ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 130

தேர்தல் முடிவுகள் வெளியானது முதலே, தில்லி ஐந்து நட்சத்திர விடுதிகளில் பல பன்னாட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் முகாமிடத் தொடங்கிவிட்டனர்.

News image
Updated On :5 மார்ச் 2023, 12:30 am

தேர்தல் முடிவுகள் வெளியானது முதலே, தில்லி ஐந்து நட்சத்திர விடுதிகளில் பல பன்னாட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் முகாமிடத் தொடங்கிவிட்டனர். 1991-இல் இந்தியப் பொருளாதாரம் ஏறத்தாழ இன்றைய இலங்கையின் பொருளாதாரத்தைப்போல மிகப் பெரிய பின்னடைவை எதிர்கொண்டது.

நரசிம்ம ராவ் அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்களும், உலகமயக் கொள்கையும் பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் செயல்பட வழிகோலியிருந்தன. உலக வங்கியும், சர்வதேச நிதியமும் தகர்ந்து போயிருந்த இந்தியப் பொருளாதாரத்தை மீட்டெடுக்கப் பெரிய அளவில் கடனுதவி வழங்கி இருந்தன.

தங்களது முதலீடுகள் குறித்த கவலை மட்டுமல்லாமல், அடுத்து அமைய இருக்கும் ஆட்சி நரசிம்ம ராவ் அரசின் கொள்கை முடிவுகளை ரத்து செய்துவிடுமோ என்கிற நியாயமான அச்சமும் அவர்களுக்கு ஏற்பட்டிருந்தது. வாஜ்பாய் ஆட்சி நம்பிக்கைத் தீர்மானத்தில் வெற்றி பெற வெளிநாட்டு சக்திகள் பல முனைந்து செயல்பட்டன. காங்கிரஸ் அல்லது பாஜக ஆட்சிகளில் மட்டும்தான் தாராளமயமாக்கல் கொள்கை தொடரும் என்பதுதான் அதற்குக் காரணம். 

வாஜ்பாய் அரசு கவிழ்ந்து, மாநிலக் கட்சிகளின் ஆதரவுடன் ஜனதா தளம் ஆட்சி அமைவதில்கூட, பன்னாட்டு நிறுவனங்களுக்கும் உலக வங்கி உள்ளிட்டவைக்கும் எந்தவித எதிர்ப்பும் இருக்கவில்லை. மாநிலக் கட்சிகளைத் தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ள முடியும் என்பது அவர்களுக்குத் தெரியும். இடதுசாரிக் கட்சிகளின் ஆதரவுடன் மூன்றாவது அணி ஆட்சி என்பதுதான் அவர்களது அச்சத்துக்குக் காரணம்.

அவர்களுக்கு இருந்தது போன்ற அச்சம் இடதுசாரிகளுக்கும் இருந்தது. ஒருபுறம் காங்கிரஸ் இடம் பெறாத, பாஜகவுக்கு எதிர்ப்பான மூன்றாவது அணி அரசைக் கட்டமைப்பதில் மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் ஹர்கிஷன்சிங் சுர்ஜித்தும், இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் இந்திரஜித் குப்தாவும் முனைப்புக் காட்டினார்கள். அமைய இருக்கும் ஜனதா தளம் தலைமையிலான மாநிலக் கட்சிகளின் கூட்டணிக்கு இடதுசாரிக் கொள்கைகளில் உதட்டளவே ஈடுபாடு உண்டு என்பதும் அவர்களுக்கு நன்றாகவே தெரியும். 

அமையப் போகும் கூட்டணிக்கும், முந்தைய நரசிம்ம ராவ் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிக்கும் எந்தவித வேறுபாடும் இருக்காது என்பதால்தான், இடதுசாரிகள் ஐக்கிய முன்னணி ஆட்சியில் பங்கு பெறுவது மட்டுமல்லாமல், அதற்குத் தலைமை ஏற்கவும் வேண்டும் என்று சுர்ஜித் விரும்பினார். 

ஜோதிபாசு பிரதமராவதன் மூலம், இந்தியா சோஷலிசப் பாதையிலிருந்து முற்றிலுமாக விலகி சர்வதேசப் பொருளாதாரத்துக்குப் போய்விடாமல் தடுக்க முடியும் என்று நம்பினார் மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரான ஹர்கிஷன்சிங் சுர்ஜித். எந்தவித அபிப்பிராயமும் சொல்லாவிட்டாலும், பிரதமராவதற்கோ, ஐக்கிய முன்னணியில் இணைவதற்கோ மேற்கு வங்க முதல்வர் ஜோதிபாசுவுக்கும் தயக்கம் இருக்கவில்லை. அதன் மூலம்தான், தேசிய அளவில் இடதுசாரி இயக்கங்கள் வலுப்பெறும் என்று அவர்கள் இருவருமே கருதினார்கள்.

