வருங்காலக் கணவன்

'சாப்பாடு ரொம்ப பிரமாதம் அண்ணி.  பல வருஷங்களுக்குப் பிறகு நல்ல சாப்பாடு சாப்பிட்டிருக்கேன்'  என்று  சிரித்தபடியே கை கழுவினேன் நான்.
வருங்காலக் கணவன்

'சாப்பாடு ரொம்ப பிரமாதம் அண்ணி. பல வருஷங்களுக்குப் பிறகு நல்ல சாப்பாடு சாப்பிட்டிருக்கேன்' என்று சிரித்தபடியே கை கழுவினேன் நான்.
'போங்க தம்பி..' என்று கூறிய அண்ணியின் முகம் வெட்கத்தில் சிவந்தது.
'டேய் உங்க அண்ணி மனசு வெச்சா இதைவிடவும் பிரமாதமா சமைப்பா?' என்று கிண்டலடித்தபடியே அண்ணன் துண்டு எடுத்துக் கொடுத்தார். 'வா அப்படியே தோட்டத்துல போய் காத்தாட உட்காருவோம்.'
முன்னே நகர பின்தொடர்ந்தேன்.
அண்ணனின் கடும் உழைப்பு ஒளிந்திருந்த பசுமையான தோட்டம் மனதுக்கு நிறைவு தந்தது.
'இதுவரைக்கும் தண்ணீர்ப் பிரச்னையில்லை. சுரேஷ்.., இடையில ஒரு மழை வந்தா இன்னும் நல்லாயிருக்கும்.'
கிணற்றை ஒட்டி போடப்பட்டிருந்த கயிற்றுக் கட்டிலில் உட்கார்ந்தோம். நான் நேரடியாக விஷயத்துக்கு வந்தேன்.
'நீங்க போன்ல பேசினது எனக்கு சரியா புரியலைண்ணா. அதான் நேர்ல வந்தேன்.'
'சரிதான்ப்பா. சில விஷயங்களை முகம் பார்த்து பேசற மாதிரி வருமா? சொல்லு..' என்று அண்ணன் விரல்களை நெட்டி முறித்துக் கொண்டார்.
'ஒரு சின்ன சிக்கல் சுரேஷ்.. பிரியாவோட கல்யாணத்துல. சிக்கல்ன்னு அதைச் சொல்ல முடியாது, அது ஒருவிதமான குழப்பம். அதை எப்படி சரிபண்றதுன்னு தெரியாம உன்னை வர வெச்சேன்..'
'விளையாடாதீங்கண்ணே..' என்று கூறி சிரித்தேன் நான். 'உங்களை விடவா எனக்கு அனுபவமும், வாழ்க்கைப் புரிதலும் இருக்கு.? நான் என்ன இதுல உங்களுக்கு உதவிட முடியும்.'
'எல்லோர் முகத்தையும் காட்டற கண்ணாடிக்கு தனக்குன்னு ஒரு முகம் உண்டா சொல்லு? அது மாதிரி தான் இதுவும். அடுத்தவங்களுக்கு ஒண்ணுன்னா கேட்காமலேயே ஆயிரம் யோசனைங்க நமக்கு தோணும். ஆனா தனக்குன்னு ஏதாவது ஒண்ணு வரும்போது தான்.. அதுசரியா, இதை இப்படிச் செய்யலாமான்னு பெரிய குழப்பம் உண்டாகும். வட்டம் தாண்டி சிந்திக்க முடியலைப்பா அதான்..'
நான் அவரைப் பரிதாபமாகப் பார்த்தேன். 'ம், புரியுதுண்ணா. நீங்க விஷயத்தைச் சொல்லுங்க. எனக்குத் தெரிஞ்சதை சொல்றேன்' என்றேன்.
'தொடர்ந்து கோயம்புத்தூரிலிருந்து வந்து யாரோ பிரியாவைப் பெண் பார்த்துட்டுப் போனதா சொல்லியிருந்தீங்க. என்னால தான் அதுல கலந்துக்க முடியாமப் போச்சு. அந்த விஷயத்துல தான் ஏதாவது குழப்பமா?'
'ஆமாப்பா, அன்னைக்கு நடந்ததை அப்படியே சொல்றேன். மனசுக்குள்ள படமா ஓட விட்டுக்கோ..?'
அண்ணன் ஆரம்பித்தார்.
