'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 131

ஜூன் 1-ஆம் தேதி குடியரசுத் தலைவர் மாளிகையில் தேவே கெளடா தலைமையில் அமைய இருக்கும் ஐக்கிய முன்னணி அரசு பதவி ஏற்பதற்காக அனைத்துக் கட்சித் தலைவர்களும் கூடியிருந்தனர்.
'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 131


ஜூன் 1-ஆம் தேதி குடியரசுத் தலைவர் மாளிகையில் தேவே கெளடா தலைமையில் அமைய இருக்கும் ஐக்கிய முன்னணி அரசு பதவி ஏற்பதற்காக அனைத்துக் கட்சித் தலைவர்களும் கூடியிருந்தனர். வி.பி. சிங், சந்திரசேகர், பி.வி. நரசிம்ம ராவ், வாஜ்பாய் என்று நான்கு முன்னாள் பிரதமர்களும் அருகருகே அமர்ந்து பேசிக் கொண்டிருந்ததை அனைவரும் ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

இன்னொருபுறம், கருணாநிதி, மகந்தா, சந்திரபாபு நாயுடு, லாலு பிரசாத் யாதவ், ஜோதிபாசு என்று மாநில முதல்வர்கள் வந்திருந்தனர். பொது நிகழ்ச்சிகளைத் தவிர்த்துவந்த சோனியா காந்தியும் வந்திருந்தது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. ஜி.கே. மூப்பனார் அவரிடம் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தது அனைவரின் பார்வையையும் ஈர்த்ததில் வியப்பில்லை.

"மூப்பனார் ஏன் அமைச்சரவையில் இடம்பெறவில்லை?'  என்பது, யாருமே வெளிப்படையாகக் கேட்காத கேள்வியாகத் தொடர்ந்தது.  தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் ப. சிதம்பரமும், எம். அருணாச்சலமும் கேபினட் அமைச்சர்களாகப் பதவி ஏற்கிறார்கள் என்று குடியரசுத் தலைவர் மாளிகை அறிவிப்பு வந்தது முதல் அந்தக் கேள்வி அரசியல் வட்டாரங்களில் வலம் வந்து கொண்டிருந்தது.

ஜனதா தளத்துக்கு அடுத்தபடியாக அதிக எம்.பி.க்கள் பலம் கொண்ட கட்சியாக ஐக்கிய முன்னணியில் இடம் பெற்றிருந்தும்கூட, தமாகா தலைவர் அமைச்சரவையில் சேராததற்குப் பல காரணங்கள் கூறப்பட்டன. முக்கியமான நிதித்துறை ப. சிதம்பரத்துக்கு வழங்கப்பட்டிருக்கும் நிலையில், தமாகாவுக்கு இன்னொரு முக்கியமான துறையை வழங்க முடியாது என்று ஒரு காரணம் கூறப்பட்டது.

மிக முக்கியமான உள்துறை, வேளாண்மை இரண்டும் யாருக்கும் ஒதுக்கப்படாமல் பிரதமர் வசமே இருந்தன. ப. சிதம்பரத்திடம் நிதித்துறை மட்டுமல்லாமல் சட்டமும், ராம் விலாஸ் பாஸ்வானிடம் ரயில்வே துறை மட்டுமல்லாமல் நாடாளுமன்ற விவகாரமும், எஸ்.ஆர். பொம்மையிடம் மனித வளத்துடன் நிலக்கரியும், வெளியுறவுத் துறை அமைச்சரான ஐ.கே. குஜ்ரால் வசம் நீர்வளத் துறையும் வழங்கப்பட்டிருந்ததில் இருந்து, விரைவிலேயே அமைச்சரவை விரிவாக்கம் நடைபெறும் என்பது தெரிந்தது.

குடியரசுத் தலைவர் மாளிகை பதவியேற்பு நிகழ்ச்சியில் ஜி.கே. மூப்பனாரின் முகத்தில் இருந்து எந்தவித செய்தியையும் தெரிந்துகொள்ள முடியவில்லை. அவர் உற்சாகமாக இருந்தார் என்று சொல்ல முடியாவிட்டாலும், வருத்தமாக இருந்ததற்கான எந்தவித அறிகுறியும் தெரியவில்லை. மாறாக, தமிழக முதல்வர் கருணாநிதியும், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் மிகுந்த உற்சாகத்தில் இருந்ததை உணர முடிந்தது.

