
பால்கனியில் அமர்ந்திருந்த அப்பாவை மெல்ல எட்டிப் பார்த்தேன். கையில் வைத்திருந்த தினசரியில் கண் பதிக்காமல் அவர் பார்வை கரை புரண்டு சுழித்தோடும் காவிரியை பார்த்த வண்ணம் இருந்தது. ஆடிப்பெருக்கை முன்னிட்டு, காவிரி கரை புரண்டு ஓடிக் கொண்டிருந்தது. நேரம் கிடைக்கும்போதெல்லாம் அப்பாவுக்கு காவிரியை பற்றியும் சோழ நாட்டை பற்றியும் பேசுவது ரொம்ப பிடிக்கும். 'காவிரி கரையில் பிறப்பதே பெரும் பாக்கியம்' என்று அவர் அடிக்கடி சொல்வதுண்டு.
இந்தத் தங்கும் விடுதி மிக நேர்த்தியாகக் கட்டப்பட்டிருந்தது. பால்கனியில் இருந்து பார்க்கையில் ஒரு பக்கம் காவிரியும் மறுபக்கம் கம்பீரமாய் உயர்ந்து நிற்கும் மலைக்கோட்டையும் பார்க்கப் பரவசமாக இருந்தது.
பூர்விகச் சொத்தை விற்பதற்காக இங்கு வந்திருக்கிறோம். கிட்டத்தட்ட 20ஆண்டுகளுக்கும் மேலாக, இந்த நிலத்தை பயன்படுத்தவும் தெரியாமல், விற்கவும் முடியாமல் போட்டு வைத்திருந்ததாக அப்பா சொல்லிக் கொண்டிருப்பார்.
இந்த நிலத்தை அப்பாவின் பாட்டி 1937-இல் 600 ரூபாய்க்கு வாங்கியதாக அப்பா சொல்லுவார். அந்தக் காலத்தில் முப்பாட்டி அருகில் உள்ள கிராமங்களுக்குச் சென்று நெல் குத்தி கிடைக்கும் ஒரு படி அரிசியை கொண்டு வந்து உணவாக்கி பிள்ளைகளை ஊட்டி வளர்த்த கதையை அப்பா சொல்லிச் சொல்லி மருகிப் போவார் . அப்படி சம்பாதித்த காசை ஒரு அணா, அரை அணா என்று சேர்த்து நிலத்தை வாங்கிய பாட்டியை என்னால் கற்பனை கூட செய்ய முடியவில்லை.
ஒரு ரூபாய்க்கு பதினாறு அணா என்றால், 600
ரூபாய்க்கு எவ்வளவு அணாக்கள் தேவைப்பட்டிருக் கும். அந்தப்பாட்டி வறுமையான சூழலிலும் சேமித்து வைத்து தனது வாரிசுகளுக்காக வாங்கியநிலம் அது.
நான் பின்னே நின்று அப்பாவை பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்த அப்பா சட்டென்று திரும்பிப் பார்த்து ''என்ன பாபு'' என்றார்.
'இல்லப்பா.. எல்லாரும் நாளைக்குதானே வராங்க? நாம் ஏன் இன்னைக்கே கிளம்பி வந்துட்டோம்?'' என்று கேட்டேன்.
''இதுமாதிரி சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி ஊருக்கு வந்தாத்தானடா போச்சு'' என்றார் . நானும் 'சரி' என்று சொல்லிவிட்டு அறைக்குள் திரும்பி வந்து லேப்டாப்பை எடுத்துகொண்டு உட்கார்ந்து விட்டேன்.
மறுநாள் மலேசியாவில் இருந்து பெரியப்பாவும், மும்பையிலிருந்து சித்தப்பாவும் நேரடியாக திருச்சிக்கு வந்து விடுவார்கள் என்று அப்பா சொல்லி இருந்தார். விசாகப்பட்டினத்தில் இருந்து பெரிய அத்தையும் பெங்களூரில் இருந்து சின்ன அத்தையும் வருவதாக பேசிக் கொண்டிருந்தார். நிலத்தை விற்பதற்கு தாத்தாவின் வாரிசுகளான ஐந்து பேரும் கையெழுத்து போட வேண்டும்.
