காஷ்மீர் பியூட்டிபுல் காஷ்மீர்...!

காஷ்மீர் பியூட்டிபுல் காஷ்மீர்...!
Updated on
2 min read

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஜம்மு-காஷ்மீருக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். 2020-ஆம் ஆண்டில் வருகை தந்த சுற்றுலாப் பயணிகள் 34 லட்சம் பேர். 2021-ஆம்ஆண்டில் இது 1.13 கோடியாகவும், 2022-இல் 1.88 கோடியாகவும் அதிகரித்தது. 2023-ஆம் ஆண்டில் 2.20 கோடி பேரைத் தாண்டியது.

காஷ்மீர் இப்போது எப்படி இருக்கிறது? என்பது குறித்து அங்கு அண்மையில் சென்று வந்த சென்னையைச் சேர்ந்த ஸ்ரீகணேஷ் தனது அனுபவங்களைப் பகிர்கிறார்:

பல வருடங்களாகவே குடும்பத்துடன் காஷ்மீர் போக வேண்டும் என்று எனக்கு ஆசை. உயர்ந்து நிற்கும் இமய மலையையும், எழில் கொஞ்சும் இயற்கையையும் ரசிக்க யாருக்குதான் மனம் வராது. ஒன்பது நாள் பயணத்தை ஒரு பயண ஏற்பாட்டாளர் வழியாகத் திட்டமிட்டோம். எல்லா ஏற்பாடுகளையும் அவர்களே செய்து கொடுத்துவிட, நாங்கள் சந்தோஷமாக ஊர் சுற்றிப் பார்த்துவிட்டு இனிய நினைவுகளைச் சுமந்தபடி திரும்பினோம்.

காஷ்மீர் முழுவதும் பரவலாக மத்திய ரிசர்வ் போலீஸார், எல்லைப்புற பாதுகாப்புப் படையினரது சுங்கச் சாவடிகள் உள்ளன. புல்வாமா தாக்குதலுக்குப் பின்னர், பாதுகாப்புச் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பாதுகாப்புக் காரணங்களுக்காக வெளிமாநில ப்ரீபெய்டு சிம்கள் வேலை செய்யாது. போஸ்ட் பெய்டு சிம்க்கு எந்தப் பிரச்னையும் இல்லை. அங்குள்ள பயண ஏற்பாட்டாளர்கள், தங்களது ப்ரீபெய்டு சிம்களை நமக்குக் கொடுத்து உதவுகிறார்கள்.

சைவ, அசைவத்துக்கு என தரமான உணவகங்கள் இருந்தன. எங்கே போனாலும் தோசை கிடைக்கிறது.

காஷ்மீரின் அழகு வேற லெவல்: நாங்கள் சென்ற இடங்களில் மிகவும் முக்கியமானவை ஸ்ரீநகர், குல்மார்க், சோன்மார்க், பகல்காம் ஆகியனவாகும். புகைப்படங்களிலும், வீடியோக்களிலும் பார்ப்பதெல்லாம் ஒன்றுமே இல்லை. நேரில் சென்று பார்க்கிறபோது, காஷ்மீரின் அழகு வேற லெவல்.

பசுமையான காஷ்மீரின் பள்ளத்தாக்குகள் அபாரம். இன்னும் மேலே சென்றால் வெண்பனி மூடிய மலைப் பகுதிகள். எல்லா ஊர்களுக்கும் வசதியான தேசிய நெடுஞ்சாலைகள். பயணம் சுலபம்; செளகரியம். ஆனாலும், மலைச்சரிவு போல சில சமயங்களில் பனிச் சரிவு ஏற்பட்டு, சாலையில் செல்லும் வாகனங்களையும் பனி மூடிவிடும்.

நாங்கள் சென்று கொண்டிருந்த மலைச் சாலையில் சில விநாடிகள் தாமதித்திருந்தாலும், பனிச்சரிவில் சிக்கிக் கொண்டிருப்போம். எங்கள் டிரைவர் சமயோஜிதமாக காரை வேகமாகச் செலுத்தி, எங்களைக் காப்பாற்றிவிட்டார். வேறு சில பகுதிகளில் சிலர் பனிச்சரிவில் சிக்கிக் கொண்டதை பின்னர் அறிந்தோம்.

வாழ்நாளில் மறக்க முடியாத குல்மார்க் அனுபவம்: குல்மார்க் பகுதியில் குதிரையில் ஏறி, ஆற்றைக் கடந்தபடியே மலையில் ஏறியது வித்தியாசமான அனுபவம். அந்த ஒரு மணி நேரப் பயணம் ஆபத்தாகவும், அசெளகரியமாகவும் இருந்தாலும் வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு அனுபவம். குல்மார்க்கில் கேபிள் கார் பயணத்துக்கு ஒரு நாளுக்கு சுமார் எட்டாயிரம் பேர் வரை மட்டுமே அனுமதிக்கிறார்கள்.

