

பிரியங்கா நேரு காந்தி, பிரியங்கா நேரு வதேராவாக மாறிய அந்தத் திருமணச் சடங்குக்கும், அதற்குப் பின்னால் நடந்த விருந்துக்கும் அழைக்கப்படாதவர் வேறு யாருமல்ல, சஞ்சய் காந்தியின் மனைவி மேனகா காந்தியும், அவரது மகன் வருண் காந்தியும்தான். இந்திரா காந்தி இருக்கும்போது அவருக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்தவரும், ராகுல், பிரியங்கா இருவரையும் குழந்தைகளாகத் தூக்கி வளர்த்தவர்களில் ஒருவருமான ஆர்.கே.தவானும் அழைக்கப்பட்டிருக்கவில்லை.
அந்தத் திருமண நிகழ்வு குறித்து சில ஆண்டுகளுக்குப் பிறகு ஷீலா கெளலை மரியாதை நிமித்தம் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தபோது நான் கேட்டுத் தெரிந்து கொண்ட தகவல்கள் இவை. மேனகாவை அழைக்க வேண்டாமா என்று அவர் கேட்டதாகவும், "நோ' என்கிற ஒற்றை வார்த்தையில் அதற்கு சோனியா முற்றுப்புள்ளி வைத்துவிட்டதாகவும் தெரிவித்தார்.
பிரியங்கா - வதேரா திருமண நிகழ்வு நடந்து கொண்டிருந்தபோது, மேனகா காந்தி என்ன செய்து கொண்டிருந்தார்? எங்கே இருந்தார் என்று நான் விசாரிக்க முற்பட்டேன். தனது மகனுடன் குருத்வாரா ரகாப்கஞ்சில் தொழுகை நடத்திக் கொண்டிருந்தார். சீக்கியர்களின் மிக முக்கியமான புனிதத் தலங்களில் ஒன்றாகக் கருதப்படும் அந்த குருத்வாராவுக்கு, ஹிந்துக்கள், சீக்கியர்கள் என்கிற வித்தியாசமில்லாமல் பஞ்சாபியர் அனைவரும் சென்று பிரார்த்தனை செய்வது வழக்கம்.
குருத்வாரா ரகாப்கஞ்ச் சாஹேப் எனப்படும் அந்த சீக்கிய குருத்வாராவுக்கு மத ரீதியில் மட்டுமல்லாமல் வரலாற்று ரீதியாகவும் முக்கியத்துவம் உண்டு. மொகலாய சாம்ராஜ்யம் பலவீனமடைந்திருந்த நேரத்தில், சீக்கிய படைத் தளபதி பாகேல் சிங் என்பவர் 1783-இல் தில்லியைக் கைப்பற்றி சில ஆண்டுகள் ஆட்சிபுரிந்தார். அவரது ஆட்சிக் காலத்தில், தில்லியின் பல பகுதிகளிலும் சீக்கிய குருத்வாராக்கள் கட்டப்பட்டன.
முஸ்லிம்களால் விரட்டி அடிக்கப்பட்ட காஷ்மீரி பண்டிட்டுகளுக்கு ஆதரவாக இருந்த சீக்கிய மதத்தின் ஒன்பதாவது குரு தேஜ் பஹதூர் 1675-இல் மொகலாய மன்னர் ஒளரங்கசீபால் கொல்லப்பட்டு, சிதை மூட்டப்பட்ட இடத்தில் கட்டப்பட்டிருக்கிறது குருத்வாரா ரகாப் கஞ்ச் சாஹேப். இந்திய நாடாளுமன்றக் கட்டடத்துக்கு அருகில் அமைந்திருக்கும் அந்த குருத்வாராவுக்கு முக்கியமான பலரும் அமைதி தேடிப் பிரார்த்தனைக்குச் செல்வதுண்டு.
தானும் குழந்தையும் அழைக்கப்படவில்லை என்கிற வருத்தத்தைத் (அவமானத்தை) தாங்க முடியாமல் அமைதி தேடி மேனகா குருத்வாராவுக்குச் சென்றாரா, இல்லை தான் பார்த்து வளர்ந்த குழந்தை நன்றாக வாழவேண்டும் என்று பிரார்த்தனை செய்யச் சென்றாரா என்பதை அவர்தான் சொல்ல முடியும்.
மத்திய புலனாய்வுத் துறை அலுவலகத்துக்கு ராணுவ முன்னாள் தலைமைத் தளபதி ஜெனரல் சுந்தர்ஜி விசாரணைக்கு அழைக்கப்பட்டிருக்கிறார் என்கிற தகவல் கிடைத்தது. காலை சுமார் 11 மணிக்கே அவர் சிபிஐ அலுவலகத்துக்குச் சென்று விட்டதாகவும், கடந்த ஐந்து மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடைபெறுவதாகவும் நண்பர் ஒருவர் தெரிவித்தார்.