''அப்பா.. மலேசியாவில் இருந்து பெரியப்பா எப்போது வருகிறார்'' என்று கேட்டேன். ''இந்த நேரம் சென்னை வந்திருப்பார். அவரால்தான் இந்த நில விவகாரம் ஒவ்வொரு முறையும் தள்ளித் தள்ளி போச்சு. இப்போ ஏதோ அண்ணி வீட்டு விசேஷத்துக்கு வர்றதால், இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இந்த பத்திரப்பதிவை முடிச்சுடணும்னுதான் ஏற்பாடு பண்ணி இருக்கேன்'' என்றார்.
' 'அத்தைங்க ரெண்டு பேரும் இன்னைக்கே வர்றதா சொன்னீங்களே.''
''ஆமாம். அவங்க சாயந்தரத்துக்குள்ள நம்ம
லாட்ஜுக்கு வந்துருவாங்க. எல்லாருக்கும் சேர்த்துதான் இன்னும் ரெண்டு ரூம் போட்டு இருக்கேன்.''
நான் சிறுவனாக இருந்த காலத்தில் அத்தைகள் என்னை கொஞ்சிக் கொஞ்சி சீராட்டியது எனக்கு இன்னும் நினைவில் இருக்கு. அவர்களைச் சந்திக்கும் தருணங்களில் எல்லாம் அன்பையும் பாசத்தையும் அள்ளிக் கொட்டுவது என்பது அத்தைகளின் வழக்கம்.
அந்தி சாயும் நேரத்தில் இரண்டு அத்தைகளும் விடுதிக்கு வந்து சேர்ந்தனர். அப்பா வாசலிலேயே காத்திருந்து அவர்களை அறைக்கு அழைத்து வந்தார்.
''என்னம்மா.. பயணம் செளரியமா இருந்துச்சா?''
''இதுல என்ன அண்ணே சிரமம் இருக்கு. நாங்க ரெண்டு பேரும் முன்னாடியே பேசி வச்சுகிட்டோம். எங்கே சந்திச்சு எப்படி வருதுன்னு அதான் வந்து சேர்ந்துட்டோம்.''
அத்தைகள் இருவரும் என்னைக் கட்டிக்கொண்டனர்.
'டேய் பாபு.. எவ்வளவோ பெரிய பிள்ளை யாயிட்டடா உன்ன எவ்வளவு ஆசை ஆசையா தூக்கி வளர்த்தோம் தெரியுமா? இப்ப இவ்வளவு பெரிய மனுஷனா இருக்கே? உன்னை பார்த்து எத்தனை வருஷம் ஆச்சு'' என்றபடி நலம் விசாரிக்க
தொடங்கினர்.
சின்ன அத்தை அப்பாவை பார்த்து, ''அண்ணே.. பெரிய அண்ணனும் சின்ன அண்ணனும் எப்போ வருகிறார்கள்'' என்று கேட்டார்கள்.
''அண்ணன் நாளை காலையிலதான் வருவார். தம்பி இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடறேன்னு இப்பதான் போன் பண்ணினார்'' என்றார் அப்பா.
நாங்கள் காபி குடித்து பேசி முடிக்கும்போது சித்தப்பாவும் வந்து சேர்ந்தார்.
அடுத்த நாள் மதியம் ஒரு மணிக்குள் பத்திரப்பதிவு வேலைகள் முடிந்து எல்லோரும் அறைக்குத் திரும்பினோம்.
அப்பா எல்லோரையும் சாப்பிட அழைத்துச் சென்றார். பேச்சும் சிரிப்புமாகச் சாப்பாடு முடிந்தது. எல்லோரையும் தனது அறைக்கு அழைத்து வந்த அப்பா நிலம் விற்றதில் கிடைத்த பணத்தைத் தனித்தனி பைகளில் போட்டார். பின்னர், பெரியப்பா மெல்ல பேச ஆரம்பித்தார்.
