காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

ராகவன் மாணிக்கம்

''என்னடா சாப்பாடு எடுத்துகிட்டியா.. போகலாமா?'' என்று பையன் ரகுவிடம் கேட்ட

உத்திராபதி. இருப்பதை வைத்து சந்தோஷப்படும் பிரிவில் வருபவர். 'தப்பு செய்ய வாய்ப்பு கிடைத்தாலும், செய்வதால் வேறு எதாவது ஒரு வழியில் தண்டனை கிடைத்து விடுமோ?' என்று செய்வதற்குப் பயப்படுபவர். நிம்மதியாக இருக்க, கடவுள் அருள்புரிவார் என்று நினைப்பவர். நேர்மை, நியாயம்... என்பதில் ரொம்பவே நம்பிக்கை உள்ளவர்.

''எடுத்துகிட்டேன்'' என்று பையை உயர்த்திக் காட்டினான் ரகு.

ரகு, அவரின் மூன்றாவது பிள்ளை, பிளஸ் டூ தேர்வு எழுதிவிட்டு முடிவுக்குக் காத்திருப்பவன். அப்பாவின் சுமையைக் குறைப்பதற்காக, கிடைக்கும் சமயங்களில் வேலைக்குச் செல்பவன். இப்பொழுதும் அப்படியே.

''சரி. வா போகலாம்'' என்று சொன்னவர், 'இப்பவோ... அப்பவோ' என்ற நிலையில் இருந்த செருப்பை அதிகவனத்தோடு அணிந்தவாறு நடக்க ஆரம்பித்தார். அவரை இடைமறித்த மனைவி, ''இன்னும் வீட்டு வாடகை கொடுக்கல. அதோட சீட்டுப் பணமும் கட்ட வேண்டி இருக்கு. ஏதோ முகத்துக்காக பாக்குறாங்க... ஏதாவது ஏற்பாடு பண்ணுங்க...'' என்றார்.

''சரி... பார்க்கிறேன்'' என்று சொல்லிவிட்டு தொடர்ந்தார்.

கொஞ்ச தூரம் அமைதியாக நடந்த ரகு, ''ஏம்ப்பா வேலை பார்க்கிற இடம் ரொம்ப தூரமாப்பா?'' கேட்டான்.

''கொஞ்சம் தூரம்தான். ஏன் கேட்கிற...?''

''சும்மாதான்..'' என்றவன், அமைதியாக நடையைத் தொடர்ந்தான்.

கிட்டதட்ட அரை மணி நேரக் கழித்து வேலை செய்யும் இடத்தை நெருங்க, ''பார்த்து வா.. ஆணி, சிலாம்பு எதாவது கிடக்கும்'' என்று சொல்லிக் கொண்டே உள் நுழைந்தார். 'இதையா கொஞ்ச தூரம்ன்னு சொன்னாரு...' என்கிற மலைப்போடு தொடர்ந்தான் ரகு.

உள்ளே எல்லோரும் வேலைக்கு ஆயத்தமாகி கொண்டிருந்தார்கள். பார்த்தவாறே அப்பாவைத் தொடர்ந்து உள்ளே சென்றான் ரகு.

''என்னண்ணே... பையனா...'' என்றான் அங்கிருந்த பணியாளர் ஒருவன்.

''ஆமாப்பா... பள்ளிக்கூடம் லீவு விட்டாச்சு. வீட்டுல இருந்தா வம்பு விசாரிச்சுட்டுவந்து சேரும். அதான். வேலைக்கு இழுத்துகிட்டு வந்தாச்சு.''

''உங்க பெரிய பையன் வேலை தேடிட்டு இருந்தாரே... கிடைச்சிட்டா?''

''இல்லப்பா... அவன் எதிர்பார்க்கிற வேலை கிடைக்க மாட்டேங்குது. எதாவது பேங்கில மேனேஜர் வேலை... இல்லைன்னா... சப்-இன்ஸ்பெக்டர், இன்ஸ்பெக்டர்ன்னு வேலை வருது. அதெல்லாம் ஒரு வேலையான்னு வேணான்னு சொல்லியாச்சு.'' என்றவரை வித்தியாசமாகப் பார்த்துவிட்டு கேட்டான்.