'பிரியாவைப் பெண் பார்க்க வந்த இடத்தில் சில ஆரம்பகட்ட நிகழ்வுகள் கடந்து காபி, பலகாரம் விநியோகம் முடித்துவிட்டு பிரியா முருகன் பாடல் ஒன்றை சிறப்பாக பாடி விட்டு தன் குறித்து சில தகவல்களைச் சொல்லிவிட்டு உள்ளே நகர்ந்தாள். அந்த மௌன விநாடிகளில் தான் பேச ஆரம்பித்தான் மாப்பிள்ளையாக வந்திருந்த தினேஷ்.' என்று அந்த நாள் விஷயத்தைச் சொல்ல ஆரம்பித்தார்.
'ஆரம்பத்திலேயே வெளிப்படையா சொல்லிடறேன் அம்மாவுக்கும், எனக்கும் பிரியாவைப் பிடிச்சிருக்கு. உங்களுக்கும் ஏறக்குறைய சம்மதமுன்னு நினைக்கிறேன். அதனால நாம மத்த விசயங்களைப் பத்தி பேசிடலாம்தானே..'
'தாராளமா. அதானே முறை..'
'உங்க மக பிரியாவுக்கு என்ன சீர் செய்யறதா இருக்கீங்க?' என்று தினேஷின் அம்மா கேட்டாள்.
'இருபது பவுன் நகை இருக்கு. வெள்ளி மூணு கிலோ இருக்கு. கல்யாணத்தை ஓரளவு சிறப்பா நடத்திடலாம்.'
தினேஷ் கண்கள் மூடி கணக்கு போட்டான்.
'அப்போ உங்க கணக்குப்படி நகைகள் மட்டுமே பத்து லட்சம் ரூபாய் மதிப்பாகுது. வெள்ளி ரெண்டு லட்சம் வருது..'
'ம்..'
'கல்யாணச் செலவு.. பத்திரிகை, மண்டபம், பந்தி, அய்யர், மணவறை.. எல்லோருக்கும் துணிமணி, போட்டோ, வீடியோன்னு எப்படிப் போட்டாலும் ஒரு நாலு லட்சத்துக்கு குறையாது.. இல்லையா..?'
'வரும் வரும்.. கல்யாணம்ன்னா சும்மாவா? பிரியா எனக்கு ஒரே மக... அவளுக்கு செய்யாம யாருக்கு பண்ணப் போறேன்.'
தினேஷ் பெருமூச்சு விட்டான். அம்மாவைப் பார்த்தான். பிரியாவைப் பெண் பார்க்க இருவர் மட்டுமே வந்திருந்தனர்.
'நான் கொஞ்சம் ஓபன் டைப். யதார்த்தமா, வெளிப்படையாப் பேசுகிறவன். யாரும் தப்பா நினைக்க மாட்டீங்களே.'
'சும்மா சொல்லுங்க.. இத்தனை பீடிகை வேணாம்..'
'என்னைப் பத்தி உங்க எல்லோருக்கும் எத்தனை தூரம் தெரியுமுன்னு எனக்குத் தெரியலை. இருந்தாலும் நானே சொல்லிடறேன். என்னோட அப்பா சாகும்போது எனக்கு பன்னிரெண்டு வயசு. அந்த ரெண்டுங்கெட்டான் வயசுல , அப்பாவோட இழப்பை முழுமையா உணர முடியாத கொடுமை. சொந்தக்காரங்க யாருமே ஆதரிக்கலை. ஏன்னா எங்களுக்குன்னு சொத்தோ, பணமோ எங்கப்பா சம்பாதிச்சு வைக்கலை. அம்மாவும், நானும் மட்டுமே ஒருத்தருக்கு ஒருத்தர் துணையா இருந்தோம். உலகத்து மேலே மக்கள் மேலே உண்டான வெறுப்பு கோபமா மாறுச்சு. பணத்துக்காக எங்களைப் புறக்கணிச்ச இந்த உலகத்தை நாம ஜெயிச்சுக் காட்ட வேண்டுமுன்னு மனசுல ஒரு வைராக்கிய வெறி உண்டாச்சு. நல்லாப் படிச்சேன். பிளஸ் டூ முடிச்சிட்டு தொழிற்கல்வி படிச்சேன். வாழ்க்கையில சாதிச்ச, ஜெயிச்ச எல்லோருமே சொந்தத் தொழில் ஆரம்பிச்சு படிப்படியா முன்னேறி வளர்ந்தவங்கதான்! அதை கண்கூடப் பார்த்தேன். அதனால