பதவி ஏற்பு நடந்து கொண்டிருக்கும்போதே, பெங்களுரிலிருந்து ஒரு துக்க செய்தி வந்தது. குடியரசின் முன்னாள் தலைவர் நீலம் சஞ்சீவ ரெட்டி காலமானார் என்பதுதான் அது. பதவியேற்பு முடிந்த கையோடு அவருக்கு அஞ்சலி செலுத்தக் குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மாவும், புதிதாகப் பதவி ஏற்றுக்கொண்ட தேவே கெளடாவும் பெங்களுரு கிளம்ப வேண்டும் என்கிற கட்டாயம் ஏற்பட்டதால், ஒருவித சம்பிரதாய அமைதி அங்கே பரவியது.

நிகழ்ச்சி முடிந்த கையோடு வெளியே வந்த என்னைத் தனது காரில் ஏற்றிக் கொண்டார் அஜித் சிங். அப்போது அவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்திருந்த நேரம். அவர் தேவே கெளடாவுக்கு மிகவும் நெருக்கமானவர் என்பது எனக்குத் தெரியும். அதனால் அவருடன் செல்லும் வாய்ப்பை நழுவவிடாமல் அவரது துக்ளக் ரோடு வீட்டுக்குச் சென்றேன்.
வீட்டுக்குள் போய் அவரது அலுவலக அறையில் நாங்கள் அமர்ந்தோம். அவர்தான் பேச்சைத் தொடங்கினார்.

"என்ன, உங்கள் மூப்பனார் ஏன் அமைச்சரவையில் சேரவில்லை? விசாரித்தீர்களா?''

"அதைத் தெரிந்து கொள்ளத்தான் நான் உங்களுடன்  வந்தேன்...''

அரசியல் வட்டாரத் திரைமறைவு செய்திகளைப் பகிர்ந்து கொள்வதில் அஜித் சிங்குக்கு எப்போதுமே தனி மகிழ்ச்சி உண்டு. மிகவும் நெருங்கிய, நம்பிக்கைக்குரிய சிலரிடம்தான் அதைப் பகிர்ந்து கொள்வார் என்பதையும் குறிப்பிட வேண்டும். தொலைபேசி ஒற்றுக் கேட்புப் பிரச்னையை எழுப்பி கர்நாடக முதல்வராக இருந்த ராமகிருஷ்ண ஹெக்டேவைப் பதவி விலகச் செய்ததில் சுப்பிரமணியன் சுவாமி, தேவே கெளடாவுடன் இணைந்து அஜித் சிங்கிற்கும் பெரிய பங்குண்டு.

சுவாமி, அஜித் சிங், ராம்விலாஸ் பாஸ்வான் மூவரும் தில்லி அரசியலில் பல திரைமறைவுக் காட்சிகளை அரங்கேற்றி அரசியல் மாற்றங்களை நிகழ்த்துவார்கள். அவர்களுக்குத் தெரியாத ரகசியங்கள் எதுவும் இருக்காது. ஆனால், அவர்களுடைய செயல்பாடுகள் மிகவும் ரகசியமாக இருக்கும்.

"உலக வங்கியும், பன்னாட்டு நிறுவனங்களும் கொடுத்த அழுத்தம் காரணமாகத்தான் மூப்பனார் அமைச்சரவையில் இணையவில்லை என்பது எனக்குக் கிடைத்திருக்கும் மிகவும் நம்பகமான தகவல்.''

"பன்னாட்டு நிறுவனங்களுக்கும், உலக வங்கிக்கும் மூப்பனாரிடம் என்ன விரோதம்? அவர்கள் ஏன் அவர் பிரதமராவதையோ, அமைச்சராவதையோ தடுக்க வேண்டும்?''

"நரசிம்ம ராவ் அரசின் பொருளாதாரக் கொள்கைகள் தொடர்வதை உறுதி செய்ய வேண்டும் என்பதற்காக அவர்கள் அழுத்தம் கொடுத்தார்கள். நிதி, தொழில், வர்த்தகம் மூன்று துறைகளிலும் தங்களுக்கு இணக்கமானவர்கள்தான் அமைச்சராக வேண்டும் என்பது அவர்களது கோரிக்கை. அவர்களைப் பகைத்துக் கொண்டு ஆட்சி நடத்த முடியாது என்பதால்தான் இப்போதைய ஏற்பாடு.''

"இப்போதைய ஏற்பாடு என்றால் என்ன அர்த்தம்?''

