கோலிவுட் சம்பளம்: ஹீரோயின்களில் முதலிடம் யார் ?

பிளாக் அண்டு ஒயிட் காலத்தில் ஐந்நூறு, ஆயிரங்களில் ஆரம்பித்த சினிமா நட்சத்திரங்களின் சம்பளம் இன்று கோடிகளில் புரள்கிறது.
கோலிவுட் சம்பளம்: ஹீரோயின்களில் முதலிடம் யார் ?


பிளாக் அண்டு ஒயிட் காலத்தில் ஐந்நூறு, ஆயிரங்களில் ஆரம்பித்த சினிமா நட்சத்திரங்களின் சம்பளம் இன்று கோடிகளில் புரள்கிறது. சாவித்திரி காலத்திலிருந்து சமந்தா காலம் வரை பெரும்பாலான படங்கள் ஹீரோக்களை மையப்படுத்திய கதைகளாகவும், படங்களுமாகவே இருந்து வந்தன. அப்படியான படங்களில் ஹீரோயின்கள் ஒரு கதாபாத்திரங்களாகவே இருந்து வந்தனர். தவிர, அவர்களை படத்தின் காட்சிப் பொருளாக மட்டுமே காட்டப்பட்டு வந்த படங்களும் இருக்கின்றன; இன்றும் இருந்து வருகிறது. இதை தகர்த்தெறிந்த சில ஹீரோயின்கள், ஹீரோவுக்கு நிகராக மாஸ் காட்டத் தொடங்கிவிட்டனர்.

ஒரு நடிகை, சினிமாவுக்குள் வந்து சின்ன சின்ன படங்களில் நடிப்பார் ; அவரது நடிப்பு அதில் பேசப்பட, அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவியும். சில ஹீரோயின்களுக்கு விதிவிலக்காக முதல் படமே மாஸ் அல்லது கிளாஸ் ஹீரோவுடன் அமையும். அது தனக்கான ரசிகர்களையும் குவித்துத் தரும்; சம்பளமும் அதுவாகவே உயர்ந்துவிடும். பாஸிட்டிவாக இப்படி ஒரு பக்கம் இருந்தாலும், படம் நெகட்டிவாக முடிந்து மக்கள் மத்தியில் பேசு பொருளானால் புகழ் வெளிச்சம் மங்கியதாக அப்படியே ஹீரோயின் பக்கம் தவறாகத் திரும்பிவிடும். படம் தோல்வியைத் தழுவினால், 'ராசியில்லாத ஹீரோயின்' என்ற இரண்டே வார்த்தைகளில் படத்தின் தோல்விக்கான காரணத்தையும், ஹீரோயினின் திறமையையும் வரையறை செய்த காலகட்டமும் இருந்திருக்கிறது.

ஹீரோக்களின் மார்க்கெட் மதிப்புதான் அவர்கள் நடிக்கும் படங்களின் பட்ஜெட்டையும் அதைத் தயாரிக்கும் தயாரிப்பாளர்களையும் நிர்ணயம் செய்கிறது. படத்தின் பேனரைச் சொன்னாலே அது எவ்வளவு பட்ஜெட் கொண்டபடமென்று இப்போதெல்லாம் கணித்துவிடலாம். ஆனால், இன்று ஹீரோக்களுக்கு நிகராக ஹீரோயின்களும் மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறார்கள். இந்த இடம் அவர்களுக்கு எளிதில் கிடைத்துவிடுவதில்லை. தற்போது ஹீரோக்களுக்கு நிகரான ஹீரோயின்களுக்கும் மார்க்கெட் உருவாகிவிட்டது. அதன் வெளிப்பாடுதான் ஹீரோயின் சென்ட்ரிக் படங்கள் வெளிவருவதும் ; அதற்குக் கிடைக்கும் வரவேற்பும்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழிகளில் ஹீரோயின்களுக்கு வாய்ப்பு வந்துகொண்டே இருக்கும். பொதுவாக ஒரு கோலிவுட் நடிகைக்கு, பாலிவுட்டில் இருந்து அழைப்பு வந்தால் அந்த ஹீரோயின்களின் மதிப்பே வேறு. அதே சமயம், பாதுகாப்பான வட்டத்தில் இருக்க விரும்பும் ஹீரோயின்கள், ஒரு துறையின் உச்சத்தில் இருக்கும் போது மற்ற துறைகளில் அறிமுகமாவதை விரும்பமாட்டார்கள்.

