வீழ்ந்து விடாத நிஜங்கள்

சமூக அக்கறையுடன் தேர்தல் பணியில் இரு ஆசிரியைகள்
வீழ்ந்து விடாத  நிஜங்கள்

'என்ன வேணுமோ சொல்லுங்கம்மா.. நான் வாங்கியாந்து தாரேன்!' என்றார் அந்த கைலி கட்டிய நபர்.

'என்ன டீச்சர் உங்களுக்கு என்ன வாங்கிட்டு வரச் சொல்லட்டும்?' என்றாள் மாலினி.

'எனக்கு இட்லி மட்டும் போதும். உங்களுக்கு என்ன வேணுமோ வாங்கிக்குங்க?' என்றபடியே பர்ஸில் இருந்து பணத்தை எடுத்தாள் கற்பகம்.

' பணத்துக்கு இப்போ என்ன அவசரம் ? நான் குடுக்கறேன்' என்று அந்த நபரிடம் நூறு ரூபாயைக் கொடுத்தாள் மாலினி.

அவர்கள் இருவரும் தேர்தல் அலுவலர்களாக அந்த வாக்குச்சாவடிக்கு நியமிக்கப்பட்டு இருந்தனர். தேர்தல் நடைபெறுவதற்கு முதல் நாள் மதியம் 12 மணிக்குள் தமக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச் சாவடிக்கு அவர்கள் சென்றுவிட வேண்டும். அதன்படி காலை 11 மணிக்கே அங்கு வந்துவிட்டனர். மதிய உணவைக் கையோடு கொண்டுவந்து சாப்பிட்டனர்.

அந்தக் கிராமம் மிகவும் உள்ளடங்கியிருந்தது. போதிய பேருந்து வசதிகள் இல்லை. அங்குதான் இவர்கள் பணிபுரியும் வாக்குச் சாவடி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்தது. அந்தப் பள்ளியிலேயே இரு வாக்குச் சாவடிகள் இருந்தன.

'இரவு உணவை எங்கு வாங்கலாம்' என அவர்கள் யோசித்துக் கொண்டிருக்கும் பொழுதுதான் அந்த நபர் அங்கு வந்தார். 'தன்னை அந்த வாக்குச் சாவடியின் ஏஜெண்டுகளுள் ஒருவர்' என அறிமுகம் செய்து கொண்டார்.

'காலையில 5.30 மணிக்கெல்லாம் எல்லாக் கட்சி ஏஜெண்டுகளையும் வரச் சொல்லுங்க? நாங்க மாதிரி வாக்கெடுப்பு நடத்திக் காட்டி உங்கக்கிட்டயெல்லாம் கையெழுத்து வாங்கணும். சரியா ஏழு மணிக்கெல்லாம் வாக்களித்தல் ஆரம்பிச்சிடுவோம்' என்று மாலினி கூறினாள். அவள் கூறியதையே காதில் வாங்கிக் கொள்ளாமல் அந்த நபர் விறுவிறுவென்று நடந்து போனார்.

'என்ன டீச்சர் ? காதுலயே வாங்காம போறாப்புலயே ?' என்றாள் கற்பகம். அதற்குள் பக்கத்து வாக்குச் சாவடிக்கு பணிபுரிய வந்திருந்த ஆசிரியைகள் இருவர் தம்மை அறிமுகம் செய்து கொண்டனர்.

'இந்தாங்க டீச்சர்.. சப்பாத்தி சாப்பிடுங்க.. வீட்டுல இருந்து எடுத்திட்டு வந்தோம்' என்று இவர்களிடம் கொடுத்தனர்.

'வேணாம் டீச்சர். நாங்க இப்பதான் இட்லி வாங்கி வரச் சொல்லி ஆள் அனுப்பி இருக்கோம். நீங்க சாப்பிடுங்க..' என்று மறுத்தனர். அதற்குள் வாக்குச் சாவடியில் பணிபுரியும் அலுவலர்கள் ஒருவர் பின்னர் ஒருவராக வரத் தொடங்கினர். பரஸ்பரம் அறிமுகம் செய்துகொண்டவுடன் பள்ளியைச் சுற்றி பார்க்கக் கிளம்பினர். 'காலையில் குளிக்க, கழிப்பறை வசதிகள் உள்ளனவா?' என்பது பெண் ஆசிரியைகளுக்கு இருக்கும் மிகப் பெரிய கவலை. நல்ல வேளையாக தண்ணீர் வசதியும், பிற வசதிகளும் அங்கு சிறப்பாக இருந்தன.