''உண்மையாதான் சொல்றிங்களா?''

'' கலெக்டர் வேலைக்காகக் காத்திருக்கிறவனுக்கு. நான் சொன்ன வேலை சாதாரணம்தானே?''

''நீங்க வேற... அவரு பத்தாவதுதான் படிச்சிருக்கார்னு கேள்விபட்டேன்.''

'' கலெக்டர் வேலைக்கு அந்த படிப்பு போதுமில்ல?''

அப்பொழுதுதான் கேட்டவன் உணர்ந்தான் உத்திராபதி கிண்டலடித்து கொண்டிருக்கிறார் என்பதை.. அங்கிருந்தோர் சிரிக்க... ரகுவோ உத்திராபதியை ஆச்சரியமாய் பார்த்தான். இப்படி அவர் நகைச்

சுவையாகப் பேசி அவன் கேட்டதே இல்லை. அந்த நகைச்சுவையில் வருத்தம் ஒளிந்து கொண்டிருப்பது அவனுக்கு மட்டுமே தெரியும்.

நன்றாகப் படித்து வேலைக்குச் சென்று, குடும்பத்துக்கு உதவுவான் என்று எதிர்பார்த்தவன், ஓழுங்காகப் படிக்காமல், அவனுடைய அன்றாட செலவுக்கே, மற்றவர்களை எதிர்ப் பார்ப்பவனாய், உதவாக்கரையாய், ஊர்சுற்றிக் கொண்டு, அந்த குற்ற உணர்ச்சி துளியும் இல்லாமல் இருக்கும், தன் மூத்த பிள்ளையை பற்றிய வருத்தமே அது. அவனைப்போல், தானும் அவரின் கவலைக்கு காரணமாகிவிடக் கூடாது என்ற எண்ணத்தில், ரகு நேரம் கிடைக்கும்போதெல்லாம், கிடைக்கும் வேலைக்குச் சென்றுவிடுவான்.

''சரி.. பேசினது போதும்... வேலையைப் பார்க்கலாம். முதலாளி திடீர்ன்னு வந்திட்டாருன்னா... நாம சிரிச்சுகிட்டு இருக்கிறத பார்த்திட்டு.. இவ்வளவு நேரம் ஆகியும் வேலையை ஆரம்பிக்காம வெட்டி கதை பேசிக்கிட்டு இருந்தா.. வேலை எப்படி சீக்கிரம் முடியும். அதான் வேலை இழுத்திட்டு போகுதுன்னு தப்பா நினைச்சிடுவாரு... வேலையை ஆரம்பிங்க...'' என்றவர், ''கந்தா உதவிக்கு இவனை வச்சுக்க... பார்த்து வேலை வாங்கு'' என்றார்.

ரகுவுக்காகத் திரும்பி, '''போப்பா... அவர் சொல்ற மாதிரி செய்'' என்று சொல்லிவிட்டு தன் வேலையை ஆரம்பித்தார்.

''எதாவது பலகையை போட்டு உட்காரு'' என்று தன்னை நெருங்கிய ரகுவைப் பார்த்து,கந்தன் சொல்ல, அவ்வாறே ஒரு பலகையை போட்டு வசதியாக உட்கார்ந்து கொண்டான்.

''எத்தனை நாள் லீவு? பேசிக்கிட்டே அங்க இருக்கிற சட்டத்தையெல்லாம் இங்க அடுக்கி வை.''

''மே மாசம் வரைக்கும்..''

''மேற்கொண்டு படிப்பேயில்ல?''

''ஏன் அப்படி கேட்கறீங்க?''

'' நானும் லீவுல வேலைக்கு வந்தேன். எதுக்கு மேல படிக்கணும்னு பலர் இங்கேயே நிரந்தரமா இருந்துட்டேன். இப்பதான் இன்னும் கொஞ்சம் படிச்சிருக்கலாமேன்னு எண்ணம் வருது. அதான் கேட்டேன்.''

