கோலிவுட் ஸ்டூடியோ!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 'லவ் இன்ஸூரன்ஸ் கம்பெனி' என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.
விக்னேஷ் சிவன்
விக்னேஷ் சிவன்
Updated on
3 min read

அரசு சொத்தை நான் விலைக்கு கேட்கலை!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 'லவ் இன்ஸூரன்ஸ் கம்பெனி' என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. அவர் அண்மையில் புதுச்சேரிக்குச் சென்று சுற்றுலாத் துறை அமைச்சர் லட்சுமி நாராயணனை சந்தித்து அரசு சொத்தை விலைக்கு கேட்டதாக ஒரு செய்தி பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து லட்சுமி நாராயணன், 'அயல் நாடுகளில் நடக்கும் இசை நிகழ்ச்சிகளைப் போல, புதுச்சேரியிலும் தொடர்ச்சியாக நடத்துவதற்கு அனுமதி கேட்கவே விக்னேஷ் சிவன் வந்தார்' எனக் கூறியிருந்தார்.

இதுதொடர்பாக விளக்கமளித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் விக்னேஷ் சிவன்.

'அரசு சொத்தை நான் வாங்க முயன்றதாக சமூக வலைதளப் பக்கங்களில் ஒரு செய்தி பரவி வருகிறது. அதனை நான் தெளிவுப்படுத்த விரும்புகிறேன். புதுச்சேரி விமான நிலையத்தில் படப்பிடிப்பு நடத்த அனுமதி கேட்கவே நான் புதுச்சேரிக்குச் சென்றேன். அங்கு மரியாதை நிமித்தமாக முதல்வரையும், சுற்றுலாத் துறை அமைச்சரையும் சந்தித்தேன்.

எதிர்பாராதவிதமாக உள்ளூர் மேலாளர் ஒருவர் அவருக்காக ஏதோ ஒரு விஷயம் தொடர்பாக விசாரித்துகொண்டிருந்தார். தற்போது இந்தத் தகவல் தவறுதலாக என்னுடன் இணைத்து சொல்லப்பட்டு வருகிறது. சமூக வலைதளப் பக்கங்களில் பகிரப்படும் மீம்ஸ்கள் நகைச்சுவையாக இருக்கிறது. ஆனால், அவையெல்லாம் தேவையற்றது. அதனால் இந்தத் தகவலைத் தெளிவுப்படுத்த விரும்பினேன்' எனப் பதிவிட்டிருக்கிறார்.

இளையராஜா
இளையராஜா

சுய மரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல! - இளையராஜா

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்குச் சென்ற இசைஞானி இளையராஜா கோயில் கருவறைக்குள் நுழைய முயன்றபோது, ஜீயர் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்படும் விவகாரம், பேசுபொருளாகியிருக்கிறது.

'கோயில் மரபு படியும், பழக்க வழக்கபடியும் அர்த்த மண்டபம் வரை அர்ச்சகர், பரிசாரகர், மடாதிபதிகளைத் தவிர இதர நபர்கள் அனுமதிக்கப்படும் வழக்கமில்லை.

ஸ்ரீஸ்ரீஸ்ரீ திரிதண்டி ஸ்ரீமன் நாராயண சின்ன ராமானுஜ ஜீயர் சுவாமிகளுடன் இசையமைப்பாளர் இளையராஜா வருகை புரிந்தபோது, இணைந்து அர்த்த மண்டப வாசல் படி ஏறியபோது உடன் இருந்த ஜீயர் சுவாமிகள், கோயில் மணியம் அர்த்த மண்டபம் முன்பு இருந்து சுவாமி தரிசனம் செய்யலாம் என கூறினார். அவரும், ஒப்புக் கொண்டு அர்த்த மண்டபத்தின் முன்பு இருந்து சுவாமி தரிசனம் செய்தார்' என்று இந்து சமய அறநிலையத் துறையும் செய்திக்குறிப்பை வெளியிட்டது.

இந்த நிலையில், இளையராஜா தனது எக்ஸ் தளத்தில், 'என்னை மையமாக வைத்து சிலர் பொய்யான வதந்திகளைப் பரப்பி வருகிறார்கள். நான் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் என்னுடைய சுய மரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல; விட்டுக் கொடுக்கவும் இல்லை. நடக்காத செய்தியை நடந்ததாகப் பரப்புகின்றார்கள். இந்த வதந்திகளை ரசிகர்களும், மக்களும் நம்ப வேண்டாம்' என்று ட்வீட் செய்திருக்கிறார்.

பாடகி சைந்தவி
பாடகி சைந்தவி

என் கரியரில் பெரிய ஹிட்ஸ் கொடுத்தது ஜி.வி!

இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ், பாடகி சைந்தவி ஆகிய இருவரும் காதலித்து, 2013-இல் திருமணம் செய்துகொண்டனர். 'அன்வி' எனும் மகளும் உள்ளார். 11 வருட காதல் திருமண வாழ்க்கையை முறித்துகொள்வதாக, சில மாதங்களுக்கு முன் இருவரும் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர். இந்தச் செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

இந்த நிலையில் சமீபத்தில் மலேசியாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இருவரும் ஒன்றாக 'பிறை தேடும் இரவிலே' பாடலைப் பாடினர்.

இதனை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். இதனிடையே அந்த மேடையில் ஜி.வி. குறித்து சைந்தவி பேசியது வைரலாகி வருகிறது. பாடலை பாடியவுடன் மேடையில் பேசிய சைந்தவி, ' என் கரியரில் பெரிய ஹிட்ஸ் கொடுத்தது ஜி.வி சார்தான். அந்த மாதிரியான ஹிட் பாடல்களை என் கரியரில் கொடுத்ததற்கு அவருக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி மலேசியா' என்று கூறியிருக்கிறார்.

ராஷ்மிகா
ராஷ்மிகா

அல்லு அர்ஜுன் பற்றி ராஷ்மிகா!

'புஷ்பா 2: தி ரூல்' படத்தின் பிரீமியர் ஷோ பார்க்க, டிசம்பர் 4-இல் ஹைதராபாத்தில் உள்ள திரையரங்குக்குக் குடும்பத்துடன் சென்று ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கி பாஸ்கர் என்பவரின் மனைவி ரேவதி உயிரிழந்ததைத் தொடர்ந்து அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டார். அல்லு அர்ஜூனுக்கு ஆதரவாகத் திரையுலகப் பிரபலங்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில்அல்லு அர்ஜுனுக்கு ஆதரவாக நடிகை ராஷ்மிகா மந்தனாவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அந்தப் பதிவில், ' இப்போது நான் பார்ப்பதை என்னால் நம்ப முடிவில்லை. 'புஷ்பா-2' முதல் காட்சியின்போது ஒருவர் இறந்தது துரதிஷ்டவசமான ஒன்று. வருத்தமான ஒன்றும்கூட. ஆனாலும் எல்லா பழிகளையும் ஒருவரின் மீது சுமத்துவது வருத்தமளிக்கிறது' என்று பதிவிட்டிருக்கிறார்.

-டெல்டா அசோக்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com