ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 127

எங்கேதான் போனார் வி.பி. சிங்? அவர் ஏன் திடீரென்று தலைமறைவாக வேண்டும்?

News image
Updated On :27 பிப்ரவரி 2023, 11:35 am

எங்கேதான் போனார் வி.பி. சிங்? அவர் ஏன் திடீரென்று தலைமறைவாக வேண்டும்? - தில்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக வலம் வந்து கொண்டிருந்தன இந்தக் கேள்விகள். அவரது வீட்டில் காத்திருந்த சந்திரபாபு நாயுடுவும், லாலு பிரசாத் யாதவும் பொறுமை இழந்தனர். தமிழக முதல்வராகி இருந்த திமுக தலைவர் கருணாநிதிதான் அவர்களை அமைதி காக்க வைத்தார் என்று சொல்லப்பட்டது.

இதுபோன்ற நேரங்களில், என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள நான் தொடர்பு கொள்ளும் இடம் துக்ளக் சாலையில் உள்ள அஜித் சிங்கின் வீடு. 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பாக்பத் தொகுதியிலிருந்து, காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்றிருந்த அவரது வீட்டில் தொண்டர்கள் குவிந்திருந்தனர். 

அந்தப் பரபரப்புக்கு இடையிலும் அவரை சந்திக்க முடிந்தது எனது அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும்.

அவரது வெற்றிக்கு வாழ்த்துக் தெரிவித்த பிறகு, மெதுவாகப் பேச்செடுத்தேன். "எங்கே சென்றிருப்பார் வி.பி. சிங்?''

கலகலவென்று சிரித்துவிட்டார் அஜித் சிங்.

"வி.பி. சிங்கை நீங்கள் குறைவாக எடைபோட்டு விடாதீர்கள். தனது இமேஜுக்கு பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பார். சந்திரபாபு நாயுடுவும், கருணாநிதியும் அவரை ஆதரித்தாலும், லாலுபிரசாத் யாதவும், முலாயம்சிங் யாதவும் அவரை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். காங்கிரஸ் நிச்சயமாக ஆதரவு தராது. பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு அவமானப்படுவதைவிட, கெளரவமாக விலகி நிற்பது மேல் என்று நினைப்பார் அவர்.''

"ஜோதிபாசு இல்லை என்றாவிட்டது. வி.பி. சிங்கும் இல்லையென்றால், மூன்றாவது அணியின் பிரதமர் வேட்பாளர் வேறு யாராக இருக்க முடியும்?''

"யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். காங்கிரஸின் தயவில் அமையப் போகும் ஆட்சியில் யார் பிரதமராக இருந்தால்தான் என்ன? நாங்கள் சொல்வதுபோல நடப்பது வரை ஆட்சி இருக்கும். இல்லையென்றால் கவிழும்... 
அவ்வளவுதானே...''

"அதிருக்கட்டும், வி.பி. சிங் எங்கேதான் போயிருப்பார்?''

"உங்களுக்குக் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டுமானால், நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டியவர் ரபி ரே. வி.பி. சிங்கின் நம்பிக்கைக்குரியவர் அவர்தான்.''

Story image

நான் ரபி ரேயை சந்திக்கச் சென்று கொண்டிருந்தேன். அதே நேரத்தில், வி.பி. சிங் வராததால், கருணாநிதி உள்ளிட்ட மூன்று முதல்வர்களும் பிகார் பவன் திரும்பினார்கள். உடனடியாக பிரதமர் வேட்பாளரைத் தேர்ந்தெடுத்து, அறிவிக்க வேண்டிய நிர்பந்தம் அவர்களுக்கு...

ஜன்பத்திலிருந்த ரபி ரேயின் வீட்டிற்கு நான் சென்றபோது அங்கே யாரும் இல்லை. வி.பி. சிங்குடன், மது தந்தவதேயை சந்திக்க அவர் சென்றிருப்பதாக அவரது உதவியாளர் தெரிவித்தார். வி.பி. சிங்கைத் தேடி அலைவதைவிட, கெளடில்யா மார்குக்குத் திரும்பினால் ஏதாவது புதிய தகவல்கள் கிடைக்கும் என்று தோன்றியது. பிகார் பவனுக்கு வந்தேன்.

