மணம்

''பள்ளி விளையாட்டு நேரத்தில்,  ''ஏன் சண்டை போட்டுக்கறீங்க?'' என்று அழுது கொண்டிருந்த  தன் வகுப்பு மாணவி மனோரஞ்சிதத்திடம் கேட்டாள் ரோஜா மிஸ்.
மணம்

''பள்ளி விளையாட்டு நேரத்தில்,  ''ஏன் சண்டை போட்டுக்கறீங்க?'' என்று அழுது கொண்டிருந்த  தன் வகுப்பு மாணவி மனோரஞ்சிதத்திடம் கேட்டாள் ரோஜா மிஸ்.
''செண்பகம் என் சட்டையில சேற்றை வாரி அடிச்சுட்டா. .டிரெஸ்ஸில் கறை ஆயிடுச்சு மிஸ்.''
''நான் வேணும்னு செய்யலை மிஸ்.  அவ மேல ஒரு காக்கா உட்கார வந்துச்சு.. அதை விரட்டத்தான் கீழே கிடந்ததை அள்ளி,  காக்கா மீது வீசினேன். அதுக்குள்ள, அது பறந்து போயிடுச்சு. நான் வீசினது, தவறிப் போய், அவ சட்டை மேல பட்டுடுச்சு..சாரி மிஸ்..'' என்று அழ ஆரம்பித்தாள் செண்பகம்.
''சின்ன கறைதானே கண்ணு. துவைத்தால் கறை போயிடும்.  வீட்டுக்கு போய் அம்மாவிடம் சொன்னால், கறையை எடுத்து தந்துடுவாங்க இல்லை'' என்று செண்பகம் சொன்னதில் உண்மை இருப்பதை புரிந்து கொண்டு, மனோவை சமாதானப்படுத்த முயன்றாள் ரோஜா.
''சின்ன கறைபட்டா கூட அம்மாவுக்கு பிடிக்காது. உடம்பையும், டிரெஸ்ûஸயும் சுத்தமா வச்சுக்கலைன்னா தண்டனை கொடுத்துடுவாங்க..''
''என்ன தண்டனை?''
''உப்பு இல்லாம சாப்பிடணும்.''
''அப்படியா. .உன்னுடைய அம்மா அவ்வளவு சுத்தமா..?''
''வேலையிலிருந்து வீடு  திரும்பும்போது, அப்பா சட்டையில் கறை இருந்தால் கூட ரொம்ப கோவிச்சுக்கிட்டு சண்டை போடுவாங்க?'' என்று அம்மாவின் செய்கைகளை, மகள் எவ்வளவு கூர்ந்து கவனிக்கிறாள் என்பது, அவள் பேச்சிலிருந்து வெளிப்பட்டது.
அதை கேட்ட ரோஜாவுக்கு ஆச்சரியமாக இருந்தது. தன் மாணவியை தண்டனையிலிருந்து காப்பாற்ற என்ன செய்வது என்று யோசித்தாள்.
எட்டு வயதான மாணவியை ஆசிரியர் அறைக்கு அழைத்துப் போய் உட்காரவைத்து, தன் கைப்பையிலிருந்த துண்டை எடுத்து அவள் மீது போர்த்தி, அவளுடைய மேல் சட்டையை கழற்றி, அதில் படர்ந்திருந்த, கறை படிந்த பகுதிகளைச் சோப்பு போட்டு, கசக்கி பிழிந்தாள். அழுத்தி கசக்கியதில், சிறிய அளவில் இருந்த கறை, சட்டையின் மற்ற பகுதிகளுக்கு பரவி பெரிதாகியது. அதைப் பார்த்து, மனோ மேலும் அழ ஆரம்பித்தாள்.
''இவ்வளவு பெரிய கறையை பார்த்தால், அம்மா என்னை வீட்டுக்குள்ளேயே விடமாட்டாங்க மிஸ்..''
''தைரியமா வீட்டுக்கு போ. அம்மா கேட்டால், பனிஷ்மென்டாக, மிஸ்தான் இப்படி பண்ணாங்கன்னு என் மேல பழியைப் போடு.''
மிஸ் சொன்னதை வேத வாக்காக ஏற்று, பயத்துடன் அழுது கொண்டு, ஸ்கூல் பையை முதுகில் ஏற்றி, மனோ வீட்டுக்குப் புறப்பட்டாள்.