''கண்டிப்பா படிப்பேன். படிக்கிறதை விடமாட்டேன்.''

''என்ன கந்தா... பய என்ன சொல்றான்'' என்று இடையில் உத்திராபதியின் கேள்வி புக, ''தம்பி ஒண்ணும் சொல்லலை... சொல்றத சரியாதான் செய்றாப்பல... இடம்தான் கொஞ்சம் நெருக்கடியா இருக்கு... அதான் அப்படி வெளியே போய் செய்யலாம்ன்னு பார்க்கிறேன்.''

''தாராளமா, எங்க செஞ்சா என்ன? வேலை நடந்தா சரி.''

''அதெல்லாம் முடிச்சிடலாம்ண்ணே'' என்று உத்திராபதிக்கு உத்தரவாதம் கொடுத்தபடியே கந்தன், வேலையை தொடர்ந்தான்.

அப்போது கடாமுடாவென்று சத்தத்தோடு சைக்கிளில் வந்தவனைப் பார்த்த கந்தன், ''வா மாப்பிள்ளை, அதிசயமா இருக்கு?'' என்று கேட்டான்.

''அண்ணனைப் பார்க்க வந்தேன்.''

''அவ்வளவு பெரிய ஆளா ஆயிட்டியா?''

''நீ வேறய்ய... பெரிய வீட்டில அண்ணனை வரச் சொன்னாங்க? அதான் சொல்லிட்டு போக வந்தேன்'' என்றவன், 'வணக்கண்ணே... சவுகரியந்தான?'' உத்திராபதியை பார்த்து கேட்க, ''நான் நல்லா இருக்கேன்யா... நீ எப்படி இருக்க?'' என்றார் அவரும்.

''இருக்கண்ணே.''

''சொல்லு... என்ன விஷயம்?''

''பெரிய வீட்டுல உங்களை சாயங்காலம் வந்துட்டு போகச் சொன்னாங்க? மறக்கமா வர சொன்னாங்க.''

''அப்படி என்னய்யா தலை போற விஷயம்?''

''தெரியலண்ணே..''

''சும்மா சொல்லுய்யா... உனக்கு தெரியாம இருக்குமா?''

''என்னாங்கிற விவரமெல்லாம் எனக்குத் தெரியாதுண்ணே'' என்றவன் தயக்கமாக, ''என்னண்ணே சொல்ல?'' என்றான்.

''அவுங்களே கூப்பிட்டு விடுறாங்க.. வரேன்ணு சொல்லு.''

''சரிண்ணே'' அவருக்கு பதில் சொல்லிவிட்டு நகர்ந்து சைக்கிளை நெருங்கி நகர்த்தியவன், ''வரேன் மாப்பிள்ளை... சாயங்காலம் கடைத்தெருல பார்க்கிறேன்'' என்று கந்தனிடம் சொல்லிவிட்டு நகர ஆரம்பித்தான்.

சரியாக ஒரு மணி ஆனதும், ''எடுத்து வைங்க சாப்பிடலாம்'' என்று உத்திராபதி சொல்ல, அதற்காகவே காத்திருந்தவர்கள் போல, எல்லாவற்றையும் ஓரம்கட்டி வைத்துவிட்டு சாப்பிட தயாரானார்கள்.

பத்தே நிமிஷம் சாப்பிட்டு முடித்தனர்.

''கந்தா, நான் கொஞ்சம் பரமசிவம் வீட்டுக்கு போய்ட்டு வந்திடுறேன்'' என்று உத்திராபதி வெளியே செல்ல, மற்றவர்கள் சிகரெட், பீடிக்காக வெளியேற கந்தனும்... சண்முகமும் எதிர் எதிராக அமர்ந்தனர்.

ரகுவை பார்த்து, ''நீ இப்படி வந்து உட்காரு. கொஞ்சம் பேசணும்'' என்று அழைக்க, நெருங்கி அமர்ந்தான்.

மாலை ஆறு மணி.