அங்கே சென்றபோது, பரபரப்பு தமிழ்நாடு இல்லத்துக்கு திசை மாறி இருப்பது தெரிந்தது. 161 இடங்களில் பாரதிய ஜனதா கட்சியும், 140 இடங்களில் பி.வி. நரசிம்ம ராவ் தலைமையிலான காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றிருந்த நிலையில், 52 இடங்களுடன் இடதுசாரிகளும், 46 இடங்களுடன் ஜனதா தளமும் மூன்றாவது, நான்காவது இடத்தில் இருந்தன.

பாஜகவும், காங்கிரஸூம் இடம் பெறாத ஆட்சிக்கு ஆதரவளிப்பது என்றுகூறி இடதுசாரிகள் ஒதுங்கிவிட்ட நிலையில், அனைவரது பார்வையும் ஜனதா தளத்தில் குவிந்திருந்ததில் வியப்பில்லை. ஆனால், ஜனதா தளம் வலுவான தேசியத் தலைமை இல்லாமல், மாநிலத் தலைவர்களின் கீழ் செயல்பட்டு வந்தது.

பிகாரிலிருந்து 22 உறுப்பினர்களும், கர்நாடகத்திலிருந்து 16 உறுப்பினர்களும் ஜனதா தளத்தின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர். மாநிலக் கட்சிகள் என்று எடுத்துக் கொண்டால், 20 இடங்களுடன் தமிழ் மாநில காங்கிரஸ்தான் முதலிடத்தில் இருந்தது. 17 இடங்களுடன் திமுக, தலா 16 இடங்களுடன் தெலுங்கு தேசமும், சமாஜவாதி கட்சியும் இடங்களைப் பெற்றிருந்தன.

தேசியத் தலைமை முதல்வர்களை முடிவு செய்வது என்கிற நிலைமை மாறி, இந்திய அரசியலில் முதன்முறையாக மாநில முதல்வர்கள் பிரதமர் வேட்பாளரைத் தேர்ந்தெடுத்த அதிசயம் 1996-இல் நடந்தது. தமிழ்நாடு இல்லத்திலும், பிறகு பிகார் பவனிலும் நடந்த திரைமறைவு நாடகங்களில் என்ன நடந்தது என்பதை தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடுவும், முன்னாள் முதல்வர் தேவே கெளடாவும் தான் இப்போது முழுமையாகப்  பதிவு செய்ய முடியும். இருவரும் அதுகுறித்து இன்றுவரை எந்தவொரு விளக்கமும் அளிக்கவில்லை.

தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு மிகவும் நெருக்கமானவர் என்று கருதப்பட்ட எர்ரா நாயுடுவுடன், 1996 பிரதமர் வேட்பாளர் தேர்வு குறித்துக் கேட்டபோது, அவர் சிரித்துக் கொண்டே சொன்ன தகவல் இது - "ஹெக்டே பெயரை தேவே கெளடா முன்மொழியவில்லை; மூப்பனார் பெயரைக் கருணாநிதி முன்மொழியவில்லை; முலாயம்சிங் யாதவ் பெயரை லாலுபிரசாத் யாதவ் முன்மொழியவில்லை. அவர்கள் யாருமே தங்களது பெயரையும் முன்மொழிந்து கொள்ளவில்லை. சந்திரபாபு நாயுடுவின் பெயரையும் யாரும் முன்மொழியவில்லை...''

"அப்படியானால் தேவே கெளடாவின் பெயரை முன்மொழிந்தது யார்?''

"திமுக தலைவர் கருணாநிதிதான் முன்மொழிந்தார் என்று என்னிடம் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.''