மறுநாள் காலை,  பள்ளியில் வழிபாட்டு நேரம் முடிந்ததும், மாணவர்கள் வரிசையில், தங்கள் வகுப்புகளுக்குச் செல்ல ஆரம்பித்தனர்.  அந்த இடைவெளியில், ரோஜாவுக்கு பிரின்சிபாலிடமிருந்து அழைப்பு வந்தது.
பிரின்சிபாலின் அறையில், 30 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி, கோபம் கொந்தளித்த முகத்துடன் உட்கார்ந்திருந்தாள்.
பல மடிப்புகளாக வளைத்து, அவளுடைய கூந்தலின் இருபுறமும் தொங்க விடப்பட்ட மல்லிகை சரம், அறை முழுவதும் வாசனையை பரப்பிக் கொண்டிருந்தது. அவள் பயன்படுத்தியிருந்த பிரத்தியேக சென்ட் மணம், வாசனையை பன்மடங்கு கூட்டியது. அவ்வப்போது, முகத்தில் லேசாக படர்ந்த வியர்வையை கைக்குட்டையால் ஒத்தி எடுத்துக் கொண்டிருந்தவள், ரோஜாவை கண்டதும், அவளை முறைத்து பார்த்தாள்.
''இவங்கதான் மனோரஞ்சிதத்தின் அம்மா. இவங்கதான், ரோஜா டீச்சர்..'' என்று பிரின்சிபால், ஒருவரையொருவர் அறிமுகம் செய்து வைத்து, தன் கடமையை  முடித்தார்.
''அந்த ரோஜா டீச்சர் நீங்கதானா?  யூனிஃபார்ம் இல்லாத நாளுன்னு, என் மகளுக்கு, காஸ்ட்லி சட்டை போட்டு அனுப்பினால், அதைக் கண்டு பொறுக்க மாட்டாமல், பனிஷ்மென்ட்டுங்கற பெயரில், அந்த சட்டை ஃபுல்லா கறை ஆக்கி வச்சுருக்கீங்களே. .சுத்தம்னா என்னன்னு உங்களுக்கு தெரியுமா?''  என்றவள், கைப்பையிலிருந்த சட்டையை எடுத்து,  ரோஜாவின் முகத்தின் மீது வீசி எறிந்தாள். அதிலிருந்து வியர்வையின் துர்நாற்றம் வீசியது.
பிரின்சிபால் உள்பட, அங்கு நின்றிருந்த பல ஆசிரியைகள் அதை பார்த்து தலை குனிந்தனர். 
''அழுக்கு கறையைப் பார்த்து, நான் அடிச்ச அடியில், மனோவுக்கு ஜுரம் வந்து, இன்னைக்கு ஸ்கூலுக்கு வர முடியாமல் போயிடுச்சு. அழுக்கு போக இந்தச் சட்டையை தோய்ச்சு, மடிச்சு கொடுக்க வேண்டியது உங்க பொறுப்பு. இந்த மாதிரி அழுக்கு டீச்சர்களை வேலைக்கு வச்சுக்கிறதை பற்றி கொஞ்சம் யோசிங்க பிரின்சிபால் சார்.  இல்லைன்னா, மகளை வேற ஸ்கூல்ல சேர்த்துக்கறேன்''  என்றவள் விருட்டென்று எழ முற்பட்டாள்.
''கோவிச்சுக்காதீங்க.. நீங்க உட்காருங்க மேடம்..'' என்று அவளை சமாதானப்படுத்திய பிரின்சிபால், ''டீச்சர்.. அவங்களிடம் மன்னிப்பு கேளுங்க.'' என்று ரோஜாவை பார்த்து தன் இயலாமையை வெளிப்படுத்தினார்.
மாணவ, மாணவியரிடத்தில், ஆசிரியை என்ற உயரத்திலிருந்து இறங்கி, அன்பு, பாசம், பரிவு ஆகியவற்றை தாராளமாகப் பகிர்ந்து பழகியதால், ரோஜா இதுவரை எந்தப் பிரச்னையையும் சந்தித்தது இல்லை. இதுதான் அவளுக்கு முதல் அனுபவம். ஆனாலும், தன்னை காப்பாற்றிக் கொள்ள,  நல்ல எண்ணத்தில் அந்த தவறை செய்த இன்னொரு மாணவியை காட்டிக் கொடுத்து, அவளுக்கு பிரச்னையை உண்டாக்க அவள் விரும்பவில்லை.
