டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

பேல்பூரி

""ஒற்றை தென்னம்பிள்ளைத்தட்டு'', ""கலுங்குடி'', ""கல்லுகட்டி''.

News image
Updated On :5 மார்ச் 2023, 12:30 am

DIN

கண்டது


(கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சில ஊர்களின் பெயர்கள்)

""ஒற்றை தென்னம்பிள்ளைத்தட்டு'', ""கலுங்குடி'', ""கல்லுகட்டி''.

-கே.பிரபாவதி,
மேலகிருஷ்ணன்புதூர்.

(கோமல் அருகேயுள்ள ஓர் உணவகத்தின் பெயர்)

""முல்லை அன்னச்சாலை''

(குத்தாலம் அருகேயுள்ள ஒரு மருந்தகத்தின் பெயர்)

""ஆயுசு நூறு''

(திருச்சி அருகேயுள்ள உணவகத்தின் பெயர்)

""வேற லெவல்''

-சம்பத்குமாரி,
பொன்மலை.


(தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகேயுள்ள ஊரின் பெயர்)

""பேய்க்குளம்''

-திசை மீனாமுத்து,
மதுரை.

கேட்டது


(திருச்சி வட்டாட்சியர் அலுவலகம் அருகே இருவர் பேசியது)

""கையெழுத்து சரியில்லைன்னு அடிக்கடி உன் ஃபிரண்ட்டை திட்டிகிட்டு இருப்பியே?''
""ஆமாம். அதுக்கென்ன?''
""அங்கே பார். உன் ஃபிரண்ட் வாசலில் வர்றவங்களுக்கு மனு எழுதி கொடுக்கிறாரு?''

-அ.சுஹைல் ரஹ்மான்,
திருச்சி.

(கோவில்பட்டியில் நெல் கொள்முதல் செய்யும் இடத்தில்..)

""தண்ணீரில் நெல் ஊறப் போட்டியா?''
""ஏன் சார்?''
""நூறு சதவீதம் ஈரப்பதமா இருக்கும் போலிருக்கே!''

-எஸ்.மோகன்,
கோவில்பட்டி.

(மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் இருவர்)

""என்ன அண்ணே! இன்னும் தூக்கம் கலையலையா?''
""எங்கே படுத்து தூங்கினேன்னு நினைச்சு பார்க்கிறேன்!''

-க.பன்னீர்செல்வம்,
மயிலாடுதுறை.

யோசிக்கிறாங்கப்பா!


வீழ்வது தவறல்ல
வீழ்ந்தே கிடப்பதுதான் தவறு.

- எஸ். வரலட்சுமி,
சத்துவாச்சாரி


மைக்ரோ கதை


சென்னைக்கு ஒதுக்குப்புறமான ஊர் அது. ஒரு காலத்தில் தென்னந்தோப்பாக இருந்த  இடத்தை சில மரங்களை வெட்டாமல் விட்டுட்டு, வீட்டுமனைகளாக்கிவிட்டார்கள்.  இந்த இடத்தில் கந்தசாமி வீட்டுமனை வாங்கி,  வீடு கட்டி குடியேறினார்.

வீட்டை சுற்றி சுவரையும் எழுப்பினார்.  ஒருநாள் நள்ளிரவு திருடன் ஒருவன் சுவர் மீது ஏறி,  உள்ளே நுழைந்து தென்னை மரத்தின் மீது ஏறினார்  இந்தச் சத்தத்தைக் கேட்டு, கந்தசாமி ஜன்னல் வழியே வந்து பார்த்தார்.  வெளியே வந்து தட்டிக் கேட்க, அவருக்கு பயம். தேங்காய்கள் திருடும் போயிற்று.

மறுநாள் கந்தசாமி காவல் நிலையத்துக்குச் சென்று புகார் அளித்தார். 

""ஐயா. நேத்து ராத்திரி திருடன் வந்து எனது தேங்காய் மரத்திலிருந்து 15 காய்களைப் பறித்துச் சென்றுவிட்டான்'' என்றார்.

