றைய ஆளுநர் மாளிகை அதிகாரிகள் கூறக் கேட்டிருக்கிறேன். ஆர்.கே. தவாண் தெரிவித்த கருத்துடன் அவை ஒத்துப்போவதிலிருந்து, அதில் உண்மை இருக்க வேண்டும் என்றுதான் தோன்றுகிறது.

நடராஜன் - சென்னா ரெட்டி சந்திப்பால் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது என்று ஆர்.கே. தவாண் சொன்னதற்கும் முகாந்திரம் இருக்கிறது. ஏற்கெனவே தன்னுடன் முரண்பட்டிருக்கும் ஆளுநர் சென்னா ரெட்டியை எதற்காக நடராஜன் ரகசியமாக சந்தித்தார் என்று முதல்வர் சந்தேகப்பட்டிருக்கலாம். அல்லது, நடராஜனுக்கும் முதல்வருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவியதாகக் கூறப்பட்ட நிலையில், ஆளுநர் சென்னா ரெட்டி அவரை சந்தித்ததும் ஜெயலலிதாவின் அச்சத்துக்கும் ஆத்திரத்துக்கும் காரணமாக இருந்திருக்கலாம்.

அதையெல்லாம் யோசித்தபடியே நான் தூங்கி விட்டேன். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இறங்கி வீட்டுக்குச் செல்லும்போது மறந்தே போயிருந்தேன். தொடர்ந்து பத்திரிகை அலுவல்களில் மூழ்கி விட்டதால், யாரையும் சந்திக்கும் வாய்ப்பும் ஏற்படவில்லை.

1994-இல் ஒன்றன் பின் ஒன்றாக நடந்த நிகழ்வுகளை இப்போது நினைத்தாலும் அரசியல் ஆய்வாளர்கள் திகைத்துத்தான் போவார்கள். ஆளுநர் - முதல்வர் மோதல் என்பது அவற்றில் ஒன்று, அவ்வளவே. சட்டப் பேரவை பெரும்பான்மை தனக்குத் தந்திருக்கும் அதிகாரங்களை எல்லாம் பயன்படுத்தி, ஆளுநர் சென்னா ரெட்டிக்கு எதிராக முதல்வர் ஜெயலலிதா மேற்கொண்ட தாக்குதல்கள் அனைத்தையும், சென்னா ரெட்டி கொஞ்சம்கூட அலட்டிக் கொள்ளாமல் எதிர்கொண்டதுடன், முறியடித்தார் என்பதுதான் நிஜம்.

Story image

திமுகவில் ஏற்பட்ட பிளவு, அந்தக் கட்சியை நிலைகுலைய வைத்திருந்தது. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொடக்கமும், அந்தக் கட்சி சென்னையில் நடத்திய பிரம்மாண்டமான பேரணியும் வை. கோபால்சாமியை முன்னணித் தலைவர்களில் ஒருவராக அடையாளம் காட்டி இருந்தன. இளைஞர்கள் மத்தியில் அவருக்கு இருந்த வரவேற்பும், மதிமுகவுக்கு மக்கள் மன்றத்தில் உருவான வரவேற்பும் திமுக, அதிமுக கட்சிகளுக்கு மட்டுமல்ல, தேசிய கட்சியான காங்கிரஸூக்கும் அச்சத்தை ஏற்படுத்தியது.

திமுக, அதிமுகவின் அச்சத்துக்குக் காரணம் மாநில அரசியலில் தங்களுக்கு எதிராக மூன்றாவது திராவிடக் கட்சி உருவாகிறது என்கிற கவலை மட்டும்தான். ஆனால், மதிமுகவின் வெளிப்படையான விடுதலைப் புலிகள் ஆதரவும், பிரபாகரனை முன்வைத்து அந்தக் கட்சி முன்னெடுக்கும் பரப்புரைகளும் மத்திய ஆளும்கட்சியான காங்கிரஸின் கவனத்தை ஈர்த்தன. ஏற்கெனவே ராஜீவ் காந்தி படுகொலையின் பின்னணியில், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான இயக்கம் ஒன்று தமிழகத்தில் தலைதூக்குவதன் ஆபத்தை பாதுகாப்பு அமைப்புகள் மத்திய அரசுக்கு உணர்த்தின.

இந்த அரசியல் பரபரப்புகள் எல்லாம் போதாதென்று, எதிர்பாராத விதமாக இன்னொரு பரபரப்பு தமிழகத்தைத் திகைக்க வைத்தது. ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி என்று அறியப்பட்ட சசிகலாவின் சகோதரி மகன் டி.டி.வி. தினகரன் மீது அந்நியச் செலாவணி ஒழுங்காற்றுச் சட்டத்தின் கீழ் (ஃபெரா) வழக்குப் பதிவு செய்யப்பட்டபோது, முதல்வர் ஜெயலலிதாவை மட்டுமல்ல, அனைத்து அரசியல்வாதிகளையும் அந்த நடவடிக்கை நிலைகுலைய வைத்தது.
ஊழல் பணத்தை "ஹவாலா' முறையில் வெளிநாடுகளில் பதுக்கி வைப்பது, முதலீடு செய்வது என்பது ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் எல்லா அரசியல்வாதிகளும் (ஒரு சிலரைத் தவிர) கையாண்டு வரும் நடைமுறை. அதன்மூலம் வருமான வரித்துறை சோதனைகளில் சிக்கிக் கொள்ளாமல் அவர்களால் தப்பிக்க முடிகிறது.

