ஊஞ்சலாடும் மனது

ஊஞ்சலாடும் மனது

அயர்ந்த உறக்கத்தில் இருந்த அபிஷேக்,   ஏதோ சப்தத்தில் தூக்கம் கலைந்தான்.  அருகில் இருக்கும் செல்போனில் மணி பார்க்க,  காலை 5.30.  அதற்கு மேல் படுக்கத் தோன்றாமல் எழவே வெளியில் அந்தச் சத்தம் இன்னும் சற்று அதிகமாகக் கேட்டது.  படுக்கையறையை ஒட்டிய பால்கனிக்கு சென்று பார்த்தால்,  எதிர்வீட்டின் வாசலில் ஒரு லாரியில் இருந்து, கட்டில்,  பீரோ.. என்று ஒவ்வொன்றாக இறக்கப்பட்டு,  மேலே ஏற்றப்பட்டுக் கொண்டிருந்தன.  அப்போதுதான்  எதிர்வீட்டு மாடி போர்ஷன் காலியாக இருந்தது நினைவுக்கு வந்தது. "ஓ, அந்த வீட்டுக்குதான் யாரோ புதிதாக வந்திருக்கிறார்களோ?  என்று நினைத்தவாறே ப்ரஷை எடுத்து பல் தேய்க்கத் தொடங்கினான். 
அடுத்து  ஃப்ரிட்ஜில் இருந்த பால் கவரை கட் செய்து,  பாத்திரத்தில் ஊற்றி,  காபியைத் தயாரித்து,  அதை டம்ளரில் ஊற்றி எடுத்து பால்கனியில் இருந்த ஊஞ்சலில் அமர்ந்தான்.  ஒரு கையில் நாளிதழை பிடித்தபடியே ரிலாக்ஸ்டாக காபியை பருகத் தொடங்கினான். காபியை பருகி டம்ளரை கீழே வைப்பதற்கும்,  செல்போன் மணி அடிப்பதற்கும், சரியாக இருந்தது. 
எடுத்துப் பார்த்தால், "ப்ரணீதா'  என்று டிஸ்ப்ளேயில் ஒளிர்ந்தது.  மனைவிதான் கூப்பிடுவது.  
எடுத்து, "ஹலோ" என்றான். 
"அபிஷேக்,. ஒரு ரிங் போறதுக்குள்ள எடுத்துட்டியே!  இவ்வளவு சீக்கிரமாவா எழுந்துட்ட?''
" "நம்ம எதிர்வீட்டு மாடி போர்ஷன் காலியா இருந்தது இல்ல?  அந்த வீட்டுக்கு யாரோ குடிவராங்க!  இப்பதான் மேல சாமான் எல்லாம் ஏத்தறாங்க.  அவங்க வண்டிக்காரங்க ஏற்படுத்தின சத்தத்துலதான் முழிச்சுட்டேன்.  அப்புறம் தூக்கம் வரல. அதுதான் ஒரு டம்ளர் காபியோட பால்கனியில் உட்கார்ந்துட்டேன்.
"ஓ, அதுதானே பார்த்தேன்.  உன்னை எழுப்பலாமுன்னுதான்  போன் பண்ணினேன்.   அப்புறம் இன்னிக்கு ஒரு ஸ்கேன் எடுக்கச் சொல்லியிருக்காங்க!  போயிட்டு வரேன். வந்து நானே போன் பண்றேன்'' என்று கூறி, செல்போன் பேச்சை முடித்தாள் மனைவி. 
அபிஷேக் - ப்ரணீதா திருமணம் முடிந்து மூன்று ஆண்டுகள் முடிந்திருந்தன.  அபிஷேக் பி.இ.  கம்ப்யூட்டர் என்ஜினீயரிங் படித்து,  எம்.பி.ஏ.  முடித்திருந்தான். ப்ரணீதா பி.இ.கம்ப்யூட்டர் என்ஜினீயரிங் முடித்திருந்தாள்.  இருவருக்கும் சொந்த ஊர் தஞ்சாவூர்.  ஐ.டி.  கம்பெனியில் வேலை பார்ப்பவர்கள்.  பெற்றோர்கள் பார்த்து முடித்த திருமணம்தான்.  இரண்டு பேருமே சென்னையில் வேலை பார்ப்பதால்,  திருமணம் ஆனவுடனேயே தனிக்குடித்தனம்தான்.
