

ரஜினியுடன் இணையும் நாகர்ஜூனா!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் "கூலி' படத்தின் படப் பிடிப்பு பல்வேறு பகுதிகளில் பரபரப்பாக நடைபெறுகிறது. "மாநகரம்' திரைப்படத்துக்குப் பிறகு திரைக்கதை பணிகளுக்காகத் தனது இணை இயக்குநர் சந்துரு அன்பழகனுடன் இணைந்திருக்கிறார் லோகேஷ். "விக்ரம்' படத்துக்குப் பிறகு மீண்டும் ஒளிப்பதிவாளர் கிரீஷ் கங்காதரனுடன் கூட்டணி அமைத்திருக்கிறார். இதனைத் தாண்டி தனது வழக்கமான தொழில்நுட்பக் குழுவுடன் கைகோத்திருக்கிறார்.
"ஜெயிலர்' படத்துக்குப் பிறகு மீண்டும் ரஜினி நடிக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. மலையாள நடிகர் சௌபின் சாஹிர், ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் இணைந்திருக்கின்றனர். பிற நடிகர்களின் விவரங்களைத் தயாரிப்பு நிறுவனம் தினமும் வெளியிட்டுக் கொண்டே வருகிறது. அதன்படி தெலுங்கிலிருந்து நடிகர் நாகர்ஜூனா நடிக்கவிருக்கிறார் என்ற அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியிருக்கிறது. அவரின் பிறந்தநாளை முன்னிட்டு ஸ்பெஷலாக இந்த அப்டேட்டை வெளியிட்டிருக்கிறார்கள்.
1991-இல் கன்னடம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என நான்கு மொழியிலும் ஒரே நேரத்தில் உருவாக்கப்பட்டது "சாந்தி கிராந்தி'. அதாவது, தமிழில் "நாட்டுக்கு ஒரு நல்லவன்' என்ற திரைப்படம்தான் அது. தமிழ், ஹிந்தி வெர்ஷனில் ரஜினி கதாநாயகனும், தெலுங்கு வெர்ஷனில் நாகர்ஜூனாவும், கன்னடத்தில் நடிகர் வி. ரவிசந்திரனும் நடித்திருந்தனர். இப்படி ஒரே படத்தின் வெவ்வேறு வெர்ஷன்களில் ரஜினியும் நாகர்ஜூனாவும் நடித்த கனெக்ட் இருக்கிறது. ஆனால், இப்போதுதான் முதல் முறையாக இருவரும் இணைந்து நடிக்கிறார்கள்.
"கூலி' பிரமாண்டமான "பேன் இந்தியன்' திரைப்படமாக உருவாகி வருவதால் மலையாளத்திலிருந்து சௌபின் சாஹிர், தெலுங்கிலிருந்து நாகர்ஜூனா ஆகியோரை நடிக்க கமிட் செய்திருக்கிறார்கள். கன்னட நடிகர் உபேந்திராவும் "கூலி'யில் நடிப்பது கிட்டதட்ட உறுதியாகி விட்டது.
தோல்வியான இசையமைப்பாளர்
நெகட்டிவ் விமர்சனங்கள் குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா. பின்னணி இசை என்றால் சொல்லவே தேவையில்லை. "மன்மதன்', "காதல் கொண்டேன்', "பில்லா', "மங்காத்தா' என பல வரிசைக் கட்டி நிற்கின்றன. ஆனால், யுவன், முன்பைப் போல அதிகமான திரைப்படங்களுக்கு இசையமைப்பதில்லை.
அதனால், யுவன் இனி திரும்ப மார்க்கெட்டை பிடிப்பது கடினம் என்றும் அவரது இசை முன்பைப்போலயில்லை என்றும் சிலர் சமூக ஊடகங்களில் விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக, வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் "கோட்' படத்தில் "விசில் போடு', "ஸ்பார்க்' பாடல்களுக்கு கலவையான விமர்சனங்கள் வந்திருந்திருந்தன. இதையடுத்து வந்த "கோட்' ட்ரெய்லரில் யுவனின் பின்னணி இசை பிரமாதமாக இருப்பதாக ரசிகர்கள் பாராட்டிக் கொண்டாடினர்.