விசாரணை முடிந்தால், அதிகாரிகள் பத்திரிகையாளர்களைச் சந்தித்து விவரம் தெரிவிப்பார்கள் என்கிற நம்பிக்கையில் நானும் அங்கே விரைந்தேன். சுமார் எட்டு மணி நேரம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது. அவரைத் தனியாகவும், ஏனைய ராணுவ அதிகாரிகளுடன் சேர்த்தும் விசாரணை நடத்தியதாக, நிருபர் கூட்டத்தில் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
போஃபர்ஸ் உள்ளிட்ட பீரங்கிகள் வாங்குவது குறித்த ஆலோசனையின்போதும், போஃபர்ஸ் நிறுவனத்தின் ஹோவிட்சர் பீரங்கியை வாங்குவதற்கான பேரம் மேற்கொண்டபோதும் ராணுவ தளவாடங்கள் பிரிவின் தலைவராகப் பதவி வகித்து, பணி ஓய்வு பெற்ற லெஃப்டினென்ட் ஜெனரல் மாயா தாஸை விசாரணைக் குழுவினர் சுமார் 2 மணி நேரம் விசாரணை நடத்தியதாக அவர் தெரிவித்தார்.
'ஜெனரல் சுந்தர்ஜி, மாயா தாஸ் இருவரிடமும் சிறப்பு விசாரணைக் குழு ஒரே நேரத்தில் விசாரணை மேற்கொண்டதா அல்லது தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டதா?'' என்கிற கேள்விக்கு அவர், 'எனக்குத் தெரியாது'' என்று பதிலளித்தார்.
12 பேர் கொண்ட சிறப்பு விசாரணைக் குழு, மிக விரிவான முறையில் ஏற்கெனவே கேள்விகளைத் தயாரித்து வைத்திருந்ததாகவும், அவை கேட்கப்பட்டதாகவும் மட்டும் தெரிவித்தார்.
மாலையில் ஜெனரல் சுந்தர்ஜியை சந்திக்க நேரம் கேட்டு அவரைத் தொடர்பு கொண்டபோது, அவர் மும்பை சென்றுவிட்டதாகக் சொன்னார்கள். அதற்குள், சிபிஐ விசாரணை மேற்கொண்ட செய்தி பரவியதால், பரபரப்பு அதிகரித்தது.
'போஃபர்ஸ் பீரங்கிப் பேரத்தில் லஞ்சம் வாங்கியவர்கள் குறித்த விவரத்தை அறிய மக்கள் இன்னும் சிறிது காலம் காத்திருக்க வேண்டியிருக்கும்'' என்கிற பிரதமர் தேவே கெளடாவின் கருத்து அந்தப் பரபரப்பை மேலும் அதிகரித்தது.
பாஜக தனது நிர்வாகிகள் கமிட்டி கூட்டத்தை அவசர அவசரமாகக் கூட்டி, பிரதமரின் பொறுப்பற்ற கருத்துக்கும், விசாரணை அமைப்புகளின் மெத்தனப் போக்குக்கும் கடும் கண்டனம் தெரிவித்தது.
நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தி ஐக்கிய முன்னணி அரசின் "மூடி மறைக்கும்' செயல்பாட்டை அம்பலப்படுத்தப் போவதாக அறிக்கை வெளியிட்டது. அதன் தாக்கம் தேவே கெளடா அரசை தர்மசங்கடத்தில் ஆழ்த்தியது மட்டுமல்ல, உடனடியாக சில தகவல்களை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தையும் ஏற்படுத்தியது.
அடுத்த நாள் காலையில், சிபிஐ அலுவலகம் ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டது. ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற ராணுவ தளவாடங்களுக்கான தலைமை இயக்குநர் லெஃப்டினென்ட் ஜெனரல் மயா தாஸிடம் இரண்டாவது தடவையாகத் தங்களது விசாரணையைத் தொடர்ந்ததாகத் தெரிவித்தது. இன்னொரு தகவலையும் அந்த செய்திக்குறிப்பு தெரிவித்தது.
'தனது தலைமையிலான தளவாட ஆய்வுக் குழு ஆஸ்திரியாவின் பீரங்கியைத்தான் தேர்வு செய்ததாகவும், அரசுதான் பிரெஞ்சு பீரங்கி சோஃப்மாவையும், ஸ்வீடனின் போஃபர்ஸ் நிறுவன பீரங்கியான ஹோவிட்சரையும் பரிசீலனை செய்ய பரிந்துரைத்தது என்றும் விசாரணை நடத்திய அதிகாரிகள் குழுவிடம் மாயா தாஸ் தெரிவித்தார்'' என்று அந்த செய்திக் குறிப்பில் குறிப்பிட்டிருந்தது.