இரண்டு பேரின் பெற்றோர் அவ்வப்போது சென்னை வந்து,   இவர்கள் வீட்டில் சில நாள்கள் தங்கிப் போவது வழக்கம். 
திருமணமான சில மாதங்களில் ப்ரணீதா அபிஷேக்கிடம், " இரண்டு பெட்ரூம் உள்ள  ஃப்ளாட்டில் வாடகைக்கு இருக்கோம். மூன்று பெட்ரூம் ஃப்ளாட் ஒன்னு சொந்தமா வாங்கிடணும்?  அதுதான் என் ஆசை. நீ என்ன சொல்ற?''  என்றாள்.
"ஃப்ளாட் வாங்கணும்னா முதலில் ஒன் தேர்ட் பணம் குடுக்கணும்.  மீதிக்கு இ.எம்.ஐ. போடலாம்.  நம்மளால சமாளிக்க முடியுமா ப்ரணீ?''
 " ரெண்டு பேரும் சம்பாதிக்கிறோம்.  ஒரு ரெண்டு வருஷம் வேலை பார்க்கிற தொகையை சேர்த்து வைச்சா,  முதலில் கட்ட வேண்டிய பணத்தைக் கட்டிடலாம்.  அப்புறம், ஒரு 
ஆள் சம்பளத்தை வாடகைக்கு குடுக்கற மாதிரி, இ.எம்.ஐ. கட்டிடலாம்.  கொஞ்ச நாளில், வீடும் நமக்கு சொந்தமாயிடும். என்ன சொல்றே?''"
"அது சரி ப்ரணீதா.  இப்ப நாம ரெண்டு பேர் மட்டும்தான். ஓ.கே.  நாளைக்கே  குழந்தை உண்டாச்சுன்னா,  நீ வேலைக்கு போக முடியாதுல்ல..''
" நாம ஒரு ரெண்டு வருஷம் குழந்தை பெத்துக்காம இருப்போம்.  அதுக்குள்ள முதலில் கட்ட வேண்டிய பணம் சேர்ந்துடும்.  அதைக் கட்டிட்டோமுன்னா,  அப்புறம்,  உன் சம்பளத்துல நாம சமாளிச்சுக்கலாம் அபிஷேக்.''
"முதல் குழந்தையை தள்ளிப் போடக் கூடாதுன்னு பெரியவங்க சொல்வாங்க ப்ரணீ.''
" ப்ராக்டிக்கலா யோசி..'' என்று அதற்கு மேல் பேசவிடாமல் முடித்து விட்டாள் ப்ரணீதா.
ஆனால், ஒருவருடம்கூட அவளால் தன் கொள்கையில் உறுதியாக இருக்க முடியவில்லை.  அவள் அம்மா அவளிடம்,  "என்னடி,  ஏதாவது நாள் தள்ளி போயிருக்கா?'' என்று கேட்கும்போது,  " நாங்க ப்ளானிங்ல இருக்கோம்மா?''  என்று சொல்ல முடிந்தது.  ஆனால், தொடர்ந்து வந்த விசேஷங்களில் மாமியார்,  மற்ற உறவினர்கள் அனைவரும் சொல்லிவைத்த மாதிரி இதே கேள்வியைக் கேட்டபோது,  அவளுடைய உறுதியானது தவிடு பொடியானது.
அதற்கப்புறம் அவளே அபிஷேக்கிடம், " ஒவ்வொருத்தருக்கும் என்னால் பதில் சொல்ல முடியலை.  ப்ளானிங்கும் வேண்டாம்,  ஒன்னும் வேண்டாம்''  என்று சொல்ல,  புன்னகையுடன் அவளை அணைத்தான்.
அவர்கள் குழந்தையை எதிர்பார்த்திருந்தாலும்,  இரண்டு ஆண்டுகள் முடிந்தும் ப்ரணீதாவுக்கு குழந்தை தரிக்கவில்லை.  ப்ரணீதாவின் தொந்தரவு தாங்க முடியாமல், அவளை மகப்பேறு மருத்துவரிடம் கூட்டிப் போனான் அபிஷேக். 
இருவரையும் பரிசோதித்த டாக்டர்,  "உங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை.   ஆனால் ப்ரணீதா ரொம்பவும் பலவீனமாயிருக்காங்க!  நீங்க என்ன வேலை பண்றீங்க ப்ரணீதா?''   என்று கேட்டார். 
