பாலிவுட் ஸ்டூடியோ!

அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா இருவரும் பாலிவுட் ஜோடிகளாக வலம் வருபவர்கள்.
கங்கனா ரணாவத்
கங்கனா ரணாவத்
Updated on
2 min read

எங்களுக்குள் எந்தப் பிரச்னையும் இல்லை...

அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா இருவரும் பாலிவுட் ஜோடிகளாக வலம் வருபவர்கள். இருவருக்கும் 2007-இல் திருமணமாகி, 2011- இல் ஆராத்யா என்ற பெண் குழந்தை பிறந்தது. திருமணத்துக்குப் பிறகு அபிஷேக் பச்சன் தொடர்ந்து நடித்து வருகிறார். ஆனால், ஐஸ்வர்யா நடிப்பதை முழுமையாகக் குறைத்துவிட்ட நிலையில், நீண்டநாள்களுக்குப் பிறகு மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் நடித்திருந்தார்.

அண்மையில் நடைபெற்ற ஆனந்த் அம்பானி திருமண விழாவில், அமிதாப் பச்சன் குடும்பத்தினர் கலகலப்புடன் கலந்துகொண்டிருந்தனர். இதில் அமிதாப் பச்சன் குடும்பத்தினர் ஒன்றாக நின்று புகைப்படம் எடுத்தனர். ஆனால், ஐஸ்வர்யா ராய், ஆராத்யா பச்சன் மட்டும் தனியாக நின்று புகைப்படம் எடுத்துகொண்டனர்.

இதுதொடர்பான காணொலியும், புகைப்படமும் சமூக ஊடகங்களில் வைரலானது. குறிப்பாக, ஐஸ்வர்யா ராய்க்கும் அவரது மாமியாருக்கும் இடையே சச்சரவுகள் இருப்பதாகப் பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வந்தனர். இருவரும் விவாகரத்து வரை சென்று விட்டதாகக் கூறி, பாலிவுட்டில் பேசுபொருளானது.

இதுகுறித்து பத்திரிகையாளர்கள் அபிஷேக் பச்சனிடம் கேள்வி எழுப்ப, 'நான் இன்னுமே திருமணமானவன்தான்! எங்களுக்கு இடையே எந்தப் பிரச்னையும் இல்லை. இந்த வதந்திகளுக்கெல்லாம் நான் எந்தப் பதிலும் சொல்லப் போவதில்லை. நீங்கள்தான் இதை ஊதி, ஊதிப் பெரிதாக்கிக் கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்குப் பரபரப்பான செய்திகள், கதைகள் எதாவது வேண்டும் என்பதற்காக இப்படியெல்லாம் செய்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியும். பிரபலங்களாக, நடிகர்களாக இதையெல்லாம் நாங்கள் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது' என்று காட்டமாகப் பதிலளித்துள்ளார்.

நான் மிகவும் பெருமைப்படுகிறேன்...

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங்கின் வாழ்க்கை, திரைப்படமாவது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2011-ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் ஆல்ரவுண்டராக மிகச் சிறப்பான செயல்பாட்டை அளித்திருந்தார். அந்த உலகக் கோப்பையை இந்திய அணி வெல்லப் பிரதான காரணமாக இருந்தவரே அவர்தான். இதற்காக, தொடர் நாயகன் விருதையும் வென்றிருந்தார். அதன்

பிறகுதான், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்குப் பிறகு மீண்டு வந்தார்.

இரண்டாம் இன்னிங்ஸில் பெரியளவில் சோபிக்கவில்லை என்றாலும் எல்லோருக்குமான பெரும் நம்பிக்கையாக மாறினார். கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை நோக்கி நகர்ந்துவிட்டார்.

இந்நிலையில் இவரது வாழ்க்கை, திரைப்படமாக உருவாக இருக்கிறது என்று தகவல்கள் வெளியாகியிருந்தன. அதுதொடர்பான அறிவிப்பும் வெளியாகியிருக்கிறது.