சரியாக மாலை ஏழு மணிக்கு மண்டலத் தேர்தல் அலுவலர், வாக்குச்சாவடி அலுவலர்களுக்குத் தேவையான படிவங்கள், வாக்களிக்கும் இயந்திரத்தை ஒப்படைத்தார்.

'ரொம்ப கவனமாக இருங்க மேடம் . காலையில 5.30 மணிக்கெல்லாம் 'மாக் போல்' நடத்திக் காட்டி சரியா ஏழு மணிக்கெல்லாம் போலிங் ஸ்டார்ட் பண்ணீடுங்க? யாராவது ஒரு பூத் ஏஜெண்டாவது வந்தாங்களா? பூத் ஏஜெண்ட்டுக்கு எல்லா விவரத்தையும் சொல்லீட்டீங்களா?' என்றார் அவர்.

'ஒருத்தர் வந்தார் சார் ! அவர்கிட்ட சொல்லிட்டோம் சார் ..'

'இடமெல்லாம் வசதியா இருக்கா?' என்று சம்பிரதாயத்துக்குக் கேட்டார் அந்த அலுவலர்.

'ம் ! சரியா இருக்கு சார்!' என்றனர் இருவரும்.

மாலினியும் கற்பகமும் படிவங்களைப் பிரித்து அவற்றுக்குரிய உரைகளில் மடித்து வைத்தனர். உறைகளின் வாக்குப் பதிவு நடை பெறும் ஊரின் பெயர், வாக்குச் சாவடி எண் போன்ற விவரங்களை நிரப்பத் தொடங்கினர்.

வாக்குச் சாவடியின் வாயிலில் ஒட்ட வேண்டிய போஸ்டர்களை ஒட்டி முடித்தனர். மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தை அதற்கான மேஜை மீது வைத்து சுற்றிலும் அட்டையால் தடுப்பு ஏற்படுத்தினர். அதற்குள் இரவு 9.30 மணி ஆகிவிட்டிருந்தது. இருவருக்கும் பயங்கரமாகப் பசி எடுக்க ஆரம்பித்தது.

'என்ன டீச்சர் ஆறு மணிக்கு இட்லி வாங்க அனுப்பின ஆள் இன்னும் வரலியே ?' என்றாள் கற்பகம்.

'அதுதான் புரியலை.. ஒரு வேளை ரொம்ப தூரத்துக்குப் போய் வாங்கீட்டு வரணுமோ?' என்று இவர்கள் பேசிக் கொண்டிருக்கும்பொழுதே ஒரு நபர் வந்தார். தன்னை அந்த ஊரின் தலைவர் என்று அறிமுகம் செய்துகொண்டு, 'ஏஜெண்ட்டெல்லாம் காலையில சீக்கிரம் வந்திடுவாங்க மேடம். வேற ஏதாவது வேணுமா மேடம் ?' என்றார்.

கற்பகம் அதற்குள் குறுக்கிட்டு, 'ஏங்க ? உங்க ஊர்ல டூட்டி பார்க்க வந்தா இப்படித்தான் செய்வாங்களா? ஆறு மணிக்கு இட்லி வாங்கிட்டு வரச் சொல்லி ஏஜெண்ட்டை அனுப்பினோம் ! இன்னும் வரலியே?' என்றாள்.

'யார்கிட்டக் குடுத்தீங்க? எந்தக் கட்சி ? அவன் பேர் தெரியுமா ?'

'பேரெல்லாம் தெரியாதுங்க ! 'நியாயக் கட்சி' ஏஜெண்ட்டுன்னு சொன்னார்! கைலி கட்டிக்கிட்டு வந்தார்..'

'இருங்க வரேன்!' என்று வெளியேறினார் அவர்.

