மரபுகளை உடைக்கும் பெண் சினிமாக்கள்!

சமூக வலைதளத்தில் அண்மையில் ஒரு புகைப்படம் வைரலாகி கவனம் பெற்றது.
மரபுகளை உடைக்கும் பெண் சினிமாக்கள்!
Updated on
2 min read

சமூக வலைதளத்தில் அண்மையில் ஒரு புகைப்படம் வைரலாகி கவனம் பெற்றது.  ஒரு திரையரங்கின் முகப்பில் பெரிய அளவில் நான்கு திரைப்பட பேனர்கள். நயன்தாரா நடித்த "கனெக்ட்',  த்ரிஷா நடித்த "ராங்கி',  ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த "டிரைவர் ஜமுனா',  கோவை சரளா நடித்த "செம்பி'. ஹீரோயின்கள் முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருந்த இத்தனை திரைப் படங்கள் ஒரே வாரத்தில் வெளியானது ஒரு சாதனை.

நூற்றாண்டைக் கடந்த தமிழ் சினிமாவில் பெண்களுக்கான இடம் மிகக் குறுகலானது. தமிழ் சினிமாவின் தாயான நாடகத்தில், பெண்களுக்கான இடமே கிட்டத்தட்ட இல்லை. நாடகங்களில் பெண்கள் நடிப்பது கண்ணியக் குறைவு என்ற தவறான நம்பிக்கை ஆழ வேரூன்றியிருந்ததால் ஆண்களே பெண் வேடமிட்டு நடித்தனர். 

கே.பி.ஜானகியம்மாள், கே.பி.சுந்தராம்பாள் என மிகக் குறைவான பெண்களே நாடகங்களில் தோன்றினார்கள்.  திரைப்படம் உருவான பிறகு இந்த நிலை மாறியது என்றாலும் சினிமா என்றாலே ஆண்களால், ஆண்களுக்காக உருவாக்கப்பட்ட கலை ஊடகம் என்பதே இன்று வரை நிலைமை. 

சினிமாவில் பெண் என்பவள் தொட்டுக் கொள்ளும் ஊறுகாய் என்றால், சீரியல்களில் ஆண்கள் பெயருக்காகச் சேர்த்துக் கொள்ளப்படும் கறிவேப்பிலை. அதனால்தானோ என்னவோ... சினிமா என்னும் ஆண் ஊடகத்துக்கு எதிராக டி.வி . சீரியல்களை விரும்பிப் பார்த்து ஆதரிக்கும் உளவியல் பெண்களிடம் நிலவுகிறது.

2010-க்குப் பிறகு தமிழ் சினிமாவின் முகமே மாறியிருக்கிறது.  பழைய ஃபார்முலாக்கள் தகர்ந்திருக்கின்றன. உச்ச நட்சத்திரங்களின் படங்களே இந்த ஃபார்முலாக்களில் இருந்து விலக ஆரம்பித்திருக்கின்றன.  கதை சொல்லல் என்று வடிவத்திலும் உள்ளடக்கத்திலும் தமிழ் சினிமா மாறியிருக்கிறது. அபத்தமான பெண் சித்திரிப்புகள் பெரிதாக குறைய ஆரம்பித்திருப்பதும் தெரிகிறது.  சினிமாவில் நடந்த இந்த மாபெரும் மாற்றங்களின் தொடர் விளைவுதான் பெண் மைய சினிமாக்கள் என்று சொல்லலாம்.

அடுத்ததாக, ஓடிடி தளங்கள் பெண் சினிமாவுக்கான பெரிய களத்தை விரித்தது.

ஒவ்வொரு காலகட்டத்திலும் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற நடிகைகள் இருந்தாலும், அவர்கள்  "கனவுக்கன்னி' என்ற இடத்தைத் தாண்டியதில்லை. முதன்மையான நாயகர்களின் படங்களில் ரொமான்ஸ் காட்சிகள், டூயட் பாடல்களில் வந்து போவது மட்டுமே அவர்களுக்காக ஒதுக்கப்பட்டது. அதை மீறி வந்து "லேடி சூப்பர் ஸ்டார்' க்ரீடம் சூடினார் நயன்தாரா. அவர் தந்த வியாபார வெற்றியும் உத்தரவாதமும், தயாரிப்பாளர்களை பெண் சினிமா புராஜெக்ட்களை "டிக்' செய்ய வைத்தன. ரஜினிக்குக் கதை சொல்வது, விஜய்க்குக் கதை சொல்வது போல நயன்தாராவுக்குக் கதை சொல்வது, ஜோதிகாவுக்குக் கதை சொல்வது என்று இயக்குநர்கள் தயாராவது குறிப்பிடத்தக்க ஆரோக்கியமான மாற்றம்.

தமிழ் சினிமாக்களில் பெண்கள் குறித்த சித்திரிப்புகள் பற்றி சில பார்வைகளைத் தொகுத்துக் கொள்ளலாம். 