"நான் கம்ப்யூட்டர் எஞ்சினீயரிங் முடிச்சு, ஐ.டி. கம்பெனியில் வேலை பார்க்கிறேன் டாக்டர்."
"உங்களுக்கு நைட் டியூட்டி வருமா?"
"வரும் டாக்டர்''
"உங்கள் கணவருக்கும் நைட் டியூட்டி வருமா?''
"அவருக்கும் வரும்.''
"இரண்டு பேருக்கும் ஒரே டைமில்தான் நைட் ஷிப்ட் வருமா?''
  "அப்படி இல்லை டாக்டர்.  இரண்டு பேரும் வேறு வேறு கம்பெனி.  எனவே மாறி மாறிதான் வரும்.''
"ப்ரணீதா நான்சொல்ற மாதிரி செய்யுங்க!  
உங்களுக்கு வேலையினால் மன உளைச்சல் இருக்கு.  அது உங்க உடலைப் பாதிக்குது.  நீங்க சரியா தூங்கி எழுந்தாலே நல்லாயிடுவீங்க?''  என்று கூறிய டாக்டர் தாம்பத்தியத்தைப் பற்றி சில ஆலோசனைகளையும் கூறி அவர்களை அனுப்பிவைத்தார்

வீட்டுக்கு வந்த இருவரும் பேசி முடிவெடுத்தபடி,   ப்ரணீதா வேலையை விட்டாள். அதற்குபின்னர்,  பொறுமையாக வீட்டு வேலை செய்வது,  நன்றாகச் சாப்பிட்டு தூங்குவது,.. என்று இருக்க , ஒரு மாதத்தில் அவளுக்கே உடல் புத்துணர்வு அடைந்ததை உணர முடிந்தது. 
அபிஷேக் விரும்பும் உணவை சமைத்துவைத்து,  அடிக்கடி ஷாப்பிங்,  சினிமா,  பீச்,  தீம் பார்க்.. என்று சுற்றி அவர்கள் இன்னும் அன்னியோன்னியம் ஆயினர். 
இவ்வாறு ஒருவழியாக மூன்று ஆண்டுகள் முடியும்போது,  ப்ரணீதா கருவுற்றாள். 
நாள் தள்ளியதும்  டாக்டரிடம் இருவரும் செல்ல, பரிசோதித்துவிட்டு, கர்ப்பத்தை உறுதிசெய்தார்.  
கூடவே, "உங்க கர்ப்பப் பை கொஞ்சம் வீக்கா இருக்கு.  நீங்க குழந்தை பிறப்பு வரை கடின வேலை எதுவும் செய்யாதீங்க! முழு ரெஸ்ட் எடுப்பது நல்லது''  என்றார் டாக்டர்.

இருவருக்கும் மிகவும் சந்தோஷம்.

வெளியில் வந்தவுடன்,  "ப்ரணீ,  நீ வீட்டுக்குப் போய் சமைக்க வேண்டாம்.  நாம் இதைக் கொண்டாடுவோம்''  என்று சொல்லி ஹோட்டலில் போய் சாப்பிட்டு வீடு திரும்பினர். 
வீட்டுக்கு வந்தவுடன் ப்ரணீதா தன்னுடைய அம்மாவுக்கும்,  மாமியாருக்கும் போன் செய்து விஷயத்தைக் கூற இரு குடும்பத்தாருக்கும் சந்தோஷம். 
மறுநாளே  ப்ரணீதாவின் அம்மாவும்,  அப்பாவும் தஞ்சாவூரிலிருந்து கிளம்பி,  சென்னைக்கு இவர்கள் வீட்டுக்கு வந்தனர். 
இரவு, அனைவரும் சாப்பிட்டு முடித்தவுடன்,  ப்ரணீதாவின் அப்பா அபிஷேக்கிடம்,  "மாப்பிள்ளை,  நாங்க ப்ரணீதாவை தஞ்சாவூரில் வைச்சு பார்த்துக்கறோம்.  குழந்தை பிறந்தவுடன் இங்கே கொண்டு வந்துவிடறோம்.  நீங்க உங்களுக்கு லீவு கிடைக்கும்போது வந்து பார்த்துட்டு போங்க!''  என்றார்.
"மாமா,  மாமி.. நீங்க ரெண்டு பேரும் இங்கேயே  இருந்து அவளைப் பார்த்துக்கலாமே?''