தனக்கு நிறைய வேலைகள் காத்திருப்பதாகவும், ஒரு வார லீவில்தான் இந்தியா வந்திருப்பதாகவும் அடுத்த வாரம் தான் மீண்டும் மலேசியா செல்ல வேண்டும் என்றும் கூறினார். எல்லாம் கூறிவிட்டுதான் அப்போதே கிளம்புவதாகவும் சொன்னார்.
கிளம்பும்முன் ரெண்டு அத்தைகளையும் அழைத்தார். 'என்ன அண்ணே' என்று ஆவலோடு அருகில் சென்ற தன் தங்கைகளுக்கு தன் பங்காக வந்த மொத்த பணத்தையும் இரண்டாகப் பிரித்து ஆளுக்கு ஒரு பையில் போட்டு கொடுத்தார் பெரியப்பா.
''என்ன இது?'' என்று கேட்ட அத்தைகள் ''இது எங்களுக்கு வேண்டாம்'' என்றனர்.
'' உங்கள் பங்கை நீதான் எடுத்துக் கொண்டு செல்ல வேண்டும். இப்படி எங்களிடம் தந்துவிட்டுப் போவது முறையல்ல! நாளைக்கு அண்ணி எங்களைப் பற்றி என்ன நினைப்பார்கள்'' என்று கவலை தெரிவித்தனர்.
பெரியப்பா சத்தமாக வாய்விட்டு சிரித்தார்.
''இங்க பாருங்க.. ரெண்டு பேரும் அன்னைக்கு நம்ம குடும்பம் அவ்வளவு பெரிய வறுமையிலும் கஷ்டத்திலும் இருந்தப்ப, அம்மாவுக்கு உதவியா இருந்து குடும்பத்தை காப்பாத்துனிங்க..'' என்றார்,
அதிலும் பெரிய அத்தையை பார்த்து, ''வாணி நான் காலேஜ் படித்த நான்கு ஆண்டும் நீ கட்டிக் கொடுத்த சோற்றை எடுத்துகொண்டு போயிட்டு வந்தேன். அதனால என்னுடைய பங்குல பெரிய பகுதி உனக்கு'' என்றார்.
சின்ன அத்தை மோனியை நோக்கி, ''மோனி..
அன்னைக்கு நீ சின்னப் பிள்ளையா இருந்தாக்கூட நீ எவ்வளவு பொறுப்பா நம்ம குடும்பத்துல வீட்டு வேலைகளை எல்லாம் எடுத்து செஞ்சே.. அதை யெல்லாம் மறக்க முடியாது. இந்தப் பணத்தை உங்களுக்கு கொடுக்கிறது எனக்கு பேரின்பம். தயவு செய்து இந்த பணத்தை மகிழ்ச்சியாகப்பெற்றுக் கொள்ளுங்கள்'' என்றார்.
அத்தைகள் இருவரும் பெரியப்பா காலில் விழுந்து வணங்கி கண்ணீர் மல்க ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டனர். அதை பார்த்துக் கொண்டிருந்த அப்பா என்னைப்பார்த்து, ''டேய் நீயும் பெரியப்பா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக்க'' என்றார்.
''சரி. எனக்கு நேரமாச்சு... நான் கிளம்புறேன்.''
''எல்லோரும் பத்திரமாக ஊர் போய் சேருங்கள்'' என்று கூறி பெரியப்பா விடைபெற்றார். கிளம்பும் முன் பெரியப்பாவைப் பார்த்து சின்ன அத்தை, ''அண்ணே.. நீ எப்பதான் நம்ம ஊருக்கு வருவே. இங்க வந்துட்டா ஒருத்தருக்கொருத்தர் பக்கத்தில இருக்கலாமில்லை'' என்றார்.