'டீச்சர் எனக்கென்னவோஇன்னிக்கு ராத்திரி சாப்பாடு வரும்னு தோணலை! கொண்டு வந்த ஸ்நாக்ஸை சாப்பிட்டுத் தண்ணி குடிக்க வேண்டியதுதான்!' என்றாள் கற்பகம். இதைக் கேட்டுக் கொண்டிருந்த பக்கத்து பூத்தில் இருந்த ஆசிரியைகள், 'நாங்க குடுத்த சப்பாத்தியையும் வேண்டாமுன்னு சொல்லிட்டீங்க !

இந்தாங்க பிஸ்கட்டும் கடலை மிட்டாயும் இருக்கு ! சாப்பிடுங்க' என்று கொடுத்தனர்.

மாலினி வாக்குப் பதிவு அலுவல் பணி செய்வதை மிகவும் பெருமையாகக் கருதினாள். இதில், எத்தனை எத்தனையோ சங்கடங்கள் இருந்தன. எத்தனையோ அசெளகரியங்களும் ஆபத்துகளும் இருந்தபோதிலும், இந்தப் பணியை மிகவும் நேசித்தாள். 'மக்கள் தமது ஜனநாயகக் கடமை ஆற்ற தானும் ஒரு சிறு கருவியாகப் பயன்படுகிறோம்' என்ற பெருமித உணர்வு. 'பிறந்த நாட்டுக்கு தன்னாலான மிகச் சிறிய சேவை! ராணுவ வீரர்களும், காவலர்களும் தங்கள் பணியில் எத்தனையோ இடர்களைச் சந்திக்கின்றனர்.அதைப் பார்க்கும் பொழுது இந்தத் துன்பம் பெரிதில்லை' என நினைத்துக் கொள்வாள்.

'பரவாயில்லை டீச்சர். ஒருநாள் ராத்திரி சாப்பிடலைன்னா என்ன?' என்று இருவரும் தமக்குள் பேசிக் கொண்டனர்.

'வணக்கம்மா..' என்றபடியே அங்கு வந்தார் ஒருவர்.

'இவர்தான் 'நியாயக் கட்சி'- ஏஜெண்ட்.. சாப்பாடு வாங்க நீங்க இவர்கிட்ட தான் காசு குடுத்தீங்களா?' என்று கேட்டபடியே ஒரு நபரைக் கூட்டி வந்தார்.அவர் இவர்களிடம் காசு வாங்கிய அதே நபர்தான்.அவன் குடிபோதையில் தள்ளாடியபடியே இருந்தான். அவர்களுடன் கண்கலங்கியபடியே இளம்பெண் ஒருத்தியும் வந்திருந்தாள்.

'ஆமாங்க ! இவர்கிட்டதான் நூறு ரூபா குடுத்தோம்..' என்று மாலினியும் கற்பகமும் ஒரே குரலில் கூறினர்.

'எலேய் ! கண்ணப்பா! ஊர் மானத்தையே வாங்கிட்டியே? இந்தா.. கோமதி உன் வீட்டுக்காரன் இவங்கக்கிட்டக் காசை வாங்கித் தண்ணி அடிச்சிருக்கான். ஒழுங்கா மரியாதையா காசை நீதான் குடுக்கணும்!' என்றார் அந்த நபர்.

அந்தப் பெண் சட்டென்று தன் ரவிக்கைக்குள்ளிருந்து நூறு ரூபாயை எடுத்து, 'மன்னிச்சுக்குங்க டீச்சர்' என்று கொடுத்தாள்.

'பரவாயில்லைங்க ! காசு வேணாம்..' என்றனர் இருவரும்.

அந்தப் பெண்ணைப் பார்த்தால் பாவமாக இருந்தது. கழுத்தில் அழுக்கேறிய மஞ்சள் சரடும், மூக்குத்தியும் மட்டும் அணிந்து இருந்தாள். நைந்து போன புடவையும் ரவிக்கையும் அவள் வறுமையைப் பறைசாற்றின. அவள் அவர்கள் காலில் விழுந்தாள்.

'மன்னிச்சிடுங்கம்மா! இந்த ஊருக்கு வந்துட்டு யாரும் மன வருத்தத்தோட போகக் கூடாது ! தயவு செய்து வாங்கிக்குங்க?' என்றாள்.

போதையில் தள்ளாடிய நிலையிலும், 'ஏய் !

காசை எங்கிட்டக் குடுடி..' என்றான் அவள் கணவன்.