"அது சரிப்படாது மாப்பிள்ளை.  ஒரு வாரம்,  பத்து நாள்ன்னா  சமாளிப்போம்.  எனக்கு காலையிலேயே வயலைப் பார்க்கப் போகணும்.  ப்ரணீதாவோட தங்கை, தம்பி ரெண்டு பேரும் படிக்கிறாங்க.  அவங்களையும் பார்த்துக்கணும்.  அங்கே போனா, ப்ரணீதா எந்த வேலையும் பார்க்க வேண்டாம். நாங்களும் நிம்மதியா இருப்போம்'' என்றார்.
மறுத்து பேச அபிஷேக்கால் முடியவில்லை. 
சரி அம்மாவையும்,  அப்பாவையும் கூப்பிட்டு கூட வைத்து கொள்ளலாம் என்று அவரிடம் சம்மதம் கூறினான்அபிஷேக்.
மறுநாள். ப்ரணீதா அவள் பெற்றோருடன் ஊருக்குக் கிளம்பினாள். தனது பெற்றோருக்கு போன் செய்தான் அபிஷேக்.  ஆனால், அபிஷேக் அப்பாவுக்கு டைபாய்ட். ஆதலால், அவர்களும் உடனடியாக வர முடியாத சூழல். 
அபிஷேக் காபி மட்டும் போட்டு குடித்துவிட்டு,  காலையில் அலுவலகம் போகும் வழியில், ஹோட்டலில் சாப்பிடுவதையும் வழக்கமாக்கிக் கொள்ள, முதலில் ப்ரணீதா இல்லாமல் வீடே வெறிச்சோடிய மாதிரி இருந்தாலும்,  கொஞ்சம் கொஞ்சமாக  அந்தச் சூழலுக்குத் தன்னைப் பழக்கிக் கொண்டான்அபிஷேக்.
பழைய நினைவுகளில் மூழ்கியிருந்த அபிஷேக்,  திடீரென்று டைம் பார்க்க மணி 8.  அவசர,  அவசரமாக குளித்து ரெடியாகி,  கீழே வந்து பைக்கை ஸ்டார்ட் பண்ணும் அதே நேரம், எதிர்வீட்டில்  தன்னுடைய ஸ்கூட்டியை  கிளப்பிக் கொண்டிருந்தாள் ஓர் இளம்பெண்.  ப்ரணீதாவின் வயதுதான் இருக்கும்.  மிக அழகாக இருந்தாள்.  அவளுக்கு ஒரு மூன்று வயது மதிக்கத்தக்க குழந்தை ‘டாடா’  காண்பித்தது.
அந்தக் குழந்தையின் கையைப் பிடித்தபடியே ஒரு நடுத்தர வயது பெண்மணி நின்றிருந்தாள். தோற்றத்திலேயே அவள்அந்த வீட்டுப் பணிப்பெண் என்று புரிந்தது. இவர்கள்தான் புதிதாக எதிர்வீட்டுக்கு குடிவந்தவர்களாக இருப்பார்கள் என்று நினைத்தவாறே வண்டியை ஓட்டினான் அபிஷேக்.  சற்று லேட்டானதால்,  கேன்டீனில் சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று வண்டியை ஆபிஸில் பார்க் பண்ண,  அந்தப் பெண்ணும்  அங்கே வண்டியை பார்க் பண்ணினாள். 
லிப்டில் ஒன்றாகப் பயணிக்கும்போது,  அந்தப்பெண் சிரிக்க இவனும் சிரித்தவாறே, "நீங்கள் இங்கேதான் வேலைப் பார்க்கிறீர்களா?''  என்று கேட்டான்.
"இன்னிக்கு தான் நான் அக்கெளண்ட்ஸ் செக்ஷனில் சேர்கிறேன்.  உங்களுக்கு விஷ்வாவைத் தெரியுமா?  அவர் மனைவி நான்.  என் பெயர் வீணா''  என்று கூறினாள்
அவள்.
   "ஓ,  என் பெயர் அபிஷேக்.  நான் ஐ.டி. செக்ஷன்ல டீம் லீடர்'' என்று  தனது உணர்ச்சிகளை முகத்தில் காட்டாமல் மறைத்து பேசினான் அபிஷேக். 
அதற்குள் லிப்ட் நான்காம் தளத்துக்கு வர, வீணா அங்கே ஒரு தலையசைப்புடன் விடைபெற்றாள்.  அபிஷேக்கின் வேலையிடம் ஐந்தாம் மாடியில்தான்.