மீண்டும் வாய் விட்டு சிரித்த பெரியப்பா, ''இங்க எப்ப நெருப்பு வெயிலும், குப்பையும் கூட்ட நெரிசலும் இல்லாம இருக்கோ.. அப்ப சொல்லு வந்துடுறேன்' என்று சொல்லி சின்ன அத்தை முதுகில் தட்டி விடை பெற்றார்.
பெரியப்பா சென்ற பிறகு ஒரு மணி நேரம் மீண்டும் பழைய கதைகளை பேசி மகிழ்ந்தனர் மூவரும். மாலைப் பொழுது நெருங்கிய வேளையில் அத்தைகள் இருவரும் ஊருக்கு கிளம்புவதாகக் கூறினர். சித்தப்பா தானும் அவர்களோடு கிளம்புவதாகச் சொன்னார். அப்பா விடுதியின் கீழே இறங்கி வந்து மூவரையும் வழி அனுப்பி வைத்துவிட்டு மீண்டும் அறைக்கு வந்தார்.
நான் மெல்ல அப்பாவிடம், ' 'அப்பா நம்ம ப்ரோக்ராம் என்ன?'' என்றேன்.
''கொஞ்சம் இருடா.. இங்கே நமக்கு கொஞ்சம் வேலை இருக்கு. அதை முடிச்சிட்டு அப்புறம் கிளம்பி போகலாம்'' என்றார் அப்பா.
''சரி'' என்று சொல்லிவிட்டு நான் மீண்டும் லேப்டாப்க்குள் நுழைந்தேன்.
சற்று நேரத்தில் அப்பா, ''சரி வா நாம் மலைக்கோட்டைக்குச் சென்று உச்சிப்பிள்ளையாரை பார்த்து வரலாம்'' என்றார்.
எனக்கும் அந்த ஆசை இருந்ததுதான். நான் மிகவும் பொடியனாக இருந்த காலத்தில் அப்பா கைப்பிடித்து மலைக்கோட்டை ஏறிய நினைவு வந்தது.
திருச்சி கோட்டை வாயில் மூலம் நுழைந்து மெல்லக் கடைவீதி வழியாக மலைக்கோட்டையை நோக்கி நடந்தோம். அப்பா ஒரு சிறு பையனுக்கு உள்ள உற்சாகத்தோடு இரண்டு பக்கமும் கடைகளை வேடிக்கை பார்த்த வண்ணம் வந்து கொண்டிருந்தார்.
''இந்த ஊரில் நான் சுத்தாத இடமில்லை. போகாத கடையில்லை. அம்மா அப்பாவோடும் நண்பர்களோடும் இங்கெல்லாம் நான் பல ஆண்டுகள் சுற்றித் திரிந்தேன். வேலை கிடைத்து வெளியூர் போன பிறகு திருச்சிக்கு வரும் சந்தர்ப்பம் அருகிக் கொண்டே போனது. உத்தியோக ரீதியாக வேறு வேறு ஊர்களுக்கு மாற்றப்பட்டபோது, வர முடியவில்லை.
சொந்த ஊரான திருச்சியை ஆசை தீர சுற்றி பார்க்க வேண்டும் என்ற ஆசை நிறைவேற சந்தர்ப்பம் வாய்க்காமலேயே போனது'' என்று சொல்லியபடி மெல்ல நடந்து, மலைக்கோட்டையில் யானை கட்டி இருக்கும் இடத்தை வந்து சேர்ந்தோம்.
அங்கு உட்கார்ந்து யானையிடம் ஆசீர்வாதம் வாங்கும் மக்களைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தோம். சற்றுநேரம் கழித்து இருவரும் மெல்ல படியேறி உச்சிப்பிள்ளையாரை அடைந்தோம். மேலிருந்து பார்ப்பதற்கு திருச்சி நகரம் தீப்பெட்டிகளால் அடுக்கப்பட்டக் கட்டடங்கள்போல் தெரிந்தது.