மார்க்சிஸ்ட் கட்சியின் இரண்டு மூத்த தலைவர்களும் ஐக்கிய முன்னணியில் இடம்பெற விரும்பினார்கள் என்றால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் இந்திரஜித் குப்தாவுக்கு காங்கிரஸ் ஆதரவுடன் அமையும் கூட்டணியில் சேரக் கொஞ்சமும் விருப்பம் இருக்கவில்லை. பெரும்பாலான மாநில கட்சிகளும் சரி, ஆதரவு தரும் காங்கிரஸூம் சரி பொருளாதாரக் கொள்கையில் தாராளமயத்தைத் தொடர்ந்து ஆதரிக்கும் என்பதுதான் அதற்குக் காரணம். அந்த அரசில் இணைந்து இடதுசாரிகள் தங்களைக் களங்கப்படுத்திக் கொள்ளக் கூடாது என்பது அவரது கருத்தாக இருந்தது.

Story image

""இந்தக் கூட்டணி தொடர்ந்து ஆட்சியில் இருப்பதைக் காங்கிரஸ் நிச்சயம் விரும்பாது. ஏற்கெனவே உலக வங்கி, சர்வதேச நிதியம் ஆகியவற்றுடன் நெருங்கிய தொடர்புடைய காங்கிரஸ் கட்சியின் அழுத்தத்துக்குக் கூட்டணி அரசு நிச்சயமாக ஆளாகும். அந்த ஆட்சியில் பங்கு பெறுவதால், இடதுசாரி இயக்கங்களின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகும்'' என்கிற எச்சரிக்கையை இந்திரஜித் குப்தா என்னிடம் தனிப்பட்ட முறையில் பகிர்ந்து கொண்டார்.

மார்க்சிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ கூடியது. கூட்டணியில் பங்கு பெறுவதன் மூலம்தான் வலதுசாரிகளின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த முடியும் என்கிற வாதத்தை நிராகரித்தனர் பெரும்பான்மை உறுப்பினர்கள். அதற்கு அவர்கள் கூறிய காரணங்கள் என்ன தெரியுமா?

""மேற்கு வங்கத்திலும், கேரளத்திலும், திரிபுராவிலும் காங்கிரஸை எதிர்த்து அரசியல் நடத்துகிறோம். அப்படி இருக்கும்போது, காங்கிரஸின் ஆதரவில் அமையும் ஆட்சியில் பங்கு பெற்றால், மக்களின் நம்பிக்கையை இழந்துவிடுவோம். நம்மை பதவி ஆசை பிடித்தவர்களாகவும், சந்தர்ப்பவாதிகளாகவும் அவர்கள் பார்ப்பார்கள். அதுமட்டுமல்ல, இந்தக் கூட்டணி எத்தனை நாள்கள் தாக்குப்பிடிக்கும் என்று தெரியாது.  தோழர் ஜோதிபாசு முதல்வர் பதவியைத் துறந்து தேசிய அரசியலுக்கு வருவது என்பது, இருப்பதை விட்டுவிட்டுப் பறப்பதைப் பிடிப்பதற்கு ஒப்பானது. ஐக்கிய முன்னணி ஆட்சிக்கான குறைந்தபட்ச செயல் திட்டத்தை உருவாக்கிக் கொடுத்து, வெளியில் இருந்து ஆதரவு கொடுப்போம், போதும்!'' என்பதுதான் பொலிட்பீரோவின் பெரும்பான்மைக் கருத்தாக இருந்தது.  செல்வாக்கு மிகுந்த பொதுச் செயலாளர் ஹர்கிஷன் சிங் சுர்ஜித்தும், மேற்கு வங்க முதல்வர் என்பது மட்டுமல்லாமல், தேசிய அளவில் தனிப்பெரும் ஆளுமையாகப் போற்றப்பட்ட ஜோதிபாசுவும் பொலிட்பீரோவின் பெரும்பான்மைக் கருத்தைத் தலைவணங்கி ஏற்றுக் கொண்டனர். 

இன்னொருபுறம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுக்குழு கூடியது. பொதுச் செயலாளர் இந்திரஜித் குப்தா, ஐக்கிய முன்னணி ஆட்சியில் ஏன் சேரக்கூடாது என்பதற்கான காரணங்களை விளக்கினார். ஆனால் பெரும்பான்மை உறுப்பினர்களின் கருத்து வேறாக இருந்தது.