ஒரு பெண், மற்றவர்கள் முன், தன்னை அவமானப்படுத்துவதை பற்றி ரோஜா கண நேரம் வருத்தப்பட்டாள். அதே சமயத்தில், தன்னை சார்ந்திருக்கும் கல்லூரியில் படிக்கும் தங்கை, அவள் கண் முன் வந்து போனாள். இப்பொழுது, அவள் முன் நிற்கும் ஒரே குறிக்கோள், தன் ஆசிரியர் வேலையை காப்பாற்றிக் கொள்வது மட்டும்தான். 
அந்தக் குறிக்கோளைக் காப்பாற்ற, தன் சுய கௌரவத்தை விட்டொழிந்து,  தன் முன் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருந்த அந்த பெண்மணியிடம், இரு கரங்களையும் குவித்து, மன்னிப்பு கேட்டாள்.
''இந்தத் தடவை மன்னிச்சு விட்டுடறேன். அழுக்குன்னா, எனக்கு அறவே பிடிக்காது. இனிமேலாவது, குழந்தைங்க டிரெஸ்ûஸ அசுத்தப்படுத்தாதீங்க?'' என்றவள் விருட்டென்று எழுந்து போனாள். அவமானத்தில் குன்றி போன ரோஜா, கலங்கிய கண்களுடன் அங்கிருந்து வகுப்பறைக்குச் செல்ல தயாரானாள்.
''இனிமேல், இந்த மாதிரி புகார் வராமல் கவனமாக இருக்க வேண்டியது உங்கள் பொறுப்பு''என்று பிரின்சிபால் எச்சரிக்கை விடுத்து,  ரோஜாவை அனுப்பி வைத்தார்.
அடுத்த ஒரு மணி நேரம் ரோஜா மிஸ்ஸýக்கு வகுப்பு இல்லை.  ஆசிரியர் அறையில் ஓர் ஓரமாக உட்கார்ந்து, ஜன்னல் வழியாக வெளியே பார்த்து, நடந்தவைகளை மறக்க முயன்றாள். ஆனால், அவள் மனதில் ஒட்டிக் கொண்டு விலக மறுத்தது. குடும்பத்துக்காக,  கசப்பான அனுபவங்களைக் கடந்தாக வேண்டும் என்று தன்னைத் தானே சமாதானப்படுத்திக் கொண்டாள்.
வகுப்புகள் தொடங்கி விட்டதற்கு அடையாளமாக, பள்ளி மணி நான்கு முறை ஒலியை பரப்பியது. அந்த ஒலி அலைகளுடன்,  குடும்பப் பொறுப்பு, அவள் தோள் மீது எப்படி ஏறி உட்கார்ந்தது என்பதற்கான அவளுடைய பழைய நினைவலைகளும், பரந்து விரிய ஆரம்பித்தன. அவளைப் பொருத்தவரை, அந்த நினைவலைகள் நறுமணத்தை உள்ளடக்கியது இல்லை.  அவளுடைய பத்து வயதில், அப்பாவைவிட்டு அம்மா பிரிந்தாள். அதற்கு பிறகு, அவளையும், தங்கையையும் அரவணைத்து வளர்த்தது அப்பாதான். 
'அப்பா எங்கே, என்ன வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றுகிறார்' என்பது தெரியாமலேயே அவர்கள் வளர்ந்தனர்.  அளவு கடந்த அன்பையும், பாசத்தையும் பொழிந்த அப்பாவிடம் எந்தக் கேள்வியும் கேட்க அவளுக்கு தோன்றவில்லை.
கடந்த ஆண்டு நோய் வாய்ப்பட்டு, ஆஸ்பத்திரிக்கு போன அப்பா,  உயிருக்குப் போராடினார். காச நோய் என்று சொன்ன டாக்டர், ''என்ன வேலை'' என்று கேட்டார். அப்பாவிடம் கேட்டாள்.
''அது தெரிந்ததால்தான், உன்னோட 'அம்மா' என்னை விட்டு பிரிந்து போனாள். அந்த விவரம் அவசியமில்லைன்னு நினைக்கிறேன்.''