''திருச்சி எவ்வளவு பெரிய ஊராகிவிட்டது. இந்த 40 ஆண்டுகளில் ஒரு அசுர வளர்ச்சி. காவிரியில் இப்படி கரை புரள தண்ணீர் ஓடுவதைப் பார்க்க சந்தோஷமாக இருக்கிறது'' என்றார்.
''நீ சின்ன வயதில் இங்கு வந்தது உனக்கு எதுவும் ஞாபகம் இருக்கா?'' என்றார் என்னை பார்த்து.
நான், ''ஆமாம் அப்பா ஒரு தடவை நாம் இப்படி உச்சிப்பிள்ளையாரைப் பார்க்க வந்த போது அதோ அந்த ரயில் பாலத்தில் ஒரு ரயில் கடந்து போனதைப் பார்த்த நினைவு இருக்கிறது. எனக்கு வேறொன்றும் சுத்தமாக நினைவில் இல்லை அப்பா'' என்றேன்.
பதிலுக்கு அப்பா, '' நான் சிறுபிள்ளையாய் இருக்கும்போது எனது அம்மா அப்பாவோடு இங்கு வந்ததுகூட எனக்கு நினைவில் இருக்கிறது. நான் அடம் பிடித்து அழுது ஒரு நாய்க்குட்டி பொம்மை வாங்கினேன். இன்றும் என் மனசில் அந்த நாய்க்குட்டி பொம்மை நினைவில் இருக்கிறது'' என்று கூறி சிரித்தார்.
மறுநாள் காலை நான் கண் விழித்தபோது அப்பா பால்கனியில் அமர்ந்து காவிரியின் அழகை ரசித்துக் கொண்டிருந்தார் . மெல்ல அப்பாவிடம் சென்று, ''எப்போ கெளம்பறோம்'' என்றேன்.
''இப்பவே கிளம்பலாம். நீ குளித்து முடித்து தயாரானால் நாம் போக வேண்டியதுதான்.''
''எங்கே போகிறோம்.'
''சொல்றேன் கிளம்பு...''
இருவரும் கிளம்பி கீழே வந்து காலை சிற்றுண்டியை முடித்துவிட்டு வெளியே கிளம்பினோம்.
' 'எங்கு போகணும்?''
''சொன்னால் உனக்கு புரியாது. நான் சொல்லும் திசையில் வண்டியை ஓட்டு.''
அருகில் அப்பா உட்கார்ந்து இருக்க அவர் சொல்லும் வழியில் காரை நான் ஓட்டினேன். கார் மெல்ல ஒரு பேருந்து நிலையத்தை அடைந்தது. அங்கிருந்து மேற்கு நோக்கி வண்டி ஓட ஆரம்பித்தது. சற்று நேரத்தில் வலது பக்கம் காவிரியாறும் இடது பக்கம் ரயில்வே லைனும் தென்பட்டது. அந்த இடம் பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமாக இருந்தது. ரயில்வே தண்டவாளங்களும் தார் சாலையும் அருகருகே இருக்க மிக அருகில் காவிரி ஓடிக் கொண்டிருந்தது.
''இங்கே சற்று வண்டியை ஓரம் கட்டி நிறுத்து. ஒரு எட்டு காவிரியில் கால் நனைத்து விட்டு வருகிறேன்'' என்றார் அப்பா.
வண்டியை நிறுத்தி இருவரும் இறங்கி, சற்று நடந்து காவிரியின் அருகில் சென்று கால் நனைய நின்று கொண்டோம்.
''நம் வம்சமே இந்த காவிரி கரையில் பிறந்துவாழ்ந்து முடிந்தவர்கள்தான்! ஆனால் நாம்தான் படிப்பு உத்தியோகம் என்று ஏதோதோ காரணங்களால் சொந்த ஊரைவிட்டு எங்கெங்கோ போனோம் எங்கே போனாலும், நம்முடைய வேர் இங்கேதான் இருக்கிறது'' என்றபடி சற்றே மெளனமானார். நானும் சுற்று முற்றும் வேடிக்கை பார்த்தபடி நின்று கொண்டிருந்தேன்.