''கந்தா எல்லாத்தையும் எடுத்து வச்சிடு'' என்று கந்தனிடம் சொல்லிவிட்டு, ரகுவுக்காக திரும்பி, ''வா, போகலாம்.'' நகர்ந்தவரை, தொடர்ந்தான்.

கொஞ்ச தூரம் அமைதியாகவே நடந்தனர். அந்த அமைதியில் மதியம் நடந்த நிகழ்ச்சியை நினைத்துப் பார்க்க ஆரம்பித்தான் ரகு.

அவர்கள் கூறியது அறிவுரையா?. எச்சரிக்கையா? என குழப்பமாக இருந்தது.

''ரகு... உங்க வீட்டுல, யாருமே, உங்க அப்பாகிட்ட எதுவுமே கேட்டு நச்சரிக்க மாட்டிங்களா?'' என்று கேட்ட கந்தனை, 'என்ன இப்படி கேட்கிறாரு' என்று சந்தேகமாகப் பார்த்தான். இருந்தாலும் பதில் சொன்னான்.

''ரொம்பல்லாம் கேட்க மாட்டோம். எப்பயாவது கேட்போம்.''

''இனிமேல் அப்படி இருக்காதிங்க. எதுவும் கேட்காம இருக்கிறதினாலதான். உங்க அப்பாவும் என்ன வருதோ, அதுவே போதும்ன்னு இருந்திடுறாரு... எதையாவது கேட்டுக்கிட்டே இருந்தா, மெயின் வருமானம் மட்டுமில்லாம... சைடு வருமானத்துக்கும் அடிபோடுவாரு... உங்களுக்கும் கேட்கிறது கிடைக்கும். கேட்டா எதாவது கோபமா சொல்லுவாரா?''

''அதெல்லாம் சொல்ல மாட்டாங்க. சிரிச்சுகிட்டு, அப்பறம் பார்க்கலாம்ன்னு சொல்லிடுவாங்க?''

''நீங்களும் சரின்னு அமைதியா இருப்பீங்களா?''

''வேற என்ன செய்யறது. சூழ்நிலை எங்களுக்கும் தெரியும். தெரிஞ்சும் கேட்கிறது தப்பில்லையா?'

''இனிமேல் அப்படி இருக்காதிங்க.. கேளுங்க... கேட்டுகிட்டே இருங்க... கிடைக்கிறவர விடாதிங்க...''

''ஏங்க இப்படி சொல்றிங்க?''

''பின்ன என்னப்பா. முந்தாநேத்து வேலை கத்துக்கிட்டவன் எல்லாம், கவலைபடாம நாலைஞ்சு இடத்தில வேலை புடிச்சு... பந்தாவா, ஜம்முன்னு திரியிறானுங்க... உங்க அப்பாவ பாரு... கால காலமா இந்த வேலையில இருக்கிறவரு... இன்னமும் அப்படியேதான் இருக்கிறாரு.. ஒரு வேலை எடுத்தாருன்னா அடுத்த வேலைய தொட மாட்டாரு... ஏன்னா, ரெண்டு வேலயுமே சுத்தமா செய்ய முடியாம போயிடுமா? ஒரு சில முதலாளிங்க, உங்க அப்பாவோட நேர்மைக்காக, வேலை சுத்தத்துக்காக, காத்திருப்பாங்க. ஆனால் எல்லாருமே காத்திருப்பாங்களா.. இப்படி சொல்றேன்னு தப்பா நினைக்காதே.''

''சே.. அப்படியெல்லாம் நினைக்க மாட்டேன். இத நீங்க எங்க அப்பாகிட்டயே நேரடியா சொல்லலாமே. என்கிட்ட ஏன் சொல்றிங்க?'' என்று ரகு கேட்க, ''பேசலாம்... அவரு எனக்கு வேலை கத்து கொடுத்த குரு. அப்படிபட்டவருக்கு, நான் யோசனை சொல்றது அவ்வளவு நல்லா இருக்காது. அதுக்குதான் உங்கிட்ட சொல்றோம். அப்படியாவது மாறி கொஞ்சமாவது வசதி ஆகுறாரான்னு பார்க்கலாம்ல்ல?''