''அப்படி என்ன வேலை. எதுவா இருந்தாலும் என்னிடம் தயங்காமல் சொல்லுங்க. டாக்டருக்கு பதில் சொல்லியாகணும்.''
சற்று யோசித்தவர், அவளை அருகில் அழைத்து, காதில் ரகசியமாக சொன்னார். அவர் சொன்னதைக் கேட்டு, பேசமுடியாமல், சற்று நேரம் மெளனமாக நின்றாள்.
''சாக்கடை அள்ளுகிற வேலை செய்தா குடும்பத்தைக் காப்பாத்தினீங்க..?'' என்று தந்தையின் மார்பில் தன் முகத்தை புதைத்து அழுதாள் ரோஜா. அழுத மகளை சமாதானப் படுத்த அப்பா முயன்றார்.
''கல்யாணம் ஆகும்போது,  தனியார் கம்பெனியில் வேலையில் இருந்தேன். திடீரென்று வேலை போயிற்று.  அதை அம்மாவிடம் சொல்ல கூச்சப்பட்டு, பணியிட மாற்றமுன்னு சொல்லி,  இன்னொரு ஊருக்கு நான் மட்டும் போனேன். அங்கு எனக்கு சரியான வேலை கிடைக்கலை. அதே சமயம், குடும்பச் செலவுக்குப் பணம் அனுப்ப வேண்டிய நிர்ப்பந்தம்.  எந்த வேலை கிடைச்சாலும் செய்வது என்று முடிவுடன் தெருவில் காத்திருந்த போதுதான், கழிவுநீர் குழியிலிருந்து 'காப்பாற்று.. காப்பாற்று' என்ற ஓலம் கேட்டது.  அந்தச் சமயத்தில், குரல் கொடுத்தவரை காப்பாற்றணுங்கற  நல்ல எண்ணத்தோடு, முன் அனுபவம் எதுவுமின்றி, அந்தப் பள்ளத்துக்குள் குதித்து, அவரை வெளியே கொண்டு வந்தேன். நன்றி கடனாக, அந்த வேலையில் என்னை அவர் கூட்டாளியாக சேர்த்துக் கொண்டார்.  அன்றையிலிருந்து,  பாதாளச் சாக்கடைகளைச் சுத்தம் செய்யும் துப்புரவுத் தொழிலாளியாக மாறினேன். எனக்கு கிடைச்ச தொழிலை விரும்பி செய்ய ஆரம்பித்தேன்.  செய்யும் தொழிலில் பேதம் காட்டலை. மேஸ்திரி ஆனேன். குடும்பச் செலவுகளுக்குப்  பணம் அனுப்பிக் கொண்டிருந்தபோது, யாரோ கொடுத்த தகவலை வைத்து, பொய் சொன்னதாற்காக உங்க அம்மா  என்னிடம் சண்டையிட்டு  பிரிந்து போனாள்.''
அப்பா என்றால், தும்பை பூ போன்ற வெள்ளை நிற டிரஸ்ஸýம், கழுத்தில் கைக்குட்டையும், அத்தர் வாசனையும் அவள் நினைவுக்கு  வரும். அவர் இந்தத் தொழில் செய்தார் என்றால் அவளால் நம்ப முடியவில்லை.
''ரொம்ப கஷ்டப்பட்டீங்களா அப்பா?'' என்று  அப்பாவின் கண்ணங்களை வருடிய ரோஜாவுக்கு துக்கம் தொண்டையை அடைத்தது.
''முதல்ல கஷ்டமாத்தான் இருந்துச்சு. அப்புறம் பழகிடுச்சு. இந்த வேலை செய்த பலர், விஷ வாயு தாக்கி, என் கண் எதிரிலேயே உயிர் விட்டுருக்காங்க?  சாமியை வேண்டித்தான், ஒவ்வொரு தடவையும் பாதாள சாக்கடை குழிக்குள் இறங்குவேன்.   அக்கம் பக்கத்தில் ஏளனமா பார்ப்பாங்க. வீடு கொடுக்க மாட்டாங்க. மனைவி, குழந்தைங்களுக்கும் தொந்தரவு அதனால்தான், மனைவியிடம் கூட சொல்லாமல், நான் பார்த்த வேலையை மூடி மறைச்சேன். இந்தத் தொழிலில் இருக்கறவங்களுக்கு எந்தவித நோயும் வரலாம். ஆனால், அதற்கான பாதுகாப்பை இதுவரை யாரும் கொடுக்க முன் வரலை.  எனக்கு இன்னும் சில நாள்கள்தான் வாழ்வு என்று எனக்கு தெரியும்.  தங்கையை கரையேற்ற வேண்டிய பெரிய பொறுப்பு உனக்குத்தான்'' என்றவர் தேம்பி, தேம்பி அழுதார்.
