

அந்தக் கால பத்மினி, இடைக்கால ரேவதி, தற்போதைய நயன்தாரா வரை தமிழ் திரையுலகில் மலையாள நடிகைகளின் ஆக்கிரமிப்புதான். ஒரு காலத்தில் தமிழ் படத்தில் நடிக்க தமிழ் நடிகைகள் கிடைக்கவில்லையா? அத்தனையும் கேரள இறக்குமதிதானா? என்று தமிழ் ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியவாறு இருந்தனர். அது இப்போதும் தொடர்ந்துக் கொண்டேதான் இருக்கிறது. ஓவியா, பூர்ணா தொடங்கி கீர்த்தி சுரேஷ் வரை மலையாள இறக்குமதிகள்தான். கேரள சினிமாவில் இருந்து தமிழ் சினிமாவுக்கு வர அடுத்தப் படை புறப்பட தயாராகிவிட்டது. யார் அவர்கள்... வாங்க பார்ப்போம்!
மலையாள சினிமாவை ரசிக்கும் பெருங்கூட்டம் நாடு முழுக்கவே இருக்கிறது. மலையாளத்தில் வெளிவரும் கதைகளுக்கும் அதில் நடிக்கும் கலைஞர்களின் எதார்த்த நடிப்புக்கும் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. ஒவ்வொரு காலக்கட்டத்திலும் கேரளத்து நாயகிகள் தங்களது எதார்த்த நடிப்பின் மூலம் இந்திய சினிமா முழுக்க பேசுபொருளாக இருப்பார்கள். ரேவதி, நதியா, ஊர்வசி தொடங்கி நயன்தாரா, லட்சுமி மேனன், கீர்த்தி சுரேஷ் எனப் பலர் மலையாள சினிமாவில் தங்களது பயணத்தைத் தொடங்கி தமிழ் சினிமாவை அலங்கரித்திருக்கின்றனர். சமீபமாக, ஐஸ்வர்யா லட்சுமி, கல்யாணி ப்ரியதர்ஷன், ரஜிஷா விஜயன் ஆகியோர்
கோலிவுட்டில் தடம் பதித்து வெற்றிநடை போட்டு வருகின்றனர்.
அன்னா பென்: பேஷன் டிசைனிங் முடித்த அன்னா பென் "கும்பளங்கி நைட்ஸ்' படத்துடைய ஆடிஷனில் கலந்து கொண்டு தேர்வானவர். நிறைய கதாபாத்திரங்கள் இருந்தாலும் அன்னா பென்னின் நடிப்பு கவனிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, "ஹெலன்'. ஃப்ரீசரில் மாட்டிக் கொண்டு தப்பிக்க முயலும் அத்தனை காட்சியிலும் திரைக்குள் இருக்கும் குளிர் நம்மையும் தொற்றிக் கொள்ளும். அந்தளவுக்கு க்ளாஸான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். பின் "கப்பேலா'. இந்தப் படமும் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது. மல்லுவுட்டில் இவரை மனதில் வைத்துக் கதைகள் எழுதத் தொடங்கிவிட்டார்கள். "சாராஸ்' என்ற படத்தில் சினிமாவில் பணிபுரியும் உதவி இயக்குநராக நடித்திருந்தார். மேலும், குழந்தை பெற்றுக்கொள்ள விருப்பமில்லாமல் இருக்கும் இளம் பெண்ணாக தனது வாழ்க்கை, குடும்பம் குறித்து தனக்குள் ஓடும் மன ஓட்டத்தை மிக அழகாகப் பிரதிபலித்திருப்பார். "நைட் டிரைவ்', "காப்பா' ஆகிய த்ரில்லர் படங்களில் இவரது நடிப்பு மிகவும் பேசப்பட்டது. அடுத்தாக இன்னும் பல மலையாளப் படங்கள் அன்னா பென்னின் வசமுள்ளன. கதை கேட்பதில் அவ்வளவு கவனமாக இருப்பாராம். இவரைக் கதை சொல்லி திருப்திப்படுத்துவது அவ்வளவு எளிதல்ல என்கிறார்கள். தற்போது, சிவகார்த்திகேயன் தயாரிப்பில் "கூழாங்கல்' இயக்குநர் வினோத் ராஜ் இயக்கி வரும் படத்தில் சூரியுடன் நடித்து வருகிறார் இந்த நடிப்பு அரசி.