பாலிவுட்டில் உருவாகும் இப்படத்தை டி சீரிஸ் நிறுவனம் சார்பில் பூஷன் குமார் தயாரிக்கிறார். அவருடன் இணைந்து ரவி பாக்சந்த்கா தயாரிக்கிறார். தனது பயோபிக் படம் குறித்துப் பேசிய யுவராஜ் சிங், 'பூஷன், ரவி ஆகிய இரண்டு தயாரிப்பாளர்கள் மூலம் உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான எனது ரசிகர்களுக்கு என் கதையை வெளிப்படுத்துவதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். என் வாழ்வின் எல்லா உயர்வு தாழ்விலும் கிரிக்கெட் எனக்கு மிகப் பெரிய பலமாகவும், நான் நேசிக்கும் ஒன்றாகவும் இருந்துள்ளது. மற்றவர்கள் தங்கள் போராட்டங்களைச் சமாளித்து மீண்டெழவும், அசைக்க முடியாத கனவுகளை ஆர்வத்துடன் பின்தொடரவும் இந்தப் படம் ஊக்குவிக்கும் என நம்புகிறேன்' என்று தெரிவித்திருக்கிறார்.

முன்னுதாரணமாக இருக்க விரும்புகிறேன்...

அரசியல் கருத்துகளைப் பேசி தொடர்ந்து சர்ச்சைகளைக் கிளப்பி வந்த பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத், தற்போது நேரடி அரசியலுக்குள் பிரவேசித்திருக்கிறார். கடந்த மக்களவைத் தேர்தலில் ஹிமாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க. வேட்பாளராகக் களமிறங்கி வெற்றி பெற்றுள்ளார். அரசியலில் முழு கவனம் செலுத்தி வருவதால் ஜூன் 14-இல் திரையரங்கில் வெளியாவதாகத் திட்டமிடப்பட்டிருந்த அவரின் 'எமர்ஜென்சி' படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. செப்டம்பர் 6-இல் இத்திரைப்படம் வெளியாகவிருக்கிறது.

இதையொட்டி பாட்காஸ்ட் ஒன்றில் பேசியிருக்கும் கங்கனா ரணாவத், நடிகைகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

இதுகுறித்துப் பேசியிருக்கும் அவர், 'நான் நிறையத் திரைப்படங்களில் நடிக்க மறுத்திருக்கிறேன். பாலிவுட் கான் சகோதரர்கள் உட்பட பல உச்ச நட்சத்திரங்களின் திரைப்படங்களில் நடிக்க மறுத்திருக்கிறேன். கான் சகோதரர்கள் மட்டுமல்ல; அக்ஷய் குமார், ரன்பீர் கபூர் எனப் பலரிடமிருந்து வந்த வாய்ப்புகளை நிராகரித்திருக்கிறேன். காரணம். ஒரு சில காட்சிகள், பாடல்களுக்கு மட்டும் வரும் கதாபாத்திரங்களில் நான் நடிக்க மாட்டேன். நடிகையாக வலிமை மிகுந்த கதாபாத்திரத்தில் மட்டுமே நான் நடிக்க விரும்புகிறேன். இனி வரும் நடிகைகளுக்கு நான் முன்னுதாரணமாக இருந்து, அவர்களுக்கு நல்ல பாதையை வகுத்துக் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன். நடிகைகள் வெறும் துணைக் கதாபாத்திரமாக, கதாநாயகர்களுக்கு ஜோடியாக, ஸ்பெஷல் நம்பர் பாடல்களில் ஆடுபவராக மட்டுமே இருக்கக் கூடாது. நல்ல கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்க வேண்டும். எந்தவொரு ஹீரோக்களும் நடிகைகளை உயர்த்திவிட மாட்டார்கள். நாம்தான் நம்மை உயர்த்திக் கொள்ள வேண்டும். இதை ஒவ்வொரு நடிகையும் உணர்ந்து படங்களைத் தேர்வு செய்யவேண்டும்' என்று பேசியிருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com