இப்படியான விமர்சனங்களும், பாராட்டுகளும் யுவன் ஷங்கர் ராஜாவுக்கு ஒன்றும் புதிதல்ல. தனது ஆரம்ப காலத்திலிருந்து எரிமலை விமர்சனங்களுக்கு எதிராக ஏறி நின்று போர்த்தொடுத்து வென்று வருபவர் யுவன்.
இந்நிலையில், சென்னையில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் மாணவர்கள் மத்தியில் எதிர்மறையான விமர்சனங்களுக்கு செவி சாய்க்காமல் முன்னேற வேண்டும் என்று அறிவுரை வழங்கிப் பேசினார் யுவன், அவர் மேலும் பேசியிருப்பது:
'ஆரம்பக் காலத்தில் நான் இசையமைத்த படங்கள் தோல்வியடைந்ததால், ராசியில்லாத இசையமைப்பாளர் என முத்திரை குத்தினர். அதற்குப் பிறகு எனக்கு பட வாய்ப்புகள் ஏதும் வரவில்லை. இதை நினைத்து பலமுறை நான் அழுதிருக்கிறேன். இதிலிருந்து மீள வேண்டும் என இசையில் அதிக கவனம் செலுத்தத் தொடங்கினேன். அதனால்தான் உங்கள் முன் நிற்கிறேன்.
எதிர்மறையான விமர்சனங்கள் வந்துகொண்டேதான் இருக்கும். பேசுற வாய் பேசிக்கிட்டேதான் இருக்கும். அதையெல்லாம் காதில் போட்டுக் கொள்ளக் கூடாது, முன்நோக்கி நடந்துகொண்டே இருக்க வேண்டும். உங்களை வெறுப்பவர்கள், உங்களை கீழே இழுக்கத்தான் முயற்சிப்பார்கள். நீங்கள் எப்போதும் தலைநிமிர்ந்து முன்னோக்கிப் பயணித்தபடியே இருக்க வேண்டும். அதை செய்ததால்தான் நான் உங்கள் முன் நின்று பேசிக்கொண்டிருக்கிறேன். எதிர்மறையான விஷயங்களுக்கு என் காதுகள் எப்போதும் மூடியிருக்கும். இசை, நேர்மறையான விஷயங்களுக்கு மட்டுமே என் காதுகள் திறந்திருக்கும்' என்று பேசியிருக்கிறார்.
இதையடுத்து மாணவர்களுக்காக "ஒருநாளில் வாழ்க்கை இங்கே எங்கும் ஓடிப் போகாது' பாடலைப் பாடி உற்சாகப்படுத்தினார்.
காதலரை கரம் பிடித்த எமி!
நடிகை எமி ஜாக்சனுக்குத் திருமணம் நடைபெற்றிருக்கிறது. "மதராசப்பட்டினம்' படத்தில் துரையம்மாவாக நடித்து தமிழ் ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர் ஹாலிவுட் நடிகை எமி ஜாக்சன். அதன்பிறகு "ஐ', "2.0', "தெறி', "கெத்து', "தங்க மகன்' எனப் பல படங்களில் நடித்தார். தற்போது ஹாலிவுட்டில் சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இவர், இங்கிலாந்து தொழிலதிபர் ஜார்ஜ் பனயிட்டோவைக் காதலித்து பின்னர், நிச்சயதார்த்தமும் நடந்தது. 2019-இல் ஆண்ட்ரியாஸ் என்ற ஆண் குழந்தை பிறந்தது.
இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்த்த நேரத்தில் இருவரும், மனஸ்தாபத்தால் பிரிந்து விட்டனர்.அதன் பிறகு எமி ஜாக்சன், பிரபல ஹாலிவுட் நடிகர் ஆன எட் வெஸ்ட்விக் என்பவரைக் காதலித்து வந்தார். இதுதொடர்பான செய்திகள் சமூக ஊடகங்களில் வைரலானது. சில மாதங்களுக்கு முன்னர் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
இந்நிலையில் எமி ஜாக்சன்- எட் வெஸ்ட்விக் இருவருக்கும் காஸெல்லோ டி ரோக்கோ நகரில் திருமணம் நடைபெற்றிருக்கிறது. திருமணப் புகைப்படங்களை "வாழ்வின் பயணம் இப்போது தொடங்கிவிட்டது' என்ற கேப்ஷனுடன் இருவரும் பகிர்ந்திருக்கின்றனர். அந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.