விர்ஜின் தீவுகளில் உள்ள பார்க்லேஸ் வங்கியின் டிப்லர் இன்வெஸ்ட்மென்ட்ஸ் என்கிற நிறுவனத்தில் சுமார் 1 கோடி டாலர் முதலீடு செய்தார் என்றும், அயர்லாந்திலுள்ள வெஸ்ட் பேங்க் மூலம் 45 லட்சம் பவுண்டு முதலீடு செய்தார் என்றும் அவர்மீது அந்நியச் செலாவணிச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் அவர் கைதும் செய்யப்பட்டார். ஏறத்தாழ 30 ஆண்டுகாலமாகியும் இன்னும்கூட அந்த வழக்கு முடிந்தபாடில்லை.

எனது "நியூஸ்கிரைப்' அலுவலகம் அப்போது சென்னை உஸ்மான் சாலையில் உள்ள சுந்தரம் காம்ப்ளெக்ஸ் கட்டடத்தின் இரண்டாம் மாடியில் இயங்கி வந்தது. அதனால் தினமும் மாலையில், வெங்கட்நாராயணா சாலையில் உள்ள நடேசன் பூங்காவில் நான் நடைப்பயிற்சிக்கு செல்வது வழக்கம். அதில் எனக்குப் பல பிரபலங்களுடன் அறிமுகம் ஏற்படவும், நெருங்கிப் பழகவும் வாய்ப்பும் கிடைத்தது.

குறிப்பிட்டுச் சொல்வதாக இருந்தால், காமன்வீல் கட்சி நிறுவனரும், ராஜாஜி, காமராஜர் ஆட்சியில் அமைச்சராக இருந்தவருமான எம்.ஏ. மாணிக்கவேலு நாயக்கரை சந்திக்கும் வாய்ப்பை நடேசன் பூங்காதான் எனக்கு ஏற்படுத்திக் கொடுத்தது. இரண்டு உதவியாளர்களுடன் அவர் தினமும் மாலையில் நடைப்பயிற்சிக்குப் பூங்கா வருவார். அப்போதே அவருக்கு வயது 100.

1952-இல் எந்தக் கட்சிக்கும் அன்றைய சென்னை ராஜதானியில் பெரும்பான்மை பலம் இருக்கவில்லை. ஆந்திரா, கேரளாவின் மலபார் பகுதிகள் அப்போது சென்னை ராஜதானியில் இருந்ததால், கம்யூனிஸ்ட் கட்சி கணிசமான இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. அதிக இடங்களில் வென்றிருந்தாலும் தனிப்பெரும்பான்மைக்கான பலம் காங்கிரஸூக்கு இருக்கவில்லை.

Story image

அன்றைய வட ஆற்காடு மாவட்டத்தில் எம்.ஏ. மாணிக்கவேலு நாயக்கரின் காமன்வீல் கட்சி ஆறு இடங்களிலும், தென்னாற்காடு மாவட்டத்தில் ராமசாமி படையாச்சியின் உழவர் உழைப்பாளர் கட்சி 19 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தன. ஐந்து இடங்களில் முஸ்லிம் லீக் கட்சி வெற்றி பெற்றிருந்தது. இந்தக் கட்சிகள் காங்கிரஸூக்கு ஆதரவுதர மறுத்துவிட்டன. அப்படிப்பட்ட சூழலில்தான், கவர்னர் ஜெனரலாக இருந்து ஓய்வு பெற்று, குற்றாலத்தில் தனது நண்பர் "ரசிகமணி' சிதம்பரநாத முதலியாரின் வீட்டில் தங்கியிருந்த ராஜாஜி, காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்த காமராஜரால் அழைத்துவரப்படுகிறார்.

இந்த இடத்தில் ஒரு வரலாற்றுப் பதிவு தேவைப்படுகிறது. குற்றாலத்தில் ராஜாஜியை சந்தித்து காங்கிரஸ் ஆட்சி அமைக்க உதவுமாறு கேட்டுக்கொள்ள காமராஜருடன் சென்றவர், "தினமணி' முன்னாள் ஆசிரியரும், சட்டப்பேரவை உறுப்பினருமான டி.எஸ். சொக்கலிங்கம். ராஜாஜி முதல்வராகப் பொறுப்பேற்பதாக இருந்தால், மாணிக்கவேலு நாயக்கர், ராமசாமி படையாச்சி இருவரும் காங்கிரûஸ ஆதரிக்கக்கூடும் என்பது அவர்கள் எதிர்பார்ப்பாக இருந்தது.