"நிதியமைச்சர் பதவிக்கு, ஐக்கிய முன்னணிக் கட்சிகளிடம் ப. சிதம்பரத்தை விட்டால் பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஏற்புடைய இன்னொருவர் கிடையாது. முந்தைய ஆட்சியில் முக்கியமான வர்த்தகத் துறையைக் கையாண்டவர். அந்தக் கொள்கைகளின் நீட்சியை அவரால் உறுதி செய்ய முடியும்.  ஒரே கட்சியைச் சேர்ந்தவர்களுக்குப் பிரதமர் பதவியும், நிதியமைச்சர் பதவியும் எப்படி ஒதுக்குவார்கள்? அதனால்தான், மூப்பனாரை அகற்றி நிறுத்தி, ப. சிதம்பரத்தை நிதியமைச்சராக்கி விட்டார்கள். பிரதமராக யார் இருக்கிறார் என்பது உலக வங்கிக்கு முக்கியமல்ல; யார் நிதியமைச்சர் என்பதுதான் முக்கியம்.''

"மூப்பனாருக்கு வேறு ஏதாவது முக்கியமான துறையைக் கொடுத்திருக்கலாமே...''

"பிரதமர் பதவியை எதிர்பார்த்த முலாயம், உள்துறை அல்லது பாதுகாப்புத் துறை தனக்குத் தரப்பட வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தார். நான் கேள்விப்பட்ட வரையில், பிரதமராவதற்கோ, அமைச்சராவதற்கோ மூப்பனார் அதிக ஆர்வம் காட்டவில்லை என்று தெரிகிறது.''

"அப்படியானால், அவர் பிரதமராவதற்கும், அமைச்சரவையில் சேராததற்கும் வேறு காரணம் எதுவும் கிடையாது, அப்படித்தானே...''

"அப்படியும் சொல்ல முடியாது. தேவே கெளடா பிரதமராகலாமானால், அவர் ஏன் பிரதமராகக் கூடாது? 20 எம்.பி.க்களுடன் பிரதமர் பதவியும், நிதியமைச்சர் பதவியும் வேண்டும் என்று அவர் பிடிவாதம் பிடித்தால், யார் மறுத்திருக்க முடியும்? அவர் கேட்கவில்லை. தேவே கெளடாபோல, வலியப்போய் தனக்குப் பதவி கேட்கும் சுபாவம் அவருக்குக் கிடையவும் கிடையாது. அதே நேரத்தில் அவர் பிரதமராவதை, வேறு பலரும் விரும்பவில்லை என்பதும் எனக்குத் தெரியும்.''

"யார் அந்த வேறு பலர்...?''

"உறுதியாகத் தெரியாதவரை நான் உங்களுக்குத் தெரிவிக்கத் தயாராக இல்லை. அதை நீங்களே கண்டுபிடித்துக் கொள்ளுங்கள். அவருக்கு மிகவும் நெருக்கமான ஒருவரேகூட அவருக்கு எதிராக இருந்தார். அவ்வளவுதான் என்னால் சொல்ல முடியும்...''

மூப்பனார் ஏன் பிரதமராகவில்லை என்பதற்கான பின்னணிக் காரணம் தெரிந்துவிட்டது. அதற்குக் காரணமாக இருந்தவர் யார் என்கிற புதிருக்கான விடையை நான் ஓரளவுக்குக் கண்டுபிடித்துவிட்டேன். அஜித் சிங்கைப் போலவே, 100% உறுதியாகத் தெரியாமல் அதைப் பதிவு செய்ய நான் விரும்பவில்லை.

தேவே கெளடா அரசு பதவியேற்றதைத் தொடர்ந்து, அடுத்தடுத்த நிகழ்வுகள் நகர்ந்தன. அமைச்சரவையில் இணைவது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முடிவெடுத்தது. மார்க்சிஸ்ட் கட்சியின் ஆமோதிப்புடன் குறைந்தபட்ச பொதுத் திட்டம் அறிவிக்கப்பட்டது. ஆந்திர பவனில் பிரதமர் தேவே கெளடாவும், மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஹர்கிஷன்சிங் சுர்ஜித்தும் வெளியிட்ட அந்த பொதுத் திட்டம், திட்டவட்டமாகத் தெரிவித்த முக்கியமான செய்தி, "பொருளாதார சீர்திருத்தங்கள் கைவிடப்படமாட்டாது!'' என்பதுதான்.