""ஐக்கிய முன்னணி ஆட்சியில் நாம் பங்கு பெறவில்லை என்றால், அது காங்கிரஸின் கைப்பாவையாகச் செயல்படும். நமது ஆதரவு இல்லாமல் காங்கிரஸின் ஆதரவுடன் அவர்களால் பெரும்பான்மையை நிருபிக்க முடியும் என்பதால், கட்டுப்பாடற்ற உலகமயப் பொருளாதாரக் கொள்கையைப் பின்பற்ற காங்கிரஸ் வற்புறுத்தும். குறைந்தபட்ச செயல்திட்டம் வெறும் ஒப்புக்குத்தான் இருக்கும். அமைச்சரவையில் வலுவான இடதுசாரிப் பிரதிநிதித்துவம் இருந்தால் மட்டும்தான் ஐக்கிய முன்னணி அரசின் செயல்பாடுகளை நம்மால் கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் முடியும். அதனால் அமைச்சரவையில் பங்கேற்க வேண்டும்!'' - என்பதுதான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுக்குழு எடுத்த முடிவு. 

தனக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும் அந்த முடிவுக்குக் கட்டுப்பட்டார் இந்திரஜித் குப்தா. ஆனாலும் உடனடியாக முடிவை அவர்கள் வெளியிடவில்லை.

ஜூன் 1-ஆம் தேதி பதவியேற்ற தேவே கெளடா தலைமையிலான அமைச்சரவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமல்ல, அஸ்ஸாம் கன பரிஷத்தும் இடம் பெறவில்லை. இத்தனைக்கும், ஐக்கிய முன்னணி அரசின் அடித்தளமாக விளங்கிய "ஃபெடரல் ஃபிரண்ட்' (கூட்டாட்சி முன்னணி) என்கிற மாநிலக் கட்சிகளின் கூட்டணியில் அஸ்ஸாம் கன பரிஷத் இடம் பெற்றிருந்தது.

திமுக, தமாகா, தெலுங்கு தேசம் கட்சிகளுடன் அஸ்ஸாம் கன பரிஷத்தும் இணைந்து உருவாக்கி இருந்த ஃபெடரல் ஃபிரண்ட், மாநில உரிமைகளை முன்னிலைப்படுத்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டிருந்தது. ஏனைய மூன்று கட்சிகளையும் போலல்லாமல், அஸ்ஸாம் கன பரிஷத்துக்கும், இடதுசாரிக் கட்சிகளுக்கு இருந்த அதே தயக்கம் இருந்ததுதான் அமைச்சரவையில் சேராததற்குக் காரணம்.

Story image

அஸ்ஸாம் பவனில், அந்த மாநில முதல்வரும் அஸ்ஸாம் கன பரிஷத் தலைவருமான பிரபுல்ல குமார் மஹந்தாவைச் சந்திக்கச் சென்றேன். எப்போதுமே எந்தவித பந்தாவும் இல்லாமல், சகஜமாகப் பழகக் கூடியவர் என்பது மட்டுமல்ல, முதல்வர் என்றெல்லாம் பார்க்காமல் அஸ்ஸாம் பவன் வரவேற்பறையில் உட்கார்ந்தபடி பார்வையாளர்களைச் சந்திப்பவர் மஹந்தா. மூப்பனார், கருணாநிதி, சந்திரபாபு நாயுடுவுடன் சந்திப்பு முடிந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பார்த்துக் கொண்டிருந்தார் அவர்.
""அமைச்சரவையில் சேரப் போகிறீர்களா, இல்லையா?''

""இன்னும் முடிவு செய்யவில்லை. கட்சித் தலைவர்களுடன் தீவிரமாக விவாதித்த பிறகுதான் எந்த முடிவும் எடுக்க முடியும். சேர வேண்டாம் என்பதுதான் எனது கருத்து. இந்த அரசில் அங்கம் வகித்தால் அத்துடன் அஸ்ஸாம் கன பரிஷத்தின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்பது எனது அச்சம்.''

""ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?''

""நடந்து முடிந்த சட்டப்பேரவை, மக்களவைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியைக் கடுமையாக விமர்சனம் செய்து, எதிர்த்துப் பிரசாரம் செய்தோம், போட்டியிட்டோம். இப்போது அந்தக் கட்சியின் ஆதரவுடன் அமையும் ஆட்சியில் பங்கு பெற்றால் மக்கள் ஏளனம் செய்ய மாட்டார்களா?''

""இதே பிரச்னை சந்திரபாபு நாயுடுவுக்கும், கருணாநிதிக்கும், மூப்பனாருக்கும் இருக்கின்றன. அவர்கள் தயங்காதபோது நீங்கள் மட்டும் ஏன் தயங்க வேண்டும்?''