''நீங்க சொல்றத பார்த்தா நேர்மையா இருக்கிறது தப்புங்கிற மாதிரியில்ல தெரியுது?'' என்று கேட்ட ரகுவுக்குக் கோபப்படாமல், ''ரகு.. நேர்மைங்கிறத தப்பா புரிஞ்சுகிட்டு பேசுறே. நேர்மைன்னா தப்பே பண்ணாம இருக்கிறது இல்லை. தப்பா இருந்தாலும், யாரையும் கஷ்டப்படுத்தாமல் நாம பயன் அடையறது. இப்ப முக்காவாசி பேரு அப்படித்தான் இருக்காங்க? உதாரணத்துக்கு நீ அவரோட பையன்தான். உனக்கு சம்பளமா கொஞ்சம் அதிகமாவே கொடுக்கலாம். யாரும் கேட்க மாட்டாங்க? முதலாளிக்கும் நஷ்டம் ஆகப்போறதில்லை. ஆனா உங்க அப்பா செய்யமாட்டாரு... ஏன்னா நேர்மையாம்'' என்று அதுவரை நகைச்சுவையாக பேசிக்கொண்டிருந்தவன்... கொஞ்சம் சீரியஸாகி, ''சில சமயம் உங்க அப்பாவை பார்க்கிறப்ப மனசு ரொம்ப கஷ்டமா இருக்கும். இந்தக் காலத்தில இப்படியும் பொழைக்க தெரியாத ஆளா இருக்கிறாரேன்னு. நீங்க நச்சரித்தால் மாறுவாரு.. . சரியா?''

அமைதியாக ''சரி'' என்றான் ரகு.

மதிய விஷயங்களை அசை போட்டவன்... அப்பாவிடம் பேச ஆரம்பித்தான்.

''ஏம்ப்பா இந்த வேலையில எத்தனை வருஷமா இருக்கீங்க?''

''முப்பத்தஞ்சு வருஷம்.''

''நீங்களே சொந்தமா வேலை எடுத்து பார்க்கறது?''

''எப்படியும் இருபது வருஷம் இருக்கும். எதுக்காக இதெல்லாம் கேட்கிற? யாராவது எதாவது சொன்னாங்களா?''

''இல்லைப்பா? ரொம்ப நாளா இந்த வேலையில இருக்கீங்க, சொந்தமாவும் வேலை செஞ்சுகிட்டு இருக்கீங்க.. ஆனா சொந்தமா ஒரு வீடோ, இடமோ இல்லை. ஏன் சைக்கிள் கூட கிடையாது. உங்கக் கிட்ட வேலை கத்துகிட்டு, வெளியே போன ஒரு சில பேரு கொஞ்ச நாள்லேயே, டூவீலர் இல்லேண்ணா சைக்கிளாவது வாங்கிடுறாங்க. ஏம்ப்பா உங்களால அதுமாதிரி செய்துக்க முடியலை?''

ரகுவை ஆழமாக உற்று பார்த்தார். சாதாரணமாக இவன் இப்படி பேசுபவன் கிடையாது. மதியம் ஏதோ நடந்திருக்கிறது. யாரோ ஏதோ, சொல்லி இருக்கிறார்கள். அதான் இப்படி கேட்கிறான். நினைத்துக் கொண்டவராய், பொறுமையாய் பதில் சொல்ல ஆரம்பித்தார்.