சற்றுநேரம் கழித்து மீண்டும் பயணம் தொடர்ந்தது.
''இன்னும் எவ்வளவு தூரம்''
''இன்னும் கொஞ்சம் தூரம்தான் போ..''
இடது பக்கம் இருந்த ரயில் பாதை சற்று விலகிப் போக கார் ஆற்றங்கரையை ஒட்டி அப்படியே போய்க் கொண்டிருந்தது. ஓரிடம் வந்ததும், ''கொஞ்சம் மெல்லப்போ.. இடது பக்கமாக போக வேண்டும்'' என்றார்.
இடது பக்கமாகத் திரும்பிய சாலையில் கார் ஓடத் துவங்கியது. சிறிது தூரத்திலேயே ஒரு ரயில்வே கேட் இருந்தது. அந்த ரயில்வே கேட் ரயிலின் வருகைக்காக மூடப்பட்டிருந்தது. காரைவிட்டு இறங்கிய அப்பா, ''அந்தக் காலத்தில் இதோ வலது கை பக்கம் ஒரு பெரிய திடல் இருந்தது. அப்பல்லாம் நமது வயலில் நெல் அறுத்து இங்குதான் அறுவடை செய்வோம். அப்படி ஒருமுறை அறுவடை செய்து இங்கு நெற்கதிர்களைப் போரடித்த போது நானும் எங்கள் அப்பாவுடன் நின்று கொண்டிருந்ததெல்லாம் எனக்கு இன்னமும் நினைவில் இருக்கிறது'' என்றார்.
அப்படி நெல் அடிக்கும் களம் எதுவும் அருகில் இல்லையே என்ற எண்ணத்தோடு நான் சுற்றும் முற்றும் பார்த்தேன். அதை கண்ட அப்பா, ''நான் சொல்வது ஐம்பது ஆண்டுக்கு முந்திய கதை. இப்போது இருக்குமா?'' என்றார்.
சற்று நேரத்தில் கேட்டை ரயில் கடந்து சென்றதும், நாங்கள் மீண்டும் புறப்பட்டோம். சிறிது தூரம் சென்றதும் ஒரு வாய்க்கால் வந்தது.
அப்பா உடனே ''இங்கதான் மெல்ல வண்டியை ஓட்டு'' என்றபடி நாலா திக்கும் பார்த்தபடி சொன்னார்.
''அதோ இடது பக்கம் ஒரு பாதை போகிறதே அதில் திருப்பு'' என்றார். அதில் அரை கிலோமீட்டர் தூரம் சென்றதும் வண்டியை ஓரமாக நிறுத்தச் சொல்லிவிட்டு இறங்கினார்.
''இதோ வலது பக்கம் வாய்க்காலை ஒட்டியபடி தெரிகிறதே இந்த நிலம் தாண்டா உங்க முப்பாட்டி வாங்கி வைத்த நிலம். இதைத்தான் நாம் விற்று காசாக்கினோம். எங்க அப்பாவின் பாட்டி பெயர் வீரம்மா. அந்தப் பாட்டி அந்த காலத்தில் இங்கே அருகில் உள்ள ஒரு பண்ணைக்குச் சென்று காலையிலிருந்து மாலை வரை நெல் குத்தி அதற்கு கூலியாக கிடைத்த ஒரு படி அரிசியைக் கொண்டு தன் குடும்பத்தை காப்பாற்றினார்'' என்று நூறாவது முறையாக அந்தச் சேதியைச் சொன்னார்.
''அப்படி வறுமையில் இருந்த காலத்திலேயே அந்த பாட்டி 600 ரூபாய் சேகரித்து இந்த நிலத்தை வாங்கினார். பாட்டி இந்த நிலத்தை வாங்கி 90 வருடங்கள் ஆகிறது. எவ்வளவோ வறுமையும் துன்பமும் வந்த காலத்தில் கூட நம் முன்னோர்கள் யாரும் இந்த நிலத்தை விற்க நினைக்கவில்லை. உங்க தாத்தா அப்படி உடம்பு சரி இல்லாமல் இருந்தபோது கூட இந்த நிலத்தை விற்று தனக்கு வைத்தியம் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று அவர் எண்ணவே இல்லை. கடைசியில் உயிரை விடும்போது கூட 'நிலத்தை வித்துராதீங்கடா' என்று சொல்லி விட்டுத்தான் இறந்தார்'' என்று சொல்லி அப்பா கண்களை துடைத்துக் கொண்டார்.