அதற்கு மேல் அவர் என்னிடம் எதுவும் சொல்லவில்லை. லாலுபிரசாத் யாதவுக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்த ரகுவன்ஷ் பிரசாத் சிங் இது குறித்துத் தெரிவித்த தகவல் இது - "முலாயம் பிரதமராவதை லாலு விரும்பவில்லை. ஆனால், முலாயம்சிங் யாதவுக்கு அந்த ஆசை நிறையவே இருந்தது. தேவே கெளடா பிரதமராவதிலும் லாலுவுக்கு விருப்பம் இருக்கவில்லை. மூப்பனாரோ, ஐ.கே. குஜ்ராலோ பிரதமராக வேண்டும் என்றுதான் லாலுபிரசாத் யாதவ் விரும்பினார். மூப்பனாரின் பெயரை யாரும் வற்புறுத்தாததால், லாலுவும் அது குறித்து அழுத்தம் கொடுக்கவில்லை. இதுதான் எனக்குத் தெரிந்து நடந்தது.'' 

ஜனதா தளம் தலைமையிலான மாநிலக் கட்சிகள் அடங்கிய மூன்றாவது அணியில் பிரதமர் வேட்பாளராக கர்நாடக முதல்வர் தேவே கெளடாவை முடிவு செய்திருக்கிறார்கள் என்று தெரிந்ததும், ராமகிருஷ்ண ஹெக்டேவைத் தொடர்பு கொள்ள முயன்றேன்; முடியவில்லை. அதற்குள், தமிழ்நாடு இல்லத்தில் முதல்வர் கருணாநிதி நிருபர்களை சந்திக்க இருக்கிறார் என்கிற தகவல் கிடைத்தது. 

கர்நாடக பவனிலிருந்து, அருகிலுள்ள தமிழ்நாடு இல்லத்துக்கு விரைந்தேன்.

மூன்றாவது அணியின் பிரதமர் வேட்பாளராக தேவே கெளடாவை முடிவு செய்திருப்பதாவும், அவருக்கு இடதுசாரிகளின் ஆதரவு உறுதி என்றும், அந்தப் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார் முதல்வர் கருணாநிதி. காங்கிரஸ் கட்சியின் ஆதரவைக் கோர இருப்பதாகவும் தெரிவித்தார். மூப்பனார் பெயர் ஏன் முன்மொழியப்படவில்லை என்று யாரும் கேட்கவும் இல்லை, அது குறித்து அவர் எதுவும் சொல்லவும் இல்லை.

"தேவே கெளடா பிரதமராகும்போது நீங்கள் ஏன் பிரதமராகக் கூடாது?'' என்கிற கேள்வி நிருபர் ஒருவரால் அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு திமுக தலைவர் மு. கருணாநிதி அளித்த பதில் இது:

"எனது உயரம் எனக்குத் தெரியும்!''

அனைவரும் சிரித்து விட்டனர். தனது பத்திரிகையாளர் சந்திப்பை அத்துடன் முடித்துக் கொண்டார் அவர். எல்லோரும் கலைந்தோம்.

தமிழ்நாடு இல்லத்திலிருந்து வெளியே வந்த நான், நூறு மீட்டர் தொலைவில் நிதி மார்க்கிலிருந்த ஒடிஸா பவனை நோக்கி நடந்தேன். எதிர்பார்த்தது போலவே அங்கே பிஜு பட்நாயக் இருந்தார். வந்திருக்கும் தகவலைத் தெரிவித்தபோது, உள்ளே அழைக்கப்பட்டேன்.

"தப்பு செய்துவிட்டார்கள். மூப்பனாரைத்தான் பிரதமர் வேட்பாளராக்கி இருக்க வேண்டும். மூப்பனார் பிரதமர் வேட்பாளர் என்றால், குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மா அவரை ஆட்சி அமைக்க உடனே அழைப்பார். ஏனென்றால், மூப்பனாருக்குக் காங்கிரஸின் ஆதரவு உறுதியாகக் கிடைக்கும் என்று அவருக்குத் தெரியும்.''

