

என் மகன் வயது 32. கார் டிரைவர். அடிக்கடி மது அருந்தும் பழக்கமுள்ளவன். எந்நேரமும் என்னிடமும் கணவரிடமும் கோபப்படுகிறான். இதனால் நாங்கள் கடும் மன உளைச்சலால் அவதியுறுகிறோம். அவனுக்கு இன்னும் திருமணமாகவில்லை. திருமணம் செய்துவைத்தால் திருந்துவானா? செய்வதறியாது தவிக்கிறோம். அவனை எப்படி குணப்படுத்துவது?
-சிவகாமி, ஆவடி.
திருமணம் செய்துவைத்து அந்தப் பெண்ணிடமும் உங்கள் மகன் சண்டை பிடிக்க வேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்களா?
இக்காலத்தில் பெண்களுக்கு வாக்குப்பட்ட இடத்தில் பிடிக்கவில்லையென்றால் பெட்டியைத் தூக்கிக் கொண்டு அப்பா, அம்மா வீட்டுக்குச் சென்றுவிடுவது சகஜமாகிவிட்டது. கணவனே கண்கண்ட தெய்வம் என்ற காலமெல்லாம் மலையேறிவிட்டது. அதனால் அவர்தான் தன் கெட்ட பழக்கத்தில் இருந்து விடுதலை பெற முயற்சி செய்ய வேண்டும்.
மதுபானம் அருந்துபவர்களுக்கு மதுபானத்தில் அடங்கியுள்ள பத்து வகையான குணங்கள் உடலிலும் மனதிலும் சீற்றமடைகின்றன.
லகு எனும் லேசான தன்மை, ரூக்ஷம் எனும் வரண்ட தன்மை, ஆசு எனும் வேகமான தன்மை, விசதம் எனும் வழித்தெடுக்கும் தன்மை, வியவாயீ எனும் விரைவில் பரவி செரிமானமாகும் தன்மை, தீக்ஷ்ணம் எனும் ஊடுருவும் தன்மை, விகாஷீ எனும் பூட்டுகளை தளர்ச்சியுறச் செய்யும் தன்மை, சூக்ஷ்மம் எனும் சிறிய ஓட்டைகளிலும் புகுந்துவிடும் தன்மை, உஷ்ணம் எனும் சூடான தன்மை, மேலும் அனிர்தேஷ்யரஸ எனும் இன்னது எனும் உறுதி செய்ய இயலாத சுவை. இந்த பத்து குணங்களும் சமமாக விஷம் நிறைந்த பொருட்களிலும் அடங்கியுள்ளன. அதனால் மதுபானம் அருந்துபவர்கள், விஷத்திற்குச் சமமான குணங்களை உடல் மற்றும் மனதளவில் ஏற்றிக் கொள்வதால், உடல் உறுப்புகள் அனைத்தையும் விரைவில் கெட்டுப் போய், செயலற்றவர்களாக வீதியில் மட்டை போலக் கிடக்கிறார்கள்.
மேற்குறிப்பிட்ட குணங்களில் லகு-ரூக்ஷம் சூக்ஷ்மம் எனும் குணங்களால் அவை வாயு தோஷத்திற்கு சமமான நிலையில் இருப்பதால் வாயுவைத் தூண்டிவிட்டு நாடி நரம்புகளில் இசிவு வலியையும், பூட்டுகளில் தளர்ச்சியையும் ஏற்படுத்தி பின்னொரு நாளில் பக்கவாதம், நடுக்குவாதம் போன்ற உபாதைகளுக்குக் காரணமாகிவிடுகின்றன.
ஆசு-தீக்ஷ்ணம்- உஷ்ணம் எனும் குணங்கள், பித்த தோஷத்திற்கு சமமான குணங்களைக் கொண்டிருப்பதால், அந்த தோஷம் சீற்றமடைந்து, அதிகமான கோபத்தையும் உடல் எரிச்சலையும் தூண்டிவிடுகிறது.
இப்படி குணங்களின் வாயிலாக, உங்கள் மகன் உபாதைகள் குடிப்பழக்கத்தின் வாயிலாக, உடலையும் மனதையும் கெடுத்துக் கொண்டு வருகிறார். உங்களுடைய நிம்மதியையும் உருக்குலைத்திருக்கிறார்.
குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிப் போன தீய நண்பர்களிடமிருந்து அவர் விலக வேண்டும். நல்ல அறிவுரைகளைக் கூறும் சான்றோர்களைச் சந்தித்து, நல் உபதேசங்களைப் பெற்று அவர் திருந்துவது நலம்.
உடல் உட்புற உறுப்புகளில் ஏற்பட்டுள்ளபாதிப்புகளைக் களைய ஆயுர்வேத மருத்துவர்களிடமிருந்து மருந்துகளை வாங்கிச் சாப்பிட்டு நல்ல பயன்களைப் பெறவேண்டும்.
வாஸா கு குடூச்யாதி கஷாயம், திராக்ஷôதி கஷாயம், பிரம்மீ திராக்ஷôதி கஷாயம், அவிபத்தி சூரணம், த்ரிவிகுருத்லேஹ்யம், கல்யாணக கிருதம், மானஸ மித்ரம் குளிகை, சங்க பஸ்மம், பிரவாள பற்பம், அப்ரக பஸ்மம், சந்தனாதி தைலம் போன்ற பல மருந்துகள், பித்த சீற்றத்தை அடக்குபவை. அதனால் ஏற்படும் கோப-தாபங்கள் அடங்கிவிடும்.
இம் மருந்துகளின் வரவேற்பை உடல் பெற வேண்டுமானால், குடியை விட்டுவிட்டு உடல் - மன ஒழுக்கத்துடன் வாழும் நிலையில்தான் சாத்தியமாகும்.
குடித்துக் கொண்டு மருந்துகளையும் பயன்படுத்தினால் அது விழலுக்கு இறைத்த நீரைப் போல, உபயோகமின்றிப் போகும்.?
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.