''அப்புறம் ஏம்பா வித்தீங்க'' என்றேன்.
''வேற என்னடா பண்ணுவது.. எல்லோரும் சொந்த ஊரைவிட்டு ஆளுக்கு ஒரு திக்குக்கு போய்விட்டோம் உங்க தாத்தா செத்து கிட்டத்தட்ட 25 ஆண்டு ஆகுது. அவர் இருந்த வரைக்கும் இங்க விவசாயத்தை அவர்தான் பாத்துக்கிட்டார். தாத்தா தனி ஆளா வந்து எல்லா வேலையும் செஞ்சு அறுவடையின் பயனை மட்டும் வீட்டுக்கு கொண்டு வருவார். எங்களை எல்லாம் கஷ்டப்பட்டு படிக்க வைத்தார். நாங்களும் படித்து நல்ல உத்தியோகத்துக்கு போனோம். கையில் அழுக்கு படாமல் காலில் சேறுபடாமல் வாழ்வதுதான் பெருமை என்று நினைக்கும் மனோபாவத்துக்கு ஆளாகிப் போனோம். கால ஓட்டத்தில் எல்லாம் கடந்தே போனது ஊருக்கு வந்து விவசாயம் செய்ய யாருக்கும் துப்பில்லை. எனக்கும் கூட எவ்வளவோ ஆசையாக இருந்தது. நிஜ வாழ்க்கையில் எதுவும் சாத்தியப்படவில்லை. ஒரு பேங்க் உத்தியோகத்தில் வெள்ளையும் சொள்ளையுமாய் உடைய அணிந்து கொண்டு நவீன வாழ்க்கைக்கு அடிமைப்பட்டு போனோம். காசு கொடுத்தால் எல்லாம் கிடைக்கும் என்ற நிலை வந்த பிறகு வெயிலிலும் மழையிலும் பாடுபட்டு விவசாயம் செய்ய வேண்டும் என்ற ஆசை யாருக்குத்தான் வரும். இப்போது நினைத்துப் பார்த்தாலும் வருத்தமாத்தான் இருக்கு.. ஆனால் கால ஓட்டத்தில் எல்லாமே நியாயமாகி விடுகிறது'' என்றார்.
சற்றுநேரம் மெளனமாக இருந்த அப்பா, ''இந்த நிலத்தில் விவசாயம் பண்ணாததுகூட தவறு இல்லை. யார்கிட்டயாவது குத்தகைக்கு கொடுத்து இருந்தாக்கூட இந்த 20 வருஷ காலத்தில் ஒரு ஆயிரம் மூட்டை நெல் விளைந்து இந்த ஜனங்களுக்கு கிடைச்சிருக்கும். தரிசா போட்டு வச்சதை என்னன்னு சொல்றது. இந்த நஞ்சை நிலத்தை சும்மா வைத்துக் கொண்டு கிடந்தோம். உன் பெரியப்பா எதிலுமே பற்று இல்லாதவர். அவர் மலேசியா போய் 20 வருஷங்கள் ஆகின்றன. அவருக்கு ஊருக்கு வர வேண்டும். நம்மோடு இருக்க வேண்டும் என்றெல்லாம் எந்த ஆசையும் இல்லை. ஏதோ உன் பெரியம்மா வீட்டு விசேஷத்துக்காக, வந்த அவரை பிடித்து இழுத்து வந்து இந்த ஏற்பாடுகளை செய்து ஒரு வழியாய் நிலத்தை விற்று ஆகிவிட்டது. வேற என்ன செய்யச் சொல்கிறாய். இதுதான் முடியும்'' என்று சொல்லிவிட்டு மெல்ல கரையை விட்டு இறங்கி வயலுக்குள் போனார்.