கவர்னர் ஜெனரலாக இருந்த பிறகு தான் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவது சரியாக இருக்காது என்று கூறி, அவர்களது வேண்டுகோளை ராஜாஜி நிராகரித்தார். அவர் மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்படுவதன் மூலம் தேர்தலில் நிற்பதைத் தவிர்க்க முடியும் என்று யோசனை கூறியவர் "ரசிகமணி'. அதை காமராஜரும், டி.எஸ். சொக்கலிங்கமும் வழி மொழிந்தனர்.

""அப்போதும்கூட ராஜாஜிக்கு முதல்வர் பதவியை ஏற்றுக்கொள்வதில் தயக்கம் இருந்தது. நானும் பக்தவத்சலமும் தனித்தனியாக அவரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டும் ராஜாஜி சம்மதிக்கவில்லை. அவரை சம்மதிக்க வைத்தவர் யார் தெரியுமா? ஜவாஹர்லால் நேரு!'' - பின்னொரு நாளில் எனக்கு அளித்த பேட்டியில் இப்படித் தெரிவித்தவர் "பாரத் ரத்னா' சி. சுப்பிரமணியம்.

மொழிவாரியாக சென்னை ராஜதானி பிரிக்கப்பட்டு ஆந்திர மாநிலம் உருவாக வேண்டும் என்று கோரி, காங்கிரஸிலிருந்து பிரிந்து கிஸான் மஸ்தூர் பிரஜா கட்சியைத் தொடங்கி இருந்தார் "ஆந்திர கேசரி' டி. பிரகாசம் காரு. அவரது தலைமையில், குறைந்தபட்ச செயல் திட்டத்தின் அடிப்படையில் கம்யூனிஸ்டுகள் அடங்கிய ஐக்கிய ஐனநாயக முன்னணி உருவாகி இருந்தது. காங்கிரûஸ அகற்றி நிறுத்தி, அனைத்துக் கட்சிகளும் அடங்கிய அந்தக் கூட்டணிக்கு 375 இடங்களைக் கொண்ட சட்டப்பேரவையில் 166 இடங்கள் இருந்தன.

அதிக எண்ணிக்கை பலம் கொண்ட கூட்டணி என்கிற அடிப்படையில் தன்னை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்பது ஆளுநருக்கு டி. பிரகாசம் விடுத்த கோரிக்கை. அவர்களை ஆட்சி அமைக்க அனுமதித்தால், அவர்களாகவே பிளவுபட்டு கூட்டணி ஆட்சி கவிழும் என்றுகூடக் காமராஜர் நினைத்தார் என்று சொல்வார்கள். அதற்கு அனுமதிக்கக் கூடாது என்று காமராஜரைத் தடுத்தவர், இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும நிறுவனர் ராம்நாத் கோயங்கா.

ராஜாஜி சென்னைக்கு வந்தார் என்றபோதே காட்சிகள் மாறத் தொடங்கிவிட்டன. அதிக எண்ணிக்கையுடைய கட்சி என்கிற அடிப்படையில் ஆளுநர் ஸ்ரீ பிரகாசா ஆட்சி அமைக்க ராஜாஜிக்கு அழைப்பு விடுத்தார். மாணிக்கவேலு நாயக்கரும், ராமசாமி படையாச்சியும் ஐக்கிய ஜனநாயக முன்னணியைக் கைவிட்டு ராஜாஜி தலைமையிலான ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்தனர். முஸ்லிம் லீக்கும் ராஜாஜிக்கு ஆதரவு தெரிவித்தது. ஆட்சி அமைந்தது.

நான் சந்திக்கும்போது மாணிக்கவேலு நாயக்கர் அதிகம் பேசும் நிலையில் இருக்கவில்லை. ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசுவார். உரக்கச் பேசினால்தான் அவருக்கு கேட்கும். அவர் என்னிடம் திரும்பத் திரும்பச் சொன்ன வார்த்தைகள் இவை - ராஜாஜி பெரிய தலைவர்; ராஜாஜி அல்ல, ராஜரிஷி.

நடேசன் பூங்காவில் நான் சந்தித்த ஏனைய இரண்டு முக்கிய ஆளுமைகள் இயக்குநர் "முக்தா' சீனிவாசனும், சென்னையின் முன்னாள் மேயரும், தி.நகர் சட்டப்பேரவைத் தொகுதியின் முன்னாள் உறுப்பினருமான சா. கணேசனும். முன்னவர் பழுத்த காங்கிரஸ்காரர் என்றால் பின்னவர் தீவிர திராவிடப் பற்றாளர்.

நாங்கள் மூவரும் நடைப் பயிற்சிக்குப் பிறகு ஒரு பெஞ்சில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். அப்போது தினகரன் மீதான வழக்கு குறித்து "முக்தா' சீனிவாசன் பேச்சை எடுத்தார். "நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?' என்று கேட்ட எனக்கு அவர் சொன்ன பதில் இதுதான்:

""இலக்கு தினகரன் அல்ல. நல்ல திரைக்கதைபோல ஜெயலலிதாவுக்கு எதிரான சதிவலை பின்னப்படுகிறது. அதைப் புரிந்து கொள்ளாமல் அவர் செயல்படுகிறார்.''

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.