

நாகரிகம் இல்லாமல் பிரபலங்களின் அந்தரங்கத்தைக் காட்சிப்படுத்துவது வெளிநாடுகளில் சர்வ சாதாரணமாக நடக்கிறது.
இந்தியாவிலும் பாலிவுட் நடிகர்களின் வாழ்க்கையைப் படம் போட்டுக் காட்ட அவர்களைப் பின் தொடர்ந்து ஜிம், ஹோட்டல்.. என ஆரம்பித்து நடிகர்களின் உறவினர்கள் வீடுகள் வரை கேமிராவை நுழைக்கத் துடிக்கும் கலாசாரம் உருவாகியிருக்கிறது.
இந்த அநாகரிகக் கலாசாரத்தின் நீட்சியாக நாள் முழுவதும் பிரபலங்களின் அன்றாட வாழ்க்கையைப் பற்றி வதந்திகளை மட்டுமே பரப்பி யூ டியூப், ஃபேஸ் புக், இன்ஸ்டாகிராம் போன்ற வலைதளச்செயலிகள் மூலமாக வருவாய் ஈட்டுபவர்கள் அதிகம்.
பிரிட்டன் இளவரசி டயானாவின் மரணம் இவற்றிற்கெல்லாம் முன்னோடி எனச் சொல்லலாம். டயானா தன் நண்பருடன் காரில் சென்றபோது அவரைத் துரத்திப் போட்டோ எடுத்து அதைப் பத்திரிகையில் வெளியிடத் துடித்த போட்டோகிராபர்களுக்கு பயந்து, டயானாவின் கார் ஓட்டுநர் காரை வேகமாகச் செலுத்தியதால் விபத்துக்குள்ளாகி இறந்து போனார்.
சமூக வலைதளங்களும் எல்லோர் கைகளிலும் எளிதாகக் கிடைக்கும் இணையம் மற்றும் செல்போன் கேமராக்களும் இந்த நேர்மையற்ற, தனிமனித சுதந்திரத்துக்கு எதிரான, மனிதத் தன்மையற்ற செயல்களை மிகச் சாதாரணமாக்கியிருக்கின்றன. சமூகம் அடுத்தவரின் அந்தரங்கத்தை எட்டிப் பார்ப்பதை வேக வேகமாக செய்துகொண்டிருக்கிறது.
மேலோட்டமாகப் பார்த்தால் இவையெல்லாம் வெறும் பொழுதுபோக்கு போல் தெரிந்தாலும் அடிப்படையில் பிரபலங்களின் வசதியான வாழ்க்கை மற்றும் புகழைப் பார்த்துக் காழ்ப்புணர்ச்சி கொள்பவர்களே அதிகம்.
தனிப்பட்ட குரோதத்துக்காக அவ்வாறு செய்பவர்களைத் தாண்டி, இன்று பணத்துக்காகப் பிரபலங்களைக் குறிவைப்பது மோசம். இதன் மூலம் சம்பந்தப்பட்டவர்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்கி வீட்டில் முடங்கிப் போகச் செய்வதே முதன்மை நோக்கம். பிரபலமாக இருப்பதாலேயே ஒருவருடைய வாழ்க்கையைப் பற்றிப் பொது வெளியில் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்று உரிமை எடுத்துகொள்வதும் வன்முறை.
எதிர்காலத்தில் சில பல குழப்பங்களைத் தடுப்பதற்காக தங்களுடைய திருமணம், விவாகரத்து, உடல் நலம் தொடர்பான விஷயங்களைப் பொது வெளியில் தன் ரசிகர்களுக்குச் சொல்வதைக் கடமை என்று பிரபலங்கள் நினைக்கின்றனர். ஆனால் பல சமயங்களிலும் அதைத் தவறாகப் பயன்படுத்தும் சமூக வலைதளத்தினர் பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்விற்குக் கருத்துச் சொல்ல ஆரம்பித்து விடுகின்றனர்.
நடிகை சமந்தா நாக சைதன்யாவைத் திருமணம் செய்து கொண்டபோதும், பிறகு அவரை விவாகரத்து செய்தபோதும் இரண்டு முடிவுகளுமே பணத்துக்காகத்தான் எடுக்கிறார் என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டவர்கள் பலர்.
குறிப்பாக, சமந்தா கணவரைப் பிரியும்போது அவரது உடைகளையும் நடிப்புத் தொழிலையும் வைத்து ஒழுக்க ரீதியாகத் தூற்றப்பட்டார். அதே போல் நடிகர் தனுஷ் தானும் தன் மனைவி ஐஸ்வர்யாவும் விவாகரத்துச் செய்வதாகவும், இனி நண்பர்களாகத் தொடர இருப்பதாகவும் ட்விட்டரில் அறிவித்தார். அதோடு இதுபற்றி மேற்கொண்டு யாரும் பேச வேண்டாம் எனவும் தங்களுக்கான பிரைவேட் ஸ்பேஸைக் கொடுக்குமாறும் நேரடியாகக் கேட்டுக் கொண்டார். ஆனால் அதெல்லாம் நம் இணைய வாசிகளிடம் எடுபடவில்லை. வயதுவந்த இருவர் திருமணம் செய்வதும் பிரிவதும் அவர்களது தனிப்பட்ட முடிவு. ஆனால் பலரும் இணையத்தில் தனுஷின் மாமனாரான நடிகர் ரஜினிகாந்த்தை டேக் செய்து அறிவுரை கூறியது அநாகரிகத்தின் உச்சம்.
