ஹீரோயின்  ஸ்பெஷல்..!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி இடங்களில் இருக்கும் நயன்தாரா, தமன்னா, ராஷ்மிகா, கீர்த்தி சுரேஷ் ஆகியோரைப் பற்றி சமீபத்திய அப்டேட் செய்திகள் இங்கே?
ஹீரோயின்  ஸ்பெஷல்..!
Updated on
3 min read


தென்னிந்திய சினிமாவில் முன்னணி இடங்களில் இருக்கும் நயன்தாரா, தமன்னா, ராஷ்மிகா, கீர்த்தி சுரேஷ் ஆகியோரைப் பற்றி சமீபத்திய அப்டேட் செய்திகள் இங்கே?

லேடி சூப்பர் ஸ்டார் 75

திருமணத்துக்குப் பின்னர் கணவர், குழந்தைகள் என குடும்ப பொறுப்புகளை கவனித்து வந்த நயன்தாரா, மீண்டும் நடிப்பில் பிஸியாகிவிட்டார். இப்போது அரை டஜன் படங்கள் கைவசம் வைத்திருப்பதாகச் சொல்கிறார்கள். சமீபத்தில் அவர் கமிட் ஆகியிருக்கும் 'லேடி சூப்பர் ஸ்டார் 75' (தற்காலிகமான தலைப்பு என்கிறார்கள்) அவரது 75-ஆவது படமாகும். அவரது 81ஆவது படத்தை துரை.செந்தில்குமார் இயக்குகிறார்.

இப்படி நயன்தாரா தற்போது நடித்து வரும் படங்களின் லைன்அப்கள் விரிந்து கிடக்கின்றன. 'இறைவன்', 'ஜவான்' படங்களை முடித்துக் கொடுத்துவிட்டார். அட்லீ இயக்கத்தில் ஷாரூக்கான், விஜய்சேதுபதி இணைந்து நடித்திருக்கும் 'ஜவான்' படப்பிடிப்பின்போது நயனின் திருமணம் நடந்தது நினைவிருக்கலாம்.
'ஜவான்' படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடெக்ஷன் வேலைகள் மும்பையில் நடைபெறுகிறது. அதைப்போல, 'வாமனன்', 'என்றென்றும் புன்னகை', 'மனிதன்' படங்களை இயக்கிய அஹமதின் இயக்கத்தில் ஜெயம் ரவியின் ஜோடியாக நடித்திருக்கும் 'இறைவன்' படப்பிடிப்பும் முடிந்துவிட்டது.

அடுத்து ராஜ்கமல் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் படத்திலும் நயன் நடிக்கவிருக்கிறார். 'மேயாத மான்' ரத்னகுமார் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் ஜோடியாக ஒரு படம், மலையாளத்தில் நிவின்பாலியுடன் 'லவ் ஆக்ஷன் டிராமா'வுக்கு பிறகு 'டியர் ஸ்டூடண்ட்ஸ்' மற்றும் மாதவன் நடிப்பில் தயாரிப்பாளர் சஷிகாந்த் இயக்குநராக அறிமுகமாகும் 'டெஸ்ட்' படத்திலும் நடித்து வருகிறார்.

இதனையடுத்து விக்னேஷ் சிவன் தயாரிப்பில் துரை செந்தில்குமார் இயக்கத்தில் 81-ஆவது படம் என பல படங்களை கைவசம் வைத்துள்ளார் நயன்தாரா. இதில் ஷங்கரின் உதவியாளர் நீலேஷ் கிருஷ்ணா இயக்கும் 'லேடி சூப்பர்ஸ்டார் 75' நயனின் படங்களிலேயே மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகிறது எனச் சொல்லியிருக்கிறார்கள். தவிர மணிரத்னம் இயக்கத்தில் கமல் இணையும் படத்திலும் நயன்தாராவிடம் பேசி வருவதாகச் சொல்கிறார்கள்.

தொழிலதிபரை மணக்கும் தமன்னா?

மும்பையைச் சேர்ந்த ஓர் இளம் தொழிலதிபரை திருமணம் செய்ய தமன்னா பாடியா சம்மதித்து இருப்பதாகவும், அவரை கடந்த சில ஆண்டுகளாக தமன்னாவுக்கு தெரியும் என்றும் செய்தி வெளியானது. இதற்காக தமன்னா புதிய படங்கள் எதிலும் ஒப்பந்தம் செய்து கொள்ளவில்லை என்றும் கூறப்பட்டது.

இந்தச் செய்தி வெளியாகி சில மணி நேரத்தில் தமன்னா மறுப்பு தெரிவிக்கும் விதமாக, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதில், தனது பிஸ்னஸ்மேன் கணவரை அறிமுகப்படுத்துவதாக குறிப்பிட்டு ''திருமணம் என்று அனைவரும் எனது வாழ்க்கையை எழுதுகின்றனர்'' என்று குறிப்பிட்டுள்ளார். அவர் வெளியிட்ட புகைப்படத்தில் ஆண் வடிவத்தில் தமன்னாவின் படம் இடம் பெற்றிருந்தது.