''நீ கேட்டது சரிதான். கொஞ்சம் நெளிவு சுழிவெல்லாம் தெரிஞ்சிருக்கணும். எனக்கு தெரிய மாட்டேங்குது. ரெண்டாவது மானம், ரோஷமெல்லாம் பார்க்கக் கூடாது. அது என்னால முடியாது. பேரு கெட்டு போச்சுன்னா அவ்வளவுதான். அரிச்சந்திரனே ஆச்சரியப்படற அளவுக்கு நாம யோக்கியனா இருந்தாலும், யாரும் நம்ப மாட்டாங்க. பித்தலாட்டம் பண்றதுக்கும் ஒரு தைரியம் வேணும். அப்பதான, பிரச்சனைகள் வந்தா சமாளிக்க முடியும். அது இல்லாதப்ப அப்படி நடந்துக்க நினைக்கிறது. ரொம்ப முட்டாள்தனம். அப்பப்ப, செஞ்ச தப்பு, தெரிஞ்சிடப் போகுதோங்கிற நினைப்பு வந்து பயமுறுத்தும். நிம்மதி போயிடும். நிம்மதி இல்லாம... மத்த எது இருந்து என்ன பிரயோசனம். குரங்கு மாதிரி அதோட இஷ்டத்துக்கு அலைபாயுற மனசைக் கட்டுப்படுத்தி, நம்மளால நேர்மையா என்ன செய்ய முடியுமோ... அத மட்டும் செய்தா போதும். எல்லாம் சரியாயிடும்.''

''சரிப்பா'' என்று பதில் சொன்ன ரகுவின் மனதில், 'உங்களிடம் கேட்டது முட்டாள்தனம்தான்' என்ற எண்ணம் ஓடியது.

பெரியவீடு வர, உள்ளே உத்திராபதியும், ரகுவும் உள்ளே நுழைந்தனர். வராண்டாவில் தாட்டியான உருவத்துடன் இருவர் அமர்ந்தபடி, எதிரே அரைகுறை வெளிச்சத்தில் சோகமாக தலைகுனிந்து நின்றிருந்த ஒருவனிடம் கோபமாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். நிற்பவன் யாராக இருக்கும் என்று பார்வை கூர்மையாக்கி பார்த்து, ''அட நம்ம பக்கிரி. என்ன பண்ணி தொலைச்சானோ தெரியலையே...'' என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டே அவர்களை நெருங்கினார். கத்திக் கொண்டிருந்தவரோ காலடி சத்தம் கேட்டு திரும்பி உத்திராபதியைப் பார்த்ததும்... சந்தோஷமாகி, ''வாங்க மேஸ்திரி... நல்லா இருக்கீங்கல்ல?'' என்றார்.

''ரொம்ப சவுகரியம்... நீங்க சவுகரியம்தானா?''

''நமக்கென்ன... நல்லா இருக்கேன். சிரமம் கொடுக்கிறதுக்கு மன்னிச்சுக்கிடுங்க?''

''இதில என்ன சிரமம். அப்படி போறதுக்குப் பதிலா, இப்படி போகப் போறேன். முக்கியமான விஷயமா இருந்தாதான, கூப்பிட்டு விடுவிங்க?''

''ஆமாம்.. இது யாரு பையனா?''

''ஆமாம். பரீட்சை லீவு விட்டாச்சு, அதான் வேலைக்கு வந்திருக்கான். மேற்கொண்டு படிக்க ஆசைப்படுறான். அதுக்கு உபயோகமா இருக்குமில்லை. அதான்''

''நல்லது.. ஏய் நாற்காலி எடுத்து போடு... குடிக்க எதாவது எடுத்துவரச் சொல்லு.''

நாற்காலி போடப்பட்டது. அமர்ந்தார்கள்.

''யாரு தெரியுதா?'' என்று எதிரே நின்றிருந்தவனை பார்த்து கேட்டார்.

''தெரியுது. நம்ம பையன்தான். எதாவது பிரச்னையா?''

அதற்குள் டீ வர, ''மொதல்ல டீ குடிங்க.. தம்பி எடுத்துக்கப்பா'' என்று ரகுவிடமும் சொல்ல, அவனும் டீ கப்பை எடுத்து உறிஞ்ச ஆரம்பித்தான்.