பொதுவாக, ஒரு நடிகையின் மார்க்கெட் எப்படி இருக்குமென்றால், ஆரம்பத்தில் சின்ன சின்ன கதாபாத்திரங்களை ஏற்று நடித்த பின்னர் நடுத்தர மார்க்கெட்டில் இருக்கும் நடிகர்களுடன் நடிப்பார்கள். லைம் லைட்டின் அடர்த்தி அதிகமானால் பெரிய ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்புகள் தன்னால் அந்த நடிகைகளைத் தேடிவரும். இப்படிப் படிப்படியாக ஒரு நடிகையின் மார்க்கெட் உயர்ந்தாலும், அபத்தமான சில காரணங்களாலும் ஹீரோயின்களின் மார்க்கெட் சடாரென குறையும் வாய்ப்புகளும் அதிகமாக உண்டு. அதில் தப்பிப் பிழைந்த நடிகைகள் மிகக் குறைவு. ஆனால், தற்போதிருக்கும் காலகட்டம் அப்படியானதல்ல. மக்கள், ஹீரோயின்களை ஏற்றுக்கொள்ள தொடங்கியிருக்கிறார்கள். தனித்து நின்று, நடிகைகளும் படம் நடிக்க முடியும் என்றதை ஆரம்பித்தும் நிரூபித்ததும் நயன்தாராதான். உச்சநட்சத்திரங்கள் அனைவருடனும் நடித்துவிட்டார். இதற்குப் பின் தனித்து நின்று, திரையில் தன்னை நிரூபிக்க இவர் ஏற்று நடித்த முதல் படம்தான், 'மாயா'. அதைத் தொடர்ந்து 'டோரா', 'அறம்', 'கோலமாவு கோகிலா', 'ஐரா' என பல்வேறு ஜானர் படங்களையும் பரிசோதித்துப் பார்த்துவிட்டார். பாதிக்குப் பாதி வெற்றி தோல்வியில் முடிந்திருக்கிறது. இருப்பினும் வசூல் ரீதியாக படத்துக்கு ஓரளவு நியாயம் சேர்த்திருக்கிறார். இன்னொரு பக்கம் மாஸ் ஹீரோக்களுடன் நடிப்பதையும் இவர் தவிர்க்கவில்லை. எப்படிப் பார்த்தாலும் இவரது மார்க்கெட்தான் தற்போது டாப்பில் இருக்கிறது. இதற்கு இவர் 4 முதல் 5 கோடி வரை சம்பளம் வாங்குகிறார்.

அடுத்தாக, தமிழ் சினிமாவால் தவிர்க்க முடியாத நடிகை, ஜோதிகா. தனது திருமணத்துக்குப் பின் நடிப்பதைக் குறைத்துக்கொண்ட ஜோதிகா, தற்போது மீண்டும் தனது செகண்டு இன்னிங்ஸை ஆடத் தொடங்கியிருக்கிறார். அதுவும் பவுண்டரிகளாக அடித்துத் துவைத்துக் கொண்டிருக்கிறார். சில படங்களில் கதாபாத்திரத்தின் தன்மையைப் புரிந்து நடித்து வந்தாலும், '36 வயதினிலே', 'மகளிர் மட்டும்', 'நாச்சியார்', 'ராட்சசி', ' ஜாக்பாட்' என வெவ்வேறு ஜானர் படங்களில் கால் பதிக்கத் தொடங்கியிருக்கிறார். தனது சொந்தத் தயாரிப்பில் நடித்துவருவதால் சம்பளத்தை ஒரு தொகையாக நிர்ணயம் செய்ய முடியவில்லை.