இதனை 'கொண்டோலா' என்று சொல்கிறார்கள். இரண்டு மாதங்கள் முன்பாகவே இதற்கு முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். 13 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து புறப்பட்டு, 14 ஆயிரத்து 500 அடி உயரம் வரை பயணிக்கலாம். சுமார் 20 நிமிடப் பயணமானது இயற்கையை வியக்க வைக்கும். உலகிலேயே இரண்டாவது உயரமான கேபிள் கார் பயணம்

இதுதான்.

தால் ஏரியும், சார் சினார் தீவும்...: சோன்மார்க்கில் சாலையில் ஒரு பக்கத்தில் பனி போர்த்திய மலை. இன்னொரு பக்கம் சிந்து நதி. பனிப் பகுதியை அடைந்ததும், பனிப் பகுதியில் செல்லும் பிரத்யேகமான மோட்டார் சைக்கிளை எடுத்துகொண்டு பனிப்படலத்தின் நடுவே விர்ரென்று சீறியபடி பைக் ஓட்டுவது ஒரு திரில்லிங் அனுபவம்.

கேரளாவில் கூட படகு வீடுகள் உண்டு என்றாலும் காஷ்மீரின் தால் ஏரியில் உள்ள படகு வீடுகள் எப்போதுமே ஸ்பெஷல்தான். கரோனாவுக்குப் பின்னர் இப்போது பிசினஸ் முழு வீச்சில் நடக்கிறது. நிறைய சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள். படகோட்டிகள் எல்லாம் சந்தோஷமாக இருக்கிறார்கள்.

பிரம்மாண்டமான தால் ஏரி சுமார் 20 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டது. அதிகபட்ச ஆழம் 20 அடி. கடுமையான குளிர்காலத்தில் தால் ஏரியின் தண்ணீர் பனிக்கட்டியாக உறைந்துவிடும். தால் ஏரிக்கு நடுவில் 'சார் சினார் தீவு' உள்ளது. அங்கே சினார் ரக மரங்கள் உள்ளன. நான்கு பெரிய சினார் மரங்கள் இருப்பதால், அதற்கு 'சார்(4) சினார் தீவு' என்று பெயர் வந்தது.

தால் ஏரியைச் சுற்றி மொகலாயர் காலத்தில் அமைக்கப்பட்ட ஷாலிமார் பாக், நிஷாத் பாக் போன்ற பெரிய தோட்டங்கள் இருக்கின்றன. அங்கே வண்ண, வண்ண துலிப் மலர்கள் பயிரிடப்படுகின்றன. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பாத்தி, பாத்தியாக பல வண்ண துலிப் மலர்களைக் காணக் கண் கோடி வேண்டும். தால் ஏரியின் வட பகுதியில் உள்ளது ஹஸ்ரத்பால் தர்கா. முஸ்லிம்களின் புனிதத் தலம் இது.

ஸ்ரீநகரில் சுற்றுலாப் பயணிகள் அதிகம்: ஸ்ரீநகரின் இன்னொரு முக்கியமான இடம் லால் சௌக். இந்த மைதானம், சரித்திரப் புகழ் வாய்ந்தது. அதனையும் பார்த்தோம். சங்கராச்சார்யா பழைமையான கோயிலுக்கு சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. அமர்நாத் யாத்திரையின்போது, ஏராளமான பக்தர்கள் இங்கே தரிசனம் செய்ய வருவர்.

கிரிக்கெட் மட்டைகள் விற்பனை அமோகம்: காஷ்மீரில் கிரிக்கெட் மட்டைகள் செய்யப் பயன்படுத்தும் 'வில்லோ மரம்' நிறைய விளைகிறது. கிரிக்கெட் மட்டைகள் தயாரிப்பு அதிகம் இங்கு நடைபெறுவதால், கிரிக்கெட் ரசிகர்கள் கிரிக்கெட் மட்டைகளை வாங்கிச் செல்வதைக் காணலாம்.

மேலும், அக்ரூட், ஆப்பிள், குங்குமப்பூ போன்றவையும் காஷ்மீர் டூரிஸ்ட்களின் ஷாப்பிங் லிஸ்ட்டில் கண்டிப்பாக இருக்கும்.

தெருக்களில் கடைகளின் பெயர்களை ஹிந்தி, உருது மொழிகளைவிட ஆங்கிலத்தில்தான் அதிகமாக எழுதி வைத்திருக்கிறார்கள்' என்கிறார் ஸ்ரீகணேஷ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com