டீ குடிக்கும் வரை பொறுமையாய் இருந்துவிட்டு பேச ஆரம்பித்தார் பெரிய வீட்டுக்காரர்:

''உங்ககிட்ட வேலை கத்துக்கிட்டவனாச்சே.. உங்கச் சொந்தக்காரன் வேற... பொறுப்பா, நேர்மையா இருப்பான்னு நினைச்சு புது கட்டட வேலையைக் கொடுத்தேன். ஆனா பய உங்கள மாதிரி இல்லை. கெட்டிக்காரன்'' என்று நிறுத்தினார். அவர் சொன்ன வார்த்தையினால், உத்திராபதியின் முகமாற்றத்தைப் பார்த்து சிரித்துவிட்டு, ''பயப்பட வேண்டாம் மேஸ்திரி. உங்கள மாதிரி ஒருத்தர் கஷ்டம். நான் சொன்னது... பித்தலாட்டம் செய்யறதில ரொம்ப கெட்டிக்காரன்னு. கன்னாபின்னான்னு கை வச்சிருக்கான். மரங்களை வித்திருக்கான். ஆளுங்க வராமலேயே சம்பளம் வாங்கிருக்கான். வந்த ஆளுங்களுக்கு குடுத்த சம்பளத்தில கமிஷன் அடிச்சிருக்கான். இப்படி நிறைய. பலநாள் திருடன் மாட்டிக்கிட்டான். போலீஸ்ல புடிச்சு கொடுக்கலாம்ன்னுதான் நினைச்சோம். உங்க சொந்தக்கார பயலாச்சே. உங்ககிட்டேயும் ஒரு வார்த்தை கேட்டுட்டு செய்யறதுதான் சரின்னு பட்டுச்சு. அதான் உங்களை வரச்சொன்னேன். நீங்க என்ன சொன்னாலும் சரி. அப்படியே செஞ்சிடலாம்'' என்று கண்டிப்பாக புறம்பான எதையும் சொல்லமாட்டார் என்ற நம்பிக்கையில் பேசினார்.

அவரின் வார்த்தையை கேட்ட உத்திராபதிக்கு ஜிவ்வென்று பறப்பது போல் இருந்தது. மெல்ல ரகுவை பார்க்க, 'பார்த்தியா. நான் வாங்கி வச்சிருக்கிற மதிப்பும் மரியாதையையும் இதுதாண்டா தேவை. இதுக்கு முன்னாடி எதுவும் நிக்க முடியாது' என்பதை போல் இருந்தது.

யோசித்தவர், ''பணத்தாசை... புத்தி கெட்டுப்போய் பண்ணிட்டான். போலீஸ்ல புடிச்சு கொடுக்கிறதால பைசா பிரயோசனம் கிடையாது. வேலையும் அப்படியே நிற்கும். வேற யாரும் எடுத்து செய்யவும் மாட்டாங்க. செய்ய வந்தாலும் செலவுதான். அதனால பேசினபடி இவனே ஒழுங்கா முடிச்சு கொடுக்கணும். செலவெல்லாம் இவனோடதுதான். இவனுக்கு தண்டனையாகவும் இருக்கும். உங்க வேலையும் முடிஞ்சிடும். ஒருவேளை முடியாதுன்னு மறுத்த போலீஸ்ல புடிச்சு கொடுக்கிதை பத்தி பேசலாம். உங்களுக்கு சம்மதம்தானா?'' என்றார் உத்திராபதி.

''சொன்னனே மேஸ்திரி. நீங்க எது சொன்னாலும் அப்படியே செய்திடலாம்ன்னு. நீங்களும் அதே மாதிரி எங்களை ஏமாத்தாம... நச்சுன்னு சொல்லிட்டிங்க?'' என்று சந்தோசமாகப் பேசி நின்றிருந்தவனை பார்த்து, ''மேஸ்திரி சொன்னதை கேட்டியில்ல. அது மாதிரியே சொணங்காம வேலைய முடிச்சு குடுத்திடு. மேஸ்திரி புண்ணியத்தால நீ தப்பிச்ச... இனிமேலயாவது நல்லவிதமா நடந்துக்க. கிளம்பு'' என்று சொல்ல... நின்றிருந்தவன்... குனிந்தபடியே வெளியேறினான்.

''அப்ப நாங்களும் புறப்படறோம்'' என்ற உத்திராபதியை ''பொறுங்க மேஸ்திரி'' என்றவர் ''தம்பி'' என்று உள்ளே குரல் கொடுக்க... ''என்னத்தா'' என்றபடியே ஒருவன் வெளியேவந்தான்.