ரஃபி மார்க்கிலுள்ள "கான்ஸ்டிட்யூஷன் கிளப்' அரங்கில் சோஷலிசத்தின் இயைபு (ரெலவன்ஸ்) குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. அதில் சுரேந்திர மோகன், ரபி ரே, ஜார்ஜ் பெர்ணான்டஸ், மது தண்டவதே உள்ளிட்ட மூத்த சோஷலிச தலைவர்கள் பேசுகிறார்கள் என்பதால் சென்றிருந்தேன். கூட்டம் முடிந்து திரும்பும்போது, அருகிலுள்ள வி.பி. ஹெளசில், மார்க்சிஸ்ட் கட்சியின் துணைத் தலைவர் பாசுதேவ் ஆச்சார்யா எம்.பி. செல்வதைப் பார்த்தேன்.

ரயில்வே தொழிலாளர்களின் நலனுக்காகக் குரல் எழுப்பும், தலைசிறந்த தொழிற்சங்கவாதிகளில் ஒருவர் பாசுதேவ் ஆச்சார்யா. 1980 முதல் 2014 வரை, மேற்கு வங்கம் பங்கூரா மக்களவைத் தொகுதி உறுப்பினராக இருந்த பாசுதேவ் ஆச்சார்யா, 2014-இல் திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளரான நடிகை மூன்மூன் சென்னிடம் தோல்வியைத் தழுவியது வரலாற்று சோகம். 

அவரை நெருங்கி வணக்கம் சொன்னபோது, "என்ன?' என்கிற பார்வை அவரிடம் எழுந்தது. அதிகம் பேச மாட்டார். பேசினால், நறுக்குத் தெரிந்தாற்போல வார்த்தைகள் வந்து விழும்.

"குறைந்தபட்ச பொதுத் திட்டம் அறிவித்திருக்கிறார்கள், பார்த்தீர்களா?''

"ஆட்சிகள்தான் மாறிக் கொண்டிருக்கின்றனவே தவிர, காட்சிகள் மாறப் போவதில்லை.''

"காம்ரேட் சுர்ஜித்தும் இணைந்துதானே அதைத் தயாரித்திருக்கிறார்கள்...''

"அவர் தயாரிக்கவில்லை. அவர்கள் தயாரித்தார்கள். அதில் தன்னால் முடிந்தவரை சில திருத்தங்களைச் செய்திருக்கிறார், அவ்வளவுதான்.''

"இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அரசில் பங்கு பெறப்போகிற நிலையில், கெளடா அரசு தங்கள் விருப்பம்போல நடந்து கொள்ள முடியாது என்பதுதான் பரவலான நம்பிக்கை.''

"அவர்கள் சேர்ந்ததாலேயே, இந்த ஆட்சி அதிக நாள்கள் தாக்குப் பிடிக்காது. தாக்குப் பிடிக்க அனுமதிக்க மாட்டார்கள்.''

"அனுமதிக்க மாட்டார்கள் என்று யாரைச் சொல்கிறீர்கள்? காங்கிரஸையா, பாஜகவையா?''

"எல்லோரையும்தான். உங்களுக்கு நான் பேட்டி எதுவும் தரவில்லை.''

"நான் பேட்டிக்காகக் கேட்கவில்லை. என் தனிப்பட்ட தகவலுக்காகக் கேட்கிறேன். இந்த ஆட்சியில் உங்களுக்கு உடன்பாடு கிடையாதா?''

"உடன்பாடு இருந்திருந்தால், தோழர் ஜோதிபாசு பிரதமராகி இருப்பாரே... நாங்களும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிபோல அமைச்சரவையில் சேர்ந்திருப்போமே... ஓராண்டுக்கு மேல் இந்த அரசு தாக்குப் பிடிக்காது.''

எனது அடுத்த கேள்விக்குக் காத்திருக்காமல், விரைந்து விட்டார் பாசுதேவ் ஆச்சார்யா. 

தலைநகர் தில்லியில் குழப்பம் என்றால், சென்னையில் அதிமுக பிரமுகர்களின் வீடுகளில் நடத்தப்படும் சோதனைகள் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தன. ஜெயலலிதா எப்போது கைது செய்யப்படுவார் என்கிற கேள்வி வலம் வந்து கொண்டிருந்தது.

சென்னை திரும்புவதா, இல்லை 12-ஆம் தேதி நடைபெற இருந்த கெளடா அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்புக்குக் காத்திருப்பதா என்கிற குழப்பம் எனக்கு. 

எனது வேண்டுகோள் ஏற்கப்பட்டு, பேட்டிக்கு நேரம் ஒதுக்கியிருப்பதாக எல்.கே. அத்வானி வீட்டிலிருந்து தகவல் வந்தது...

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com