பிரபலங்களின் பக்கங்களில் கேள்வி கேட்பவர்கள், ட்ரோல் செய்பவர்கள் ஒரு பக்கம் என்றால், யூ டியூபில் பத்திரிகையாளர்கள் என்கிற பெயரில் திரைப்பட நடிகர்களைப் பற்றிய அவதூறுகளை, வதந்திகளைப் பரப்புவர்கள் தற்போது உருவாகியுள்ளனர். இவர்களால் சம்பந்தப்பட்ட பலரும் குறிப்பாக நடிகைகள் மன உளைச்சலுக்குத் தொடர்ந்து ஆளாகி வருகின்றனர். இதற்குப் பின்னால் சம்பந்தப்பட்ட நடிகைகளிடம் பணம் பறிக்கும் நோக்கம் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின்றன. ஆனால் இந்த இணைய வன்முறையாளர்களைக் கண்டித்தால் கருத்துச் சுதந்திரம் பற்றி வகுப்பெடுக்கும் போலி முற்போக்காளர்களும் நம்மிடையே உண்டு.
இது போல் சமூக நலனுக்கு எதிராகச் செயல்படுபவர்களைப் பற்றிச் சமூக செயற்பாட்டாளர்கள் காவல் துறையில் புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது வருத்தத்திற்குரியது. டீசல், சமையல் எரிவாயு விலையேற்றம், டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு குறைந்துகொண்டே வருவதைப் பற்றியும் பேச வேண்டிய சூழலில் அதை மடைமாற்றம் செய்ய பிரபலங்களின் டேட்டிங்கைப் பற்றி இணையம் பேசிக் கொண்டிருக்கிறது. நடிகையுடன் டேட்டிங் சென்றதாக ஒருவர் ட்விட்டர் பக்கத்தில் படங்களுடன் வெளியிட்டிருந்த செய்திதான் இணையத்தின் ட்ரெண்டிங் டாப்பிக். செய்தியும் படங்களும் வெளியிட்டது ஒரு பிரபலம் என்றாலும் இணையம் சுஷ்மிதாவைத்தான் குறிவைத்துத் தாக்குகிறது.
தன்னைவிட வசதி படைத்த ஒருவரை ஒரு பெண் காதலித்தால் அல்லது திருமணம் செய்துகொள்ள விளைந்தால் அவரது காதல் முழுக்க முழுக்க பணத்துக்காக மட்டுமே என்பதன் பின்னால் இருக்கும் உளவியல், நுணுக்கமாகப் பெண்களின் பொருளாதார சுதந்திரம் சார்ந்தது. வசதி படைத்த பெண் ஏழை ஆணைக் காதலிப்பதே உண்மைக்காதல் என்றும் வசதியான ஆணைத் தேடிவரும் பெண்கள் பணத்துக்காக மட்டுமே வருவார்கள் என்றும் மக்களின் மனதில் ஆழமாகப் பதியச் செய்த கொடுங்காரியத்தில் திரைப்படங்களின் பங்கு அதிகம்.
ரஜினிகாந்தின் இளைய மகள்தனது மகனை மண மேடையில் வைத்துக்கொண்டே திருமணம் செய்யும்போது, இரண்டாவது திருமணத்தை இவ்வளவு வெளிப்படையாகச் செய்ய வேண்டுமா என கேள்வி கேட்டவர்கள் அதிகம். பொருளாதார ரீதியாக தன்னைவிட வசதி குறைந்த ஆணை ஒரு பெண் காதலித்துத் திருமணம் செய்து கொள்ளும்போது அந்தத் திருமணத்தில் ஆண் அடிமையாக இருப்பான் என இணையமும் பொதுச் சமூகமும் கேலி செய்கிறது.
அதற்கு உதாரணம், சமீபத்தில் நடந்த நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமணம். அவர்கள் லிவ்-இன் உறவிலிருந்த காலம் முழுவதும் திருமணம் செய்துகொள்ளாமல் சேர்ந்து வாழ்வது தவறானது எனச் சமூக வலைதளங்களில் இருவரும் தூற்றப்பட்டார்கள். திருமணத்தன்று விக்னேஷ் சிவன் பணத்துக்காகத் திருமணம் செய்துகொண்டார் என்பதில் தொடங்கி, நயன்தாரா உடனடியாகக் குழந்தை பெற்றுக்கொள்வாரா அல்லது நடிப்பைத் தொடருவாரா என்பதுவரை அவர்களது சமூக வலைதள கணக்குகளில் நேரடியாக டேக் செய்து கேள்வி கேட்டிருக்கிறார்கள் சமூக வலைதள ஆர்வலர்கள். தங்கள் திறமைகளை வெளிக்கொண்டு வர இணையம் பெரும் உதவியாக இருக்கும் என நம்பி உள்நுழையும் எந்தப் பின்புலமும் இல்லாத சாதாரண பெண்களை இந்த ட்ரோல்கள் அச்சமூட்டி மீண்டும் வீட்டுக்குள் ஒளிந்து கொள்ளச் செய்கின்றன.
பூனைக்கு யார் மணி கட்டுவது...?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.