தொலைநகல் (ஃபேக்ஸ்) மூலம் அனுப்பப்பட்டிருந்த அந்த செய்திக்குறிப்பின் அடிப்படையில் கட்டுரை எழுதத் தொடங்கிய சில நிமிடங்களில், மாலை 3 மணிக்கு சிபிஐ அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பு இருப்பதாக இன்னொரு தொலைநகலும், அதைத் தொடர்ந்து தொலைபேசி அழைப்பும் அலுவலகத்துக்கு வந்தது. புதிதாக என்னதான் சொல்லிவிடப் போகிறார்கள் என்கிற நம்பிக்கையின்மை இருந்தாலும், சென்றுதான் பார்ப்போமே என்று கிளம்பினேன்.
அங்கே கூடியிருந்த பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் எதிர்பாராத அதிர்ச்சி. போஃபர்ஸ் பீரங்கி பேர ஊழலில் லஞ்சம் பெற்றவர்களின் பெயர்களை மத்தியப் புலனாய்வுத் துறையினர் வெளியிடுவார்கள் என்று எங்களில் ஒருவர்கூடக் கனவிலும் எதிர்பார்க்கவில்லை.
ராஜீவ் காந்தியின் குடும்ப நண்பரும், சோனியா காந்தியின் உறவினரும், இத்தாலிய வர்த்தகருமான குவாத்ரோச்சி, அவருடைய மனைவி மரியா, வெளிநாடுவாழ் இந்தியரான வின் சட்டா, அவருடைய மனைவி, மகன் ஆகியோர் அந்தப் பட்டியலில் இடம்பெற்றிருந்தனர். சுவிட்சர்லாந்தின் பெர்ன் நகரிலிருந்து பெறப்பட்ட முதல் தொகுதி ஆவணங்களின் அடிப்படையில் இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டதாக மட்டும்தான் அதிகாரிகள் தெரிவித்தனர்.
'போஃபர்ஸ் நிறுவனத்தின் பீரங்கிப் பேரத்தில் லஞ்சம் பெற்றதாகத் தெரியவந்துள்ள மேற்குறிப்பிட்ட நபர்கள் மீது சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போகிறோம்'' என்று மட்டும்தான் அவர்கள் சொன்னார்கள். நான் உள்ளிட்ட நிருபர்கள் எழுப்பிய எந்தக் கேள்விக்கும் அவர்கள் பதிலளிக்கத் தயாராக இருக்கவில்லை.
'இனி உங்களுடைய அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும்?''
'தெரியாது!''
'இந்தப் பட்டியலில் இடம்பெற்றவர்கள், கமிஷனைத் தங்களுக்காகப் பெற்றனரா, இல்லை வேறு யாருக்காவது வாங்கிக் கொடுத்தார்களா?''
'தெரியாது!''
நாங்கள் எழுப்பிய ஆறேழு கேள்விகளுக்குத் "தெரியாது!' என்கிற பதில் மட்டுமே கிடைத்தது.
குவாத்ரோச்சி மலேசியாவிலும், வின் சட்டா துபையிலும் இருக்கும் நிலையில், மத்திய புலனாய்வுத் துறை தங்களது விசாரணையை எப்படி முன்னெடுக்க முடியும் என்கிற கேள்வி எழுகிறது. பட்டியலில் இடம்பெற்றிருப்பவர்களை இந்தியாவுக்கு அனுப்பி வைக்குமாறு அந்தந்த நாட்டு அரசுகளைக் கேட்க வேண்டும். அது எளிதானதல்ல.
வெளியுறவுத் துறையையும், அரசின் இதர உயர்மட்ட அமைப்புகளையும் சிபிஐ அணுகி அவர்களை விசாரணைக்கு அழைத்துவரச் செய்ய வேண்டும். அந்த நாடுகள் மறுத்துவிட்டால், அத்துடன் விசாரணை முட்டுச் சந்தில் தேங்கிவிடும். பாஜகவினர் கேட்பதுபோலப் பட்டியலை வெளியிட்டு, கூடவே விசாரணைக்கு முட்டுக்கட்டையும் போட்டுவிட்டது மத்திய புலனாய்வுத் துறை (அரசு?).