""மற்றவர்கள் ஆட்சி அமைப்பதில் முனைப்பாக இருக்கிறார்கள். மாநிலக் கட்சிகளின் ஆட்சி அமைவதன் மூலம் கூட்டாட்சித் தத்துவம் வலுப்படும் என்று கருதுகிறார்கள். 

அதற்காக, மாநில அரசியலில் நமது செல்வாக்கை இழந்துவிட முடியாது என்று நான் நினைக்கிறேன்.''

""உங்களுக்கு மட்டும் ஏன் அந்த அச்சம்?''

""இந்தக் கூட்டணியில் சேர்ந்தால், அஸ்ஸாம் அரசியலில் எங்கள் கட்சி செல்வாக்கை இழக்கும், அல்லது காங்கிரஸ் செல்வாக்கை இழக்கும். அதில் எது நடந்தாலும் அந்த வெற்றிடத்தை நிரப்பப்போவது பாரதிய ஜனதா கட்சியாக இருக்கும்.''

""அப்படியா சொல்கிறீர்கள்?''

""இந்த ஆட்சியை ஆதரிப்பதால் பல மாநிலங்களில் காங்கிரஸ் செல்வாக்கு இழக்கும் என்பது எனது கருத்து. அதுபற்றி நான் கவலைப்படவில்லை. மத்திய ஆட்சியில் பங்கு பெறுவதற்காக, நாங்கள் எங்களது செல்வாக்கை இழந்துவிடக் கூடாது.''

பிரபுல்ல குமார் மஹந்தாவின் தொலைநோக்குப் பார்வையை இப்போது நினைத்தாலும் வியப்பாக இருக்கிறது. 1996 எப்படி பாஜகவும் ஏனைய கட்சிகளும் என்கிற புதிய அரசியல் போக்குக்கு வழிகோலியதோ, அதேபோல ஐக்கிய முன்னணி அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு அளித்ததால் பல மாநிலங்களில் காங்கிரஸ் செல்வாக்கை இழந்தது.

ஒரு மாதத்துக்குப் பிறகு, கட்சியின் ஏனைய தலைவர்களின் வற்புறுத்தல் காரணமாக அஸ்ஸாம் கன பரிஷத்தும் தேவே கெளடா தலைமையிலான ஐக்கிய முன்னணி ஆட்சியில் பங்கு பெற்றது. மஹந்தா எதிர்பார்த்தது போலவே, அந்தக் கட்சி செல்வாக்கு இழந்தது மட்டுமல்ல, அஸ்ஸாமிஸ் அந்த இடத்தை பாஜக பிடித்துக் கொண்டது.

அஸ்ஸாம் கன பரிஷத் மட்டுமல்ல, திமுக உள்ளிட்ட கட்சிகளுக்குமே தேவே கெளடா தலைமையிலான அரசில் பங்கு பெறுவது குறித்து இருவேறு கருத்துகள் நிலவின. மே மாதம் 30-ஆம் தேதி தில்லி செல்ல வேண்டிய பயணத்தையேகூட தமிழக முதல்வராக இருந்த திமுக தலைவர் கருணாநிதி தள்ளி வைக்க நேர்ந்தது.

திமுகவில் தயக்கம் இருந்தாலும், ஐக்கிய முன்னணி அரசில் பங்கு பெறுவது என்று தமிழ் மாநில காங்கிரஸ் முடிவெடுத்திருந்தது. பதவி ஏற்புக்கு முந்தைய நாள், அதாவது மே 31-ஆம் தேதி, தமாகா சார்பில் மூப்பனார், ப.சிதம்பரம்,  எம்.அருணாசலம் மூவரும் அமைச்சரவையில் பங்கு பெறுகிறார்கள் என்கிற செய்தி தினசரிகளில் தலைப்புச் செய்தியாக வெளியானது.

அடுத்த நாள் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த தேவே கெளடா தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசின் பதவி ஏற்பில், மூப்பனார் அமைச்சரவையில் இடம் பெறவில்லை. அவர் பிரதமராக முன்மொழியப்படாதது ஏன் என்பது மட்டுமல்ல, அமைச்சரவையில் ஏன் சேரவில்லை என்பதும் இன்றுவரை புதிராகத் தொடர்கிறது.

தனக்கு அரசுப் பதவி வேண்டாம் என்று ஜி.கே. மூப்பனார் அவராகவே நிராகரித்தாரா, இல்லை அவரை அமைச்சரவையில் சேர்க்க வேண்டாம் என்று பிரதமர் தேவே கெளடாவுக்கு அழுத்தம் தரப்பட்டதா? அவர் இடம் பெறாததற்குப் பின்னணி இருந்தது.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.