'சீ ! நீயெல்லாம் ஒரு மனுச ஜென்மமா ? நம்ப ஊருக்கு வேலைக்கு வந்தவுங்கக்கிட்டயே உன் புத்தியைக் காட்டிட்டியே?' என்று கொதித்தாள் கோமதி. நிலைகொள்ளாத போதையிலும் அவன் அவளை அடிக்கத் துணிந்தான்.

'சரிம்மா.. காசெல்லாம் வேணாம். நாங்க தப்பா நினைக்க மாட்டோம். போலிங்க் பூத்துக்குள்ள நீங்க ரொம்ப நேரம் இருக்கக் கூடாது' என்று அவர்களை அனுப்பி வைத்தனர் இருவரும்.

மறுநாள் அதிகாலை நான்கு மணிக்கே எழுந்து குளித்துத் தயாராகினர் மாலினியும் கற்பகமும். ஏஜெண்டுகள் ஒவ்வொருவராக வரத் தொடங்கினர். சரியாக 5.30 மணிக்கெல்லாம் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தின் செயல்முறையை விளக்க மாதிரி வாக்குப் பதிவை நிகழ்த்திக் காட்டினர். சரியாக ஏழு மணிக்கு வாக்குப் பதிவு துவங்கியது.

'முதல் ஓட்டை நான்தான் போடுவேன்..' என்று தகராறு செய்தான் கண்ணப்பன். 'ஆரம்பத்திலேயே தகராறு வேண்டாம்' என அவனை முதலில் ஓட்டுப் போட அனுமதித்தனர்.

கோமதி அனைவருக்கும் தேநீர் தயாரித்துக் கொண்டுவந்து கொடுத்தாள். அவள் கணவன் கண்ணப்பன் முழு போதையில் தன் கட்சி சார்ந்த ஏஜெண்டுகளுடன் உள்ளே அமர வந்தான்.

'இதோ பாருங்க யார் பாஸ் வச்சிருக்கீங்களோ.. அந்த ஏஜெண்ட் மட்டும்தான் பூத்துக்குள்ள உட்கார முடியும். மத்தவுங்கல்லாம் வெளிய போயிடணும்' என்றாள் மாலினி கண்டிப்பான குரலில். அவளை முறைத்தபடியே வெளியேறினான் கண்ணப்பன்.

சம்பந்தமே இல்லாமல் அரை மணிக்கு ஒருமுறை கண்ணப்பன் உள்ளே வந்து ,

'இப்போ எவ்வளவு ஓட்டு பதிவு ஆகி இருக்கு?' என்று கேட்டுக் கொண்டே இருந்தான். ஒரு கட்டத்தில் அவன் கட்சி ஏஜெண்ட்டுகளே அவனை விரட்டும்படி ஆனது. வாக்குப் பதிவு துரித கதியில் நடை பெற்றது.

முதல் நாள் தேர்தல் அலுவலர்களைக் கண்டு கொள்ளாத ஏஜெண்ட்டுகள் வாக்குப் பதிவு அன்று, 'மணி 9 ஆச்சு . யாரையும் உள்ள விடாதே.. மேடம் எல்லாம் சாப்பிடட்டும்' என்று விழுந்து விழுந்து உபசரித்தனர். 12 மணி அளவில் ஒரு வயதான மூதாட்டியை கண்ணப்பன் தனது கைகளில் தூக்கிக் கொண்டு வந்து, 'எங்க தெரு ஆயா ! எல்லாரையும் வெயிட் பண்ணச் சொல்லுங்க ! இவங்க ஓட்டு போடட்டும்..' என்றான்.

'பூத் ஸ்லிப் வச்சிருக்கீங்களா?' என்று கேட்டாள் மாலினி.

'அதெல்லாம் கிடையாது. இவங்க ஓட்டு போடாட்டி நான் யாரையும் ஓட்டு போடவிட மாட்டேன்..' என்றான் விதண்டாவாதமாக!

அவன் வேண்டுமென்றே தகராறு செய்ய வந்திருக்கிறான் என்பது அனைவருக்கும் புரிந்தது. அதற்குள் ஏஜெண்ட் ஒருவர் , ' 'பாகம் எண் 2, வரிசை எண்186, மூக்காயி' என்றார். மாலினி வாக்காளர் பட்டியலை சரிபார்த்தாள். அதில் இருந்த புகைப்படம் அடையாளம் தெரியாத வண்ணம் மங்கலாக இருந்தது.