நிமிஷா சஜயன்: மும்பையில் பிறந்து வளர்ந்திருந்தாலும் நிமிஷாவின் பூர்வீகம் கேரளம்தான். திலீஷ் போத்தன் இயக்கத்தில் உருவான "தொண்டிமுதலும் த்ரிக்சாக்ஷியும்' படம்தான் இவரது அறிமுகப் படம். இந்தப் படத்திற்காக ஃபகத் பாசிலுக்கு தேசிய விருது கிடைத்தது. "ஈடா' படத்தில் கல்லூரி மாணவி, "மாங்கல்யம் தந்துனானேனா' படத்தில் திருமணமான பெண், "ஒரு குப்ரசித்த பையன்' படத்தில் வழக்கறிஞர் என நிமிஷா சஜயன் தேர்ந்தெடுக்கும் கதாபாத்திரங்கள் அனைத்துமே படத்திற்குப் படம் நிச்சயம் மாறுபடும். இயக்குநர் சனல்குமார் சசிதரன் இயக்கத்தில் வெளியான "சோலா' படத்தில் இவரது நடிப்பு மிகுந்த பாராட்டைப் பெற்றது. "தி கிரேட் இந்தியன் கிச்சன்' படம் ஏற்படுத்திய தாக்கமும் விவாதமும் உலகம் அறியும். "மாலிக்' எனும் ஹீரோயிசத் திரைப்படத்தில் ரோஸ்லின் கதாபாத்திரத்தில் நடித்த நிமிஷாவுக்கு அவ்வளவு முக்கியத்துவம் இருந்தது. தன் வயதுக்கு மீறிய கதாபாத்திரம். ஆனால், நடிப்பில் கலக்கியிருப்பார். எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் அதற்குள் தன்னைப் பொருத்திக் கொண்டு நடிப்பில் அசத்தும் நிமிஷாவின் சமீபத்திய படங்கள் அனைத்தும் மலையாள ரசிகர்களின் பேசுப் பொருளாக மாறிக் கிடக்கிறது. மற்ற நாயகிகளுக்கும் நிமிஷாவுக்கு இருக்கும் வித்தியாசம் என்னவென்றால், மற்றவர்கள் தன் வயதை விட குறைவான வயது கதாபாத்திரங்களில் நடிப்பார்கள். ஆனால், நிமிஷா நடித்த பெரும்பாலான படங்களில் அவர் வயதை விட மூத்த வயதுடைய கதாபாத்திரங்களில் அதிகமாக நடித்திருக்கிறார். தமிழில் இயக்குநர் விஜய் இயக்கத்தில் "அச்சம் என்பது இல்லையே' படத்தில் ஏமி ஜாக்சனும் நிமிஷாவும்தான் நாயகிகள். தவிர, "பண்ணையாரும் பத்மினியும்' இயக்குநர் அருண்குமார் இயக்கத்தில் சித்தார்த்துடன் ஒரு படத்தில் நடித்து முடித்திருக்கிறார். விரைவில் இவரை திரையில் பார்க்கலாம்.