அப்பாவின் கண்ணீரை துடைத்தவள், குடும்பத்துக்காக அவர் பட்ட கஷ்டங்களை நினைத்து, அவர் கன்னத்தில் முத்தமிட்டாள். அதற்காகவே காத்திருந்தவர் போல், அவர் கடைசி மூச்சை விட்டார்.
அடுத்த நேர வகுப்புக்களுக்கான மணி ஒலி, ரோஜாவை நிகழ்காலத்துக்கு இழுத்து வந்தது.   மன வேதனையைக் கடந்து,  கண்ணீரை துடைத்துக் கொண்டு, வகுப்புக்குச் செல்ல தயாரானாள்.
பள்ளி முடிந்து, புறநகர் பகுதியில் இருக்கும் வீட்டுக்குத் திரும்பியவள் சாப்பாடு பிடிக்காமல் தூங்கிப் போனாள்.  மறுநாள் விடுமுறை என்பதால், சற்று தாமதமாக எழுந்திருந்தாள்.
அன்று அப்பாவுக்கு திதி நாள். முதல் வருட திதி என்பதால், அதை செய்ய இருபதாயிரம்  ரூபாய் வரை செலவாகும் என்று எஸ்டிமேட் சொல்லப்பட்டிருந்தது. அந்தத் தொகையை,  சேமித்து வைத்திருந்தாள்.
அப்பாவின் போட்டோவுக்கு வாசனை நிறைந்த பூக்களை வைத்து வணங்கியவள், மூடியிருந்த ஜன்னலை திறந்து,  வெளியே எட்டிப் பார்த்தாள். குப்பென்று துர்நாற்றம் வீசியது. ஜன்னலுக்கு சற்று தள்ளியிருந்த கழிவுநீர்த் தொட்டியை திறந்து, அதன் வாயை அடைத்திருந்த குப்பையை ஒருவர்  வெளியே எடுத்து போட்டுக் கொண்டிருந்தார். 
''சானிடரி நாப்கின்களை  டாய்லெட்டில் போடாதீர்கள் என்று சொன்னால் கேட்டால்தானே. அதனால் ஏற்பட்ட அடைப்புகளால், கழிவுநீர் வெளியே போக முடியாமல் நாற்றம் அடிக்குது.  லீவு நாளான இன்னைக்கு இவர் கிடைக்கலைன்னா, வளாகமே நாறி போயிருக்கும்'' என்று  தன் இயலாமையை கோபமாக வெளிப்படுத்திக் கொண்டிருந்தார் வளாகத்தின் காரியதரிசி.  பாதி உடல் வெளியே தெரியும்படியாக கழிவுநீர்த் தொட்டிகளில் இறங்கிய  அந்தப் பணியாளர், அனைத்து கழிவுநீர் குழாய்களையும் சோதித்து,  குப்பைகளையும்,  மண்ணையும் வெளியே எடுத்துப் போட்டுக் கொண்டிருந்தார். சற்று நேரத்தில் குழாய் அடைப்புகள்  நீங்கி, துர்நாற்றமும் குறைய ஆரம்பித்தது.
தூரத்திலிருந்து அந்த துப்புரவுப் பணியாளரை  பார்த்தவுடன், ரோஜாவின் எண்ண ஓட்டங்களில் வேகமாக சில மாறுதல்கள் ஏற்பட்டன.
சேறும், சகதியுடன்,  கழிவுநீர் குழிக்குள்ளிருந்து வெளியே வந்தவர்,  அருகில் இருந்த தெருக் குழாயில் உடம்பை சுத்தம் செய்து கொள்ளப் போனார். அவர் திரும்பி வரும் வரை, ஓர் ஓரமாக காத்து நின்றாள் ரோஜா.