உடனே காவலர், "" 15 காய்கள் என்று எந்தக் கணக்கில் சொல்லுறே'' என்று கேட்டார். இதற்கு  கந்தசாமி, "" திருடன் மரத்தின் மீதேறி பறித்த தேங்காய்களை கீழே போட்டான். அப்போது, 15 முறை தொப்.. தொப் என்ற சத்தம் கேட்டது சார்'' என்றார்.

உடனே காவலரோ, "" கந்தசாமி நீ கவுன்ட்டிங் கந்தசாமிதான்!'' என்றார்.

- பி.ஓம்பிரகாஷ்,
கொடுங்கையூர், சென்னை.

எஸ்எம்எஸ்


அழகை ரசிப்பவர்கள்தான்
ஆனந்தமாய் சிரிக்க முடியும்.

- கீதா கற்பகம்,
சேலம்.

அப்படீங்களா!

ட்விட்டரை தொடர்ந்து ஃபேஸ்புக்கின் மெட்டா நிறுவனமும் அங்கீகரிக்கப்பட்ட கணக்குகளுக்கு கட்டணங்களை வசூலிக்கும் திட்டத்தை  ஆரம்பித்துள்ளது. 

200 கோடி பயனாளர்களைக்  கொண்ட உலகின் மிக முக்கிய தகவல் பகிர்வு சமூக ஊடகமான ஃபேஸ்புக் நிறுவனமும் அதன் துணை நிறுவனமுமான இன்ஸ்டாகிராம் இந்தக் கட்டணச் சேவையை தொடங்கி உள்ளன.

பிரபலங்கள், அரசியல்வாதிகள் தங்களின் அதிகாரபூர்வப் பக்கம் என்பதை உறுதி செய்ய மாதம் சுமார் ஆயிரம் ரூபாய் கட்டணமாகச் செலுத்தினால்,  ப்ளூ டிக் அங்கீகாரத்தை ட்விட்டர் வழங்கி வருகிறது.

இதேபோல், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமும் மாதம் ஆயிரம் ரூபாய் செலுத்தினால் பயனாளர்களின் கணக்கை அங்கீகரித்து பேட்ஜ் அளிக்கும் திட்டத்தை அறிவித்துள்ளன. 

இதற்காக 18 வயது நிரம்பிய பயனாளர்கள் தங்களின் அரசு அங்கீகார அட்டையை அடையாளமாக சமர்ப்பித்து கட்டணம் மூலம் இந்த பேட்ஜை பெறலாம் என்று மெட்டா அறிவித்துள்ளது. 

முதலில் ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து ஆகிய நாடுகளில் இந்தச் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அமெரிக்கா உள்ளிட்ட பிற நாடுகளுக்கு இது விரிவு படுத்தப்படுகிறது. 

போலி கணக்குகளை வெளிப்படுத்துவதாக ட்விட்டர் கொண்டு வந்த இந்தக் கட்டண திட்டத்துக்கு இணையதள பயன்பாட்டாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சொர்ப்ப அளவிலேயே பயன்பாட்டாளர்கள் இதைத் தேர்வு செய்தனர். 

பயன்பாட்டாளர்களின் தரவுகளை விற்பனை செய்து பெரும் வருமானம் ஈட்டி வந்த ஃபேஸ்புக் நிறுவனம், தனது சேவை எப்போதும் இலவசம் என்று அறிவித்து வந்தது. கடந்த ஆண்டு முதல் ஏற்பட்ட தொழில்முறைப் போட்டியின் காரணமாக மெட்டா நிறுவனம் இழப்பை சந்தித்ததால் பணியாளர் குறைப்பு, கட்டண கணக்கு என வருவாயை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. 

மெட்டா நிறுவனத்தின் இந்த வசூல் நடவடிக்கை உலகிலேயே அதிகபட்சமாக 31 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்ட இந்தியாவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றே கூறலாம்.

-அ.சர்ப்ராஸ்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.