இதற்கு முன்பும் தமன்னா திருமணம் செய்து கொள்ளப்போவதாக செய்தி வெளியாகி இருக்கிறது. தனது 14 வயதில் நடிப்பு துறைக்கு வந்த தமன்னா தென்னிந்திய படங்களிலும்,ஹிந்தியிலும் நடித்திருக்கிறார். திருமணம் குறித்து தமன்னா அளித்துள்ள பேட்டியில், ''திருமணம் என்பது வெற்றிக்கான அளவுகோல் கிடையாது. திருமணம் என்பது ஒருவர் தனது வாழ்க்கைக்கு மதிப்பு சேர்க்கும் விஷயமாகும். இது இனிமையானதாகவும், அழகானதாகும் மாற்றும். அதனால் ஒருவர் திருமணம் செய்து கொள்ள வேண்டும். சிலருக்கு முன்பே இது நடந்திருக்கும். சிலருக்கு இனி நடக்கும். சிலர் அதனை விரும்பாமல் இருக்கலாம். திருமணத்தை விட வாழ்க்கையில் நிறைய இருக்கிறது'' என்று குறிப்பிட்டுள்ளார்.

ராஷ்மிகாவின் வருத்தம்

கன்னட திரையுலகில் ஆரம்பித்த ராஷ்மிகா மந்தனாவின் திரையுலகப் பயணம் தெலுங்கு, தமிழ், மலையாளம்.. என பாலிவுட் வரை சென்றிருக்கிறது. பிஸியாக நடித்துக் கொண்டிருந்தாலும் அவரைப் பற்றிய பல வதந்திகளும், பல விமர்சனங்களும் பரவி வருகின்றன.

இதனால் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ராஷ்மிகா, தனக்கு எதிராக வெறுப்பான கருத்துகளும், வதந்திகளும் தன்னை மிகவும் மன ரீதியாகப் புண்படுத்துவதாக வருத்தம் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி கூறியுள்ள அவர், 'எனக்கு எதிராக வெறுப்பான கருத்துகள் பரப்புகின்றனர். அது ஏன் என்று எனக்குப் புரியவில்லை. அதிக உடற்பயிற்சி செய்தால் ஆணைப்போல இருப்பதாகச் சொல்கிறார்கள். உடற்பயிற்சி செய்யாவிட்டால் உடல் பருமனுடன் குண்டாக இருக்கிறேன் என்கிறார்கள். எதுவும் பேசாமல் இருந்தால் திமிரு என்கிறார்கள். நான் என்னதான் செய்வது? நான் சினிமாவை விட்டு விலக வேண்டும் என்று நினைக்கிறார்களா? என்னிடம் உங்களுக்கு என்னதான் பிரச்னை. உங்கள் வார்த்தைகள் மன ரீதியாக என்னை மிகவும் புண்படுத்துகின்றன. ஹிந்தி பாடலை உயர்வாகவும், தென்னிந்தியப் பாடல்களை அவமதிக்கும் வகையிலும் நான் பேசியதாகக் கூறியிருக்கிறார்கள். நான் அப்படி எதுவும் பேசவே இல்லை. வாரிசு படத்தில் எனக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்று கூறுகிறார்கள். நான் வாரிசு படத்தில் ஓர் அங்கமாக இருக்க வேண்டும் என்றுதான் விரும்பினேன். காரணம் எனக்கு விஜய்யை மிகவும் பிடிக்கும்'' என்று தனது வருத்ததைப் பதிவு செய்துள்ளார்.

பள்ளிக் கால நண்பருடன் திருமணம்

நடிகை கீர்த்தி சுரேஷ் தனது பள்ளிக் கால நண்பரை நீண்ட காலமாக காதலித்து வருவதாகவும் விரைவில் அவரைத் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் திருமணம் செய்யப் போகிறவர் கேரளாவில் ரிசார்ட் வைத்திருக்கிறார் எனவும் செய்திகள் வெளியாகின. அடுத்தடுத்து மாமன்னன், சைரன், ராகு தாத்தா போன்ற படங்கள் வெளியாகவுள்ளன. பரபரப்பான நடிகையாக இருப்பதால் கிசுகிசுக்களுக்கும் பஞ்சமே இல்லை.

தற்போதைய இந்தச் செய்தி 'விரைவிலேயே அவர் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்' எனச் சொல்லியது. பத்தாண்டுகளுக்கும் மேலாக இருவரும் காதலித்து வருவதாகவும், இருவர் வீட்டிலும் சம்மதம் தெரிவித்துவிட்டாலும் திருமணம் சில ஆண்டுகள் கழித்தே நடக்கும் என்றும் செய்தியில் குறிப்பிட்டிருந்தது.

இந்தத் தகவல் குறித்து கீர்த்தியின் அம்மா மேனகா சுரேஷ் விளக்கம் அளித்துள்ளார்.''முழுக்க முழுக்கப் பொய்யான, பரபரப்புக்காகக் கிளப்பி விடப்பட்டிருக்கிற செய்தி. கீர்த்தியின் திருமணம் தொடர்பான சோஷியல் மீடியா தீனிக்கு எங்களுடைய பதில் இதுதான், மேற்கொண்டு இது தொடர்பாக பேசுவதற்கு எதுவுமே இல்லை'' என முடித்துக் கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com