படிப்பு முடிஞ்சதுமே பெரிய நிறுவனத்துல ட்ரெய்னியா வேலைக்குச் சேர்ந்தேன். சம்பளம் கிடையாது. உதவித் தொகைன்ற பேருல கொஞ்சம் பணம் கொடுப்பாங்க? ஆனா எனக்கு பணம் பெரிசில்லையே. தொழில் கத்துக்கனும்ன்ற ஒரே எண்ணம்! அனுபவம் தேவைன்ற ஒரே குறிக்கோள். அதனால் திட்டம் போட்டு உழைச்சேன். ஒவ்வொரு சின்ன வாய்ப்புகளையும் பயனுள்ளாதா ஆக்கிக்கிட்டேன். என் உழைப்பைபையும், திறமையையும் கவனிச்ச கம்பெனி எனக்கு பதவி உயர்வும், சம்பள உயர்வும் தந்து என்னை அங்கேயே தக்க வெச்சுக்க விரும்பினாங்க? ஆனா நான் துணிச்சலா முடிவெடுத்து அங்கிருந்து வெளியே வந்து புறநகர்ப் பகுதியில சின்னதா ஒரு கம்பெனி ஆரம்பிச்சேன். என் கம்பெனி மாதிரியான நூத்துக்கணக்கான நிறுவனங்களுக்குத் தேவையான பொருள்களை அங்கே உற்பத்தி பண்ணினேன். செலவுகளைக் குறைச்சு, உற்பத்தி அதிகரிப்பதற்கான வழிகளைக் கண்டறிஞ்சேன். பொருள்களோட தரமும், என் நேர்மையும் எனக்கு நல்ல வரவேற்பைக் கொடுத்துச்சு. மூணே வருஷம்.. இப்போ என்கிட்டே இருபது பேர் வேலை செய்யறாங்க? தொழிலை அடுத்தகட்டத்துக்கு கொண்டு போக விரும்பறேன். வளர்ச்சிக்காக, நிதித் தேவைக்காக வங்கிகள்கிட்டே மோதிக்கிட்டிருக்கேன்.'
நிறுத்தினான். செம்பிலிருந்த தண்ணீர் குடித்தான். அவன் தொடர்வதற்காக எல்லோரும் பொறுமையாகக் காத்திருந்தனர்.
'நீங்க கொஞ்ச முன்னாடி சொன்னீங்களே.. உங்க பொண்ணுக்கு செய்யப் போறதா இருந்த சீர் நகைங்க, அதையும் நல்லவிதமா செய்யப் போகிறதா சொன்ன கல்யாணச் செலவையும் எனக்கு ரொக்கமா தர முடியுமா.? என் தொழிலை முன்னேத்திக்க அந்த பணம் உதவும்.! கல்யாணத்தை அதிக செலவு செய்யாம எளிமையா முடிச்சுக்கலாம்.'
ஒருவரை ஒருவர் குழப்பமாகப் பார்த்துக் கொண்டார்கள்.
'சரியா விளங்கலையே தம்பி..'
'நீங்க தர்ற பணத்தை கடனாவே வெச்சுக்குங்க. ஒரே வருஷம் திருப்பித் தந்துடறேன். ஏன்னா வெளிநாட்டு ஆர்டர் ஒண்ணு பேசிட்டிருக்கேன். அதுமட்டும் கைக்கு வந்துட்டா பெரிய லெவல்ல சாதிச்சுடுவேன்.'
தினேஷ் சொன்னதை அவர்கள் புரிந்து கொள்ளவே ஐந்து நிமிடம் ஆனது.
'இதென்ன புதுசா இருக்கு. பணத்துக்காக கல்யாணம் பண்ணிக்கிறவங்களை இப்பத்தான் முதல் தடவையா பாக்கிறேன்..'
'ஏம்ப்பா இது ஆயிரங்காலத்துப் பயிரு! இப்படி வியாபாரம் ஆக்கிறீங்களே..'
'இன்னும் கல்யாணமே உறுதியாகலை. அதுக்குள்ள லட்சக்கணக்குல பணத்தைக் கேட்டா எப்படி? அதுவும், மகளுக்குன்னு அவர் சேர்த்து வெச்சிருக்கிற நகைகளைக் கேட்கிறாரே...'
'நகையை தூக்கி இவருக்குக் கொடுத்துட்டு வெறும் கழுத்தோட வீட்டுக்கு அனுப்பறதா. இதெல்லாம் ஆகிற காரியம் இல்லை..'
சலசலப்பு உண்டானது. ஆளாளுக்கு பேச ஆரம்பித்தனர்.