விஷ்வா அவர்களது கம்பெனியில் தான் அக்கெளண்ட்ஸ் மேனேஜராக வேலைப் பார்த்தான்.  அபிஷேக் வயதுதான்.  நல்ல பையன். ஆனால்,   அவனுடன் அபிஷேக்குக்கு  பெரிய பழக்கம் இல்லை.  அவன் ஆறுமாதம் முன்புதான், ஒருநாள் பைக்கில் வெளியில் சென்றபோது விபத்தில் காலமாகியிருந்தான்.  அவன் மனைவிதான் வீணா. ஆழ்ந்த பெருமூச்சொன்று எழுந்தது அபிஷேக்கிடம்.  இவ்வளவு சின்ன வயதில் இப்படிஒருநிலையா?
தன்னுடைய சீட்டை அடைந்த அபிஷேக்,  அதற்கு பின்னர் தன் வேலையில் ஆழ்ந்து போனான்.  மாலையில் வீடு கிளம்பும் நேரத்தில்,  ப்ரணீதாவின் போன் 
வந்தது. 
"அபிஷேக்,  குழந்தையின் பொசிஷன் எல்லாம் கரெக்டாதான் இருக்காம்.  ஆனால்,  நான் குழந்தை பிறக்கற வரை பெட் ரெஸ்ட்டில்தான் இருக்கணுமாம்."
"நீ பெட் ரெஸ்டில்தானே இருக்கே?''
"ஆமாம் அபிஷேக்.  அம்மா அப்படி கருத்தா என்னைப் பார்த்துக்கிறாங்க!  சாப்பிட்ட தட்டைக் கூட கழுவ விடறதில்லை.  எனக்கு வாந்தி ரொம்ப வருவதுனால,  பிடிச்சதைக் கேட்டு,  கேட்டு சமைச்சுக் குடுக்கறாங்க! ஆனா,  எனக்கு எது சாப்பிட்டாலும் வாந்தி வந்துடுது.  மாதுளம் ஜூஸ் மட்டும்தான் பிடிக்கிறது.  அதனால, அப்பா அவர் கையாலேயே எனக்கு டைமுக்கு ஜூஸ் போட்டுக் குடுக்கிறார்.  குழந்தைக்குப் பிறப்பதற்கு முன்னாடியே ராஜ உபசாரம்தான்.  எதுக்கு இந்தக் குழந்தை பேற்றை தள்ளிப் போட்டோமுன்னு இப்ப தோண்றது.  சித்தி,  அத்தை,  மாமி,  பெரியம்மா..  எல்லாரும் வந்து பார்த்துட்டு போறாங்க.  வகை, வகையா பட்சணங்களும் கொண்டு வராங்க.  எனக்குதான் சாப்பிட பிடிக்கலை. எப்ப குழந்தை பிறந்து, அதை கையிலெடுத்து கொஞ்சுவோமோமுன்னு இருக்கு.''
"சரி ப்ரணீதா,  ரொம்ப எக்ûஸட் ஆகாதே.  கவனமா இரு.  நான் ராத்திரி  போன் பண்றேன்'' என்று பேசி முடித்துவிட்டு,  வீட்டுக்குக் கிளம்பினான்அபிஷேக்.
மறுநாளிலிருந்து  தினமும் அபிஷேக் ஆபிஸ் போகும் அதே நேரம்,  வீணாவும் கிளம்புவதால்  இருவரும் புன்னகைத்துகொள்வர்.
ஒருநாள்  ட்ராஃபிக் சிக்னலில் இருவரும் வண்டிகளுடன் காத்திருக்க வீணா அவனிடம்,  "உங்க மனைவி எங்கே?  ஊருக்குப் போயிருக்காங்களா?''  என்று கேட்க, சுருக்கமாகப் பதிலளித்தான்அபிஷேக்.
இரண்டு நாள்கள் கழித்து,  அன்று விடுமுறை.  வீட்டில் இருந்தான் அபிஷேக்.  மாலை பால்கனியில் அமர்ந்து,  மேகஸின்களை புரட்டிக் கொண்டிருந்தபோது, கீழிருந்து, "ஹலோ"  என்ற குரல்.  பார்த்தால் வீணா.  "கண்ணன், உங்க வீட்டுக்கு வரான்.  கொஞ்சம் பாருங்க''  என்றாள்.