''ஏதோ மேசை செய்யணும்னு சொன்னேயில்ல. அழைச்சிட்டு போய் எப்படி வேணும்ன்னு சொல்லு. போங்க மேஸ்திரி. பையன் இங்கேயே இருக்கட்டும்'' என்று சொல்ல, உத்திராபதி உள்ளே சென்றார்.

அவர் உள்ளே செல்வதையே பார்த்தவர், ரகுவுக்காகத் திரும்பி நான்கு ஐநூறு ரூபாய் நோட்டை அவன் பையில் திணித்து, ''தப்பா எடுத்துக்காதப்பா. உங்க அப்பா வாங்க மாட்டாரு. அதான் உன்கிட்ட கொடுத்தேன். வீட்டுல கொடுத்திடு'' என்று சொன்னார்.

''அப்பா திட்டுவாங்களே'' என்று சொன்னாலும், மனதில், வாடகை, சீட்டுப் பணம் கொடுத்துவிடலாம் என்ற எண்ணம் தோன்றியது.

''அப்பாதானே திட்டுனா என்ன? வாங்கிக்க? அம்மாக்கிட்டே கொடு- வீட்டுச் செலவுக்கு உபயோகமாக இருக்கும். இல்லாட்டி படிப்புச் செலவுக்கு வச்சிக்கோ?'' என்று சொல்லவும் உத்திராபதி வெளியே வரவும் சரியாக இருந்தது.

''போகலாமா?'' என்று ரகுவிடம் கேட்டுக்கொண்டே வெளியேற, ரகுவும் உள்ளுக்குள் சந்தோசம் இருந்தாலும் 'அப்பா என்ன சொல்லுவாரோ?' என்ற பயத்துடனும் தொடர்ந்தான்.

''என்ன ரகு புத்திசாலிதனமா வசதியாக நினைச்சவன் கதியை பார்த்தியா? எவ்வளவு கேவலமா.. அசிங்கப்பட்டு நின்னான். தேவையா அவனுக்கு இது?''

''அந்தாளு அளவுக்கு அதிகமாக தப்பு பண்ணிட்டாரு. அதான் அவர் செய்த தப்பு.''

''எப்போதுமே தப்பு... தப்புதான். கொஞ்சமா செய்தா தப்பு நல்லது ஆயிடாது. சின்ன தப்புகள்தான், பெரிய தப்புகளைப் பண்ற தைரியத்தைக் கொடுக்கிறது. கொஞ்ச முன்னாடி அசிங்கப்பட்டு, கேவலமா நின்னானே ஒருத்தன். நம்மளை தலை நிமிர்ந்து பார்க்க முடிஞ்சுதா, அவனால? எவ்வளவு அசிங்கம். காரணம், திறமையா தப்பு செய்தா, மாட்டிக்க மாட்டோம்ங்கிற, முட்டாள்தனமான எண்ணம்தான். புரியுதா? ஒரு மனுஷனுக்கு தேவை நாணயமானவங்கிற நல்ல பேருதான். அப்பதான் உண்மையான மரியாதை கிடைக்கும். நிம்மதி இருக்கும். இல்லேன்னா? தலை தெரிஞ்சா ஒண்ணு. மறைஞ்சா ஒண்ணுன்னு போலி மரியாதைதான் கிடைக்கும். அதனால சுத்தி நடக்கிற தப்பான விஷயங்களைப் பார்த்து கவனத்த சிதற விடாம... நியாயமா, நேர்மையா வாழ கத்துக்க? அதான் உனக்கும் நல்லது. நிம்மதி. தனியா இருக்கிறப்ப யோசிச்சு பாரு... நான் சொன்னது சரின்னு தோணும்.'' என்று சொல்லியவர், 'கண்டிப்பாக நேர்மையே நிம்மதி' என்ற உண்மையை, தன் மகன் உணர்ந்து கொள்வான் என்ற எண்ணத்தில், ஏதோ நாட்டின் உயரிய விருதை பெற்ற தோரணையில் நடையைத் தொடர்ந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.