அம்மா சென்டிமென்ட், தங்கை சென்டிமென்ட், தாலி சென்டிமென்ட் என்ற பெயரில் பெண்கள் குடும்ப வன்முறைகளைச் சகித்துக்கொள்பவர்களாகவும், ஆண்களுக்காகத் தியாகம் செய்பவர்களாகவுமே காட்சிப்படுத்தப்பட்டார்கள். படித்த, கேள்வி கேட்கும் பெண்கள் திமிருள்ளவர்களாகவும், அவர்களை அடக்குவதே நாயகர்களின் முதன்மைப் பணியாகவும் தமிழ் சினிமா சித்திரித்தது. பெண்களுக்கு அநீதி இழைக்கப்பட்டாலும் அதற்காக வஞ்சம் தீர்ப்பதும் நீதி பெறுவதும் ஆண்களின் கடமையாகவே ஆக்கப்பட்டன. 

"வா அருகில் வா'வில் இருந்து "அரண்மனை' வரை நீண்ட பட்டியலிடலாம். ஆனால், இதுவெல்லாம் சமீபத்தில் வெளியாகும் பெண் சினிமாக்கள் உடைக்கத் தொடங்கியிருக்கின்றன. 

கடந்த இரண்டு ஆண்டுகளில் வெளியான பெண் தமிழ் சினிமாக்களில் "கார்கி' திரைப்படத்துக்கு முதன்மை இடத்தை வழங்கலாம். அதே நேரத்தில் இன்னும் சில விஷயங்களில் படைப்பாளிகள் கவனம் கொள்ள வேண்டும். குழந்தைகள், பெண்கள் மீதான பாலியல் வன்முறை அநீதியை சினிமாக்களில் முன் வைப்பது அவசியம் என்றாலும், அது பெண்களை அச்சுறுத்தும் வகையில் மாறிவிடக் கூடாது.  மேலும் "இதுதான் டிரெண்ட்' என்ற பெயரில் பாலியல் வன்முறை மட்டும்தான் பெண்களின் ஒரே பிரச்னை என்று படங்களாக எடுத்துக் குவிப்பதன் மீதும் எச்சரிக்கை வேண்டும்.

கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக சாதிப் பிரச்னையை வெளிப்படையாகப் பேசும் தலித் சினிமாக்கள் வருவது வரவேற்கத்தக்கது. ஆனால் அவையும் "காலா', "கபாலி', "பரியேறும் பெருமாள்', "அசுரன்', "கர்ணன்' என்று ஆண்மைய ஹீரோயிச சினிமாக்களாகவே அமைந்திருப்பது விமர்சனத்துக்குரிய அம்சம். அந்த வகையில், அவ்வழக்கத்தின்மீது முதற் கல்லை எறிந்திருக்கிறது "விட்னஸ்' திரைப் படம். மலக்குழி மரணங்கள் என்னும் சமூக அவலத்துக்கான அத்தனை காரணங்களையும் அலசி அதைக் குறிப்பிடத்தக்க படைப்பாக மாற்றியிருப்பதுடன் "இந்திரா' என்னும் தூய்மைப்பணியாளரான பெண்ணையே முதன்மைப்படுத்தியிருப்பதும் பாராட்டத்தக்கது. ரோகிணி இந்தப் பாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார்.

கீர்த்தி சுரேஷின் அபாரமான நடிப்பில் வெளியான "சாணிக்காயிதம்' பெண் சினிமாதான் என்றாலும் வன்முறையின் அழகியலைக் கழித்துப்பார்த்தால் எதார்த்தம் மிஞ்சாத சினிமா. "நட்சத்திரம் நகர்கிறது' ரெனே பாத்திரமும் சமீபத்தில் அதிகம் வரவேற்புக்கும் விமர்சனத்துக்கும் உள்ளான பாத்திரம். ஆனால் வெவ்வேறு விதமான அரசியல் விவாதங்களுக்கு அளித்த முக்கியத்துவம் பெண்களின் பிரச்னைகளுக்கு அளிக்கப்படாததால் முழுமையான பெண் சினிமாவாக அதைச் சொல்லிவிட முடியாது.

பெண்களை மையப்படுத்தி திரைப்படங்கள் வருவதைப்போல் பெண் இயக்குநர்களின் வருகையும் அதிகரித்திருக்கிறது. வி.பிரியா, மதுமிதா, நந்தினி, ஹலிதா ஷமீம், சுதா கொங்கரா, காயத்ரி (புஷ்கர்), கிருத்திகா உதயநிதி, ஐஸ்வர்யா ரஜினிகாந்த், லெட்சுமி ராமகிருஷ்ணன், சந்திரா என்று இரட்டை இலக்கத்தைத் தொடும் எண்ணிக்கை மகிழ்ச்சியானது. ஆண் இயக்குநர்களைவிட பெண்களின் வாழ்க்கையை நம்பகமான முறையில் இவர்கள் படமாக்கும் வாய்ப்பு அதிகம். இன்னும் பல தொழில்நுட்பப் பிரிவுகளிலும் பெண்களுக்கான இடம் காலியாகவே இருக்கிறது. பெண்களை முதன்மைப்படுத்தி பேசும் சினிமாக்கள் அதிகரிக்க வேண்டும், அதை பெண்களே இயக்கும் வாய்ப்பும் அதிகரிக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com