'அவுங்கக் கிட்ட வேற ஏதாவது ஐ.டி. ப்ரூஃப் இருக்கா ? ஏன்னா அந்த நம்பரை நாங்க ஃபார்ம்ல குறிக்கணும்..' என்றாள் கற்பகம். அதற்குள் மாலினி குறுக்கிட்டு, 'வாக்காளர் பட்டியலில் இருக்கற நம்பரே போதும் ! அதையே குறிச்சுக்குங்க டீச்சர் !' என்றாள்.

அந்தப் பாட்டியை ஒரு நாற்காலியில் அமர வைத்தனர். கற்பகமும் தானே அவரருகில் பதிவேட்டைக் கொண்டு சென்று அவருடைய பெரு விரல் ரேகையைப் பதிந்து கொண்டாள்.

மற்றொரு அலுவலர் அவருடைய இடது கை ஆட்காட்டி விரலில் மை வைக்க வந்தார். கண்ணப்பன் அதைத் தடுத்தான்.

'இதை இங்க கூட்டியாறதுக்கே அஞ்சு பேரு மல்லுக் கட்ட வேண்டி இருக்கு. இது போய் கள்ள ஓட்டு போடப் போகுதாக்கும் ? எதுக்கு மை எல்லாம் வைக்கிறீங்க?' என்றான்.

நியாயக் கட்சி ஏஜண்டுகளும் அதை ஆமோதித்தனர். அதற்குள் வெளிச்சம் கட்சி ஏஜெண்டுகள், 'கையில மை வைக்கலைன்னா நாங்க ஓட்டுப் போட விட மாட்டோம்' என்றனர். சிறு சலசலப்பு அங்கு உருவாகும் நிலை . மாலினி சட்டென்று எழுந்து நின்று, 'கையில மை வச்சால் தான் ஓட்டு போட முடியும்' என்று கூறி அவர் கையில் மை வைத்தாள்.

அதற்குள் கண்ணப்பன் வாக்குப் பதிவு இயந்திரத்துக்கு முன் சென்று நின்று கொண்டான். வெளிச்சம் கட்சி ஏஜண்டுகள் சட்டென்று எழுந்து நின்று, 'எலேய் கண்ணப்பா ! என்னா லந்தா ? வெவகாரம் பண்றதுக்குன்னே வந்திருக்கியா ? நீ ஓட்டு போடக் கூடாது' என்றனர்.

'ஏன் நீங்க ஒரு கிழவியைக் கூட்டிக்கிட்டு வா.. வந்து நீங்களே ஓட்டு போட்டுங்க ! நாங்க ஒண்ணும் சொல்ல மாட்டோம்' என்றனர் நியாயக் கட்சி ஏஜண்டுகள்.

ஒருவழியாக அவர்களை சமரசம் செய்து வைத்து அந்த மூதாட்டியையே ஓட்டுப் போடும்படி செய்தனர் மாலினியும் கற்பகமும்.

இடையிடையே தேர்தலைப் பார்வையிட ஒவ்வொரு கட்சியில் இருந்தும் பார்வையாளர்கள் அவ்வப்பொழுது வந்தபடியே இருந்தனர். தங்களது கட்சிப் பிரமுகர்கள் யார் வந்தாலும் அவர்களுடனேயே ஒட்டிக் கொண்டு கண்ணப்பனும் உள்ளே வந்தான்.

மாலை மூன்று மணிக்கு டீயும் பிஸ்கட்டும் எடுத்து வந்த கோமதியிடம், 'நீங்க ஓட்டு போடலியா?' என்று கேட்டனர் மாலினியும் கற்பகமும்.

'இந்த ஊர் வாக்காளர் பட்டியல்ல என் பேர் இன்னும் சேக்கலைம்மா.. எங்களுக்குக் கல்யாணம் ஆகி ரெண்டு வருஷம்தான் ஆகுது . என் பேரு எங்கப்பா ஊர்ல பட்டியல்ல இருக்கு. இவரு என்னை அங்க அனுப்ப மாட்டாரு' என்றாள் அவள்.

வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடந்தபடியே இருந்தது. மாலினி இடைஇடையே அதிகாரிகளுக்குத் தொலைபேசியில் வாக்குப் பதிவு விவரங்களைத் தெரிவித்தபடியே இருந்தாள். வாக்களிக்கும் நேரத்தை மாலை ஏழு மணி வரை நீட்டி இருந்தனர். மாலை 5.30 மணியானதே தெரியவில்லை. மக்கள் கூட்டம் சற்று குறைந்து இருந்தது. சிறுநீர் கழிப்பதற்காக, மாலினியும், கற்பகமும் வெளியே வந்தனர்.

'பரவாயில்லை டீச்சர் சின்ன கிராமமா இருந்தாலும் இதுவரைக்கும் 80 சதவீதம் போலிங் ஆகியிருக்கு..' என்று இருவரும் பேசிக் கொண்டே நடந்தனர்.

கழிப்பறைக்கும் மதில் சுவருக்கும் இடைப்பட்ட சந்தில் கோமதி யாரோ ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தாள். இவர்கள் வருவதை அவ்விருவரும் கவனிக்கவில்லை . அந்த நபர்

'இதோ பாரு கோமதி.. இந்தா வச்சிக்க..' என்று எதையோ அவளிடம் கொடுத்தார்.

'எதுக்குண்ணே ரூபா கொடுக்கறீங்க?'

'டீ குடுத்திருக்கல்ல ?'

'டீக்கெல்லாம் காசு வேணாம்ணே. நேத்தே இந்த மனுசன் அசிங்கப்படுத்திட்டாரு..'

'கோமதி ஒரு விஷயம் ! ஒரு சின்ன சகாயம் !

148- ஆவது பூத்துல ராஜேஸ்வரின்னு ஒரு பொண்ணுடைய ஓட்டு இருக்கு . அது அச்சு அசலா உன்னை மாதிரியே இருக்கும். ராக மங்கலத்துக்குப் போன பிள்ளை இன்னும் ஊர் திரும்பலை. அங்க இருக்குற ஏஜெண்ட்டெல்லாம் நம்ம பயகதான். நீ போய் நம்ம கட்சிக்கு ஒரு ஓட்டு போட்டுட்டு வந்திடு. இல்லாட்டி அவனுவோ முந்திக்கிடுவானுவொ ! நாங் காசு குடுத்ததே ஓட்டு போடத்தான். இந்தக் காசை நீயே வச்சிக்க.. உன் புருஷன் கிட்ட சொல்ல மாட்டேன். தெரிஞ்சா இதையும் வாங்கி சரக்கு அடிப்பான். இன்னும் அரை மணி நேரம் தான் இருக்கு..என்னா சொல்றே?'

இதைப் பார்த்துக் கொண்டிருந்த மாலினிக்கும் கற்பகத்துக்கும் அதிர்ச்சியாய் இருந்தது. 'வறுமை எல்லாவற்றையும் ஜெயித்துவிடும். கோமதி வறுமையின் காரணத்தால் எளிதில் மடங்கி விடுவாள்' என நினைத்தனர் இருவரும்.

148- ஆவது பூத் என்பது இவர்களுக்கு அருகே இருந்த மற்றொரு வாக்குச் சாவடி என்பதைப் புரிந்து கொண்டனர்.

'ஐயோ அண்ணே. வேண்டாம்ணே ! எந்த ஜென்மத்துல என்ன பாவம் பண்ணினேனோ இப்படி ஒரு புருஷன்கிட்ட மாட்டி இருக்கேன் !

இது நாட்டுக்கே செய்யுற துரோகம். என்னால முடியாது.. விட்டுறுங்கண்ணே..' என்றபடியே அவன் கொடுத்த பணத்தை அவன் கையிலேயே கொடுத்து விட்டு திரும்பிப் பார்க்காமல் நடக்கத் தொடங்கினாள்.

'சரியான பொழைக்கத் தெரியாத ஆளா இருக்கியே?' என்றபடியே அவன் வேறு பக்கம் நடக்கத் தொடங்கினான். மாலினியின் கண்களில் லேசாகக் கண்ணீர் துளிர்த்தது. வறுமையிலும் கோமதியிடம் இருந்த நேர்மையைக் கண்டு உடல் சிலிர்த்தனர் இருவரும் !

- என்.லக்ஷ்மி பாலசுப்ரமணியன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com