சிபிஐ அலுவலகத்தில் இருந்து கிளம்பி லோதி எஸ்டேட் மாக்ஸ்முல்லர் மார்க்கில் இருந்த இந்தியா இன்டர்நேஷனல் சென்டருக்கு நானும் இன்னொரு நண்பருமாக வந்தோம். அவர் ஐஐசியின் உறுப்பினர். அங்கே ஒரு கருத்தரங்கம் நடப்பதாகவும் அதில் இந்தியாவின் பாதுகாப்பு குறித்து விவாதிக்கப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அந்தக் கருத்தரங்கம் முடிந்த பிறகு ஒரு முக்கியமான நபர் ஒருவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. ராணுவம், வெளியுறவு, பாதுகாப்பு தொடர்பான விவரங்கள் அவருக்கு அத்துப்படி. சர்வதேச விவகாரங்கள் உள்ளிட்ட எல்லாவற்றிலும் நுணுக்கமான தெளிவு பெற்றவர் அவர். அரசில் உயர் பதவி வகித்து, பத்திரிக்கையாளராகவும் இருந்த அவரை சந்திக்கவும், பழகவும் கிடைத்த வாய்ப்பை
இப்போதும் நினைத்து மகிழ்கிறேன்.
தமிழர் என்பதால் முதல் சந்திப்பிலேயே எங்களுக்குள் நெருக்கம் ஏற்பட்டுவிட்டது. அதற்குப் பிறகு சென்னையிலும் பலமுறை மூத்த பத்திரிகையாளர் பி.கே.பாலச்சந்திரனுடன் அவரை சந்தித்திருக்கிறேன். அவர் வேறு யாருமல்ல. இப்போது வெளியுறவுத் துறை அமைச்சராக இருக்கும் ஜெய்சங்கரின் தந்தை கே.சுப்பிரமணியம்தான்.
நாங்கள் இருவரும் போஃபர்ஸ் குறித்த சிபிஐ செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு வந்ததாகத் தெரிவித்தபோது, புன்முறுவல் பூத்தார் அவர். போஃபர்ஸ் பீரங்கியைத் தேர்வு செய்தது குறித்து அவரிடம் கேட்டபோது, தெளிவாகவும் விளக்கமாகவும் அவர் தெரிவித்ததை இப்போது வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்-
இந்திய ராணுவத்துக்கு, இமயமலைப் பகுதிகளில் பயன்படுத்த நவீனரக பீரங்கிகள் தேவைப்பட்டன. அதற்காக சர்வதேச ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டன. முதலில் விண்ணப்பித்தது பிரிட்டிஷ், ஜெர்மனி, இத்தாலி கூட்டுத் தயாரிப்பில் உருவான பீரங்கிதான். அதைத் தொடர்ந்து ஆஸ்திரிய, பிரெஞ்சு, ஸ்வீடன் ஆகிய நாட்டு நிறுவனங்களும் விண்ணப்பித்தன.
விண்ணப்பித்திருந்த நான்கு வகை பீரங்கிகளில் இந்திய ராணுவத்துக்கு ஏற்றதாக இருக்கும் எந்த பீரங்கியைத் தேர்ந்தெடுப்பது என்பதை முடிவு செய்ய, 15 பேர் கொண்ட "தரச் சோதனைக் குழு' 1984-இல் பாதுகாப்புத் துறையால் அமைக்கப்பட்டது.
அந்தக் குழுவில் இருந்த உறுப்பினர்களில் 13 பேர் ஆஸ்திரிய பீரங்கியை வாங்க வேண்டும் என்று பரிந்துரைத்தனர். பீரங்கிகளுக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த 3.5 கி.மீ. தூரத்திற்கு மேலும் ஆஸ்திரிய பீரங்கியால் சுட முடிந்தது. அந்த பீரங்கி பொருத்தப்பட்ட வாகனத்தின் வேகம் மணிக்கு 34 கி.மீ. இந்தத் திறன் வேறு எந்த பீரங்கிக்கும் இருக்கவில்லை.
அப்படி இருந்தும், 13 பேர்களின் பரிந்துரையைப் புறக்கணித்து ஸ்வீடனின் போஃபர்ஸ் நிறுவனத் தயாரிப்பான ஹோவிட்சர் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஹோவிட்சர் பீரங்கி
களுக்கும் சில தனிப்பட்ட சிறப்பம்சங்கள் இருக்கத்தான் செய்தன என்பதைக் குழுவினர் யாரும் மறுக்கவில்லை.
குழுவின் பரிந்துரையை ஒதுக்கி வைத்துவிட்டு, போஃபர்ஸ் பீரங்கியைப் பரிந்துரைத்தவர் ராணுவ தலைமைத் தளபதி ஜெனரல் சுந்தர்ஜி. ஜெனரல் சுந்தர்ஜியைப் பரிந்துரைக்கும்படி சொன்னவர் மத்திய பாதுகாப்பு இணையமைச்சர் அருண் சிங். அதற்குக் காரணம் மத்திய அமைச்சரவை எடுத்த முடிவு. மத்திய அமைச்சரவை அப்படி முடிவெடுக்க யார் காரணம்?
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.