'எங்களுக்கு கொஞ்சம் டைம் கொடுங்க தம்பி. விநோதமான யோசனையா இருக்கு. கலந்து பேசலாம். அப்புறமா தகவல் சொல்றோம்...' என்று எழுந்து நின்று கை கூப்பினார் பொதுவில் இருந்தவர். அவர்கள் கிளம்பிவிட்டனர்,
'ம்! வித்தியாசமான சிக்கல் தான். நீங்க என்ன நினைக்கிறீங்க..?' என்றேன் அண்ணனிடம்.
'நான் என்ன சொல்ல இருக்கு. போகாத ஊருக்கு வழி கேட்டா என்ன பதில்.? வந்தாங்க, குழப்பிட்டு போயிட்டாங்க?'
'நிஜமாகவே வித்தியாசமான ஆளு தான் அண்ணா அவர். முதல் சந்திப்பிலே யே இப்படி டிமாண்ட் வெச்சிருக்காரே. ப்ச், நான் சந்திக்காம போயிட்டேனே. நண்பனோட அப்பா இறந்துட்டாங்க. கூட இருந்தே ஆக வேண்டிய கட்டாயம். இல்லைன்னா கிளம்பி வந்திருப்பேன்.'
யோசனையாகப் பார்த்தார். 'ஒரு வேளை, நீ கூட இருந்திருந்தா அன்னைக்கே இதை ஒரு மாதிரி முடிவெடுத்திருக்கலாமோ?'
'நான் படிச்ச ஒரு கதையிலேயோ, பார்த்த சினிமாவுலேயோ இதே மாதிரி ஒரு காட்சி வரும். ஆனா அது எப்படி முடியுமுன்னு நினைவுக்கு இல்லை' என்றேன் குழப்பமாக.
'சரி, வீட்டுல இதைப் பத்தி கலந்து பேசினீங்களா.. அண்ணி என்ன சொல்றாங்க?'
'அவ என்னத்தை சொல்லுவா. பேசினா இன்னும் குழப்பறா..?' என்று அலுத்துக் கொண்டார்.
ஒரு விஷயத்தை நம்ம பார்க்கிறதுக்கும், அவங்க பார்க்கிறதுக்கும் வித்தியாசம் நிறைய இருக்கு.
சில நொடிகள் யோசித்தோம்.
'போகலாம்ண்ணா..' என்றபடி எழுந்தேன்.
'சரி வா..'
அவரும் எழுந்தார். மௌனமாக வீடு வந்தோம். சபரி கண்ணில் பட்டான். 'பிரியா அக்கா வந்தாச்சா கோயிலில் இருந்து..' என்றேன்.
'ம். சாப்பிட்டுட்டிருக்கா..'
அலைபேசி அலறியது. கம்பெனியிலிருந்து போன் வர எழுந்தேன்.
பத்து நிமிடப் பேச்சு முடித்துவிட்டு வீட்டுக்குள் திரும்பி வர பிரியா, 'வாங்க சித்தப்பா..' என்றபடி எழுந்து நின்றாள்.
'உட்காரு உட்காரு..' என்றபடி எதிரிலிருந்த சேரில் அமர்ந்தேன்.
கல்யாணக் களை அவள் முகத்தில் தெரிந்தது. 'கோயில்ல கூட்டமா பிரியா..'
'ம். ஓரளவுக்கு..' எனப் புன்னகைத்தாள்.
'தனியா வந்திருக்கீங்க சித்தப்பா. சித்தியையும் கூட்டிட்டு வந்திருக்கலாமே?'
'அடுத்த முறை கண்டிப்பா..' என சிரித்தேன்.
அண்ணி சமையல் அறைக்குள்ளிருந்து வந்தார். எதையோ எதிர்பார்ப்பது போல வாசல் அருகே தயங்கி நின்றார்.
'அண்ணி, அண்ணன் சில விஷயங்களைச் சொன்னாரு பிரியாவைப் பெண் பார்த்துட்டு போன மாப்பிள்ளையைப் பத்தி.. நீங்க என்ன நினைக்கிறீங்க. உங்க மனசுல என்ன படுது..?'
'என்னமோ ஊரு உலகத்துல இல்லாத பழக்கத்தையெல்லாம் பேசறாங்க தம்பி. சீர்வரிசையைப் பணமாக் கொடுக்கறதாம். அவரு அதை தொழில்ல முதலீடு பண்றாராம். வியாபாரத்தை விருத்தி பண்றாராம். கல்யாணமே இன்னும் முடிவாகலை. அதுக்குள்ள லட்சக்கணக்குல பணம் கேட்கறாரு. பயமா இருக்கு. எந்த நம்பிக்கைல பணத்தைக் கொடுக்க..?'