''நான் குடியிருக்கும் ரெண்டாவது மாடி வரை வந்துட்டு போங்களேன்'' என்று மூங்கில் குச்சியுடன் புறப்பட தயாரானவரிடம் தான் அவருக்காக காத்திருப்பதைத் தெரியப்படுத்தினாள்.
''வீட்டில் சாக்கடை அடைச்சுக்கிட்டு இருக்கா?''
''முதலில் நீங்க வாங்க..''
வந்தவரை வீட்டுக்குள் அழைத்தாள்.
''இல்லைங்க வெளியே நிக்கறேன். என்ன வேலைன்னு சொல்லுங்க..''  என்று வீட்டுக்குள் நுழைய அவரிடம் பெரும் தயக்கம் தெரிந்தது.
''பரவாயில்லை. உள்ளே வாங்க.''  என்ற வலுக்கட்டாய அழைப்பால், கூனிக் குறுகி, வீட்டுக்குள் நுழைந்து, சேரில் உட்கார்ந்தார்.
கிளாஸில் மோர் கொடுக்கப்பட்டதும், அவருடைய முகம் சற்று பளிச்சிட்டு, சாதாரண நிலைக்கு வந்தார்.
அவரிடம் ரோஜா பேச ஆரம்பித்தாள்.
''உங்க பேரு?''
''மணவாளன்..''
'' பெயரில் மணத்தை வச்சுக்கிட்டு, எப்படி இந்த வேலைக்கு வந்தீங்க?''
''அதெல்லாம் எதுக்கும்மா...அடுத்த வேலையை பார்க்கணும்.''
''உங்களுக்கு வேற வேலை கிடைக்கலையா?''
''பத்தாம் கிளாஸ் படிச்சவனுக்கு வேற என்ன வேலை கிடைக்கும் சொல்லுங்க?''
''முயற்சி செய்தால் நிச்சயம் கிடைக்கும்.''
''நீங்க ஏற்பாடு செய்யறீங்களா?''
''முயற்சிக்கிறேன்.  நீங்க இந்த வேலை செய்வது உங்க வீட்டுக்குத் தெரியுமா?''
அந்தக் கேள்வியை கேட்டதும், அவர் மிரண்டு போனார்.
''என் குடும்பத்தில் குழப்பத்தை உண்டு பண்ணிடாதீங்க அம்மணி.  வீட்டுக்குத் தெரிஞ்சா, என்னை விவாகரத்து பண்ணிடுவாங்க!  எட்டு வயசில் ஒரு பொண்ணு இருக்கு. அவளுடைய படிப்புச் செலவுக்கு பணம் வேணுமே.. அதான் எந்த வேலையா இருந்தாலும் செய்ய வேண்டியதாப் போச்சு.  நான் இந்த வேலையை செய்யறது, அக்கம் பக்கத்தில் கூட தெரியாது. தெரிஞ்சா, ஏளனமா பேசி,  வீட்டை காலி பண்ண சொல்லிடுவாங்க'' என்று மணவாளனின் தாழ்வு மனப்பான்மையுடன் கூடிய பேச்சு,  எவ்வளவு காலமானாலும், துப்புரவுத் தொழிலாளியின் மீதான சமூக நோக்கு மாறாது  என்பது ரோஜாவுக்கு புரிந்தது.
''பொண்ணு என்ன படிக்கிறா?''
''அவ என்ன படிக்கிறா? எங்க படிக்கிறா என்பதெல்லாம் என் மனைவியை கேட்டால்தான் தெரியும்.  அவ ரொம்ப கண்டிப்பான பேர்வழி.  குழந்தையின் டிரஸ்ஸில் ஒரு சின்ன கறை பட்டால் கூட, உப்பு இல்லாம சாப்பாடு போட்டு, தண்டனை கொடுப்பாள். அப்படிப்பட்டவள், என்னை இந்தக் கோலத்தில் பார்த்தால்,  வெளியே போடா மணவாளான்னுதான் சொல்லுவா?''
ஒரு துப்புரவுத் தொழிலாளி மீதான குடும்ப அங்கத்தினர்களின் பார்வையும் ஒரே மாதிரியாக இருப்பதை ரோஜாவால் உணர முடிந்தது.