'கேடி' படத்தில் நெகட்டிவ் கேரக்டரை ஏற்று நடித்த தமன்னா, அதைத் தொடர்ந்து பல்வேறு முன்னணி நடிகர்களுடன் நடித்துக்கொண்டே 'பெட்ரோமாக்ஸ்' படத்தின் மூலம் இந்த ஃபார்முலாவுக்குள் வரத் தொடங்கினார். மறுபக்கம் தனது மார்க்கெட்டைத் தக்க வைத்துக் கொள்ள இவர் சில படங்களிலும் நடித்துவருகிறார். போக, இயக்குநர்களின் சாய்ஸாகவும் இருந்து வருகிறார். இதற்கு 2 கோடி வரை சம்பளம் வாங்குவதாக கூறப்பட்டுவருகிறது.

ஏற்கெனவே 'மகாநடி' படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷும் தற்போது ஹீரோயின் சென்ட்ரிக் கதைகளில் அதிக கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார். இவரது சம்பளம் 1 முதல் 1.5 கோடி வரை இருக்கலாம் என்று சொல்லப்பட்டு வருகிறது. தவிர, சமந்தாவும் 'யூ டர்ன்' படத்தின் மூலம் தனக்கான அடையாளத்தை அறிமுகப்படுத்தி விட்டார். இவரும் கீர்த்தி சுரேஷுக்கு நிகரான சம்பளம் வாங்குவார் எனக் கூறப்பட்டு வருகிறது.

த்ரிஷா பல படங்களின் மூலம் தன்னையும், தன் படங்களையும் பரிசோதித்துப் பார்த்தாலும், அவருக்கான இடத்தில்தான் தற்போது தமிழ் சினிமாவில் நிலைத்து நின்றுகொண்டிருக்கிறார். த்ரிஷாவின் சம்பளம் 85 முதல் 95 லட்சம் வரை இருக்கும் எனக் கூறப்பட்டுவருகிறது.

இதுவரை சொன்னது தமிழ் சினிமாவில் ஆரம்பத்திலிருந்து நடித்து வரும் சீனியர் நடிகைகள்.இவர்களைத் தவிர டாப்ஸியின் 'கேம் ஓவர்', அமலாபாலின் 'ஆடை', ஐஷ்வர்யா ராஜேஷ் நடித்த 'கனா' உள்ளிட்ட பல படங்கள் என தங்களுக்கான அடையாளத்தை உருவாக்கிக்கொள்ள முயன்று வருகின்றனர்.

பாலிவுட்டிலும் தொடர்ந்து நடித்துவரும் டாப்ஸியின் மார்க்கெட், தற்போது தமிழ் சினிமாவில் ஓரளவு உயர்த்திலே இருக்கிறது. இதனால் டாப்ஸி, தனது சம்பளத் தொகையை 1 முதல் 1.5 கோடி என நிர்ணயம் செய்துவைத்திருக்கிறார். 'ஆடை' படத்துக்குப் பிறகு அமலாபால் 60 முதல் 75 லட்சம் வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.

இவர்களைத் தவிர, தொடர்ந்து பல படங்களில் நடித்துவரும் ஐஷ்வர்யா ராஜேஷ், 60 லட்சம் வரை சம்பளம் இப்படிப் பல முன்னணி நடிகைகளின் நடவடிக்கை, மற்ற நடிகைகளுக்கு சிறந்த முன் உதாரணம். இதில் ஆச்சர்யமான, ஆரோக்கியமான விஷயம் என்னவென்றால், திரைப்பட தயாரிப்பாளர்களும் இதை வரவேற்கத் தொடங்கியுள்ளனர். பல தயாரிப்பாளர்களும் ஹீரோயின் சென்ட்ரிக் படங்களைத் தயாரிக்க தானாக முன் வருகின்றனர். படத்தின் கதாநாயகி என்பதை புறந்தள்ளிவிட்டு, படத்துக்கான நடிகை என்பதை உணர்ந்து படங்களில் நடித்துவருகின்றனர். இதுவரை சொன்ன சம்பளம் தமிழ் சினிமாவில் தயாராகும் படங்களுக்கு மட்டுமே. தமிழ் தவிர மற்ற மொழிகளில் பைலிங்குவலாக தயாரானால் அதற்குத் தகுந்தார்போல் தனி சம்பளம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com