திரைக் கதிர்

ரஜினியின் 'கூலி' டீசர் காணொளியில் வித்தியாசம்
திரைக் கதிர்

ரஜினியின் 171-ஆவது படமான "கூலி' படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் இப்படத்தின் டீசரில், விஷயங்கள் பல கவனத்தை ஈர்த்தன. குறிப்பாக ரஜினி பேசும் வசனங்கள்... இன்றைய காலகட்டத்திற்கும் பொருந்தும் விதமாக கைத்தட்டலை அள்ளுகிறது. கமல்ஹாசன், ரஜினிகாந்த் நடிப்பில் உருவான "நினைத்தாலே இனிக்கும்' படத்தில் வரும் "சம்போ சிவ சம்போ' பாடலின் வரிகளாக வரும் "அப்பாவும் தாத்தாவும் வந்தார்கள், போனார்கள்...' வரிகளை இதற்குப் பயன்படுத்தியிருந்தார்கள். இதே வரிகளை "ரங்கா' படத்திலும் பஞ்ச் வசனமாகப் பேசியிருப்பார் ரஜினி. இந்த வசனத்தைத்தான் "கூலி' டீசரில் ரீ-கிரியேட் செய்திருக்கிறார் லோகேஷ்.

---------------------------------------

ஒரு வருடத்திற்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தென்னிந்திய நடிகர் சங்கக் கட்டட வேலைகள், மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. நடிகர் சங்கக் கட்டடம் என்பது, தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல், புது நிர்வாகிகள், செயற்குழு எனப் பல திருப்புமுனைகளை ஏற்படுத்திய ஒன்று. நடிகர்கள் சங்கத்தின் வருவாயைப் பெருக்கவும், வளர்ச்சிக்காகவும் சொந்த கட்டடம் வேண்டும் என்பதைப் பல ஆண்டுகளாகவே சொல்லி வந்தனர்.விறுவிறுப்பாகத் தொடங்கிய கட்டட வேலைகள் ஐசரி கணேஷ் தொடுத்த வழக்கு, நிதிப் பற்றாக்குறை உட்பட சில பிரச்னைகள் காரணமாகப் பாதிப்படைந்தன. ஒரு கட்டத்தில் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.இந்நிலையில் கட்டட வேலைகள் இன்று மீண்டும் தொடங்கியிருக்கின்றன.

---------------------------------------

நடிகர் ராகவா லாரன்ஸ் இயக்குநர் வெற்றிமாறன் கதையில் உருவாகி இருக்கும் "அதிகாரம்' படத்தில் நடிக்க இருப்பதாகவும், இந்தப் படத்தை ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் சார்பில் எஸ்.கதிரேசன் தயாரிக்க இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். இயக்குநர் வெற்றிமாறன் தற்போது விடுதலை 2-ஆம் பாகத்தை இலக்கை வருகிறார். தவிர சூரியின் "கருடன்' படத்துக்குக் கதை எழுதியிருக்கிறார். இந்நிலையில் ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ள புதிய படத்துக்கு கதை மற்றும் திரைக்கதை எழுதி இருக்கிறார். இப்படத்தை செந்தில் குமார் இயக்குகிறார். இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார்.இது குறித்து ராகவா லாரன்ஸ் ட்விட்டரில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அதில், வெற்றிமாறன் சார் கூறிய "அதிகாரம்' படத்தின் திரைக்கதையைக் கேட்டு பிரமித்துப் போனேன். அவர் எழுதியுள்ள இந்த பிரமாண்ட கதையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியாக இருக்கிறது' என பதிவிட்டிருக்கிறார்.

---------------------------------------


கமலின் "உத்தம வில்லன்' படத்தின் தோல்வி, இயக்குநர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தைப் பெரிதாக பாதித்தது. அப்போதே லிங்குசாமியை அழைத்துப் பேசிய கமல், நஷ்டத்தை ஈடுகட்ட அடுத்து ஒரு படம் பண்ணித் தருவதாக உறுதி கொடுத்திருந்தாராம். பல காலமாக இந்த விவகாரம் இழுத்துக் கொண்டே போன நிலையில், லிங்குசாமி சமீபத்தில் "உத்தம வில்லன்' படம் குறித்த பல விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளத் தொடங்கியிருக்கிறார். கமல் மனதில் ஈரத்தைக் கசியவைத்து, அடுத்த படத்தைத் தொடங்க வைக்கவே இந்த ஏற்பாடாம். ஆனால், கமல் தரப்பிலிருந்து இதற்கு எந்த பதிலும் வரவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com