'சரி அந்த டாபிக்கை விடுங்க. அண்ணன் நீங்க விசாரிச்ச வரை சொல்லுங்க. மாப்பிள்ளை குணாதிசயம், பழக்க வழக்கம்ல்லாம் எப்படி.?'
'அதெல்லாம் யாரும் எந்தக் குறையும் சொல்லை தம்பி. பிடிச்சதனாலதான் பொண்ணு பார்க்கவே வரச் சொன்னேன்..'
'சரி, இப்படி யோசிச்சுப் பாருங்க. அவரு முன் கூட்டியே பணம் கேட்டதுல தானே பிரச்னையே. அமைதியா கல்யாணத்தை முடிச்சுட்டு அதுக்கு அப்புறமா நகைகளை கேட்டிருந்தா பிரியா கொடுத்துத் தானே ஆகிருக்கனும்! மறுக்க முடியாதே. ஏன்னா பிரியா அப்போ அவரோட மனைவி ஆகிடறா.! வேற வழியில்லாம சம்மதிச்சு ஏத்துக்கிட்டுத் தான் ஆகனும் அந்த முடிவை..'
'ஹா.. அது வேற இது வேற!'
'சரி, அவங்கம்மா கூட பேசியிருப்பீங்களே. நல்லாப் பழகறாங்களா..'
'பாவம்ப்பா. அவங்க ஒரு பூச்சி! எது சொன்னாலும் சரி சரின்றாங்க..'
பிரியாவிடம் திரும்பினேன்.
'ஏன் பிரியா அவர் கூட கொஞ்ச நேரம் நீ தனியாப் பேசினியாமே. திருப்தியா இருந்ததா அவரோட பேச்சு.. நடவடிக்கைகள்..'
'சாதாரணமா பேசிட்டிருந்தோம். நல்ல விதமாத்தான் தெரிஞ்சது...'
'சரி உன்கிட்டே வெளிப்படையாக் கேட்கறேன் பிரியா. உன் கருத்து என்ன, அவரோட யோசனையைப் பத்தி நீ என்ன நினைக்கிறே.?'
'எனக்கு ஒரு விஷயம் உறுத்துது சித்தப்பா..' என்று தயங்கினாலும் தொடர்ந்தாள். 'அவரு மேல இருக்கிற நம்பிக்கையின்மைதானே இவங்களை முடிவெடுக்க முடியாம தடுக்குது.. ஆனா மகளையே தரத் தயாரா இருக்கறவங்க பணத்தை தர யோசிக்கிறது ஏன்? பணத்தை விடவும் மக வாழ்க்கை தாழ்ந்து போச்சா?'
எல்லோரும் அதிர்ந்தோம். நான் சுதாரித்து, 'அருமை! சரியாக் கேட்டே..'
கை தட்டினேன். அண்ணன் பிரியாவின் முகத்தை வியப்புடன் பார்த்தார்.
'பார்த்தீங்களா அண்ணா, இதுக்குத் தான் கலந்து பேசச் சொன்னேன். பிரியாக் கண்ணு நீ பேசும்மா. இது உன் வாழ்க்கை, உன் முடிவு..'
'அப்பா.. அம்மா.. உங்களுக்கு புதுசா அறிமுகமான அவரு மேலே தானே நம்பிக்கை இல்லை? நீங்க வளர்த்த உங்க மக என் மேலே நம்பிக்கை உண்டு தானே! கூட வாழப் போகிற நான் அவரைத் தோற்க விட்டுடுவேனா.? அப்புறம், நான் படிச்ச படிப்புக்கும், நீங்க கொடுத்த அறிவுக்கும் என்ன அர்த்தம்?'
'அதானே..! அண்ணா.. அண்ணி இதுக்கு மேல பேச ஒண்ணுமே இல்லை. பிரியா ஒரு வாசகம் சொன்னாலும் பொருத்தமா சொல்லியிருக்கா.! நம்பிக்கையோட அவங்க கல்யாணத்தை நடத்தி வைங்க. நல்லதே நடக்கும்..' என்றேன் நான்.
இருவரும் புன்னகையுடன் தலையாட்டினர். மன நிம்மதியுடன் அவர்களைப் பார்த்தாள் பிரியா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com