அதற்குள் மாடிப்படியில் ஏறி வந்த மூன்று வயது கண்ணன்,  உள்ளே வந்து,  ஒரு  ஃபைவ் ஸ்டார் சாக்லேட்டை கொடுத்தான். 
   " என்ன கண்ணா,  சாக்லேட் எல்லாம் குடுக்கறே?''
 "உங்களுக்குத் தெரியாதா அங்கிள்?  இன்னிக்குதான் எனக்கு ஹாப்பி பர்த்டே.''
குழந்தை மழலை குரலில் சொல்ல,  மனம் நெகிழ்ந்து,  அதை அணைத்துக் கொண்டான் அபிஷேக்.  பிறகு வீட்டிலிருந்த ஆப்பிள் பழத்தைக் கொடுக்க, பெரிய மனிதத் தோரணையுடன்,  "தாங்க்ஸ் அங்கிள்''  என்று சொல்லி,  அதை வாங்கிக் கொண்டான் கண்ணன்.
அன்றிலிருந்து  தினமும் அபிஷேக் வீட்டிலிருக்கும் நேரம் கண்ணன் வீட்டுக்கு வர,  அவனுடன் விளையாடுவது,  அபிஷேக் விரும்பும் ஒரு பொழுதுபோக்காகிப் போனது.
இதேபோல்,  நமக்கென்று ஒரு குழந்தை இன்னும் ஏழு மாதங்களில் வந்துவிடும்.  நினைக்கும்போதே இனித்தது. 
அன்று ஜெனரல் ஷிப்ட்.  வேலை முடியும் நேரம்,  செல்போன் ரீங்காரமிட்டது.  எடுத்துப் பார்த்தால்,  மாமனார் பெயர் டிஸ்ப்ளேயில் வந்தது. 
"இவர்  எதுக்கு இந்த டைமில் போன் பண்ணுகிறார்?' என்று யோசனையுடன்  செல்போனை  ஆன் செய்து காதில் வைத்தான்.
"மாப்பிள்ளை.  மோசம் போயிட்டோம் மாப்பிள்ளை.  பாத்ரூம் போய் முகம் அலம்பிட்டு வரேன்னு,  ப்ரணீதா போனாள்.  முகம் அலம்பும்போது, சோப்பை கீழே போட்டுட்டா.  கண்ணைத் திறக்க முடியாததால்,  கையால் கீழே துழாவும்போது,  தெரியாமல் சோப் மேலேயே கால் வைச்சு,  வழுக்கி விழுந்துட்டா.  நானும், ப்ரணீ அம்மாவும் ஓடி போய் பார்த்தா,  ரத்த வெள்ளத்துல கிடக்கா.  டாக்டர் ரெண்டு வீடு தள்ளிதான் இருக்காங்க!  அவங்க வந்து பார்த்துட்டு,  கரு கலைஞ்சுடுச்சு,  ஆனா ப்ரணீதாவுக்கு, ஒன்னும் ஆபத்தில்லைன்னு சொன்னாங்க!  இப்ப ஹாஸ்பிட்டலில்  அட்மிட்  பண்ணியிருக்கோம்.  தைரியமா இருங்க மாப்பிள்ளை'' என்று சொல்லியவாறே செல்போனைவைத்துவிட்டார். 
அலுவலகத்தில் ஒவ்வொருவராக வீட்டுக்குக் கிளம்பிக் கொண்டிருந்தனர்.  அபிஷேக் தனது கண்களிலிருந்து,  தன்னிச்சையாக கண்ணீர் வழிந்தது.
"அபிஷேக் கிளம்பலாமா?''  என்று கேட்டுக் கொண்டே வந்த சசிக்குமார்,  அவன் அழுவதைப் பார்த்து திடுக்கிட்டான்.
 " டேய் மச்சி,  என்னடா  என்ன ஆச்சு?''
 "ப்ரணீதா பாத்ரூமில் வழுக்கி விழுந்து கரு கலைஞ்சுடுச்சாம்டா!''
 " ஐய்யயோ" என்று  தன்னை அறியாமல் சசி கூவ, கலைந்துகொண்டிருந்த  ஆள்கள்  அவர்களைச் சுற்றிக் கொண்டனர். விஷயம் ஒவ்வொருவருக்கும் பரவ,  அனைவரும் உச்சுக் கொட்டினர்.  சிலர் அங்கேயே இருக்க,  சிலர் வீட்டுக்குப் புறப்படத் தொடங்கினர். 