"தேவே கெளடாவைக் காங்கிரஸ் ஏன் ஆதரிக்காது என்று நினைக்கிறீர்கள்?''

"கர்நாடக மாநிலத்தில் போட்டியாக இருக்கும் ஜனதா தளத்தை ஆதரித்தால் காங்கிரஸ் தனது செல்வாக்கை இழந்துவிடும். அங்கே பாஜக மேலும் வளர்வதற்கு அது வழிகோலும். மூப்பனார் காங்கிரஸ்காரர். தேவே கெளடா காங்கிரஸ்காரரல்ல.''

"இப்போது என்ன நடக்கும்?''

"நாளைக்கு சங்கர் தயாள் சர்மா, ஆட்சி அமைக்க பாஜகவுக்கு அழைப்பு விடுப்பார்.''

"அவர்களால் பெரும்பான்மையை நிருபிக்க முடியுமா?''

"அது அடுத்த பிரச்னை. மூப்பனார் பிரதமராகி இருந்தால், பாஜக ஆட்சி அமைவதை அடுத்த ஐந்தாண்டுகளுக்குத் தடுத்திருக்கலாம்.''

"அதற்குப் பிறகு...''

"ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு என்ன நடக்கும் என்று இப்போது யாருக்குத் தெரியும்?''

Story image

அவரை சந்திக்க யாரோ வந்ததால் விடைபெற்று வெளியே வந்தேன்.

ஜி.கே. மூப்பனார் பெயர் ஏன் முன்மொழியப்படவில்லை என்கிற கேள்விக்கு இன்றுவரை எனக்கு விடை கிடைக்கவில்லை. சோ சார் உள்பட பலரிடம் நான் கேட்டுவிட்டேன். சரியான பதில் வரவில்லை. 1996-இல் தமிழகத்துக்கு நிதியமைச்சர் பதவி கிடைத்தது; பிரதமர் பதவி கை நழுவியது!

பிஜு பட்நாயக் சொன்னது போலவே அன்று இரவே ஆட்சி அமைக்க பாஜகவுக்கு குடியரசுத் தலைவர் மாளிகையிலிருந்து அழைப்பு விடுக்கப்பட்டது. அசோகா சாலையில் உள்ள பாஜக அலுவலகத்தில் தொண்டர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடிக் கொண்டிருந்தனர்.

காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டம் மூன்றாவது அணிக்கு ஆதரவு என்று முடிவெடுப்பதற்குள், குடியரசுத் தலைவர் மாளிகை அழைப்பை ஏற்று வாஜ்பாய் தலைமையில் பாஜக ஆட்சி அமைப்பது உறுதியாகிவிட்டது. மக்களவையில் அதிக எண்ணிக்கை பலம் கொண்ட கட்சி என்கிற முறையில், குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மா எடுத்த அந்த முடிவுக்கு, 1989, 1991 முன்னுதாரணங்கள் இருந்தன.

பெரும்பான்மையை நிரூபிக்க பாஜகவுக்கு 15 நாள்கள் அவகாசம் வழங்கி இருந்தார் குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மா. சிவசேனை, அகாலி தளம், சமதா கட்சி போன்றவை ஆதரவு தெரிவித்திருந்தாலும், பாஜகவால் பெரும்பான்மையை நிருபிக்க முடியாது என்பது குடியரசுத் தலைவருக்கு மட்டுமல்ல, பிரதமராகப் பதவி ஏற்றுக்கொண்ட அடல்  பிகாரி வாஜ்பாய்க்கும், அவரது அமைச்சரவையில் இடம்பெற்ற சக அமைச்சர்களுக்கும் தெரியும்.

பெரும்பான்மை பெற முடியாது என்று தெரிந்தும், வாஜ்பாய் ஏன் 1996-இல் பிரதமராகப் பதவி ஏற்றுக்கொண்டார்? அதற்கு ஒரு காரணம் இருந்தது.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.