வயலை ஒட்டிய கிளை வாய்க்காலில் தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது. காலால் எத்தினால் தண்ணீர் நிலத்துக்குள் விழும் அளவுக்கு நிலமும் வாய்க்காலும் சமதளத்தில் இருந்தன. ஒரு மண்வெட்டியால் சேறை வெட்டி எடுத்து வாய்க்காலை அடைத்தால், அடுத்த நிமிடம் வாய்க்காலில் இருந்து வயலுக்குள் தண்ணீர் பாயும். அப்பேர்பட்ட தங்கம் விளையும் பூமி அது.
''இப்படி காவிரிக் கரையில் தண்ணீர் தானா பாய்கிற இடத்தில் உள்ள நிலத்தை 20 வருஷம் விவசாயம் பண்ணாமல் போட்டு வச்சிருந்தது உண்மையில் ஒரு கிரிமினல் குற்றம்தான்! ஆனால் என்ன பண்ணுவது'' என்று அப்பா சொல்லியபடி வயலுக்குள் மேலும் கீழும் ஆக கொஞ்ச நேரம் நடந்து கொண்டிருந்தார்.
என்ன நினைத்தாரோ? சட்டென்று நெடுஞ்சாண் கிடையாக தரையில் விழுந்தார். நான் என்னமோ ஏதோ என்று பயந்து போவதற்குள் கையைக் காட்டி அமைதியாக இருக்கும்படி சொன்னார். சற்று நேரம் அந்த மண்ணில் படுத்திருந்துவிட்டு மெதுவாக எழுந்து உட்கார்ந்தார். தன் பேண்ட் பாக்கெட்டில் இருந்து ஒரு பிளாஸ்டிக் பையை எடுத்தார். இரண்டு கைப்பிடி மண்ணை அள்ளி அந்த பிளாஸ்டிக் பைகள் போட்டுக் கொண்டார். சட்டை எல்லாம் அழுக்காகி இருந்தது.
'என்னப்பா இப்படி பண்ணிட்டீங்க.. டிரஸ் எல்லாம் அழுக்கு ஆயிட்டுச்சே'' என்றேன்.
வெறுமை பொங்கும் கண்களால் என்னைப் பார்த்து, ''இல்லடா பாபு.. மனசே ஆற மாட்டேங்குது. எத்தனையோ ஆண்டுகளாக மூன்று தலைமுறைகளைக் காப்பாற்றி சோறு போட்ட நிலத்தை வைத்து வாழ துப்பின்றி விற்று விட்டோம் என்ற குற்ற உணர்வு என்னை பாடாய்படுத்தது. ஆனால் இதுதான் எதார்த்தம். நீயும் ஒரு முறை விழுந்து கும்பிடு. இந்த நிலம் நம் உயிரோடும் உதிரத்தோடும் கலந்து கிடக்கு. வீரம்மா பாட்டியையும் தாத்தாவையும் நினைத்து கும்பிடு'' என்றார்.
எனக்கும் கூட அப்பா சொல்லியதைக் கேட்டு நெஞ்சு கனத்தது. வேர்க்க வேர்க்க வீரம்மா பாட்டி நெல் குத்தும் காட்சி மனக்கண்ணில் வந்து போனது. நானும் அப்பா போலவே நெடுஞ்சாண் கிடையாக நிலத்தில் விழுந்து கும்பிட்டு எழுந்தேன். அப்பா போலவே நானும் ஒரு கைப்பிடி மண்ணள்ளிக் கொண்டேன். கார் ஊரை நோக்கி திரும்பியது. அப்பாவும் நானும் வெகு நேரம் பேசவே இல்லை.
தார் சாலைக்கு இணையாக கடந்தகால கதைகளை முணுமுணுத்தபடி காவிரி தவழ்ந்து கொண்டிருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.