லிப்டில் ஏறியவர்கள், இதையே பேசிக் கொண்டிருக்க,  அனைத்தையும் கேட்டுக் கொண்டு, அவர்களுடன் பயணித்தாள் வீணா.
அதற்குப் பின்னர்  சசியும்  அபிஷேக்கை கேண்டீன் கூட்டிப் போய்,  சூடாக காபியும், போண்டாவும் வரவழைத்து, சாப்பிட சொன்னான். 
   "எனக்கு எதுவும் வேண்டாம்டா,  ப்ரணீதா ரொம்ப பாவம்.  எல்லோரும் அவளிடம் குழந்தையைப் பற்றிக் கேட்டு, பிச்சு பிடுங்கிண்டு இருந்தாங்க! அவ ரொம்ப ஆவலா இருந்தாடா.  இதை எப்படி தாங்கிக்கப் போறளோன்னு பயமாஇருக்குடா?''
"அதெல்லாம் சரி ஆயிடும்டா,  நீ தான் அவளுக்கு ஆறுதல் சொல்லணும்''  பலவாறு தேற்றி,  அவனைச் சாப்பிடவைத்து,  "வா,  உன்னை வீட்டில் கொண்டு விடறேன்.  நீஇந்த நிலையில் பைக் ஓட்ட வேண்டாம்''  என்று சொல்லிவிட்டு,  வீட்டில் கொண்டு வந்து விடும்போது  மணி 8. 
வழியில் டிபன் வாங்கலாமான்னு சசி சொல்ல, "வேண்டாம்டா,  வீட்டில் பழமிருக்கு, அதுபோதும்''  என்றான்அபிஷேக். 
சசி கிளம்பிப் போனவுடன் குளித்துவிட்டு,  கட்டிலில் படுத்த அபிஷேக்கின் கண்களிலிருந்து கண்ணீர் "கரகர' வென சுரந்தது.  அம்மா,  அப்பாவுக்கு இதுக்குள்ள தகவல் போய் அவங்க ப்ரணீதாவின் வீட்டுக்குதான் போயிருப்பாங்க.. என்று பலவாறு நினைத்துகொண்டிருந்த வேளையில்,  யாரோ உள்ளே வரும் சத்தம் கேட்டது.  பார்த்தால்,  வீணா தனது கையில் ஹாட் பேக்குடன் வந்துகொண்டிருந்தாள். 
இதுவரைஅவள், அபிஷேக்கின் வீட்டுக்கு வந்ததில்லை.  குழந்தைதான் வரும்.  இவள் எதற்கு வந்திருக்கிறாள்?  என்று மனதில் எண்ணமிட்டவாறே நிமிர்ந்துபார்த்தான். 
 "எழுந்து உட்கார்ந்து ஒரு வாய் சாப்பிடுங்க''
 "எனக்கு சாப்பாடு வேண்டாம்.  என் குழந்தை கருவிலேயே கலைஞ்சுபோச்சு'' என்று உலகத்தின் சோகம் அனைத்தையும் கண்களில் சுமந்துகொண்டே சொன்னான் அபிஷேக்.
மிக மெதுவாக நடந்துவந்து,  கட்டிலில் அவன் அருகே அமர்ந்த வீணா,  தன்னுடைய துப்பட்டாவால்,  அவன் கண்ணீரைத் துடைத்தாள். 
 "எனக்குப் புரியுதுங்க.  ஏன்னா,  இதே வேதனையை நான் அனுபவிச்சிருக்கேன்.  அன்னைக்கு விஷ்வாவும்,  நானும் ஷாப்பிங் போன போதுதான்,  அந்த ஆக்ஸிடெண்ட் நடந்தது. விஷ்வா அந்த இடத்திலேயே இறந்தார். எனக்கு பெரிய அடி ஏதும் இல்லை. ஆனா, ஆக்ஸிடெண்ட் ஆன அந்த அதிர்ச்சியிலும்,  விஷ்வா என் கண் முன்னே இறந்த அதிர்ச்சியிலும்,  என் இரண்டாவது குழந்தையின் கரு அங்கேயே கலைஞ்சுடுச்சு' என்று கண்ணீர் மார்பு துணியைநனைக்க,  அவன் வெற்று மார்பை வருடிக் கொடுத்தாள் வீணா. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com