கிரேஸ் ஆண்டனி: மலையாள சினிமாவில் கிரேஸ் ஆண்டனியின் வளர்ச்சி அபாரமானது. சின்ன கதாபாத்திரமாக இருந்தாலும் தனது நடிப்பால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடுவார். "ஹேப்பி வெட்டிங்' என்ற படத்தில் அறிமுகமான இவர், அதன் பிறகு மூன்று படங்களில் நடித்திருந்தாலும், "கும்பளங்கி நைட்ஸ்' இவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது. அதில் ஃபகத் பாசிலுக்கு மனைவியாக சிமி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இதற்குப் பிறகு, ஏராளமான பட வாய்ப்புகள் குவிந்தன. நல்ல குணச்சித்திர வேடம் என்றால் மலையாள இயக்குநர்களின் நினைவுக்கு வரும் முதல் நபர் கிரேஸ் ஆண்டனியாகத்தான் இருக்கும். அந்தளவுக்கு நடிப்பில் வெரைட்டி காட்டி, ரியாக்ஷன்களில் ஸ்கோர் செய்யும் திறமையான நடிகை. "ஹலால் லவ் ஸ்டோரி', "சாஜன் பேக்கரி', "அப்பன்' ஆகிய படங்களில் இவரது பாத்திரங்கள் பேசப்பட்டன. இப்போது இயக்குநர் ராம் இயக்கத்தில் மிர்ச்சி சிவாவுடன் நடித்துக்கொண்டிருக்கிறார். கிரேஸ் ஆண்டனியின் படங்களை பார்த்து ரசித்தவர்களுக்கு செய்தவர்களுக்கு இந்த அறிவிப்பு நிச்சயம் மகிழ்ச்சியாக இருக்கும்.
ஸ்ரீநிதி ஷெட்டி: கேரளத்தின் கோழிக்கோட்டைச் சேர்ந்த ஸ்ரீநிதி பின்னாளில் கர்நாடகாவுக்கு இடம் பெயர்ந்தார். நிறைய அழகிப் போட்டிகளில் பங்குபெற்றுள்ளார். தவிர, "ஷமிஸ் கர்நாடகா' உள்ளிட்ட நிறைய அழகிப் பட்டங்களையும் வென்றுள்ளார். ஐடி கம்பெனியில் பணியாற்றிக் கொண்டே மாடலாகவும் இருந்தார். அப்போது வந்த வாய்ப்புதான் "கே.ஜி.எஃப்'. பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடிப்பில் பிரமாண்ட பொருள் செலவில் உருவான படம். இதன் முதல் பாகம் எல்லா மொழிகளிலும் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், இதன் இரண்டாம் பாகத்தின் வசூலை இந்திய சினிமாவையே ஆச்சரியத்துக்கு உள்ளாக்கியது. முதல் படமே பெரிய படம் என்பதால் அனைவராலும் கவனிக்கப்பட்டார், ஸ்ரீநிதி. "கே.ஜி.எஃப் 2' படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போதே சொந்த மண்ணான மலையாள தேசத்தில் இருந்து வாய்ப்புகள் வரத் தொடங்கின. "கோப்ரா' படத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததன் மூலம் தமிழிலும் அறிமுகம் கிடைத்தது. இப்போது தமிழில் சுமார் ஆறு படங்களை கையில் வைத்து
காத்திருக்கிறார்.
மாளவிகா வேல்ஸ்: சன் டிவியில் ஒளிபரப்பாகும் "நந்தினி' தொடரின் ஜானகிதான் மாளவிகா வேல்ஸ். மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான மாளவிகா தமிழ், தெலுங்கு, கன்னட மொழி சினிமாக்களிலும் நடித்திருக்கிறார். "மழவில் மனோரமா' சேனலில் ஒளிபரப்பான பொன்னம்பிலி எனும் நாடகம் மூலம் சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமானார். சின்னத்திரை வெளிச்சம் தென்னிந்தியா முழுவதும் பரவிக் கிடந்தாலும், இவருக்கு தமிழ் சினிமாவில் ஒரு முத்திரை பதிக்கும் படம் வேண்டும் எனக் காத்து கிடக்கிறார். அது இந்த வருடத்தில் கைக் கூடும் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார் மாளவிகா வேல்ஸ். புதுமுக இயக்குநர் ஒருவரின் த்ரில்லர் கதைக்காக தயாராகி வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.