''உங்க மகள் பெயராவது தெரியுமா? இல்லை அதுவும் மனைவிக்குத்தான் தெரியுமா?''
''ஆசையா வச்ச  பேருதான்.  மனோரஞ்சிதம்...'' என்று மணவாளன் தனது மகளின் பெயரை உச்சரித்தபோது,  முகத்தில், பிரகாசம் படர்ந்து, மகளை எவ்வளவு நேசிக்கிறார் என்பது புரிந்தது. அதேநேரத்தில், பெயரைக் கேட்டவுடன் ரோஜாவுக்கு ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது.
கடந்த இரண்டு நாள்களில் பள்ளியில் நடந்த சம்பவங்களைக் கோர்வையாக தொடுத்து பார்த்ததில், தான் பேசிக் கொண்டிருப்பது, தன் மாணவியான மனோரஞ்சிதத்தின் அப்பாவுடன்தான் என்பது ரோஜாவுக்கு தெளிவாக புரிந்தது.
முந்தைய நாள், பள்ளிக்கூடத்தில், பிரின்ஸிபால் மற்றும் மற்ற ஆசிரியர்கள் முன்பு, தன்னை அவமானப் படுத்தியது, மணவாளனின் மனைவி  என்பதை நினைத்து, அவளுக்காக வருத்தப்பட்டாள்.
அந்தக் குடும்பத்தில் இன்னொரு ரோஜா உருவாவதை அவள் விரும்பவில்லை.
''அப்பாவின் திதிக்கு, பணம் ரெடி பண்ணியாச்சா?  எப்ப வரலாம்?'' என்று கோயில் பூசாரியிடமிருந்து போன் அழைப்பு வந்தது.
''வெயிட் பண்ணுங்க...சொல்றேன்.''  என்றவளின் சிந்தனை திசை திரும்பியது.
''இந்த வேலையை தவிர, உங்களுக்கு வேறு என்ன வேலை தெரியும்?'' என்று எழுந்து கிளம்ப தயாரான மணவாளனை உட்கார சொன்னாள்.
''இயற்கை உரம் தயாரிச்சு, விற்பனை செய்வதற்கு ஆர்வம் இருக்கு. அந்த மாதிரி தொழிலில் இருப்பதாகத்தான் மனைவியிடம் சொல்லி வந்திருக்கிறேன். ஆனால், அதற்கு முதல் வேண்டுமே..அவ்வளவு தொகைக்கு நான் எங்கே போவேன்?''
''நீங்க கேட்ட முதலுக்கான தொகை இந்த கவரில் இருக்கு. உங்களுக்கு தெரிந்த உரத் தயாரிப்புத் தொழிலை ஆரம்பித்து, வாழ்க்கையில் விரைவில் முன்னேறுவதற்கு என் வாழ்த்துகள்'' என்று அப்பாவின் திதி செலவுகளுக்காக தயாராக வைத்திருந்த இருபதாயிரம் ரூபாய் அடங்கிய கவரை மணவாளனிடம் கொடுத்தாள்.
''இந்த உதவிக்கு எப்படி நன்றி சொல்றதுன்னு தெரியலை'' என்று கண்களில் கண்ணீருடன் இரு கரங்களையும் குவித்து வணங்கினார்.
''இது உதவி இல்லை. என் அப்பாவுக்கு நான் செய்யும் ஒரு அஞ்சலிதான். அதுக்கு மேல எதுவும் கேட்காதீங்க?  இதைப் பற்றி உங்கள் குடும்பத்தினர் உள்பட, யாரிடமும் விளம்பரப் படுத்தாமல் இருப்பதுதான் உங்கள் சந்தோஷமான குடும்ப வாழ்க்கைக்கு நல்லது.''
அப்பாவின் நினைவு நாளை, அவரைப் போல ஒருவரின் வாழ்க்கையில் நிறைந்திருந்த இருளை போக்கி, நல்மணம் வீசும் நன்னாளாக மாற்றிய திருப்தி, அவள் மனம் முழுவதும் வியாபித்து நின்றது.
மாணவி மனோரஞ்சிதத்தின் உருவம் அவள் கண் முன் நிழலாடியது. அவளுடைய வாழ்க்கையில் 'மணம் வீசட்டும்'  என்று ரோஜாவின்  உள் மனது மானசீக வாழ்த்து சொன்னது!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com